Monday, June 22, 2009

ராகுல் சாமி வந்துருக்காக...



தலித்துகளின் பகுதிகளுக்கு செல்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அவருடன் தங்கபாலு, ஞானதேசிகன் மற்றும் பலர்.
(திடீரென்று தலித் ஒருவரின் குடிசைக்குள் நுழைகிறார்)

தலித் குடும்பத்தலைவர்(மனைவியிடம்) : ஏய்... யார் வந்துருக்கா பாரு... ராகுல் சாமி வந்துருக்காக...


மனைவி : வாங்க சாமி... வாங்க...


ராகுல் (தலித்துகளிடம்) : நோ...நோ... ராகுல் காந்தி... நாட் ராகுல்சாமி...


ஞானதேசிகன் (தலித்துகளிடம்) : அவர் பேரு ராகுல் சாமி இல்ல... ராகுல் காந்தி...

கு.தலைவர் : தெரியும் சாமி....

ஞானதேசிகனைப் பார்த்து ராகுல்(ஆங்கிலத்தில்) : ஹா.. ஹா... நீங்களும் சாமியா...

ராகுலின் மகிழ்ச்சியைக் கண்டு குடும்பத்தலைவரும், அவர் மனைவியும் பூரித்துப் போகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது மொழிபெயர்ப்பால் சிக்கிக் கொண்ட ஞானதேசிகன் முழிக்கிறார். ராகுல் சொல்வதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லக்கூடாது என்ற உறுதிமொழியை மீண்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களின் உரையாடலை மொழி பெயர்க்கத் துவங்குகிறார்.

ராகுல் : எப்படி இருக்கீங்க...

கு.தலைவர் : நல்லா இருக்கோம் சாமி...

ராகுல்(சாமி என்று சொல்வதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல்) : பணவீக்கம் குறைஞ்சுருச்சு...

கு.தலைவர் : அய்யோ... பாவம்...

கு.தலைவர்முகம் கோணலாகிப் போனதால் பதற்றமடைந்த ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : நீங்க ஒழுங்கா சொல்லலை போலருக்கு...

ஞானதேசிகன் : அய்யய்யோ.. வீக்கம்னு நீங்க சொன்னத அப்படியேதான் சொன்னேன்.. ஏதோ அடிபட்டு இப்ப வீக்கம் குறைஞ்சுட்டதா அவங்க நெனச்சுட்டாங்க... நீங்க சொல்றத அப்புடியே தமிழ்ல சொல்றதத்தவிர வேற வழி எனக்கு இல்லை..

கு.தலைவர் : என்னங்க நாங்க எதுவும் தப்பா சொல்லிட்டோமா...??

ஞானதேசிகன்(மனசுக்குள்) : ஆஹா... என்னை சிக்க வெக்காம விடமாட்டாங்க போலருக்கே..
ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : பணவீக்கம் எதிர்மறையாப் போயிருச்சுன்னு அவங்களுக்கு விளக்கமாச் சொல்லுங்க...

ஞானதேசிகன் : அதாவது, இப்ப நீங்க ஒரு கார் வாங்குறீங்கன்னு வெச்சுக்கோங்க...

மகன் : அய்... காரு(என்று கூறிவிட்டு கிழிஞ்ச டயரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்)

கு.தலைவர் : காரா... எதுக்கு...

ஞானதேசிகன் : அத விடுங்க... போன வருஷம் தக்காளி கிலோ அஞ்சு ரூபாயா இருந்துச்சு... இப்ப ஒரு கிலோ கேட்டீங்கன்னா தக்காளியும் குடுத்து அஞ்சு ரூபாயும் கைல கொடுத்து அனுப்புவாங்க...

அதிர்ந்து போன தங்கபாலு, "அப்படிலாம் இல்ல..." என்றார் அவசர, அவசரமாக.

கு.தலைவர் : அதான் எனக்குத் தெரியுமே... உங்க தலைவர் என்ன சொல்றார்னு சொல்லுங்க சாமி....

தங்கபாலுவையும் சாமின்னு சொன்னதும் ராகுல் உற்சாகமடைகிறார்.

தங்கபாலு : விலையெல்லாம் குறைஞ்சுருச்சுன்னு சொல்றாரு...

மனைவி : அப்படின்னா சாமி சொன்னது உங்களுக்கும் புரியலையா...

ராகுல் : என்ன சொல்றாங்க...

தங்கபாலு : ஒண்ணுமில்ல சாமி...(அய்யய்யோ... இந்த சாமி விவகாரம் நமக்கு தொத்திக்கிச்சே என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறார்) நாம சொல்றது அவங்களுக்குப் புரியல...

ராகுல் : அமெரிக்கா உடன்பாட்டால மின்சாரம் வரும்குறத சொன்னா நம்புவாங்களா...

தங்கபாலு : இந்த வீட்டுக்கு இன்னும் மின் இணைப்பே குடுக்கலை...

ஞானதேசிகன் : நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா...

ராகுல் : சொல்லுங்க...

ஞானசேகரன் : அடுத்த வீட்டுக்கு போலாமே...

ராகுல் : சாப்பாடும் இங்கதாங்குறதுதான நம்ம திட்டம்...

தங்கபாலு : (மனசுக்குள்) இவர் போற வீட்டுல சமைச்சததான் இவ்வளவு நாளா சாப்புட்டோம்னு நெனச்சுட்டாரு போலருக்கே...

செல்போன் அடிக்கிறது.
கையில் எடுத்த ராகுல் : ஹலோ... யெஸ் ராகுல் சாமி... ஸாரி... நோ... நோ... ராகுல் காந்தி..

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

1 comment:

  1. உண்மையில் இந்த கன்றாவி தான் நடக்கிறதே !

    ReplyDelete