Monday, May 25, 2009

வாசகர்களை ஏமாற்றுவது அழகல்ல...

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான தீபங்கர் முகர்ஜி தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருப்பவர், பல விஷயங்களில் ஏன் சிபிஎம் இவ்வாறு சொல்கிறது என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.


பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், "இது குறித்து பல்வேறு ஆவணங்களை சிபிஎம் அளித்துள்ளது. அதைப் படித்தீர்களா... " என்று கேட்டார். அதற்குப் பதிலளிக்காமல் மீண்டும் பழைய பல்லவியை பாடினார். "கட்சி என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் படிக்காமல் நீங்களாக அப்படி ஏன் சொல்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தால் எப்படிப் பதில் சொல்வது..." என்று தீபங்கர் முகர்ஜி பதிலடி தந்தார்.


இது ஒரு சம்பவம் அல்ல. ஊடகங்களில் பலரும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஞாநியும் சேர்ந்துள்ளார். குமுதம்(மே 27) ஓ... பக்கங்கள் பகுதியில், "தேர்தல் முறையிலே உள்ள மிகப்பெரிய குறைக்கெதிராகவும் விரைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். அதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் தேவை" என்று எழுதியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து என்னவென்பதைக் கூறி இதைச் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும்.


மொட்டையாக, அவசியத்தை உணர்வார்கள் என்று கூறுவது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதைப் போல ஒலிக்கிறது. கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால் இப்படி எழுதுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு கூறியது :

* உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருட்களாக அரசு நிதி உதவி செய்யப்படும்.

* பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது தடை செய்யப்படும்.

உரிய தருணங்களில் பல்வேறு மேடைகளில் இத்தகைய விஷயங்களைக் கட்சி வலியுறுத்தவும் தவறவில்லை. அதோடு வாய்ப்புள்ளபோது தனது வரம்புக்குள் அதை நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை. எடுத்துக்காட்டாக, பெரிய நிறுவனங்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்காக நிதி பெறுவதில்லை. டாடா நிறுவனம் வழங்கியபோதும் காசோலையைத் திருப்பி அனுப்பிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஞாநிக்கும் தெரியும்.


தேர்தல் தோல்வி பற்றி இடதுசாரிகள் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி சுய விமர்சனம் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தவறுவதில்லை. கணிசமான அளவு வாசகர்களைக் கொண்ட குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதும் போது அவர்களை ஏமாற்றுவது சரியானதல்ல. சரியான, உண்மையான விபரங்களை அவர்களுக்கு தர வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு இருப்பதை ஞாநி மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment