Sunday, June 28, 2009

வளரும் பொதுத்துறை; சரியும் தனியார்

இந்தியாவின் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டுத்துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் மீதுதான் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மே மாதத்திற்கான புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வரைமுறையே இல்லாமல் கடன்களைக் கொடுத்ததால் உருவாக சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நெருக்கடியால் காப்பீட்டுத்துறையின் வருமானமும் சரிந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுத்துறையின் வருமானம் ஐந்து சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. புதிய வர்த்தகம் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் திண்டாடியதைத்தான் இந்தப் புள்ளிவிபரம் காட்டுகிறது. இத்தகைய சரிவிலும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை எல்.ஐ.சி. மட்டுமே சரியாமல் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது புதிய பாலிசிக்காக மே மாதத்தில் பெற்ற பிரிமிய வருமானத்தின் அடிப்படையிலானதாகும்.


காப்பீட்டுத்துறையின் ஒழுங்குமுறை அமைப்பு சேகரித்துள்ள விபரங்களின்படி இந்தப் புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் மே மாதத்தில் புதிய பிரிமிய வருமானமாக 2 ஆயிரத்து 923 கோடி ரூபாயை எல்.ஐ.சி. வசூல் செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் நெருக்கடியையும் மீறி 3 ஆயிரத்து 242 கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனத்தால் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்துமே சரிவைத்தான் சந்தித்துள்ளன. குறிப்பாக ஐசிஐசிஐ புருடென்சியல் நிறுவனத்தின் சரிவு 43 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 697 கோடி ரூபாயை புதிய பிரிமிய வருமானமாகப் பெற்ற ஐசிஐசிஐ, நடப்பாண்டில் வெறும் 348 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது.


தங்கள் வளர்ச்சி பற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசும் எல்.ஐ.சியின் செயல் இயக்குநர் தாமஸ் மாத்யூ, நடப்பாண்டை நல்ல முறையில் துவக்கியுள்ளோம். ஆனால், இதோடு சந்தோஷப்பட்டு நின்றுவிடக்கூடாது. உண்மையான வர்த்தகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் துவங்கும். நடப்பாண்டில் புதிய பிரிமிய வருமானத்தைப் பெறுவதில் 30 முதல் 40 சதவீதம் வரை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். எல்.ஐ.சி. வழங்கியுள்ள பங்குச்சந்தையோடு இணைக்கப்பட்ட பாலிசிகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது என்பதையும் தாமஸ் மாத்யூ சுட்டிக்காட்டுகிறார்.


பொதுக்காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை, பொதுத்துறை நிறுவனங்கள் சந்தையில் தங்கள் பங்கை அதிகரித்துள்ளன. நேஷனல் நிறுவனத்தைத் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் ஆகிய அனைத்துமே நெருக்கடியின் தாக்கத்தை மீறி வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஐசிஐசிஐ லோம்பார்டு(-19.7), பஜாஜ் அல்லையன்ஸ்(-17.4), இஃப்கோ டோக்யோ(-13.26) மற்றும் டாடா ஏஐஜி(-19.6) ஆகிய தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்மறை வளர்ச்சியையே கண்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.


பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் கண்டுள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓரியண்டல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாலிசிகளைப் புதுப்பித்துள்ள நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தனியார் நிறுவனங்களிடமிருந்த வர்த்தகம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாறியுள்ளதைப் பார்க்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு சளைக்காத பிரிமியத்தொகை மற்றும் பொதுத்துறை மீது மக்களுக்குள்ள நம்பிக்கை ஆகியவையே இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்கிறார். ஆயுள் காப்பீட்டுத்துறை சரிவை சந்தித்தள்ள நிலையில், அந்த அளவிற்கு பொதுக்காப்பீட்டுத்துறை செல்லவில்லை என்பதே இரு துறைகளுக்குமுள்ள வேறுபாடாகும்.


பொதுத்துறை மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இதையெல்லாம் மீறித்தான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து காப்பீட்டுத்துறையை அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக அளவில் 85 சதவீத வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பொதுத்துறையில் உள்ள இந்திய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கட்டுப்பாடில்லாத தனியார் மயம் சிக்கலையே கொண்டுவரும் என்பது உண்மைதான்.
    -விபின்

    ReplyDelete
  2. //Working as Sub-Editor in Theekkathir//
    வாழ்த்துக்கள் நண்பரே.
    - அதே விபின்

    ReplyDelete