Tuesday, January 26, 2010

ஜப்பானில் விழுந்த அடுத்த "குண்டு"!



ஜப்பானில் மற்றொரு குண்டு விழுந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் திவால் என்ற பொருளாதார குண்டுதான் அது. அந்நாட்டில் மட்டுமல்ல, ஆசியக்கண்டத்திலேயே ஜப்பான் ஏர்லைன்ஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனமாகும்.


தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது என்பதால் கடன்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று நீதிமன்றத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. கடன் தொகை மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ஏகப்பட்ட நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் தொழில் நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக இந்த சம்பவம் அமையும் என்று தொழில் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


லட்சம் கோடிகளில் புரண்டு கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்சின் மதிப்பு வெறும் 414 கோடி ரூபாய் என்று குறைந்துவிட்டது. ஒரு புதிய ஏ-380 ரக விமானத்தை வாங்க வேண்டுமென்றால் கூட இது போதாது. ஒரு சிறிய இடைவெளியைத் தவிர, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தொடர்ந்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்தது.


நிலையான அரசு என்று சொல்லிக் கொண்டவர்களின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. பெரிய எதிர்பார்ப்போடு தேர்வு செய்யப்பட்ட புதிய ஆட்சியாளர்கள் பழைய பாதையிலேயே செல்ல முனைந்துள்ளார்கள்.


மறுபுறத்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பு ஜப்பானில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ராணுவக்கப்பல்கள் முகாமடிக்கும் நாட்கள் 2008 ஆம் ஆண்டில் 260 ஆக இருந்தது. தற்போது 300யைத் தாண்டிவிட்டது. பல முனைகளிலும் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் புதிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment