Saturday, May 9, 2009

மதுரைத் தல புராணத்தில் புதிய அத்தியாயம்

சார்... வணக்கம். நான் .....ருந்து பேசுறேன்...
சொல்லுங்க சார்...
ராத்திரி நேரத்துல காக்கி கலர் கவருக்குள்ள மூணு 500 ரூபா நோட்ட வெச்சு வீட்டுக்குள்ள தூக்கிக் போட்டுட்டு போயிருக்காங்க... ஆத்திரத்துடன் வந்து விழுகின்றன சொற்கள்.
..... ம்....ம்...
ரொம்ப அவமானவா இருக்கு சார்... இப்புடி என் வாழ்க்கைல ஒரு நிலைமை எனக்கு வந்தது கிடையாது சார்... கட்டாய லஞ்சம் சார் இது...
பொரிந்து தள்ளினார் லைனில் வந்தவர். மதுரையில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றின் அலுவலகத்திற்கு காலையில் தொலைபேசி மூலம் தனது கோபத்தை வாசகர் ஒருவர் வெளிப்படுத்தியபோது நடந்த உரையாடல் இது.

*********

மற்றொரு உரையாடல்.
சார்... நேத்து பணம் கொடுத்தாங்க...
நீங்க அதெல்லாம் வாங்க மாட்டீங்களே... வாங்க மாட்டேன்னு சொல்லலையா...
சொல்ல வாயெடுத்தேன் சார்... அவங்க பணம் கொடுத்து ஓட்டு கேக்க வரலை... பணத்த வாங்கிகிட்டு மரியாதையா ஓட்டைப்போடுங்கன்னு மிரட்டுறதுக்காக வந்துருந்தாங்க... வீட்டுல நானும், என் வொய்ஃபும்தான் இருக்கோம்... ராத்திரி ரெண்டரை மணி சார்...
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் சொல்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர்.

*********
டில்லியிலிருந்து வெளியாகும் மெயில் டுடே நாளிதழுக்கு சங்கர நாராயணன் என்ற வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அவர், எங்கள் வீட்டுக்கு வந்து இரு கவர்களைக் கொடுத்தார்கள். ஆனால் எனது மனைவி அதை வாங்க மறுத்துவிட்டார். ஏன் வாங்க மாட்டீர்கள்..? என்று கேட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள் என்கிறார். மேலும் தொடரும் அவர், எனது பக்கத்து வீட்டுக்காரரும் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எங்கள் பகுதியில் நடந்த இந்த விநியோகத்திற்கு கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் செந்தில் என்பவர்தான் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் திமுகவின் பகுதிச்செயலாளரும்கூட என்று தெரிவித்துள்ளார்.

**********
அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் ஆதரவில் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சி°ட் கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் பொ.மோகனின் தேர்தல் பிரச்சாரம் அனல்பறக்க மதுரையில் நடைபெற்று வருகிறது. எதிர்த்து நிற்கும் அஞ்சா நெஞ்சனின் படைக்கு அன்றாடம் "பெட்ரோல்" போட வேண்டிய கட்டாயம் இருக்கும் வேளையில், மார்க்சி°ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மதுரை விஜயங்கள் செயல்வீரர்களுக்கு பூ°ட் குடித்த உற்சாகத்தை அளித்தது.


மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி எதிர்முகாமில் உள்ளவர்களின் காதுகளில் தேனாக ஒலித்தது. மோகனுக்கு ஓட்டை உள்ளேயா, வெளியேயா என்று எதிர் வேட்பாளர் அழகிரி நக்கலாகப் பேசிக் கொண்டதாக ஜூனியர் விகடன் பத்திரிகை செய்தி போட்டிருந்தது. ஆனால் மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தியைப் படித்த மதுரை வாக்காளர்கள், அவருக்காக வாக்குகள் சேகரிக்க சென்றவர்களிடம் மோகன் நலமா...? என்று முந்திக்கொண்டு கேட்ட செய்திகள் தங்கள் வாக்குகளில் ஓட்டையைப் போட்டு விடுமோ என்ற அச்சத்தை அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் விதைத்தது.


உடனே துவங்கியது பணப்பட்டுவாடா அத்தியாயம். ரவுடிகளை அழைத்துக்கொண்டு ராத்திரிக்கொள்ளையர்கள் போல் வீடு, வீடாக அத்துமீறி நுழைந்துள்ளனர். வாங்க மறுத்தவர்கள் ஏராளம், ஏராளம். அவர்களில் பலரை மிரட்டி பணத்தைக் கொடுத்துள்ளனர். ரவுடிக்கும்பலைப் பார்த்துப் பயந்துபோய் பணத்தைப் பெற்றுக்கொண்ட வயதானவர்கள் மட்டும் உள்ள குடும்பங்களும் உண்டு. கண்களை அகல விரித்துக் கொண்டு 500 ரூபாய் நோட்டைப் பார்த்து வாங்கிக் கொண்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது என்றாலும் வாங்குவது அவமானகரமான ஒன்று என்று பார்த்தவர்கள்... மறுத்தவர்கள்... ஒதுங்கியவர்கள்... வெட்கித்தலை குனிந்தவர்கள் ஆயிரக்கணக்கில்... ஆயிரக்கணக்கில்.


