Saturday, January 16, 2010

இளைஞரின் வாயில் மனித மலம்!

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில், 'கடந்த 7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை வழிமறித்தனர். இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.


நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர். அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.இரண்டுபேர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.


சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார். இதையடுத்து நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

மதம் மாறினாலும் சாதித் திமிர் மட்டும் போவதில்லை.

6 comments:

  1. இப்படி தமிழனே தமிழனை (இந்தியனே இந்தியனை) கேவலப்படுதினால், எப்படி உலகம் மதிக்கும்?
    எப்பதான் இவர்களின் பரிமாண வழர்ச்சியில் மனிதனாக போறார்களோ தெரியவில்லை. இன்னமும் குரங்குக்கு முந்திய படிலயே இருக்குறார்கள்.

    ReplyDelete
  2. இவிங்க என்னிக்கிமே திருந்தமாட்டாய்ங்க பாஸ்...

    முதல்ல ஜாதி பேசுறவனுங்களுக்குத்தான் இந்த தலைப்புபடி நடத்தணும் அப்போதான் திருந்துவானுங்க...!

    ReplyDelete
  3. சடையாண்டிக்கு நடந்த துன்பம் வேதனையானதுதான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் சாதீய வெறி மாறாதது இன்னும் பழங்காலத்துக்குச்சென்று கொண்டிருக்கிறோமோ என எண்ண வைக்கிறது. ஒரு காலத்தில் கன்னியாகுமாவட்டமும் ஜாதீய தீயில் கருகிய மாவட்டம்தான். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் நிலையே வேறு. கலப்புத்திருமணங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கன்னியாகுமரி மாவட்டம் மாறிவிட்டது. படிப்பறிவில்லாத வீடே இல்லை. முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டத்தில் காதல் திருமணங்களும் அதிகம். மற்ற மாவட்டங்களை விட ஜாதிக்கொடுமைகள் இங்கு குறைவுதான் எனும்போது கொஞ்சம் நிம்மதி பிறக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் இந்நிலை ஏற்படவேண்டும் என்பதே எமது எண்ணம்.

    -திருவட்டாறு சிந்துகுமார்
    kumudamsindhu@gmail.com

    ReplyDelete
  4. விரல் நீட்டி தவறு செய்துவிட்டார்கள் என சொல்லும் தகுதி கூட நம்மை போன்றவர்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.இந்த சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அவலத்திற்கும் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருப்பதாகவே நான் சொல்வேன்.அது நமது மௌனமாக கூட இருக்கலாம்.

    மலத்தின் வாடை இன்னும் மறையவில்லை தோழா!

    ReplyDelete
  5. மரபணுக்களில் புதைந்திருக்கும் இந்த சாதிய வெறியை எந்த அறிவியல் ஆயுதத்தால் வெளியேற்றுவது?

    திண்ணியத்தில் நிகழ்ந்ததற்குக் கிடைத்த பாதுகாப்பிலிருந்து திமிர் பரவுகிறது சாதியப் பரப்புகளெங்கும். நிர்வாக அமைப்புகளும், அரசியல் சாதுரியங்களும் இவற்றாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், அம்பலப்படும் ஒன்றிரண்டு கொடுமைகளுக்கே நீதி மறுக்கப்படும்போது அன்றாடம் ஒடுக்கப்படுவோரின் இரத்தம் மட்டும் குளிர்ந்தே கிடக்குமா என்ன....

    ஆனால், அத்தகைய எதிர்வினைகளின்போது எழுதுகின்றனர் தூண்டிவிடப்பட்ட கலகம், கொழுந்துவிட்டெறியும் வன்முறை என்றெல்லாம்...

    எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா என்று எழுதினார் ('மனுசங்கடா, நாங்க மனுசங்கடா') கவிஞர் இன்குலாப். கனவில் ஊட்டப்பட்டாலும் காலத்திற்கும் உறங்கவிடாத மனிதக் கழிவை விடவும் நாறிக் கிடக்கிறது, அதை எடுத்து சக மனிதனுக்கு ஊட்டுமளவு கொழுத்துக் கிடக்கும் சாதியம்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  6. The perpetrators of this have only shit inside their skulls, not brains. Their caste bias stinks worse than shit. Pl note the shameless silence of Thamizhar thalaivargal, Ina Maana Veerargal and Indhu Dharma Kaavalargal. Avargal vaayil enna malama, sorry kozhukkattaya?

    ReplyDelete