'இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்' என்று துவங்கும் தனது அருமையான கவிதையை மகாகவி இப்படி முடிக்கிறான்: சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. விடுதலையின் உண்மையான பொருள் சுதந்திரம் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம். பரந்துபட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய பத்திரிகை உலகிற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெயரிட்டிருக்கின்றனர். பத்திரிகையின் சுதந்திரத் தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிற சூழல் இது.
இதில் சமகால நடப்புகள் குறித்த பொதுவிவாத மேடை எங்கே இருக்கிறது என்பதைத் தேட வேண்டியிருக்கிறது. உலகமயம் என்ற மாயவலை பின்னப்பட்டிருக்கிற சவால் நிறைந்த வெளியில், எச்சரிக்கை மணியடிக்க வேண்டிய வேலையைச் செய்பவர்கள் மிகச் சிலராகவே இருப்பது தற்செயலானதல்ல, அதுவும் உலகமயத்தின் சவால்களில் ஒன்று. கசப்பான நிஜங்களைச் சுட்டிக் காட்டியவாறும், அதிர்ச்சியான நிகழ்வுகளின்மீது பிரதிபலித்துக் கொண்டும், அதே வேளையில் நம்பிக்கையாக இங்குமங்கும் ஒளிரும் சுடர்ப்படங்களைப் பதியவைத்தவண்ணமும் இயங்கிக் கொண்டிருக்கிற வித்தியாசமான ஓர் இதழ் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே வாசகர்களைச் சிறப்பிக்கிற விஷயமாகும்.
1984ல் வரத் துவங்கிய ஃபிரண்ட்லைன் பத்திரிகை கால் நூற்றாண்டைக் கடந்திருப்பதைப் பதிவு செய்து ஒரு சிறப்பிதழ் வந்திருப்பது உற்சாகம் கரைபுரளத்தக்க விஷயமாகும். 'பத்திரிகை தளத்தில் 25 ஆண்டுக்காலச் செம்மைப்பணி' என்று அதன் முகப்பில் பொலியும் வாசகங்கள் உண்மையிலேயே அர்த்தம் நிறைந்தவை. நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட 1975ன் இருண்டகாலத்திற்குப்பின்னான இந்திய அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டுக் காட்சிகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவை. 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் அதுவரை நாடு சந்தித்திராத அதிர்ச்சி முடிவுகளையும், புதிய கதாபாத்திரங்களையும் மக்கள்முன் வழங்கின. 1980ல் இந்திராகாந்தி ஆட்சியை மீட்டெடுத்தாலும், வேகமான வெவ்வேறு நடப்புகள் அதற்குப்பின் நடக்கக் காத்திருந்தன. இந்தப்பின்புலத்தில், ஹிந்து பத்திரிகைக் குழுமத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய ஃபிரண்ட்லைன், ஆங்கில வாசக உள்ளங்களில் அதன் நூதன வடிவம், கருத்தாக்கம், தீர்மானமான நிலைபாடுகளால் புதுவித விவாதத்தையும், கிளர்ச்சியையும் உருவாக்கியதை மறக்க முடியாது.
சிறப்பிதழின் நுழைவாசலில், தலைமை ஆசிரியர் என் ராம் நிறுவுவதுபோல், ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால், இந்த நேர்க்கோட்டிற்கு எதிரான திசையிலிருந்து இதற்கு ஒவ்வாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், சமகால நடப்புகள் குறித்த சீரிய பார்வை பெற விரும்புவோர் தவிர்க்க முடியாத இதழாக நிலைபெற்றிருக்கிறது ஃபிரண்ட்லைன்.