சாலையில், பேருந்தில், பொது இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டு கீழே கிடந்தால் கூட யாருடையது என்று விசாரித்துக் கொடுப்பதுதான் மனித இயல்பு. யாரும் முன்வராவிட்டால் சாலையில், பொது இடங்களில் கிடந்ததை ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கோ அல்லது கோவில் உண்டியலிலோ போடுவார்கள். பேருந்தில் கிடைத்தால், யாராவது கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று நடத்துனரிடம் ஒப்படைக்கும் மக்களை சிறுமைப்படுத்தும் வேலையில் திமுகவினர் இறங்கியதைப் பார்த்து மதுரை மக்கள் கொதித்துப் போய்தான் இருக்கிறார்கள்.


28 கோடி ரூபாயை விநியோகித்து விட்டார்கள் என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பணத்தை விநியோகிக்காமல் தங்கள் பாக்கெட்டுகளில் திமுகவினர் அமுக்கிக் கொண்ட தொகையும் அடங்கும். சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேரை வளைத்துவிட்டோம் என்று புளகாங்கிதத்துடன் திமுகவினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோல்வியை நோக்கிதான் மீண்டும் செல்கிறோம் என்றால் அடுத்த கட்ட விநியோகத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சப்பணத்தை திணிக்கும் அட்டுழியத்தைத் தட்டிக் கேட்டவர்களுக்கு வெட்டு விழுந்துள்ளது. வெட்டியவர்கள் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


திருமங்கலத்து நினைவுகளைக் திரும்பக்கொண்டு வந்து பூரிப்படைந்து கொள்ளும் திமுகவினர் ஓட்டுக்காகக் கையூட்டு பெறுவதை அவமானமாகக் கருதும் நபர்களை எதிர்கொண்டதும் பேந்த, பேந்த விழித்தார்கள். கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ரூபாய் நோட்டுகளைத் திணிக்கத் துவங்கியுள்ளார்கள். அரசியல் விழிப்புணர்வுள்ள மதுரை வாக்காளர்கள் ரவுடிகளைக் கண்டதும் அந்த கணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளார்கள். ஆனால் இந்த நிலைமை நீடிக்காது. திகைப்பு நீங்கிய பிறகு களம் தெள்ளத் தெளிவாக விளங்கும். அப்போது திமுகவினருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் கிடைக்கும்.


காவல்துறையினரின் கையாலாகத்தனம் வெளிப்படையாகவே தெரிகிறது. வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் ஒரு எட்டு எடுத்து வைக்கவே எட்டுத்திசைகளையும் நோட்டம் விடுகிறது. அது நினைத்தால் இத்தகைய அராஜகங்களை மட்டுமில்லாமல், அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் திமுகவிற்கு தொடர் குட்டுகளை வைக்கலாம். அவ்வாறு வைத்தால் தேர்தல் ஆணையத்தின் மீது... தேர்தல் நடைமுறைகள் மீது... ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல் மோகன் என்ற தனிநபர் மீதோ அல்லது அவர் சார்ந்துள்ள மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மீதோ அல்லது திமுக-காங்கிர° என்ற மக்கள் விரோதக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் மீதோ அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் நோக்கமே இதற்குப் பின்புலமாக உள்ளது.


இதுவரை நடந்த நிகழ்வுகள் கூட ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி ஒரு புனிதமான அரசியல் யுத்தத்திற்கு மட்டுமே தயாராக இருக்கக்கூடிய கட்சி என்பதுதான் அது. இவ்வளவு அராஜகங்கள் நடந்தபிறகும் ஒரு அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது. காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனாலும் லஞ்சப்பணம் விநியோகம் செய்தவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம்தான் ஒப்படைத்தனர். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவில்லை. லஞ்சப்பணமும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படுகிறது. இவையனைத்துமே சட்டபூர்வமான நடவடிக்கைகள்தான். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக ரீதியாக பிரச்சனைகளை அணுகிக் கொண்டிருக்கிறது.


மதுரை திமுக வேட்பாளர் அழகிரியின் இந்த முனைப்பு வாக்குகளைப் பெறுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை முதலிடத்திற்கு வருகிறதோ இல்லையோ, பணம் விநியோகிப்பதில் உத்தரவாதப்படுத்திவிடும் போலிருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக செய்த வேலையை மிஞ்சி விடுவார்கள். இதில்தான் இந்த இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாற்று அணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே போகின்றன. மதுரைக்கென்று தனியாக தல புராணம் உண்டு. அதில் புதிய அத்தியாயத்தைப் படைக்க மதுரை மக்கள் தயாராகி வருகிறார்கள்.

No comments:

Post a Comment