Thursday, February 25, 2010

தோழர் உ.ரா.வரதராசனின் துயர மரணம்!


தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்வி என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர் மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.


பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரதராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பினை செய்த, பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட ஒரு தோழரின் இந்தத் துயரமான முடிவு கட்சிக்குள்ளும், அவரோடு இணைந்து பணியாற்றிய நம் அனைவருக்கும் மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.


அவர் மரணமடைந்த விதமானது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது இயல்பான ஒன்றே. ஆனால் இந்த துயரார்ந்த நிகழ்வை ஒரு பகுதி ஊடகத்தினர், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் கூறுவது விஷயத்தை திரித்துக் கூறுவது, அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புவது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை, எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்களை விளக்குவது அவசியம் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.


உ.ரா.வரதராசன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு புகார் வந்தது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது. இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூவருமே மாநிலக்குழு உறுப்பினர்கள். அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் கன்வீனராக செயல்பட்டார். மற்றொரு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர்.


விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25ந்தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு பரிந்துரைத்தது. ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், உ.ரா.வரதராசன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக்குழு கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக்குழுவின் கண்டறிதல்களை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டதோடு உ.ரா.வரதராசன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


உ.ரா.வரதராசன் கட்சியின் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், கட்சியின் மாநிலக்குழு முடிவு எடுக்க இயலாது. கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக்குழுவிற்கு அனுப்பியது.கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரா.வரதராசன் தனது நிலையை விளக்கி அனுப்பிய கடிதம் ஆகியவை மத்தியக்குழு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.


இந்தப்பொருள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உ.ரா.வரதராசன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்தியக்குழு முடிவு செய்தது. கூட்டத்தில் பங்கேற்ற 74 மத்தியக்குழு உறுப்பினர்களில் யாரும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆட்சேபிக்கவில்லை. வாக்கெடுப்பின்போது ஐந்து உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மத்தியக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப் போவதாகவும் உ.ரா.வரதராசன் தெரிவித்தார்.


மேற்கூறப்பட்ட வகையில்தான் உரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கட்சி உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது.


பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் அரைகுறையான உண்மைகள் என்ன? உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து விரட்டப்பட்டார் என்பது அவதூறுகளில் ஒன்று. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற ஒழுங்கு நடவடிக்கையின் பொருள், பொருத்தமான கட்சிக்குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்பதுதான். இதைப்பொறுத்தவரை பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழுவில் உ.ரா.வரதராசனை இணைத்துக்கொள்வது என்றும், தொழிற்சங்க அரங்கில் அவருக்கு பணி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது வெளியேற்றுவது என்பதல்ல; உ.ரா.வரதராசன், தொடர்ந்து தனக்குள்ள திறனை பயன்படுத்தி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி தங்களது தவறுகளை சரிசெய்து கொண்டு கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.


கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கைதான் ஒரு கட்சித்தலைவரை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியுள்ளது என்று சித்தரிப்பது முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்ல, இந்த துயரமான நிகழ்வை பயன்படுத்தி கட்சியையும் அதன் தலைமையையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதும் ஆகும். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியிருந்தால் அப்போது இதே ஊடகங்கள், தங்களது கட்சித்தலைவர் மீது ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை கண்டுகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுத்திருக்கும்.


நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்காத நிலையில், கட்சி “புரிந்துகொள்ள முடியாததாக” இருக்கிறது என்றும், இதற்கு முரண்பாடான வகையில் உ.ரா.வரதராசனை “வெளிப்படையாக அவமானப்படுத்தி”விட்டனர் என்றும் கட்சி மீது குற்றம் சாட்டப்படுகிறது. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படாத நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்தியக்குழு பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இதற்குக்காரணம் உ.ரா.வரதராசன், கட்சியில் தரப்படும் பொறுப்பை ஏற்று தனது பணியை ஆற்ற வேண்டும் என்பதே. தன்னுடைய ஊழியர்களை “வெளிப்படையாக அவமதிப்பதில்” மார்க்சிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கையில்லை. உ.ரா.வரதராசன் தன்னுடைய குறைபாடுகளை சரிசெய்துகொண்டு தொடர்ந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கட்சியின் ஸ்தாபனக்கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்தை இழிவுபடுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. மத்தியத்துவம் மற்றும் எதேச்சதிகார அடிப்படையிலேயே உ.ரா.வரதராசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புனைந்துரைக்கப்படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளே இந்த கூற்றில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்தும். அவர் நேரடியாக பணியாற்றிய மாநிலக்குழுதான் அவர் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை துவக்கியது. நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழு பிரச்சனையில் தலையிடுகிறது. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதேச்சதிகாரமாக முடிவெடுக்கக்கூடாது என்ற ஜனநாயக நடைமுறையும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. முறையான விசாரணைக்குப்பிறகு சம்பந்தப்பட்ட தோழரை நேரடியாக அழைத்து அவரது கருத்தையும் நேரடியாக கேட்டபிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்.


உ.ரா.வரதராசனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் கட்சி மேற்கொண்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்தையும் முடிச்சுபோடுவதற்கான முயற்சியும் நடக்கிறது. உ.ரா.வரதராசன் சம்பந்தப்பட்ட விசயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் மத்தியக்குழு நெறிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பே, இந்த விசயம் தொடர்பான புகார் வந்துவிட்டது. நெறிப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அதை சரிசெய்வதே ஆகும். கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கமல்ல.


தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தங்களுடைய முழு நேரத்தையும் வாழ்க்கையையும் கட்சிப்பணிக்காக ஒப்படைத்துள்ள ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது. தோழர்கள் தவறான நிர்ணயிப்புகளுக்கு வரும்போது அல்லது தவறிழைக்கும்போது, அவருடைய ஒட்டுமொத்த பங்களிப்பையும் கட்சி கவனத்தில் கொள்கிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட தோழர் தன்னுடைய தவறை சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற முறையிலேயே அமைந்திருக்கும். இத்தகைய நடைமுறையில் பல்வேறுகட்ட நடவடிக்கைகளுக்குப்பிறகு கடைசி கட்ட நடவடிக்கையாகவே கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்பது அமையும்.


உ.ரா.வரதராசன் விஷயத்தைப் பொறுத்தவரை அவர் தனது பிரச்சனையிலிருந்து மீண்டுவந்து கட்சிக்கும், இயக்கத்திற்கும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்றே கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அது நடைபெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


-பிரகாஷ்காரத்

Friday, February 19, 2010

வெந்த புண்ணில் பம்பரம் விடுகிறார்கள்!



உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசோ இதைக் குறைப்பதற்காக வழிகளைக் கண்டறியாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வெந்த புண்ணில் பம்பரம் விடப்பார்க்கிறது. கடந்த ஆண்டிலிருந்து விலையை விட உருளைக்கிழங்கின் விலை 57.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. உரித்தால் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயத்தின் விலையைப் பார்த்தாலே கண்ணீர் விட வேண்டியுள்ளது. அரிசியும், கோதுமையும் எங்கே என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம் என்று மேலே, மேலே போய்க் கொண்டிருக்கின்றன.



இத்தனைக்கும் தற்போது மத்திய அரசின் உணவுப் பொருட்கள் கிடங்குப் பணியாளர்கள் ஒன்றும் ஈயோட்டிக் கொண்டிருக்கவில்லை. அபரிமிதமான அளவில் உணவு தானியங்கள் கிடங்குகளில் பத்திரமாக இருக்கின்றன. தேவையொட்டிகூட மக்களுக்கு விநியோகிக்காத அளவுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். விலைவாசியை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது பற்றி ஆலோசிக்க அண்மையில் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதற்குப்பிறகும் கூட கிடங்குகளில் உள்ள தானியங்கள் வெளியுலகைப் பார்க்க முடியவில்லை.