தேச, சர்வதேச அரசியல் விவாதங்களே ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கிறது என்றாலும், ஃபிரண்ட்லைன் இதழை வருடத் துவங்குகிற ஒவ்வொரு தருணமும் அதன் வகைப்படுத்தப்பட்ட வெவ்வேறு ரசனைக்குரிய அம்சங்களை நினைவூட்டும். கலை, இலக்கியம், நாடக அரங்கம், திரை உலகம் போன்றவற்றிலும் மரபார்ந்த விஷயங்கள், புதிய பரிசோதனைகள் இரண்டின் சுவைகளையும் பருகத் தந்து கொண்டேயிருப்பது இதன் அரிய நேர்த்தி. ஆங்கில மொழியின் வித்தியாசமான இலக்கண விவகாரங்களை வாசிக்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், சமூக முரண்பாடுகள் என இந்தக்காலத்தில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கும் பொருள் மீது ஃபிரண்ட்லைன் படைப்பாக்கங்கள் செய்துவரும் தாக்கம் அளப்பரியது.
இந்தப் பின்னணியில் வந்திருக்கும் சிறப்பிதழ் பொருளாதாரம், மத அடிப்படைவாதம், சமூக நீதி, உலக விவகாரம், கல்வி-பொது சுகாதாரம்-சுற்றுச்சூழல்-வரலாறு-அறிவியல்-கலை, இலக்கிய, இசை உலகம் என்ற தலைப்புகள் ஒவ்வொன்றின்கீழும் தேர்ந்த சிறப்புக் கட்டுரை ஒன்றும் தொடர்ந்து பழம்பதிவுகளின் நினைவுகூரலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. வழக்கம்போலவே கவனத்தை ஈர்க்கின்றன புகைப்படங்கள். அவற்றில் எழில் கொஞ்சுபவையும் உண்டு, துயரங்களைப் பெருக்குபவையும், அதிர்ச்சி உறைய வைப்பவையும் உண்டு. தீண்டாமைக் கொடுமை, மனிதர் மலத்தை மனிதரே அள்ளும் அவலம் உள்ளிட்ட விஷயங்களையும், உலகமய பொருளாதாரத்தின் மனிதவிரோத விளைவுகளையும், மத வெறியின் பேயாட்டத்தையும் அம்பலப்படுத்தியதில் ஃபிரண்ட்லைன் தனிப்பெருமை மிக்க பங்களிப்பைச் செய்திருப்பது சிறப்பிதழில் தனி கவனம் பெறுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி வெளிப்பாடுகள் உள்ளிட்ட பதிவுகள் ஃபிரண்ட்லைன் இதழுக்கு வெளியே அரிதானவை.
ஒரு கால் நூற்றண்டுக்காலம் நடந்த நடையை ஒரு சின்ன விழிப்பார்வையால் தன்னைத்தானே சொக்கி நின்று பார்த்துக் கொள்கிற பார்வையாக ஃபிரண்ட்லைன் சிறப்பிதழ் வந்திருப்பது நீண்டகால வாசகர்களுக்கு ஒரு சொந்தவூர் திரும்புதல் மாதிரி என்றால், புதியவர்களுக்கு ஒரு புதையலின் அடையாளச் சீட்டு அது. எதைத்தவிர்ப்பது, எதை விட்டுவிடாதிருப்பது என்று ஆசிரியர்குழு திணறியிருப்பது ஒரு பத்திரிகையினது கடந்தகாலச் சுவடுகளின் பெருமை. ஃபிரண்ட்லைன் தொட்ட எல்லைகள், கடந்த வெளிகள் எல்லாம் பலம்-பலவீன சுய விமர்சன அட்டவணைகளால் இறுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றின்மீது டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா தொகுத்துத்தரும் ஒரு நறுக்குப்பதிவில் புள்ளிவிவரங்கள் மூலமாக அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஃபிரண்ட்லைன், இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி காலத்தில், மாற்று உலகத்தின் வாசலுக்கான வெளிச்சத்தின் திசையைத் தேடுபவர்களுக்கு நிச்சயம் ஒரு கைவிளக்கு. சிறப்பிதழ் அதன் முகவரி.
எஸ் வி வேணுகோபாலன்
- பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி - ஜனவரி 2010 இதழ்