சந்திப்பு வலைதளத் தோழர். கே.செல்வப்பெருமாள் நேற்று இரவு(22.01.2010) காலமானார்.
பெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.
எத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு "அதி தீவிரவாதிகள்" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை "எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
நேரில் இல்லையென்றாலும் வலைத்தளம் மற்றும் தொலைபேசி மூலமாகவாவது நாம் பேசிக் கொண்டிருந்தோம். இனி நமது "சந்திப்பு" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..?
இடதுசாரி சிந்தனைகளை நேர்மையாக சொல்வதற்கும், அதிதீவிரவாதிகளின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கவும் சரியான இணையதளமோ பதிவோ இல்லையே என நான் ஒரு நாள் ஒரு தோழரிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவர், "தோழர் செல்வபெருமாள் சந்திப்பு என்கிற பெயரில் பதிவு எழுத துவங்கியிருக்கிறார்" என்றார். அன்று முதல் தினமும் அலுவலகம் வந்ததும், செல்வபெருமாள் ஏதேனும் புதிதாக இன்று எழுதி இருக்கிறாரா என பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் (வேறு வேறு பெயர்களில்). இரண்டு அல்லது மூன்று முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. நிச்சயமாக அவரது மறைவு ஒரு பேரிழப்புதான் என்னை போன்றோர்க்கு. அவரது பதிவுகளை அச்சில் ஏற்ற முடிந்தால் அதுவே நாம் அவருக்கும் அவரது பதிவுகளுக்கும் செய்யும் அஞ்சலி.
ReplyDelete