Sunday, May 31, 2009

இலங்கைப்பிரச்சனையில் சிபிஎம் நிலைப்பாடு

இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇ-யினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணு வத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான அப்பா வித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, சொல் லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிங்களப் பேரினவாதம்

இலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விதைக் கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர். மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள்- தமிழர்களி டையே எழுந்ததைக் காண முடியும். அதே போல ‘‘இன ஆராய்ச்சி‘‘ என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் - முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கியவர்கள் - திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும் காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லு நர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்த மாகச் செய்யப்பட்டது.


விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற் படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்க ளையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக் கைகள், சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் வேற்றுமையை வளர்த்தன.
இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத் தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற் றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென் றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.


இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில், தமிழ் மக்கள் வாழும் பகுதிக ளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலை யில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும்.


இந்த இனப்படுகொலையில், ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந் தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972-ம் ஆண்டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்க ளத்தை இலங்கையின் ஆட்சிமொழியாகவும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிரகடனம் செய்தது.


தமிழ் மக்கள் எதிர்ப்பு


ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித்தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி உருவானது. கம்யூனிச இயக்கங்களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக்கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்தனர். ‘‘சோசலிசத் தமிழ் ஈழம் அமைப் பதே தங்கள் குறிக்கோள்‘‘ என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப் பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெ டுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.


எல்டிடிஇ-ஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அர சின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்ற ழிக்க முற்பட்டது.


பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்டவர்களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.


எல்டிடிஇ : துயர முடிவு


இலங்கையை ஆண்ட ஜெயவர்த்தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரி மைகளையும் தமிழ் மொழியையும் புறக் கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தி யமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவ டிக்கைகளே அடிப்படைக் காரணங்க ளாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇ-யினரும் தயாராக இல்லை. எல்டிடிஇ-யினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள்ளது.


எல்டிடிஇ தலைவர் பிரபாகரன், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தை அமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங்கம் எல்டிடிஇ-யினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடை பெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக் கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?


இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வி யாகும்.
இலங்கை வரலாற்றில், 1960-ல் ஏற் பட்ட சாஸ்திரி - சிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங் கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பாகவும் எண்ணற்ற நல்ல சரத்துகள் இடம் பெற்றன.


ஆனால், அவை பெருமளவுக்கு அமல் படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த - இருக்கும், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் - சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந்திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்ச னைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.


இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுணசேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.
‘‘இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசி யப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித் துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டு களாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண் டும் என்று கோருகிறோம்.’’
இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும்.


இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவி மடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவது மாபெரும் முட்டாள்தனமாகும்.

*சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைக ளும் நீட்டிப்பதை உத்தரவாதப்படுத்த இலங்கைஅரசு உடனடியாக நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.


* இலங்கைப் பிரச்சனைக்கு அர சியல் தீர்வு காணப்படுவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.


* யுத்தத்தில் துயருற்று வேதனைக் குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. °தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.


* சொந்த மண்ணிலேயே வீடற்ற வர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரி லேயே வீடுகள் கட்டித் தந்து, புனர மைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.


* தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடிய மர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக் கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.


* தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயல வேண்டும்.


* தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண் டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


* வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.


* இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயி னும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும்.


* இனியும் காலத்தை வீணடிக்காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.


* இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.

கி.வரதராசன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

நன்றி : தீக்கதிர்

Monday, May 25, 2009

வாசகர்களை ஏமாற்றுவது அழகல்ல...

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான தீபங்கர் முகர்ஜி தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருப்பவர், பல விஷயங்களில் ஏன் சிபிஎம் இவ்வாறு சொல்கிறது என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.


பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், "இது குறித்து பல்வேறு ஆவணங்களை சிபிஎம் அளித்துள்ளது. அதைப் படித்தீர்களா... " என்று கேட்டார். அதற்குப் பதிலளிக்காமல் மீண்டும் பழைய பல்லவியை பாடினார். "கட்சி என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் படிக்காமல் நீங்களாக அப்படி ஏன் சொல்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தால் எப்படிப் பதில் சொல்வது..." என்று தீபங்கர் முகர்ஜி பதிலடி தந்தார்.


இது ஒரு சம்பவம் அல்ல. ஊடகங்களில் பலரும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஞாநியும் சேர்ந்துள்ளார். குமுதம்(மே 27) ஓ... பக்கங்கள் பகுதியில், "தேர்தல் முறையிலே உள்ள மிகப்பெரிய குறைக்கெதிராகவும் விரைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். அதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் தேவை" என்று எழுதியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து என்னவென்பதைக் கூறி இதைச் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும்.


மொட்டையாக, அவசியத்தை உணர்வார்கள் என்று கூறுவது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதைப் போல ஒலிக்கிறது. கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால் இப்படி எழுதுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு கூறியது :

* உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருட்களாக அரசு நிதி உதவி செய்யப்படும்.

* பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது தடை செய்யப்படும்.

உரிய தருணங்களில் பல்வேறு மேடைகளில் இத்தகைய விஷயங்களைக் கட்சி வலியுறுத்தவும் தவறவில்லை. அதோடு வாய்ப்புள்ளபோது தனது வரம்புக்குள் அதை நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை. எடுத்துக்காட்டாக, பெரிய நிறுவனங்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்காக நிதி பெறுவதில்லை. டாடா நிறுவனம் வழங்கியபோதும் காசோலையைத் திருப்பி அனுப்பிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஞாநிக்கும் தெரியும்.


தேர்தல் தோல்வி பற்றி இடதுசாரிகள் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி சுய விமர்சனம் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தவறுவதில்லை. கணிசமான அளவு வாசகர்களைக் கொண்ட குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதும் போது அவர்களை ஏமாற்றுவது சரியானதல்ல. சரியான, உண்மையான விபரங்களை அவர்களுக்கு தர வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு இருப்பதை ஞாநி மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

Saturday, May 23, 2009

ஓட்டுக்கு பணம்.... திருப்பி அனுப்பிய இளைஞன்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து பலவிதமான கருத்துக்களை நமது ஊடகங்கள் தினம் தினம் வெளியிட்டு வருகின்றனர். ஏதோ இந்திய நாட்டு மக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்பது போல மாயை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் அடைந்த வெற்றிக்கு கொடுக்கப்பட்ட விலை பல ஆயிரம் கோடிகள். மதுரையில் நடந்த அத்துமீரல்களும், அடாவடிகளும் மக்கள் அறிந்ததுதான்.


நமது பக்கத்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது வெற்றியடைந்துள்ள நாராயனசாமி புதுவையில் ஒரு ஓட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து வெற்றியை வாங்கி உள்ளார். அவரது ஆட்கள் வீடு வீடாக பணம் கொடுத்து சென்றது பலரை அவமானப்படுத்தியது, பலரை கோபப்படுத்தியது. அப்படி கோபம் அடைந்த இளைஞன் சரவணன் அவரது பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். அந்த இளைஞனை பாராட்டுவோம். அவனது சுயமரியாதை நமது இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக மாறட்டும்.

கடிதத்தை கிளிக் செய்து படிக்கவும்

Wednesday, May 13, 2009

தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறையாக

வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் முடிவுகள் வெளியிடுவது மற்றும் அதுவரையிலான தேர்தல் ஒளிபரப்புகள் குறித்து “பன்” டி.வி. நிறுவனத்தில் ஆலோச னைக்கூட்டம் நடைபெறுகிறது.

தலைமை நிர்வாகி : இன்னைக்கி வாக்குப்பதிவு முடிஞ்சுது...

செய்தி ஆசிரியர் : ஆமா சார்... இனிமே நாம கணிப்புகள வெளியிடலாம்...

தலைமை நிர்வாகி : மூணு நாள்ல நம்ம ரேட்டிங் எங்கயோ போயிடணும்...

செய்தி ஆசிரியர் : முடிவு வர்றப்போ மறுபடி விழுந்துருமே...

தலைமை நிர்வாகி : அத அப்புறம் பாப்போம்...நம்ம ஆதரவு அணி ஜெயிச்ச மாதிரி கணிப்புகள வெளியிடுங்க... நம்ம போற வேகத்துல 16 ஆம் தேதி வர்ற முடிவுகளே ஒண்ணு மில்லாம போயிடணும்...

செய்தி ஆசிரியர் : உண்மைதான் சார்... முடிவுகள் என்ன... நம்ம அணிக்கே ஒண்ணு மில்லாம போயிடும்... அதனால இப்பவே நம்ம அணிக்கு நெறய சீட் கிடைக்குறமாதிரி கணிக்கணும்...

ஊழியர் 1 : அகில இந்திய அளவுல யார் ஆட்சி அமைப்பாங்கன்னு போடணுமா....??

தலைமை நிர்வாகி : ஆமா... அதுல திமுக வுக்கு 28 சீட் கிடைச்சா மத்தியில என்ன நிலைமைன்னு யாராவது ரெண்டு பேர பேச வெக்கணும்...

செய்தி ஆசிரியர் : திமுக அவ்வளவு சீட்ல நிக்கக்கூட இல்லையே சார்...

தலைமை நிர்வாகி : நீங்க டிஎன்என்-ஒய்பிஎன், கய்ம்ஸ் டவ், கல் தக் மாதிரி டி.வி.லாம் பாக்குறதில்லையா... அவங்கள்லாம் கூச்சப்படாம அதிமுகவுக்கு 24, திமுகவுக்கு 23னு சொல்றாங்க...

ஊழியர் 2 : விவாதிக்க வர்றவங்க கூட்டிப்பாத்தா...

தலைமை நிர்வாகி : அதுக்குத்தான் இந்த மாதிரி டி.வி.லாம் பாக்கலையான்னு கேட்டேன்... இது எப்படினுலாம் கேட்கக்கூடாது.. இத வெச்சு விவாதம் பண்ணத்தான் கூப்புட்டோம்னு ஒரே அடியா போட்டுறாங்க...

செய்தி ஆசிரியர் : திமுக யார் கூட சேர்றதா கணிக்கணும்...

தலைமை நிர்வாகி : யார் கூட வேணும்னாலும் சேரும்னு கணிப்பு இருக்கணும்...

செய்தி ஆசிரியர் : இது மட்டும் இயல்பா சொல்லணுமோ...?

ஊழியர் 3 : அதிமுக...

செய்தி ஆசிரியர் : 23 சீட்ல ஜெயிச்சு படுதோல்வினு கணிப்பு இருக்கணும்... அப்படித்தான சார்...

தலைமை நிர்வாகி : இப்பதான் நீங்க நடுநிலையாப் பேச ஆரம்பிச்சுருக்கீங்க...

ஊழியர் 1 : மூன்றாவது அணிக்கு சீட் கம்மியாக் காட்டணும்...

செய்தி ஆசிரியர் : சார்... நம்ம ஆளுங்க ஜொலிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்...

ஊழியர் 2 : மத்தில ஆட்சி அமைக்க நாம யாருக்கு ஆதரவு கொடுக்குறோம்...

தலைமை நிர்வாகி : யார் ஆட்சி அமைக்குறாங்களோ அவங்களுக்குத்தான்..

ஊழியர் 3 : விவாதத்திற்கு யாரக் கூப்புடணும்...

ஊழியர் 2 : நம்ம அணில ஒருத்தர், அணிய ஆதரிக்குற ஒருத்தர், எதிர் அணிகளத் தாக்குற ஒருத்தர்.. இப்புடி மூணு பேர்.. அப்பதான் நடுநிலையா இருக்கும்...

தலைமை நிர்வாகி : ஆஹா... பிரமாதம்... நம்ம அணில ஒரே மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டோமே...

ஊழியர் 3 : அகில இந்திய அளவுல...

செய்தி ஆசிரியர் : காங்கிரஸ் அணிக்கும், பாஜக அணிக்கும் போட்டி இருக்குற மாதிரி கணிப்பு இருக்கணும்...

ஊழியர் 2 : ஆனா மூணாவது அணிக்கு நெறய சீட் வரும்போல இருக்கே... நம்ம கணிப்ப நம்புவாங்களா...

தலைமை நிர்வாகி : நம்புறதுக்கா கணிப்பு போடுறோம்.. நம்ம ஆசையக் கணிப்புன்னு போடுறோம்...

ஊழியர் 1 : மூணாவது அணிக்கு கம்மியா கிடைக்கும்னு பொய் சொல்ல ஏதாவது ஆதாரத்தக் காட்டணுமே...

செய்தி ஆசிரியர் : மம்தா பானர்ஜியே சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுவோம்...

ஊழியர் 3 : காங்கிரஸ், பாஜக அணிகளுக்கு கிடைக்குற சீட்னு நீங்க சொல்ற மாதிரி போட்டா 800 சீட் கிட்ட வந்துரும் போலருக்கே...

தலைமை நிர்வாகி : நம்ம கிட்ட யாரும் கேட்க முடியாதுல்ல...

செய்தி ஆசிரியர் : நம்ம அணிக்கு ஆதரவான நிலை இல்லைனா...

தலைமை நிர்வாகி : முதல்ல முடிவுகள மாத்திச்சொல்லணும்... அப்புறம் பாட்டுப் போடலாம்... பின்ன என்ன... இந்தியாவின் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகன்னு அறிவிச்சுட்டு ஏற்கெனவே நாலுதடவ ஒளிபரப்பு செஞ்ச படம் ஒண்ணப் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்...

Monday, May 11, 2009

நீங்க டி.வி.யே பாக்க வேண்டாம்... போங்க...

டிரிங்...டிரிங்..

ஹலோ... யாருங்க... ஆமா... இது தலைவர் வீடுதான்... அவர்கிட்ட பேசணுமா...இருங்க லைன் தர்றேன்...

உதவியாளர் : தலைவரே... அழகிரி பேசுறார்....


கருணாநிதி : ஹலோ...


மறுமுனையில் உள்ளவர் : தலைவரே... வணக்கம்.


கருணாநிதி : அழகிரி பேசுறதா சொன்னீங்களா....


தொண்டர் : ஆமா தலைவரே... பல முறை உங்ககிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிருக்கேன்... முடியலை... அதான் பொய் சொன்னேன்... இப்பலாம் மதுரையத் தவிர வேற எதையும் நீங்க நெனக்குறதில்லையே.... அதான் அண்ணன் பேரச் சொன்னேன்....


கருணாநிதி : சரி என்ன வேணும் சொல்லுங்க...


தொண்டர் : கொஞ்ச நாளாவே உங்க எழுத்து மெருகேறிப்போயிருக்கு தலைவரே... எப்புவும் நெனப்பு மதுரை மேலயே இருக்கு.. ஆனா அத மறைக்க ஒருதொகுதில மட்டும் மார்க்சிஸ்டுகள் கவனம் செலுத்துறாங்கன்னு ஒரு போடு போட்டிருக்கீங்க.... முந்திலாம் உங்க கவிதைல எதுகை, மோனை இருக்கும்... இப்பலாம் எடக்கு, மடக்குல தூள் கிளப்புறீங்க...


கருணாநிதி : நான் என்ன எனக்காகவா இதெல்லாம் எழுதுறேன்...


தொண்டர் : எங்களுக்காகவும் இல்லைனு எல்லாருக்குமே தெரியும்... அணுசக்தி ஒப்பந்தம் வர்றப்போ நீங்க எழுதாத எழுத்தா... அதக்கொன்னு குழி தோண்டிப் புதைச்சுறப்போறதா சூளுரச்சீங்க...அப்புறம் நாட்டுநலனுக்காக(!) நாட்டுக்கு விரோதமான ஒப்பந்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவிச்சது சாணக்கியத்தனத்திற்கு உதாரணம்...


கருணாநிதி : ஆட்சியைப் பத்தி கவலைப்படாததுனால அப்புடி ஒரு முடிவு எடுத்தோம்...


தொண்டர் : பெட்ரோல் விலைக்குறைப்புல எல்லாரோட வாய அடைக்குற மாதிரி நச்னு சொன்னீங்க...


கருணாநிதி : இந்தக்குறைப்பு எனக்குப்போதும்னு சொன்னேனே அதுவா....


தொண்டர் : ஆமா தலைவரே... கம்யூனிஸ்டுகளுக்கு கிடைச்ச தொகுதிகள் பத்தி சொல்றப்ப ரெண்டு தொகுதிங்குறது எம்மாம்பெருசுன்னும், மூணுங்குறது "துளியோண்டு"ன்னும் புரிய வெச்சு கணிதப்புரட்சியே பண்ணீட்டிங்களே...


கருணாநிதி : உடன்பிறப்பே... இந்த கணக்கு, வழக்கெல்லாம் நமக்குள்ளயே வெச்சுக்கலாம்...


மக்களுக்கு 50 லட்சம் ஏக்கர் நிலம்லாம் நினைவுக்கு வந்துடும்...


தொண்டர் : விலைவாசி உயர்வுலதான் தலைவரே... உங்க அனுபவம் பளிச்னு தெரிஞ்சுது...


கருணாநிதி : நீங்க மத்தவங்க நடத்துற டி.வி.யத்தான் அதிகமா பாக்குறீங்க போலருக்கு... இல்லைனா விலைவாசியப் பத்திலாம் பேச மாட்டீங்களே...


தொண்டர் : தலைவரே... இலங்கைப்பிரச்சன பத்தி நீங்க சொன்னதயும் டி.வி.ல பாத்தேன்... குழப்புதே...


கருணாநிதி : நமக்கு எதிரான டி.வி.யப் பாக்காதீங்கன்னு சொல்றனே...


தொண்டர் : இல்ல தலைவரே... கலைஞர் டி.வி.ல...


கருணாநிதி : நீங்க டி.வி.யே பாக்க வேண்டாம்... போங்க...

(என்னது.. தலைவர் வடிவேலு ஸ்டைலுக்கு வந்துட்டார்னு அரண்டு போய் போனை வைத்து விடுகிறார் தொண்டர்.)

Saturday, May 9, 2009

மதுரைத் தல புராணத்தில் புதிய அத்தியாயம்

சார்... வணக்கம். நான் .....ருந்து பேசுறேன்...
சொல்லுங்க சார்...
ராத்திரி நேரத்துல காக்கி கலர் கவருக்குள்ள மூணு 500 ரூபா நோட்ட வெச்சு வீட்டுக்குள்ள தூக்கிக் போட்டுட்டு போயிருக்காங்க... ஆத்திரத்துடன் வந்து விழுகின்றன சொற்கள்.
..... ம்....ம்...
ரொம்ப அவமானவா இருக்கு சார்... இப்புடி என் வாழ்க்கைல ஒரு நிலைமை எனக்கு வந்தது கிடையாது சார்... கட்டாய லஞ்சம் சார் இது...
பொரிந்து தள்ளினார் லைனில் வந்தவர். மதுரையில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றின் அலுவலகத்திற்கு காலையில் தொலைபேசி மூலம் தனது கோபத்தை வாசகர் ஒருவர் வெளிப்படுத்தியபோது நடந்த உரையாடல் இது.

*********

மற்றொரு உரையாடல்.
சார்... நேத்து பணம் கொடுத்தாங்க...
நீங்க அதெல்லாம் வாங்க மாட்டீங்களே... வாங்க மாட்டேன்னு சொல்லலையா...
சொல்ல வாயெடுத்தேன் சார்... அவங்க பணம் கொடுத்து ஓட்டு கேக்க வரலை... பணத்த வாங்கிகிட்டு மரியாதையா ஓட்டைப்போடுங்கன்னு மிரட்டுறதுக்காக வந்துருந்தாங்க... வீட்டுல நானும், என் வொய்ஃபும்தான் இருக்கோம்... ராத்திரி ரெண்டரை மணி சார்...
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் சொல்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர்.

*********
டில்லியிலிருந்து வெளியாகும் மெயில் டுடே நாளிதழுக்கு சங்கர நாராயணன் என்ற வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அவர், எங்கள் வீட்டுக்கு வந்து இரு கவர்களைக் கொடுத்தார்கள். ஆனால் எனது மனைவி அதை வாங்க மறுத்துவிட்டார். ஏன் வாங்க மாட்டீர்கள்..? என்று கேட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள் என்கிறார். மேலும் தொடரும் அவர், எனது பக்கத்து வீட்டுக்காரரும் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எங்கள் பகுதியில் நடந்த இந்த விநியோகத்திற்கு கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் செந்தில் என்பவர்தான் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் திமுகவின் பகுதிச்செயலாளரும்கூட என்று தெரிவித்துள்ளார்.

**********
அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் ஆதரவில் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சி°ட் கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் பொ.மோகனின் தேர்தல் பிரச்சாரம் அனல்பறக்க மதுரையில் நடைபெற்று வருகிறது. எதிர்த்து நிற்கும் அஞ்சா நெஞ்சனின் படைக்கு அன்றாடம் "பெட்ரோல்" போட வேண்டிய கட்டாயம் இருக்கும் வேளையில், மார்க்சி°ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மதுரை விஜயங்கள் செயல்வீரர்களுக்கு பூ°ட் குடித்த உற்சாகத்தை அளித்தது.


மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி எதிர்முகாமில் உள்ளவர்களின் காதுகளில் தேனாக ஒலித்தது. மோகனுக்கு ஓட்டை உள்ளேயா, வெளியேயா என்று எதிர் வேட்பாளர் அழகிரி நக்கலாகப் பேசிக் கொண்டதாக ஜூனியர் விகடன் பத்திரிகை செய்தி போட்டிருந்தது. ஆனால் மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தியைப் படித்த மதுரை வாக்காளர்கள், அவருக்காக வாக்குகள் சேகரிக்க சென்றவர்களிடம் மோகன் நலமா...? என்று முந்திக்கொண்டு கேட்ட செய்திகள் தங்கள் வாக்குகளில் ஓட்டையைப் போட்டு விடுமோ என்ற அச்சத்தை அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் விதைத்தது.


உடனே துவங்கியது பணப்பட்டுவாடா அத்தியாயம். ரவுடிகளை அழைத்துக்கொண்டு ராத்திரிக்கொள்ளையர்கள் போல் வீடு, வீடாக அத்துமீறி நுழைந்துள்ளனர். வாங்க மறுத்தவர்கள் ஏராளம், ஏராளம். அவர்களில் பலரை மிரட்டி பணத்தைக் கொடுத்துள்ளனர். ரவுடிக்கும்பலைப் பார்த்துப் பயந்துபோய் பணத்தைப் பெற்றுக்கொண்ட வயதானவர்கள் மட்டும் உள்ள குடும்பங்களும் உண்டு. கண்களை அகல விரித்துக் கொண்டு 500 ரூபாய் நோட்டைப் பார்த்து வாங்கிக் கொண்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது என்றாலும் வாங்குவது அவமானகரமான ஒன்று என்று பார்த்தவர்கள்... மறுத்தவர்கள்... ஒதுங்கியவர்கள்... வெட்கித்தலை குனிந்தவர்கள் ஆயிரக்கணக்கில்... ஆயிரக்கணக்கில்.


சாலையில், பேருந்தில், பொது இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டு கீழே கிடந்தால் கூட யாருடையது என்று விசாரித்துக் கொடுப்பதுதான் மனித இயல்பு. யாரும் முன்வராவிட்டால் சாலையில், பொது இடங்களில் கிடந்ததை ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கோ அல்லது கோவில் உண்டியலிலோ போடுவார்கள். பேருந்தில் கிடைத்தால், யாராவது கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று நடத்துனரிடம் ஒப்படைக்கும் மக்களை சிறுமைப்படுத்தும் வேலையில் திமுகவினர் இறங்கியதைப் பார்த்து மதுரை மக்கள் கொதித்துப் போய்தான் இருக்கிறார்கள்.


28 கோடி ரூபாயை விநியோகித்து விட்டார்கள் என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பணத்தை விநியோகிக்காமல் தங்கள் பாக்கெட்டுகளில் திமுகவினர் அமுக்கிக் கொண்ட தொகையும் அடங்கும். சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேரை வளைத்துவிட்டோம் என்று புளகாங்கிதத்துடன் திமுகவினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோல்வியை நோக்கிதான் மீண்டும் செல்கிறோம் என்றால் அடுத்த கட்ட விநியோகத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சப்பணத்தை திணிக்கும் அட்டுழியத்தைத் தட்டிக் கேட்டவர்களுக்கு வெட்டு விழுந்துள்ளது. வெட்டியவர்கள் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


திருமங்கலத்து நினைவுகளைக் திரும்பக்கொண்டு வந்து பூரிப்படைந்து கொள்ளும் திமுகவினர் ஓட்டுக்காகக் கையூட்டு பெறுவதை அவமானமாகக் கருதும் நபர்களை எதிர்கொண்டதும் பேந்த, பேந்த விழித்தார்கள். கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ரூபாய் நோட்டுகளைத் திணிக்கத் துவங்கியுள்ளார்கள். அரசியல் விழிப்புணர்வுள்ள மதுரை வாக்காளர்கள் ரவுடிகளைக் கண்டதும் அந்த கணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளார்கள். ஆனால் இந்த நிலைமை நீடிக்காது. திகைப்பு நீங்கிய பிறகு களம் தெள்ளத் தெளிவாக விளங்கும். அப்போது திமுகவினருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் கிடைக்கும்.


காவல்துறையினரின் கையாலாகத்தனம் வெளிப்படையாகவே தெரிகிறது. வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் ஒரு எட்டு எடுத்து வைக்கவே எட்டுத்திசைகளையும் நோட்டம் விடுகிறது. அது நினைத்தால் இத்தகைய அராஜகங்களை மட்டுமில்லாமல், அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் திமுகவிற்கு தொடர் குட்டுகளை வைக்கலாம். அவ்வாறு வைத்தால் தேர்தல் ஆணையத்தின் மீது... தேர்தல் நடைமுறைகள் மீது... ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல் மோகன் என்ற தனிநபர் மீதோ அல்லது அவர் சார்ந்துள்ள மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மீதோ அல்லது திமுக-காங்கிர° என்ற மக்கள் விரோதக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் மீதோ அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் நோக்கமே இதற்குப் பின்புலமாக உள்ளது.


இதுவரை நடந்த நிகழ்வுகள் கூட ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி ஒரு புனிதமான அரசியல் யுத்தத்திற்கு மட்டுமே தயாராக இருக்கக்கூடிய கட்சி என்பதுதான் அது. இவ்வளவு அராஜகங்கள் நடந்தபிறகும் ஒரு அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது. காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனாலும் லஞ்சப்பணம் விநியோகம் செய்தவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம்தான் ஒப்படைத்தனர். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவில்லை. லஞ்சப்பணமும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படுகிறது. இவையனைத்துமே சட்டபூர்வமான நடவடிக்கைகள்தான். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக ரீதியாக பிரச்சனைகளை அணுகிக் கொண்டிருக்கிறது.


மதுரை திமுக வேட்பாளர் அழகிரியின் இந்த முனைப்பு வாக்குகளைப் பெறுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை முதலிடத்திற்கு வருகிறதோ இல்லையோ, பணம் விநியோகிப்பதில் உத்தரவாதப்படுத்திவிடும் போலிருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக செய்த வேலையை மிஞ்சி விடுவார்கள். இதில்தான் இந்த இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாற்று அணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே போகின்றன. மதுரைக்கென்று தனியாக தல புராணம் உண்டு. அதில் புதிய அத்தியாயத்தைப் படைக்க மதுரை மக்கள் தயாராகி வருகிறார்கள்.