Friday, June 12, 2009

பினராயி விஜயன் குற்றவாளியா??

கேரளாவில் உருவாகியுள்ள எ°.என்.சி-லாவாலின் சர்ச்சை கட்சிக்கு எதிராக உள்ள, அதிலும் குறிப்பாக ஊடகங்களில் பணியாற்றுகின்ற கட்சி எதிர்ப்பாளர்களால் ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டு, பரப்பப்படும் சர்ச்சைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். தணிக்கை அதிகாரியின் ரகசிய தணிக்கை அறிக்கையில் உள்ள பத்தியொன்றில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்ச்சையை எழுப்புகிறார்கள். குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு இந்த அறிக்கை கசிய விடப்படுகிறது. மார்க்சி°ட் கட்சித்தலைவர்கள், குறிப்பாக கட்சியின் மாநிலச் செயலாளரும், 1996-99ல் மின்துறை அமைச்சராகவும் பணியாற்றிய பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதே இதன் நோக்கமாகும். உண்மைகளை தீர ஆய்வு செய்தால் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியினர் ஆகியோரின் தீய நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மூல ஒப்பந்தம்

கேரளாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட நீர்மின் நிலையங்களில் பள்ளிவாசல்(1940-41), செங்குளம்(1954-55) மற்றும் பன்னியாறு(1963-64) ஆகியவையும் அடங்கும். தனது ஆயுட்காலத்தை கிட்டத்தட்ட இந்த நீர்மின் நிலையங்கள் கடந்து விட்ட நிலையிலும், பெரும் அளவில் பராமரிப்பு செய்ய வேண்டியிருப்பதால் இந்த நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்த நிலையங்களில் உள்ள எந்திரங்களை மாற்றி விட்டு, மின்திட்டங்களை மேம்படுத்தி, நவீனமயப்படுத்த 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்தது. இந்தப் பணிகளைச் செய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக செய்யும் வழியை அரசு தேர்ந்தெடுத்தது.


இதற்காக கனடாவைச் சேர்ந்த எ°.என்.சி-லாவாலின் என்ற பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனத்துடன் ஆக°ட் 10, 1995 அன்று அப்போதைய மின்துறை அமைச்சர் சி.வி.பத்மராஜன் கையெழுத்திட்டார். அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பள்ளிவாசல்-செங்குளம்-பன்னியாறு திட்டங்களை(இனி பிஎ°பி என்று இக்கட்டுரையில் குறிப்பிடுவோம்) மேம்படுத்தத் தேவையான கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுக்கு நிதி வழங்க கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் ஒப்புக்கொண்டிருந்தது.


இதற்குப்பிறகு பிப்ரவரி 24, 1996 அன்று கனடாவுக்கு பயணம் சென்ற புதிய மின்துறை அமைச்சர் ஜி.கார்த்திகேயன், நிர்வாகம், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான மேற்பார்வை ஆகியவற்றிற்குத் தேவையான சேவைகளை வழங்குவது குறித்த எ°.என்.சி-லாவாலின் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த ஒப்பந்தம் என்று அப்போது கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை ஆவணங்களும் ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிற்சேர்க்கை பியில் சேர்க்கப்பட்டிருந்த பட்டியலில் கனடாவின் நிதியால் பெறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றின் விலைகள் மற்றும் கனடாவின் ஏற்றுமதிக் கடன் நிதி மூலம் கிடைக்கவிருக்கும் ஒட்டுமொத்த செலவு ஆகியவையும் அதில் இருந்தன.

இடது ஜனநாயக முன்னணி அரசின் முயற்சிகள்

மே 1996ல் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்குள், மாநிலத்தின் மின்சார இருப்பு பெரும் நெருக்கடியான நிலையில் இருந்தது. வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு மூன்று மணிநேர மின்வெட்டும், தொழில் நிறுவனங்களுக்கு 95 சதவீத மின்வெட்டும் அமலில் இருந்தது. கேரள மாநில மின்சார வாரியமும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே துவங்கப்பட்ட மின்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது. புதிய திட்டங்களையும் அது துவக்கியது. இதன் விளைவாக, மே 2001ல் இடது ஜனநாயக முன்னணி அரசின் பதவி நிறைவுபெறும் வேளையில் 1,083.6 மெகாவாட் மின்னுற்பத்தி அதிகரித்திருந்தது. அதற்கு முன்பிருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வெறும் 14 மெகாவாட் மட்டுமே மின்னுற்பத்தி அதிகரித்தது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நிறைவு பெறும்போது மின்வெட்டு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது. தனது தேவையை சுயமாகவே பூர்த்தி செய்யும் மாநிலமாக கேரளா மாறியது.


கொள்முதலில் ஒரு வெளிப்படையான நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக முன்னணியின் அணுகுமுறையில் முக்கிய அம்சமாகும். இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டதில் ஒரு திட்டம் கூட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுத்தோ செய்யப்படவில்லை. இடது ஜனநாயக முன்னணி அரசால் துவங்கப்பட்ட அதிரபள்ளி நீர்மின்திட்டம்(163 மெகாவாட்) மற்றும் குட்டியாடி கூடுதல் விரிவாக்கத்திட்டம்(100 மெகாவாட்) ஆகியவற்றிற்கு வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. கோழிக்கோடு அனல்மின் நிலையத்திட்டத்திற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, பி.எச்.இ.எல்(பாரத் ஹெவி எலக்டிரிகல் லிமிடெட்) நிறுவனத்தால் அது நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாறாக, தற்போது சர்ச்சைக்குள்ளாகும் பிஎ°பி திட்டம் உள்ளிட்டு ஐக்கிய ஜனநாயக முன்னணி காலத்தில் கொண்டு வரப்பட்ட எந்தத் திட்டமுமே வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக வழங்கப்படவில்லை. மேலும், இத்திட்டங்களில் பெரும்பாலானவை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


மாற்றுக்கு குறைவான வாய்ப்பு


அரசு அமைக்கப்பட்டபிறகு இந்தக் கேள்வி இடது ஜனநாயக முன்னணி அரசின் முன்பாக எழுந்தது - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் துவக்கப்பட்ட மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்களை என்ன செய்வது? ஐக்கிய ஜனநாயக முன்னணியால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை பலனளிக்கவில்லை. நெர்யாமங்கலம் மற்றும் சபரி நீர்மின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைவிட்டுவிட்டு, புதிதாக சர்வதேச அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது. ஏபிபி என்ற °வீடனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்துடன் நெர்யாமங்கலம் நீர்மின்திட்டம்(25 மெகாவாட்) தொடர்பாக ஐக்கிய ஜனநாயக முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அரசின் முடிவை எதிர்த்து ஏபிபி நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றதால் அந்தத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு தடைபட்டது. இறுதியில், ஏபிபி நிறுவனத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


பிஎ°பி திட்டங்களைப் பொறுத்தவரை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமல்லாது எ°.என்.சி.-லாவாலின் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, சச்சரவுகள் எழுந்தால் பாரிசில் உள்ள சர்வதேச வர்த்தக்குழுதான் நடுவராக இருக்க முடியும். பேச்சுவார்த்தைகளில் வெகுதூரம் தாண்டி விட்டநிலை மற்றும் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்தத்திட்டங்களை ஐக்கிய ஜனநாயக முன்னணியின் திட்டத்தின்படியே மேற்கொள்வத என்று இடது ஜனநாயக முன்னணி முடிவு செய்தது.
இதன்படி, முதல்வர் ஈ.கே.நாயனார் மற்றும் மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையிலான அமைச்சர்கள் குழு, கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகளுடன் இணைந்து அக்டோபர் 1996ல் கனடா சென்று எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் மற்றும் அரசு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்து சில நல்ல அம்சங்களைப் பெறுவதில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.


1) வெளிநாட்டிலிருந்து பெற வேண்டிய பொருட்களின் மதிப்பு 188 கோடி ரூபாயிலிருந்து 149 கோடியாகக் குறைக்கப்பட்டது.

2) எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் நிர்ணயித்த ஆலோசனைக்கட்டணத்தை 24.4 கோடி ரூபாயிலிருந்து 17.88 கோடியாகக் குறைக்க முடிந்தது.

3) கடனுக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

4) திட்டத்தின் ஒருபகுதியான உதவித்திட்டத்திற்கான மதிப்பு 43 கோடி ரூபாயிலிருந்து 98 கோடியாக அதிகரிக்கப்பட்டது.


இறுதியாகச் சொல்லப்பட்ட உதவித்திட்டத்திற்கான நிதி எ°.என்.சி-லாவாலின் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும். மலபாரில் ஒரு நவீன மருத்துவமனையை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். பிப்ரவரி 1996ல் கையெழுத்திடப்பட்ட மூல ஒப்பந்தத்தில் கனடாவிலிருந்து பெறும் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை நிலையான விலையில் பெறுவதற்கான அம்சம் பிற்சேர்க்கையாக ஜூலை 6, 1998ல் இணைக்கப்பட்டது.


ஐக்கிய ஜனநாயக முன்னணியே உண்மையான வில்லன்


தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் பகுதிகள் என்று கூறப்படும் அம்சங்களின் அடிப்படையில் ஊடகங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் கூறப்படும் மையக்கருத்துகள் :
1) மத்திய மின்சார முகமை அளித்த அறிவுரைக்கு மாறாக இந்த மேம்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அதோடு, இந்தத்திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததுதானா என்பதை அறியவும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
2) மேற்கூறிய திட்டங்களை முழுமையாக மேம்படுத்துவதற்கு எதிராக இ.பாலானந்தன் குழு அளித்த பரிந்துரைகளை இடது ஜனநாயக முன்னணி அரசு புறக்கணித்து விட்டது.
3) நியூ இண்டியன் எக்°பிர° நாளிதழின்படி, குறைவான தொகைக்கு செய்யத் தயாராக இருந்த பொதுத்துறை பி.எச்.இ.எல்.லை கணக்கில் கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு திட்டத்தை இடது ஜனநாயக முன்னணி அரசு வழங்கியுள்ளது.
4) வெறும் ஆலோசனை ஒப்பந்தமாகத்தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி இதை வைத்திருந்தது. பொருட்களை பெறக்கூடிய ஒப்பந்தமாக இடது ஜனநாயக முன்னணிதான் மாற்றியது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை.


இந்த விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஒரு அடிப்படையான உண்மையை புறக்கணித்து விடுகிறார்கள். மேம்படுத்த வேண்டும் என்ற முடிவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியாக திட்டத்தை நிறைவேற்ற எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் தேர்வு மற்றும் அந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேம்படுத்த, பராமரிக்க அல்லது இன்னும் சில பணிகளுக்காக எத்தகைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வழியைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கேரள மாநில மின்சார வாரியத்திற்குள் இருந்த பொதுக்கருத்து என்னவென்றால் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். யார் செய்வது என்பதை ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்வு செய்தது.


இ.பாலானந்தன் குழுவை இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்தது. கேரள மாநில மின்சார வாரியத்தின் பணியை மேம்படுத்தவும், மின்சார நெருக்கடியை சமாளிக்கவும் மற்றும் மின்னுற்பத்தியை விரைவுபடுத்தத் தேவையான தொலை நோக்குத்திட்டம் ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை அளிக்க இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை பிப்ரவரி 2, 1997ல் அரசிடம் வழங்கப்பட்டது. அதற்குள் பிஎ°பி திட்டம் தொடர்பான கனடா நாட்டு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை வெகுதூரம் சென்று விட்டிருந்தது. இக்குழு அளித்த மற்ற பரிந்துரைகளில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைவான ஒப்பந்தப்புள்ளியை அளித்த பி.எச்.இ.எல்லை நிராகரித்துவிட்டனர் என்று சுயநல சக்திகளால் பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நியூ இண்டியன் எக்°பிர° நாளிதழ் தனது தலையங்கத்திலேயே இதைக் குறிப்பிட்டுள்ளது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோலவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நிறைவேற்றுவது மற்றும் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் ஆகிய இரண்டையுமே ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுதான் முடிவு செய்தது. குறைவான ஒப்பந்தப்புள்ளிகளை பி.எச்.இ.எல். அளித்திருந்தது என்பது வெறும் கற்பனையே. இதை அக்டோபர் 16, 2001 அன்று சட்டசபையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார்.
வெறும் ஆலோசனை தருவதற்கான ஒப்பந்தத்தை சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோராமல் பொருட்களை வழங்குவதற்குமான ஒப்பந்தமாக இடது ஜனநாயக முன்னணி மாற்றி விட்டது என்பதுதான் கடுமையான குற்றச்சாட்டாக வருகிறது. உண்மையில் சொல்லப்போனால், பிப்.24, 1996 அன்று கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையிலான ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப சேவை உள்ளிட்டு கனடாவிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கை பி இதற்கு சாட்சியாக உள்ளது. கீழ்க்கண்டவாறு அந்த பிற்சேர்க்கை கூறுகிறது.


கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்துடனான கூட்டம் மற்றும் விவாதங்கள், கனடாவிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிதியுதவியைப் பெற்றுக் கொள்வது பற்றிய பூர்வாங்க ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. எ°.என்.சி-லாவாலின் நிறுவனம் செய்த மதிப்பீட்டின்படி நிதியுதவி இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.


இதனால் பிப்.24, 1996ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிலையான விலையுடனான ஒப்பந்தமாகும். தொடர்ந்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசால் இதிலிருந்து பின்வாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையைக் குறைப்பது மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. அதைச் செய்வதில் இடது ஜனநாயக முன்னணி அரசு வெற்றி பெற்றிருந்தது.


விலைகள் பற்றி


59.95 மில்லியன் டாலர்(கனடா டாலர்) என்று நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகமானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு நியமித்த ஆலோசனை நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட விலைகள்தான் நிர்ணயிக்கப்பட்டன. இந்த விலைகளை முடிவு செய்யும்முன்பாக பல தகுதிவாய்ந்த கனடா நிறுவனங்களிடமிருந்து விலைகளைக் கேட்டுதான் அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் நிர்ணயித்தது என்பதை கேரள மாநில மின்சார வாரியக்கூட்டத்தின் குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பிப்ரவரி 1996ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் பகுதியாக இந்த விலைகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அசல் ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கையில்தான் இடது ஜனநாயக முன்னணி அரசும் கையெழுத்திட்டது.


கடுமையான நிதிப்பற்றாக்குறை மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக உள்நாட்டில் கடன் வாங்குவதற்கு ஏற்படும் அதிக செலவு போன்ற பிரச்சனைகளால் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான கட்டாயம் மின்வாரியத்திற்கு ஏற்பட்டது. மேலும், இந்த விலைகளை பரிசீலனை செய்ய தேசிய நீர்மின்சாரக்கழகத்தை ஆலோசகராக இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்தது. இந்த விலை நிர்ணயம் நியாயமானதுதான் என்றும், சர்வதேச அளவிலும் இந்த விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அக்கழகம் சான்றிதழ் அளித்தது.


ஆனால் நெர்யாமங்கலம் நீர்மின்நிலைய மேம்பாட்டுத்திட்டத்தில் கிடைக்கும் ஒரு யூனிட்டின் விலையுடன் ஒப்பிட்டு பல விமர்சகர்கள் பேசுகிறார்கள். இதில் ஒரு மெகாவாட்டின் விலை 1.07 ரூபாயாகவும், பிஎ°பி திட்டத்தில் எ°.என்.சி லாவாலின் ஒரு யூனிட்டுக்கு 2.24 என்று நிர்ணயித்துள்ளதாகவும் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டுவதாகவும் கூறுகிறார்கள். இந்த விலைகளை ஒப்பிடும்போது, எ°.என்.சி லாவாலின் நிறுவனத்திற்கு 110 கோடி ரூபாய் அதிகமாக லாபம் கிடைத்துள்ளது என்றும், இது அரசு வருமானத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒப்பிட முடியாத அளவுகோல்களைக் கொண்ட இரு திட்டங்களை ஒப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னுற்பத்தி எந்திரங்களை புதுப்பிப்பது மற்றும் சில சிறிய மாற்றங்களைச் செய்வதுமட்டும்தான் நெர்யாமங்கலத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் பிஎ°பி திட்டத்தில் ஒட்டுமொத்தமாக எந்திரங்களை மாற்றித்தருவதே அதன் நோக்கமாக இருந்தது. இதனால் ஒரு யூனிட் மெகாவாட்டின் விலை முந்தைய திட்டத்தைவிட அதிகமாக இருக்கும் என்பதே உண்மை.


ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒப்புதல்


பிஎ°பி திட்டங்களை நிறைவேற்றுவது வேறு சில நிதியுதவிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். அதனால் சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று கேரள சட்டமன்றத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர் ஜி.கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். இவர்தான் எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடன் பிஎ°பி திட்டங்களை செயல்படுத்துவதற்கான அசல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர். சொல்லப்போனால், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக்காலத்தில் பாதி கழிந்திருந்த வேளையில்தான் இவர் மின்துறை அமைச்சராகிறார். குட்டியாடி திட்டத்தை செயல்படுத்துவதற்காக எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடனான ஆலோசனை ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை இவருக்கு முன்னதாக அமைச்சராக இருந்த சி.வி.பத்மராஜன் கையெழுத்திட்டு விட்டார். இந்த குட்டியாடி விரிவாக்கத்திட்டத்திற்கான பொருட்களை வழங்குவதற்கான பிற்சேர்க்கை ஒப்பந்தத்தில் பிப்ரவரி 24, 1996 அன்று ஜி.கார்த்திகேயன் கையெழுத்திட்டார். அதே நாளில்தான் பிஎ°பி திட்டங்களுக்கான ஆலோசனை ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. குட்டியாடி திட்டத்திற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான எந்த வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முன்னாள் அமைச்சர் சட்டமன்றத்திலேயே ஒப்புக்கொண்டார்.


குட்டியாடி விரிவாக்கத்திட்டத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு நடைமுறைப்படுத்தியது பற்றி 2004ஆம் ஆண்டுக்கான தலைமை தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கை கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது. குட்டியாடி நீர்மின்திட்டத்தை விரிவுபடுத்தி 201 கோடி ரூபாய் செலவில் புதிய மின்னுற்பத்தி எந்திரங்களைப் பொருத்தியும் கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்க முடியாததால் விரிவாக்கத்திட்டம் முழுமையும் வீணாகிப்போனது. கூடுதல் மின்னுற்பத்தி எந்திரங்களைப் பொருத்துவதற்கு இருந்ததாகக் கூறப்பட்ட உபரி நீர் கானல் நீராகிப்போனது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஊடகங்களும் இதை மூடி மறைக்கும் வேலையில் இறங்கின.


கருவிகளின் தரம்


எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கருவிகள் உயர்தரமானதாக இல்லை என்றும், சில கருவிகள் குறைபாடுடையதாக இருந்ததாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முழுமையான விபரங்களைத் தெரியாமல் நாம் இந்த விமர்சனங்கள் மீது கருத்து தெரிவிக்கக்கூடாது. ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கருவிகள் வாங்கியதற்கான இறுதித் தொகை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்காலத்தில்தான் வழங்கப்பட்டது. முழுமையாக பணத்தைத் தருவதற்கு முன்பாக வாங்கப்பட்ட கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.


புனரமைப்புக்கு முந்தைய மின்னுற்பத்தியை எட்டாததால் புனரமைப்புக்கான செலவே வீண் என்ற விமர்சனம் ஆதாரமில்லாதது. புனரமைப்புக்கு முன்பாக 114 மெகாவாட் மின்னுற்பத்தி நடந்தது என்றும், புனரமைப்புக்குப் பிறகு 125 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சரே ஜூலை 22, 2005 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சட்டமன்றத்தில் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்ட எந்திரங்கள் என்பதால் துவக்கத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் முழுமையான திறனுடன் உற்பத்தி நடக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், கருவிகளின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணியையே சாரும்.


2001ல் நிறைவு பெற வேண்டிய இந்தத்திட்டம் 2003ல் முடிந்திருக்க வேண்டும் என்பது மற்றொரு விமர்சனமாகும். இந்தக் காலத்தில் உற்பத்தியாகியிருக்க வேண்டிய மின்சாரத்தையும் கணக்கிட்டு லாவாலின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நஷ்டத்துடன் சேர்க்க சிலர் முயற்சிக்கிறார்கள். திட்டம் தாமதமானது குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மின்துறை அமைச்சர் பிப்.10, 2005 அன்று சட்டமன்றத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : "குறித்த நேரத்தில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பள்ளிவாசல்-செங்குளம்-பன்னியாறு திட்டங்களில் எடுக்கப்பட்டன. இவையெல்லாம் புனரமைப்புத்திட்டங்கள் என்பதால் பழைய எந்திரங்களை அகற்றி, புதிய எந்திரங்களை வைப்பதில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டன. மேலும் சில கருவிகளை உள்நாட்டிலேயே வாங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் சமாளிக்கப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன."



மலபார் புற்றுநோய் மையம்



நிறைவாக, கனடா நாட்டு உதவி நிறுவனங்களின் நிதிமூலம் அமைக்கப்படவிருந்த மலபார் புற்றுநோய் மையம் பற்றிய சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். தங்கள் நாட்டிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியான திட்டங்களைப் பெற்றுத்தர இத்தகைய அன்னிய நிதி உதவிகளை கனடா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகள் பயன்படுத்தி வந்தன. முழுக்க, முழுக்க 1991-96ல் பதவியில் இருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசால் உருவாக்கப்பட்ட குட்டியாடி திட்டத்திலும் இத்தகைய நிதியுதவி என்ற அம்சம் இருந்தது. மலபார் பகுதியில் மின்விநியோகத்தை பலப்படுத்த அதைப் பயன்படுத்துவது என்பதாக அது அமைந்தது. பிஎ°பி திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவக்கியதிலிருந்தே இந்த நிதியுதவியும் இடம் பெற்றிருந்தது. இந்த நிதியுதவியின் மதிப்பு 45 கோடியாக இருந்தது. இது ஒட்டுமொத்த திட்டச் செலவில் 30 சதவீதமாகும். திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அக்டோபர் 1996ல் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தையில் இந்த நிதியுதவி பற்றியும் விவாதிக்கப்பட்டது. கனடா நிதியுதவியுடன் மலபாரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பது என்று அதில் முடிவு செய்யப்பட்டது.


103 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை எ°.என்.சி லாவாலின் நிறுவனம் தயாரித்தது. நிலம் வாங்குவதற்கும், மற்ற பிற கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்காகவும் தனது பங்காக 5 கோடி ரூபாயை கேரள அரசு தருவது என்றும், மீதமுள்ள 98 கோடி ரூபாய் கனடா உதவி நிறுவனங்களிடம் இருந்து பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. சிஐடிஏ மற்றும் கியூபெக் பிரதேச அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மலபார் புற்றுநோய் மையம் தொடர்பான இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர். இந்தத்திட்டத்திற்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பாகவும், கனடா நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை ஏற்பாடு செய்து தரும் நிறுவனமாகவும் எ°.என்.சி லாவாலினை நியமிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துடன் மாநில அரசு மேற்கொண்டது. மேலும் ஆலோசனைகள் நடத்தி இதை முழு ஒப்பந்தமாக மாற்றிக்கொள்வதாகவும் இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நிதியுதவி பெறுவது என்பது வெளிப்படையான ஒரு விஷயமாகவும், எ°.என்.சி லாவாலின் நிறுவனத்துடனான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவுமே அமைந்தது. மேலும், அமைச்சரவை முடிவின்படியே இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்தன.


உறுதியளித்தபடி கனடாவிலிருந்து வர வேண்டிய நிதியுதவி முழுமையாக வரவில்லையென்பதால் மலபார் புற்றுநோய் மையம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவால் மருத்துவமனைத்திட்டம் துவங்கப்படுவது தாமதமானது. இருந்தாலும், சுமார் 15 கோடி ரூபாய் கனடா நிதியுதவி பெறப்பட்டு, மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளில் முதல்கட்டம் நிறைவு செய்யப்பட்டது.


இந்த நிலையில்தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்கிறது. அரசியல் காரணங்களுக்கான இந்த மருத்துவமனைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அக்கறை காட்டவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதைப் புறக்கணித்தனர். அந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முழுமையான ஒப்பந்தமாக மாற்றப்படாததோடு, அந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது. முதல் கட்டம் நிறைவு பெற்றது குறித்த கடிதத்தைக்கூட கேரள அரசு அனுப்பாமல் விட்டது. மருத்துவமனை என்பது ஒரு கூட்டுத்திட்டம். அதனால் கனடா நிதியுதவியைப் பெறுவதில் கேரள அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற நிலையை எ°.என்.சி லாவாலின் நிறுவனம் எடுத்தது. டிசம்பர் 2002ல் மாநில முதல்வர் ஏ.கே.அந்தோணிக்கு அந்த நிறுவனம் எழுதிய கடிதத்தில், (அ) கூடுதலான கூட்டங்களை அடிக்கடி நடத்தி ஆலோசிப்பது, (ஆ) நகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, (இ) நிதியுதவி பெற கூட்டாக செயல்படுவது, (ஈ) பணிகளை முடுக்கி விடுவது ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இதற்கு எந்தவிதமான பதிலையும் கேரள அரசு தரவில்லை. இந்த நிலையில், அன்னிய நிதியுதவி பெறுவது தொடர்பான இந்திய அரசின் புதிய கொள்கை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு அமைப்புகளுக்கு கனடாவிலிருந்து நிதியுதவியைப் பெற்றுத்தர முடியாது என்று கனடாவின் ஹை கமிஷனர் கேரள அரசுக்கு தெரிவித்தார். இந்திய அரசின் புதிய கொள்கை புதிய திட்டங்களுக்குத்தான் என்றும், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு இல்லை என்று பதில் அளிக்கக்கூட கேரள அரசு முன்வரவில்லை.


மருத்துவமனைக்கான நிதியை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி எடுத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஆதாரமற்றவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அமைப்புகளுக்கே கனடா நிதியுதவியை தர முடியும். மேலும் அன்னிய நிதிபங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்(குஊசுஹ) விதிமுறைகளுக்கு உட்பட்டே இது நடந்தது. மருத்துவமனையைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள டெக்னிகாலியா கன்சல்டன்ட்° என்ற நிறுவனத்திற்குத் தரப்பட்டது. இதற்கான கனடா நிதியுதவி அந்த நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏப்.26, 2001 தேதியிட்ட ஆணை எண், 11/21022/94(506)/2000-குஊசுஹ இந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்ட 13 கோடி ரூபாயை சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அன்னிய நிதிபங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, அன்னிய நிதிகளுக்காக தனியாக கணக்கு மற்றும் ஆவணங்களை மலபார் புற்றுநோய் மையம் வைத்திருக்க வேண்டும் என்று இந்த ஆணை கூறியது. ஒரே ஒரு சிறப்பு கணக்கு வைக்கப்பட்டு நிதிப்பயன்பாடு குறித்து விதிமுறைகளின்படி அறிக்கை தர வேண்டும். நிதியுதவி கிடைத்தவரை அதை எந்தவிதமாகவும் தவறாகப்பயன்படுத்தவில்லை. அமைச்சரவையின் முடிவுப்படி அமைக்கப்பட்ட மலபார் புற்றுநோய் மைய சொசைட்டியின் நிர்வாகக் கவுன்சிலுக்கு தலைவராக மாநில முதல்வரும், அதன் உறுப்பினராக மின்துறை அமைச்சரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதியுதவியை பெற்றுத்தருவதாக ஒப்புக் கொண்ட எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தின் உற்சாகம் சிலகாலம் கழித்து மறைந்து விட்டதாகத் தெரிகிறது. நிதியுதவியைப் பெற்றுத்தரும் விஷயத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு விரும்பவில்லை. எ°.என்.சி லாவாலின் நிறுவனத்தின் செயல்பாடு அல்லது செயல்பாடின்மையை எந்தவிதத்திலும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி நியாயப்படுத்தவில்லை. எனினும், மலபார் புற்றுநோய் மையத்திட்டத்தை முடக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட முயற்சி அம்பலமானது. அரசியல் காரணங்களுடனான குறுகிய மனப்பான்மையோடு அவர்கள் செயல்பட்டதால் இந்தத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணியின் இந்த செயல்பாடின்மையை எங்கள் கட்சி வெளிப்படையாகவே பலமுறை விமர்சித்துள்ளது. இவ்வாறு கடுமையான விமர்சனங்கள் வெளியான நிலையில்தான், மலையாள மனோரமா நாளிதழ்கூட மருத்துவமனை விஷயத்திற்கு அரசியல் சாயம் பூசும் அரசின் நடவடிக்கையை விமர்சித்து 2002 ஆம் ஆண்டில் ஒரு தலையங்கத்தையே எழுதியது. மருத்துவமனைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாததது மலபாரில் ஒரு பெரிய உணர்வுபூர்வமானதாகவும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாகவும் இருந்தது. இதற்கு ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசே பொறுப்பாகும்.


நஷ்டங்கள் என்ற பெயரில் அவதூறு


லாவாலின்-பிஎ°பி திட்டங்களால் கேரள மாநிலத்திற்கு 374 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருப்பதாக இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக அதிதீவிர அவதூறுப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. திட்டத்தின் மதிப்பே 259 கோடி ரூபாய்தான். அதில் 374 கோடி ரூபாய் நஷ்டம் என்பது பொதுப்புத்தியையே கேவலப்படுத்துவதாக உள்ளது. திட்டம் தாமதமானதால் கிடைக்காமல் போன மின்சாரம், ஒப்பிடமுடியாத நீர்மின் புனரமைப்புத்திட்டங்களுக்கான எந்திரங்களுக்கு ஆகும் செலவுடன் ஒப்பீடுசெய்து மிகைப்படுத்தப்பட்ட உத்தேச செலவு ஆகியவற்றின் மூலம் இந்தத் தொகையைக் குறிப்பிடுகிறார்கள். தணிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய நேரத்தில் கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் மின்துறை ஆகியவை பதில் அளித்திருந்தால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கே இடம் இல்லாமல் போயிருந்திருக்கும்.


தனது அரசியல் நோக்கங்களுக்காக லாவாலின் வழக்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி எழுப்பிவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்தத் திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்தது. அவர்களின் அரசு பதவியேற்றவுடன், லாவாலின் ஒப்பந்தம் குறித்து விஜிலென்° விசாரணைக் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஏ.கே.அந்தோணியிடம் பல ஐக்கிய ஜனநாயக முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். பாசனம் மற்றும் மின்துறை சம்பந்தப்பட்ட சட்டமன்றக்குழுவும் இதை விவாதித்தது. நீண்ட விவாதத்திற்குப்பிறகு, ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட அந்தக்குழு எந்தப் பரிந்துரையையும் செய்யாமல் தேவையான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பை குழுத்தலைவரிடம் விட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமை எட்டு மாதங்கள் எடுத்துக் கொண்டபிறகு, மார்ச் 2003ல் விஜிலென்° விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முடிவுக்கு அரசியல் நோக்கம் இருந்தது என்பது தெளிவானதாகும். பழங்குடியினருக்கு எதிராக முத்தங்கா காவல்துறையினர் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து எழுந்த வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டத்தால் ஐக்கிய ஜனநாயக முன்னணி நெருக்கடியில் இருந்தது. விஜிலென்° விசாரணை என்ற பெயரில் இந்த விவகாரத்தை இரண்டரை ஆண்டுகள் இழுத்துக் கொண்டு சென்றார்கள். 2004 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலை ஆகியவற்றால் மீண்டும் விஜிலென்° விசாரணையைக் கையில் எடுத்தார்கள்.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் : கணேஷ்

-------------

குறிப்பு : 2006 கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கேரள அமைச்சர் எம்.ஏ.பேபியால் எழுதப்பட்ட கட்டுரை. மேலும் தோழர் பினராயி விஜயன் மீது எந்தக்குற்றமும் இல்லை என்று கூறிய விஜிலன் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பே இது எழுதப்பட்டுள்ளது.

1 comment:

  1. குற்றச்சாட்டுகளையே பிரதானப்படுத்திய எந்த மீடியாவிலும் இந்த கருத்துக்கள் சொல்லப்படவில்லையே.
    -விபின்

    ReplyDelete