Sunday, July 24, 2011

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு!

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.

அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!



ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது.

4 comments:

  1. இது தான் வல்லரசு இந்தியாவின் நிலைமை

    நன்றி,
    ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

    ReplyDelete
  2. ஜெகஜீவன்ராம் ஒரு முறை சிலை திறப்பு செய்தார். தீட்டுப்பட்டதாக மாட்டு மூத்திரம் பால் கொண்டு அந்தச்சிலையை அபிஷேகம்(!?) செய்து தீட்டுக்கழித்தார்கள். ராஜஸ்தானில் ஒரு ஜட்ஜ் இருந்த இடத்தை இதே வழியில் சுத்தம் செய்து கொண்டார்கள். காரணம் ஜெகஜீவன் ராமும் அந்த ஜட்ஜும் தீண்டத்தகாதவர்கள். படித்தால் அறிவு வந்து விடுவதில்லை என்பதுதான் இதிலிருந்து அறிய முடிகிறது. சாதி வேறுபாடு பார்க்காத அளவில் ஒரு கல்வி முறை இதுவரை இந்தியாவில் புகுத்தப்படாததுதான் சாபக்கேடு என்று தோன்றுகிறது.
    -திலிப் நாராயணன்.

    ReplyDelete
  3. மதத்தில் குற்றம் இல்லை... அவற்றால் மதம் பிடித்து திரியும் மனிதர்களாலே இவ்வளவு பிரச்சனைகளும். அனைத்தும் மனிதர்களாலே படிக்கப் பட்டது. படைப்பவனும் அவனே .. அதை மீறுபவனும் அவனே.. சிந்திக்க தெரிந்தவன் சேற்றில் மலரும் தாமரையெய்ப் போல. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவனது தனிச் சிறப்பு என்றும் மாறது.. இறைவன் படைப்பில் அனைவரும் சமம்... இதுவே ஒவ்வரு மதத்தின் சாராம்சம். இதை புரியாத பக்கிகளால் விளையும் விளைவே தீண்டாமை முதல் எண்ணற்றவையாக உள்ளன.,

    ReplyDelete