அங்கு எலிகள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றன. கிடங்குகளில் கிடக்கும் உணவு தானியங்களைக் குறைக்க என்ன வழி என்று யோசித்துப் பார்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பாண்டில் கோதுமைக் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டு விட்டார்கள். கோதுமை அறுவடைக்காலம் என்பது இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலானதாகும். கொள்முதல் குறித்து இப்போதே ஆலோசனை செய்து விட்டார்கள். கடந்த ஆண்டின் அறுவடைக்காலத்தில் 2.53 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. வரும் காலத்தில் 2.40 கோடி டன்னை மட்டுமே கொள்முதல் செய்யப்போகிறது மத்திய அரசு.



அதோடு, மத்திய அரசின் கொள்முதல் விலையை விட சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மத்திய உணவுக்கழகத்திடம் கொடுக்காமலே போகும் ஆபத்தும் உள்ளது. இதனால் மத்திய அரசின் கொள்முதல் மேலும் சரியும் என்று கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் மத்திய விவசாயத்துறை அமைச்சரோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்த இடையூறும் செய்யாதீர்கள் என்று பால்தாக்கரேயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

Thursday, February 18, 2010

தலித்துகளை வெள்ளமும் விட்டுவைக்கவில்லை!


சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித்துகள் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போதும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டுர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்கமான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.


இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.


ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளில்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.


தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.

பனிமலைகள் உருகவே செய்கின்றன!



2035 ஆம் ஆண்டிற்குள் இமயமலையில் பனிப்பிரதேசங்களே இல்லாமல் போய்விடும் என்ற சர்வதேச அரசுகளுக்கிடையிலான குழுவின் அறிக்கை போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் கூறப்பட்டிருந்தது. அதை அந்தக்குழுவும், அக்குழுவின் தலைவருமான ராஜேந்திர பச்சோரியும் ஒப்புக்கொண்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வெப்பமயமாதல் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்றும், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்று பல பன்னாட்டு நிறுவனங்களின் சார்பில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. அதற்கு ஆதரவாக சர்வதேசக்குழுவின் இமயமலை குறித்த தவறான கணிப்பை அவர்கள் ஆதாரமாக சுட்டிக்காட்டி வருகிறார்கள்.


இமயமலை குறித்த கணிப்பில் தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளும் பச்சோரி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் தவறானவை என்கிறார். பனிப்பிரதேசங்கள் உருகி வருகின்றன என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என்று கூறும் அவர், 2035 ஆம் ஆண்டு என்ற கணிப்புதான் தவறேயொழிய, பனி உருகிக் கொண்டிருக்கிறது என்பது பல சோதனைகளிலும் உறுதியாகியுள்ளது என்று எச்சரிக்கிறார். சுற்றுச்சூழலுக்கு சாதகமான இருப்பிடம் என்ற தலைப்பில் மும்பையில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். வெப்பமயமாதல் பிரச்சனையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுவிட வேண்டாம் என்று அவர் ஆட்சியாளர்களை மட்டுமின்றி, மக்களையும் கேட்டுக் கொண்டார்.


மேலும் பேசிய அவர், இமயமலை எந்தப்பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை என்று சிலர் கூறுவார்கள். அது சரியல்ல. அதிக வேகத்தில் அங்குள்ள பனிப்பிரதேசங்கள் உருகி வருகின்றன. துரதிருஷ்டவசமாக, நமது நாட்டில் இது குறித்த ஆய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்படவில்லை. இதனால் வட இந்தியாவில் இருக்கும் ஆறுகள் அனைத்திலுமே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. சொல்லப்போனால் இதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். இதுவரை வெள்ளத்தையே பார்க்காத ராஜஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தோடு, வறட்சியும் மிகக் கடுமையாக ஏற்படும் நிலை உள்ளது என்றார்.


சர்வதேசக் குழுவின் அறிக்கை மீதான சர்ச்சை குறித்துப் பேசிய அவர், அந்த அறிக்கை சரியானதே. 2035 ஆம் ஆண்டு என்பதில் மட்டும்தான் மாற்றம் உள்ளது. அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் வெப்பமயமாதல் என்பதையே நிராகரிக்கும் நபர்கள் உள்ளனர். அதேபோல், சில சுயநல சக்திகளும் இத்தகைய கருத்துகளைப் பரப்பி வருகின்றன. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவை ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நான் குரலெழுப்புகிறேன். இத்தகைய அணுகுமுறை சுயநல சக்திகள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களே வெப்பமயமாதல் பிரச்சனையைக் கையாள வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றன.


