Friday, April 3, 2009

கூட்டாளிகளைத் தேடி...!

இன்னும் கூட்டாளிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பாஜகவின் தமிழகக்குழு முடிவு செய்ததால் மற்ற கட்சிகளின் அலுவலகங்கள் முன்பாக கண்காணிப்புப் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டனர். அனைவரிடமும் வயர்லெஸ் கருவிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இல.கணேசன் : ஹலோ..ஹலோ... கணேசன் பேசுறேன்... ஓவர்... ஓவர்..
எச்.ராஜா : சொல்லுங்க கணேசன்ஜி... தேமுதிக வாசல்லருந்து ராஜா பேசுறேன்... ஓவர்..

இல.கணேசன் : அங்க எப்புடி இருக்கு...

எச்.ராஜா : கட்சிக்காரங்ககிட்ட பேசுனதுல ஏழு உத்திகள் இருக்காம்... ஆனா நம்ம பேரு அடிபடல... நானாகத்தான் இனிம யாராவது கேட்டா எட்டு உத்திகள்னு சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன்... நீங்க எங்க இருக்கீங்க...

இல.கணேசன் : அதிமுக வாசல்ல இருக்கேன்... டீ குடுக்குற ஆள் மாதிரி உள்ள போலாம்னு இருக்கேன்... அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுல்ல...

ராஜா : நீங்க நீங்களாவே போங்க... அங்க யாருக்கும் அடையாளம் தெரியாது...

இல.கணேசன் : ரொம்பதான் நக்கல் பண்ணுறீங்க... வைங்க... தமிழிசை எங்க இருக்காங்கன்னு கேக்குறேன்... ஓவர்...

தமிழிசை : ஹலோ.... கணேசன்ஜீ... ஓவர்...

இல.கணேசன் : ஹலோ... தமிழிசை... சமக அலுவலகம் முன்னாலதான இருக்கீங்க...

தமிழிசை : அட... நீங்க வேற... அவங்க அலுவலகத்துக்குள்ளதான் இருக்கேன்... வர்ற போனைக் கூட நான்தான் எடுத்துக்கேக்குறேன்...ஓவர்...

இல.கணேசன் : ஹலோ... திருநாவுக்கரசரா... எங்க இருக்கீங்க...ஓவர்... ஓவர்...

திருநாவுக்கரசர் : நம்ம கட்சிலதான்...ஓவர்...

இல.கணேசன் : இது ரொம்பதான் ஓவரா இருக்கே... அதக் கேக்கலீங்க... உங்கள திமுக அலுவலகத்துக்குதான அனுப்புனோம்... அங்கதான் இருக்கீங்களா...

திருநாவுக்கரசர் : இங்க ஒரே குழப்பமா இருக்கு... எல்.ஜி.யும், செஞ்சியும் திமுகல சேர வர்றப்போ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிரலாம்னு பாத்தேன்... ஆனா அவங்க ரெண்டு பேரு மட்டும் வந்ததால உள்ள போக முடியல...

இல.கணேசன் : பாத்து இருங்க... தேர்தல் சீட்டுக்கான நேர்காணல் கூட்டத்தோட உள்ள போயிராதீங்க... உங்கள வெச்சு இணைப்பு விழா நடத்திரப் போறாங்க....

திருநாவுக்கரசர் : நேர்காணல் முடிவப் பாத்துட்டு அப்புறமா பேசிக்கலாம்...

இல.கணேசன் : ஆஹா... இருக்குற ஆளும்ல போயிருவீங்க போலருக்கு...ஓவர்...

(இல.கணேசனின் செல்போன் ஒலிக்கிறது)
ஹலோ...யாரு அத்வானிஜியா... சொல்லுங்க..

அத்வானி : என்ன கணேசன்ஜி... நிலைமை எப்படியிருக்கு...

இல.கணேசன் : எல்லாரையும் நல்லா கண்காணிச்சிட்டு வர்றோம்... நம்மளத்தவிர அத்தனை பேரும் குழப்பத்துல இருக்காங்க...

அத்வானி : அப்படியா...

இல.கணேசன் : ஆமா... 16 வகையான உத்திகள நாம வெச்சிருக்கோம்... அதுல எட்டு உத்தி தனியா நிக்குறதுதான்...சரத்குமாரும், கார்த்திக்கும் நம்மோட இருப்பாங்க... ஆனா கார்த்திக்கோட இன்னும் பேசலை... சரத்குமார் பகுஜன்சமாஜோட பேசுறாரு... அங்க இல்லைனா நம்மோட வந்துருவாரு... விஜய்காந்தோட பேசிருக்குறதா நானே அறிக்கை விட்டுட்டேன்... இவங்க வந்தா 15 தொகுதில போட்டியிடுவோம்... இல்லைனா ஏழு தொகுதில நிக்கலாம்... காங்கிரஸ் திமுகவ கழட்டி விட்டுட்டா திமுகவோட ஒட்டிக்கலாம்...

ஹலோ...ஹலோ... என்ன...திருநாவுக்கரசரா.... ஆமா... நம்ம அணிலதான் இருக்காரு... என்ன...சரியாக் கேக்கலையே... சிஎன்என் கருத்துக்கணிப்பா... ஆமா... தமிழ்நாட்டுல நமக்கு ஆறு சதவீதம் ஓட்டு இருக்குன்னு சொல்லிருக்காங்க.. அதெல்லாம் நம்பாதீங்க... அவ்வளவெல்லாம் நமக்கு இல்லை... ஆமா... இந்துக்களுக்கு எதிரா அந்த தொலைக்காட்சி சதி பண்ணுது...
(லைன் கட் ஆகிறது)

(அடுத்து வயர்லெஸ்சில் யாருடன் பேசலாம் என்ற யோசிக்கத் துவங்குகிறார் இல.கணேசன்.)

1 comment: