Wednesday, June 3, 2009

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கலியோ... 40 லட்சம்தான்...




மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரிகள் பணம் கறக்கும் வேலைக்கு தடை விதித்து விட்டோம் என்று தமிழ்நாடு மாநில அரசு கூறிக்கொண்ட ஒரு வாரத்திற்குள்ளேயே மாநிலத்தின் இரண்டு முன்னணி கல்லூரிகள் நன்கொடை கேட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளன. ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை கேட்டதை கேமராவில் பதிவு செய்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.


ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி 20 லட்ச ரூபாயும், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் 40 லட்ச ரூபாயும் மாணவர்களிடம் இருந்து கேட்டுள்ளன. இரு கல்லூரிகளிலும் 150 இடங்கள் உள்ளன. இதில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக்கல்லூரிக்கு திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துணை அமைச்சரான ஜகத்ரட்சகன்தான் தலைவராக இருக்கிறார். ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் தொழிலதிபர் வெங்கடாச்சலம் ஏற்படுத்தியுள்ள டிரஸ்டுக்கு சொந்தமானதாகும்.


பல்கலைக்கழகத்தில் சேர வரும் மாணவர்களிடம் துணைப்பதிவாளர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாற்பது லட்சம் ரூபாய் என்பதைக்கூறும் அவர் பேரம் பேசுவதற்கெல்லாம் வாய்ப்பு தருவதாக இல்லை. பல்மருத்துவத்திற்கு மதிப்பெண்களைப் பொறுத்து நன்கொடையைக் கூட்டிக் குறைத்துக் கொள்கிறார். ஸ்ரீபாலாஜி கல்லூரியில் ஏஜண்ட் லட்சுமியைப் போய்ப் பார்க்குமாறு கூறுகிறார்கள். பேரம் பேசும் பொறுப்பு லட்சுமியிடம் விடப்படுகிறது. கல்லூரியில் இதைக் கவனித்துக் கொள்ளும் நிர்வாக அதிகாரி ஜான்சன், 20 லட்சத்துக்கு குறையாமல் வாங்குமாறு அமைச்சர் எங்களிடம் கூறியுள்ளார். பரிந்துரைகள் எல்லாம் ஒன்றும் நடக்காது. நீங்கள் லட்சுமியைப் பாருங்கள் என்கிறார். அவர் தரும் சலுகை ஒன்றே ஒன்றுதான். 2010 ஜனவரிக்குள் மூன்று தவணைகளில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம் என்பதுதான்.


தி.நகரில் உள்ள அலுவலகத்தில் லட்சுமியை மாணவர்கள் சந்திக்கிறார்கள். ஜான்சனால் அனுப்பப்பட்ட மாணவர் ஒருவர் 14 லட்ச ரூபாய் தரத்தயார் என்று கூறியபோது, இந்தத் தொகைக்கு உங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எந்த உத்தரவாதமும் தர முடியாது. வேண்டுமானால் முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் தந்துவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் கூறும் தொகைக்கு தர முடியுமா என்பதைப் பரிசீலிக்கிறோம். முன்பணம் தராவிட்டால் தொகையின் அளவு அதிகரித்து விடும் என்கிறார்.


ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் மேலும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். அவருடைய பேட்டியை டைம்ஸ் ஆப் இந்தியா கேமராவில் பதிவு செய்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு என்பது வெறும் கண்துடைப்பேயாகும். தரம் பற்றியெல்லாம் இங்கு பார்ப்பதில்லை. நான் வெளிநாடுவாழ் இந்தியர். நான் 75 லட்ச ரூபாய் செலுத்தினேன். மற்றவர்களுக்கு 45 லட்ச ரூபாய். தற்போது 40 லட்ச ரூபாயாக இது குறைந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன் என்கிறார் அவர்.


இவ்வாறு வழங்கப்படும் பணத்தை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை. பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக ரசீது எதுவும் தரமாட்டார்கள். உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசின் உத்தரவுகளை மீறி இந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனின் கருத்தைக் கேட்க டைம்ஸ் ஆப் இந்தியா முயன்றபோது தொடர்பு கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

-------------

ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில்(எஸ்.ஆர்.யு) பணத்தைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பில் துணைப்பதிவாளர் இருக்கிறார். அவருக்கும் மாணவருக்கும் இடையில் நடந்த உரையாடல்.

எஸ்.ஆர்.யு துணைப்பதிவாளர்(சேர்க்கை) துணைப்பதிவாளர் ஏ.சுப்பிரமணியன் : நன்கொடை கொடுப்பதாக ஏதாவது திட்டம் உங்களுக்கு உண்டா?

மாணவர் : அது எவ்வளவு இருக்கும்?

துணைப்பதிவாளர் : 40 லட்சம் ரூபாய். அதோடு ஆண்டுக்கு 3.25 லட்சம் ரூபாய் தர வேண்டியிருக்கும். நீங்கள் தயார் என்றால் சேர்க்கைக்கான வேலைகளை நாங்கள் துவங்கமுடியும்.

மாணவர் : பல் மருத்துவத்திற்காக படிப்புக்கு என்ன நிலைமை...?

துணைப்பதிவாளர் : பல்மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, இந்த மதிப்பெண்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும். படிப்புக்கட்டணமாக ஆண்டுக்கு 3.25 லட்சம் ரூபாயும் தர வேண்டும்.

-----------------

ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரி ஜான்சனைப் பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜான்சனுக்கும் மாணவருக்கும் இடையில் நடந்த உரையாடல்.

ஜான்சன் : தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு மாணவர் சேர்க்கை அலுவலகம் உள்ளது. அங்கு போய் எங்கள் ஏஜண்டைப் பாருங்கள். அவருடைய பெயர் லட்சுமி. அவருடன் நீங்கள் பேசிக் கொள்ளலாம்.

மாணவர் : குறைந்தது எவ்வளவு பணம் தர வேண்டியிருக்கும்..?

ஜான்சன் : நாங்கள் 20 லட்சம் ரூபாய் வாங்குகிறோம். குறைந்தது 16 லட்சமாக இருக்கும். ஆனால் நீங்கள் அவரிடம் பேசுங்கள். நீங்கள் எவ்வாறு பேரம் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும்.

மாணவர் : நாங்கள் எவ்வளவு தொகையைக் குறிப்பிடலாம்...? நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்...

ஜான்சன் : அவர் பதினைந்து லட்சத்துக்கு கீழே குறைய மாட்டார்..

----------------------

2 comments:

  1. அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் நடக்குது?
    ம்ம் நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க...
    ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete