Sunday, April 5, 2009

"சிரிப்பு காங்கிரஸ் "



தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.


சோனியா : நமஸ்கார்... நேரம் போய்ட்டே இருக்கு... எப்படி நம்ம பிரச்சாரத்தக் கொண்டு போலாம்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : நம்ம செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வி நல்ல காரியம் செஞ்சிருக்கார்... நம்ம ஆட்சினாலதான் எட்டு ஆஸ்கர் விருதுன்னு ஒரே போடா போட்டுருக்காரு...

ராகுல்காந்தி : இப்படிலாம் சொன்னா ஜனங்க நம்புவாங்களா...

மன்மோகன்சிங் : நம்புறதுக்கா சொல்றோம்... ஏதாவது சொல்லணும்ல...

திக்விஜய்சிங் : இப்படி ஏதாவது சொன்னாதான் நம்மள எதிர்த்து கேள்வி கேப்பாங்க... மத்த விஷயங்கள்லாம் பின்னால போயிரும்..

ராகுல் காந்தி : நம்ம பிரச்சாரக்குழுவுக்கு சிங்விய தலைவராப் போட்டுருவோம்...

சிங்வி : அப்ப எனக்கு தேர்தல்ல சீட் கிடையாதா...??

குலாம்நபி ஆசாத் : யாரத் தலைவராப் போடணும்குறத சீட் எல்லாம் குடுத்த பிறகு முடிவு பண்ணலாம்... சீட் இல்லாதவருக்கு இதக் கொடுத்து ஏமாத்திடலாம்...

மன்மோகன்சிங் : இந்த பொருளாதார...

(குறுக்கே புகுந்து) ப.சிதம்பரம் : அதுக்கான உரைய ரெடி பண்ணிட்டேன்... சீர்திருத்தங்கள்னு சொல்லி பாஜக தனியார் மயம், தாராளமயம், உலகமயம்னு மக்கள ஏமாத்தப் பாத்தாங்க... காங்கிரஸ் ஆட்சிக்கு வரலைன்னா எல்லாத்தையும் வித்திருப்பாங்க...

எஸ்.எம்.கிருஷ்ணா : இது நீங்க எழுதுன மாதிரி தெரியலையே...

தங்கபாலு : அவரு நாற்காலில பாருங்க... கருப்பு கோட்டு தொங்குது...இங்கருந்து கிளம்புற அவரு வண்டி கோர்ட்டு காம்பவுண்டுக்குள்ளதான் போய் நிக்கும்..வாதத்திறமைய இங்க பரிசோதனை பண்ணிப் பாக்குறாரு...

குலாம் நபி ஆசாத் : எனக்குதான் அதிக வேலை(அலுத்துக் கொள்கிறார்)சோனியா காந்தி : என்ன சொல்றீங்க...??

திக்விஜய்சிங் : ஆமா, சோனியாஜீ... அவர தமிழ்நாட்டுக்கு பொறுப்பா போட்டுட்டீங்க... தங்கபாலுவுக்கு சீட் கொடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, இளங்கோவனையெல்லாம் சரிக்கட்டணும்..அப்புறமா இளங்கோவனுக்கு சீட் குடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, தங்கபாலுன்னு எல்லாத்தையும் சரி பண்ணணும்... பிரபுவுக்கு சீட் தர அவரைத் தவிர எல்லாருகிட்டயும் பேசணும்... சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க அவரையே சரிக்கட்டணும்.. இப்புடி எப்ப பாத்தாலும் பிக்கல், பிடுங்கலோட இருப்பார்... வேற என்னத்த செய்ய முடியும்..??

மன்மோகன்சிங் : அப்படின்னா நானே பிரச்சாரக்குழுவுக்கு தலைமை ஏத்துக்குறேன்... எனக்குதான் தேர்தல்ல நிக்க சீட் இல்லையே...

அகமது படேல்(மனதுக்குள் : தேர்தல்ல நிக்காம தப்பிக்க இப்புடி ஒரு வழி இருக்கா...) நானும் அந்தக்குழுவுல சேந்துக்குறேன்...

சோனியா காந்தி : சரி...சரி... இப்புடியே பேசிட்டிருந்தா எப்படி... பிரச்சாரத்துக்கான விஷயங்கள சொல்லுங்க..

பிரணாப் முகர்ஜி : வெளிநாடுகள்ல எப்புடி பிரச்சாரம் பண்ணுறாங்கன்னு நான் போய்ப் பாத்துட்டு ஜூன் முதல் வாரத்துக்குள்ள வந்துர்றேன்...

(தொலைபேசி அலறுகிறதுஅகமது படேல் அதை எடுக்கிறார். பேசிவிட்டு சிரித்துக் கொண்டே வருகிறார்.)

சோனியா காந்தி : யாரு லைன்ல...

அகமது படேல் : ஜார்ஜ் பெர்னான்டஸ்... எந்தக் கட்சில இருக்கேன்னு மறந்துட்டாராம்.. எல்லா கட்சி ஆபிசுக்கும் போன் போட்டு பேசிட்டிருக்கார்.

ப.சிதம்பரம் : ஒபாமா வெச்ச மாதிரி மாற்றம்ங்குற முழக்கத்த வைக்கலாம்...

தங்கபாலு : இவர நிதித்துறைய விட்டு மாத்துனதுலருந்து மாற்றம்ங்குற நெனப்புதான்....

திக்விஜய்சிங் : சும்மா இருக்க மாட்டீங்களா... நம்மள மாத்தனுணம்னுதான் இதுவரைக்கும் மக்கள் நெனச்சுருக்காங்க... அத நினைவுபடுத்துறதா ஆயிரும்...

ராகுல்காந்தி : ஆனா இளைஞர்கள்லாம் மாற்றம்தான் முழக்கம்னு சொல்றாங்க...

அகமது படேல் : எங்களலாம் மாத்தணும்னு சொல்லிருப்பாங்க...

ஆல்வா : பிரச்சாரம் பத்தி சீக்கிரம் பேசி முடிங்க... அடுத்து தேர்தல் சீட் விற்பனைப்பிரிவுப் பொறுப்பாளரத் தேர்ந்தெடுக்கணுமே...

அந்தோணி : என் தலைமைலான கமிட்டி சொன்னபடி பாத்தா உங்களுக்கு இன்னும் அஞ்சு வருஷத்துக்கு பொறுப்பு கொடுக்கக்கூடாது...

குலாம் நபி ஆசாத் : அந்தோனிஜீ, அறிக்கை வெச்சதோட உங்க வேலை முடிஞ்சுது... மண்டல் கமிஷன் போட்டோம். அறிக்கைய வாங்குனோம்... நிறைவேத்தவா செஞ்சோம்...கமிட்டி போடுறதே யாருக்காவது பதவி கொடுக்கத்தான... தேர்தல் சீட் கொடுக்காம மனசுல இடம் கொடுத்தா ஏத்துக்குற காலம்லாம் மலை ஏறிடுச்சே...

சோனியா : பிரச்சாரம் பண்ண ஏதாவது சொல்லுங்கன்னா... ஆளாளுக்கு பேசி நேரத்த வீணாக்குறீங்களே...

மன்மோகன்சிங் : கண்டிப்பா எல்லாரும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பத்திப் பேசணும்...

ப.சிதம்பரம் : இந்த ஒப்பந்தம்குற ஒரே கல்லுல மாங்காய் மரமே ஆடிப்போச்சுன்னு சரவெடி கொளுத்திப் போட்டுடணும்..

ராகுல்காந்தி : எப்படி...??

ப.சிதம்பரம் : அதான் சரணடைஞ்சுட்டோம்ல... அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிஞ்சுரும்குற குற்றச்சாட்டை இனி யாராவது எழுப்ப முடியுமான்னு கேட்டு மடக்கிடலாம்...

அகமது படேல் : பாஜகவப் பாத்துக்கூட நக்கல் பண்ணலாம்...உங்களால முடியாதத நாங்க பண்ணிட்டோமேன்னு கேக்கும்போது இதுக்காக 13 முறை ரகசியமா பேசுன ஜஸ்வந்த் சிங் கண்ணுல தண்ணியே வந்துரும்...

திக்விஜய்சிங் : ஏற்கெனவே மக்கள் கண்ணுல தண்ணி வந்துக்கிட்டுதான் இருக்கு...

எஸ்.எம்.கிருஷ்ணா : 300 டிஎம்சிக்கு மேல வந்தா நிறுத்திரணும்... அப்பதான் தண்ணிய வெச்சு பிரச்சாரம் பண்ண முடியும்...

தங்கபாலு : 300 டிஎம்சி தரலேண்ணாலும் தந்துட்டதா சொல்லி நிறுத்திரணும்...அப்பதான் தமிழ்நாட்டுல பிரச்சாரம் களை கட்டும். இதவெச்சு விலைவாசி, நெருக்கடியெல்லாத்தையும் மறக்கடிக்கலாம்...

சோனியா : உருப்படியா ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குதே...

அர்ஜூன் சிங் : அப்ப வழக்கம்போல நம்ம வேலைய ஆரம்பிச்சுடலாம்... வேற வழியில்ல..

சோனியா : ஆமா... ராகுல்தான் பிரதமர்னு நீங்க, ஆசாத், அகமது படேல்லாம் பேசுங்க...

மன்மோhகன்சிங் : எப்படினாலும் அவர் ஆகத்தானே போறார்... அப்படினு எப்ப சொல்லணும்னு சொன்னீங்கன்னா அலாரம் வெச்சுக்குவேன்...

தங்கபாலு : தமிழ்நாட்டுல இந்த சிரமமே கிடையாது... காங்கிரசுன்னா கோஷ்டி சண்டை, வேட்டி கிழிவது அப்படிங்குற ஞாபகந்தான் மக்களுக்கு வரும்..எங்ககிட்டலாம் யாரும் சீரியசா விலைவாசி, பொருளாதார நெருக்கடின்னுலாம் பேசமாட்டாங்க... தமிழ்நாட்டுல சிரிப்பு காங்கிரஸ்... இந்த உத்திய நாடு முழுக்க கொண்டு போனா...

(இவ்வளவு நேரம் கண்ணை மூடி பேசிக் கொண்டிருந்த தங்கபாலு விழித்துக் கொள்கிறார்) போய்ட்டாங்களா...

கற்பனை : கணேஷ்


No comments:

Post a Comment