Wednesday, February 3, 2010

நியூயார்க்கிலும் கஞ்சித்தொட்டிகள்!


ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பார்பரா வாஸ். சொந்தக்காலில் நின்று தனக்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தவர் வாழ்வில் திடீர் மாற்றம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அன்றாட உணவுக்கே சமூகநல மையங்களை நாட வேண்டிய வந்தது. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களில் பார்பரா வாசும் ஒருவர்.


அவர் உணவுக்காக சென்றுள்ள மையம் அமெரிக்கப் பெருநகரம் நியூயார்க்கில் உள்ளது. அந்த மையம் கிறித்தவ தேவாலயம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு இவர் மட்டுமல்ல. இவரைப்போன்று சுமார் 1,250 பேர் உணவுக்காக அடைக்கலம் புகுந்துள்ளனர். உணவுக்காக இந்த அளவு எண்ணிக்கையில் ஒருபோதும் மையத்துக்கு மக்கள் வந்ததில்லை என்று மையத்தின் பொறுப்பாளர் எலிசபெத் மேக்ஸ்வெல் கூறுகிறார்.


இத்தகைய மையங்கள் ஏராளமான எண்ணிக்கையில் நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தங்கள் அன்றாட உணவுக்காக இத்தகைய சமூகநல உணவு மையங்களையே நம்பியுள்ளனர். இவர்களோடு அன்றாட உணவுக்காக பணம் தர முடியாமல் சிரமப்படுபவர்களின் எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 60 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


நியூயார்க்வாழ் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்த சமூகநல மையத்தில்தான் தனது உணவைப் பெறுகிறது. அவர்களின் எண்ணிக்கையே சுமார் நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இவ்வாறு சமூகநல மையங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஒருபுறம். வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உணவுக்காக வருபவர்களை திருப்பி அனுப்புவதும் துவங்கியுள்ளது.


ஏற்கெனவே வரும் மக்களின் எண்ணிக்கையே சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், 2010 ஆம் ஆண்டில் உணவுக்காக அலைமோதும் நியூயார்க்வாசிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகிலேயே பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவின் பெருநகரமான நியூயார்க்கிலேயே கஞ்சித்தொட்டிகள் திறந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடு என்று சொல்லிக் கொள்வது எவ்வளவு கேலிக்கூத்தான விஷயம் என்பதை உணவுக்காக மக்கள் கூட்டம் அலைமோதுவது நிரூபிக்கிறது.

4 comments:

 1. Why dont u send this to Manmohan,Motek Singh,and P.Chidambaram for their valuable comments......kashyapan.

  ReplyDelete
 2. இதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி ?? நாம் எப்படி முன்னேற்றம் காணலாம் என்று பாராமல், பணக்காரன் எப்படி வீழ்வான், எப்பொழுது வீழ்வான் என்று பார்ப்பது தான் கம்யூனிச கொள்கை என்பதை மீண்டும் ஒரு முறை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது உங்கள் எழுத்து !! வருந்துகிறேன் !!

  ReplyDelete
 3. கௌரி,

  அடுத்தவன் எப்படி வீழ்வான், எப்போது வீழ்வான் என்று பார்ப்பதெல்லாம் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவத்தின் குணம். நியூயார்க் என்று சொன்னால் பெரும்பாலான நபர்களுக்கு அறிமுகமான ஒரு நகர். அங்கு சோத்துக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நாட்டு அரசோ, தனது எண்ணெய் நிறுவனங்களுக்கு கிணறுகளை வாங்கித் தருவதில் மும்முரமாக உள்ளது. அதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் அப்பாவிகளைக் கொலை செய்யத் தயங்கவில்லை.

  இன்றைய தினமலரில் கூட, ரஹ்மானுக்கு கிராமி விருது கிடைத்ததற்கு கம்யூனிஸ்டுகள் எப்படி வாழ்த்து தெரிவிக்கலாம் என்று கேட்கிறார்கள். அமெரிக்க நிறுவனம் தந்தால் கம்யூனிஸ்டுகள் கோபித்துக் கொள்ள வேண்டுமே என்று கிறுக்குத்தனமாக தினமலர் கேட்கிறது. அமெரிக்கா என்றாலே வேப்பங்காயாக நாங்கள் கருதுவதாக அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதேபோல்தான் கம்யூனிஸ்டுகளின் கொள்கை என்று நீங்களே ஒன்றைச் சொல்லிக்கொண்டு அது பறைசாற்றப்படுவதாகவும் கூறிக் கொள்கிறீர்கள். கம்யூனிசம் பற்றி படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. "...என்று பார்ப்பது தான் கம்யூனிச கொள்கை என்பதை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது உங்கள் எழுத்து.." - என்பதற்கு அர்த்தம் உங்களின் கருத்து தெரிவிக்கும் தோற்றம் பற்றியே அன்றி, எனக்கு தெரியாத கம்யூனிஸ்டுகளின் கொள்கை பற்றி அல்ல !!

  ReplyDelete