வெப்பமயமாதல் பிரச்சனையை இந்தியர்கள் அபாரமாகக் கையாளுவார்கள் என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நாடுதான் என்னை வளர்த்து எடுத்தது. எனக்கு இந்தியக் குடிமகன்கள் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்திய மக்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள். வெப்பமயமாதல் குறித்த அறிகுறிகள் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள். இதன்மூலம்தான் நமது குழந்தைகளுக்கு நல்ல வருங்காலத்தை நம்மால் அளிக்க முடியும். மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்று சர்வதேசக்குழு கணித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் மும்பையில் ஏற்பட்ட திடீர் வெள்ளமே இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. மும்பைக்கு அருகில் கடல் மட்டம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் பச்சோரி.


2003 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஏற்பட்ட கடுமையான வெப்பக்காற்றை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய வெப்பக்காற்றுக்கு சுமார் நான்காயிரம் பேர் பலியானதான பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் பொய்த்துப் போதல், திடீர் வெள்ளம் மற்றும் திடீர் வறட்சி ஆகியவை வெப்பமயமாதல் பிரச்சனை இருக்கிறது என்பதையும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும்தான் காட்டுகிறது. வெப்பமயமாதல் பிரச்சனையின் அளவை ஒப்பிட்டால் சர்வதேசக் குழுவின் தவறு மிகச்சிறியதுதான். இத்தனைக்கும் அதை அக்குழுவே ஒப்புக் கொண்டுவிட்டது. இருந்தாலும் வெப்பமயமாதல் நடவடிக்கைகள் தங்கள் லாபத்தைக் குறைத்து விடும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

Tuesday, February 16, 2010

இலக்கிய விருதுகள் தனியார் மயம்?



சாகித்ய அகாடமி சார்பில் ஏற்கெனவே இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து தாகூர்-சாம்சங் இலக்கிய விருது என்ற பெயரில் விருதுகள் தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


எட்டு மொழிகளில் இலக்கியத்திற்கான விருதுகளை தாகூர்-சாம்சங் விருது என்ற பெயரில் கடந்த மாதம் வழங்கினர். குடியரசுத்தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தென் கொரிய ஜனாதிபதியின் துணைவி கிம் யூன்-ஓக் இந்த விருதுகளை வழங்கினார்.


ஏற்கெனவே சாகித்ய அகாடமி சார்பில் விருதுகள் தரப்படும்போது சாம்சங்கை இணைத்துக் கொண்டு விருதுகள் வழங்க வேண்டிய அவசியம் ஏன் என்று பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி எழுத்தாளர் அமைப்புகளும் இணைந்து இந்த தனியார் மயமாக்கலுக்கு எதிராக தில்லியில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளன.


இந்தி எழுத்தாளர் உலகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால், பிரபல எழுத்தாளர்களான நம்வார் சிங், மேனேஜர் பாண்டே, கிருஷ்ணா சோப்டி, அல்கா சரோகி மற்றும் வீரேந்திர டாங்வால் ஆகியோரும் இடதுசாரி அமைப்புகளோடு இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.


எவ்வாறு விருதுகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். கேட்டால் இலக்கியத்துறையில் திறமையானவர்களைக் கவுரவிப்பதற்காக இந்த விருதுகளை வழங்குகிறோம் என்று சாகித்ய அகாடமியினர் கூறுகிறார்கள்.


25 மொழிகளில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறதே.. அதைப் பெறுபவர்களும் தகுதியானவர்கள்தானே என்று மூத்த எழுத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்!



சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்
1993 ஆம் ஆண்டு. திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் உயிரிழக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாறைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.


தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றபப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.



பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலைஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.


2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பல முறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன.


மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, February 9, 2010

சர்க்கரை சாப்பிடாததால் இறக்க மாட்டீர்கள்!


சர்க்கரை சாப்பிடாததால் யாரும் இறப்பதில்லை!

தேசியவாத காங்கிரசின் "புதிய கண்டுபிடிப்பு"!


சர்க்கரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வதே சர்க்கரை விலையுயர்வைச் சமாளிப்பதற்கான தீர்வு என்று கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ராஷ்டிரவாதியின் தலையங்கம், சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் யாரும் இறந்து விடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


விலைவாசி உயர்வு குறித்து நாடே விவாதித்து வருகிறது. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. முதலில் மத்திய அரசில் உள்ள எல்லோரும் சேர்ந்த மாநிலங்கள்தான் காரணம் என்றனர். அது எடுபடாததால் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரைக் குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுத்தனர். அவரும் பதிலடிக்கு பிரதமரும்தான் விலையுயர்வுக்குப் பொறுப்பு என்றவுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது நின்றது.


தற்போது தேசியவாத காங்கிரஸ் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது. தங்கள் பத்திரிகையான ராஷ்டிரவாதி தலையங்கத்தில் சர்க்கரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேலும், இனிப்பான பொருட்களைச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும். ஒவ்வொருவரும் சர்க்கரையை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அந்தத் தலையங்கம் சொல்கிறது.


இவ்வளவு சொல்லியும் சர்க்கரையை வாங்க கடைக்குச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் தேசியவாத காங்கிரசுக்கு வந்துவிட்டது போலும். அதிகமான சர்க்கரை அல்லது உப்பு எடுத்துக்கொள்வது விஷத்தை உண்பதற்கு சமம் என்று மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு போடு போட்டுள்ளது.எதிர்க்கட்சிகளிடமிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பத்திரிகையின் தலையங்கத்திற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்படிப் பத்திரிகை இருப்பதே எங்களுக்குத் தெரியாது என்று கூட சொன்னாலும் சொல்வார்கள் என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, February 3, 2010

நியூயார்க்கிலும் கஞ்சித்தொட்டிகள்!


ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பார்பரா வாஸ். சொந்தக்காலில் நின்று தனக்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தவர் வாழ்வில் திடீர் மாற்றம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அன்றாட உணவுக்கே சமூகநல மையங்களை நாட வேண்டிய வந்தது. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களில் பார்பரா வாசும் ஒருவர்.


அவர் உணவுக்காக சென்றுள்ள மையம் அமெரிக்கப் பெருநகரம் நியூயார்க்கில் உள்ளது. அந்த மையம் கிறித்தவ தேவாலயம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு இவர் மட்டுமல்ல. இவரைப்போன்று சுமார் 1,250 பேர் உணவுக்காக அடைக்கலம் புகுந்துள்ளனர். உணவுக்காக இந்த அளவு எண்ணிக்கையில் ஒருபோதும் மையத்துக்கு மக்கள் வந்ததில்லை என்று மையத்தின் பொறுப்பாளர் எலிசபெத் மேக்ஸ்வெல் கூறுகிறார்.


இத்தகைய மையங்கள் ஏராளமான எண்ணிக்கையில் நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தங்கள் அன்றாட உணவுக்காக இத்தகைய சமூகநல உணவு மையங்களையே நம்பியுள்ளனர். இவர்களோடு அன்றாட உணவுக்காக பணம் தர முடியாமல் சிரமப்படுபவர்களின் எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 60 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


நியூயார்க்வாழ் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்த சமூகநல மையத்தில்தான் தனது உணவைப் பெறுகிறது. அவர்களின் எண்ணிக்கையே சுமார் நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இவ்வாறு சமூகநல மையங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஒருபுறம். வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உணவுக்காக வருபவர்களை திருப்பி அனுப்புவதும் துவங்கியுள்ளது.


ஏற்கெனவே வரும் மக்களின் எண்ணிக்கையே சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், 2010 ஆம் ஆண்டில் உணவுக்காக அலைமோதும் நியூயார்க்வாசிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகிலேயே பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவின் பெருநகரமான நியூயார்க்கிலேயே கஞ்சித்தொட்டிகள் திறந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடு என்று சொல்லிக் கொள்வது எவ்வளவு கேலிக்கூத்தான விஷயம் என்பதை உணவுக்காக மக்கள் கூட்டம் அலைமோதுவது நிரூபிக்கிறது.