ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் வேலைக்கான கனவுகளோடு படிப்பை நிறைவு செய்து கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்காமல் நாற்பது வயதைத் தொட்டுக் கொண்டிருப்பவர்களின் பட்டியலோ மிக நீளமானது. இவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கப்போகிறோம் என்ற மத்திய, மாநில அரசுகளின் உறுதிமொழிகளைப் பட்டியலிட்டாலும் அந்தப்பட்டியலுக்கு போட்டியாக நீளத்தான் செய்யும். கடந்த பத்தாண்டுகளாக காலியாக இருக்கும் அரசுப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இரண்டு லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2004 ஆம் ஆண்டிலிருந்து வேலைக்கு நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆயிரத்து 816 தான்.
இந்த 6 ஆயிரத்து 816 பேரில் கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பதவிக்கு மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த விளம்பரத்தைப் பார்த்து சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். எந்த அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது என்பதை அந்த பரபரப்பு காட்டியது. இந்த 6 ஆயிரத்து 816 பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் அது 13 லட்சத்தைத் தொடுகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பஞ்சமில்லை. வேலைகளுக்கும் பஞ்சமில்லை. வேலையில்லாதவர்களுக்கு வேலை தர வேண்டும் மற்றும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்கான அரசின் முன்முயற்சிக்குதான் பஞ்சம்.
ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்பலம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த சமயத்தில் காலியாக இருந்த 1 லட்சத்து 86 ஆயிரத்து 837 பணியிடங்களை படிப்படியாக நிரப்பப் போவதாக முதல்வரே உறுதியளித்திருந்தார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. சில காலிப்பணியிடங்களுக்கு விளம்பரம் வந்தாலே விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவிலேயே இருந்து வருகிறது. இத்தகைய நிலைமைகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பணியிடங்களை நிரப்புமாறு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகிறது.
மாநில அரசு எந்திரத்தின் முக்கியமான அங்கம் வருவாய்த்துறையாகும். இந்தத் துறையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். அதில் நான்காயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அதாவது மூன்றில் ஒரு பகுதி ஊழியர்கள் இனிதான் நியமிக்கப்பட வேண்டும். ஒரு திட்டத்தை அறிவித்தால், பொது மக்களிலிருந்து இதனால் பயனடையப் போகிறவர் யார் என்பதை இந்தத்துறைதான் தீர்மானிக்கும். ஆனால் அதைத் தீர்மானிக்கப் போதிய ஊழியர்கள் தேவை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திட்டங்களுக்கான அறிவிப்பு வந்துகொண்டே இருக்கின்றன. சரியான நேரத்தில் திட்டத்தின் பலன் மக்களுக்கு போய்ச்சேர இயலாது என்பதுதான் இந்த அவலத்தின் விளைவாகும்.
எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க ரேசன் கடைகளை முறைப்படுத்துவதுதான் தீர்வு என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால் இந்தத்துறையின் உயர்மட்ட அலுவலகங்களிலிருந்து ரேசன் கடைகள் வரை பணியிடங்கள் காலியாக இருப்பதே வழக்கமானதாகப் போய்விட்டது. அண்மையில் ரேசன் கடைகளுக்கான ஊழியர்களை நியமித்திருந்தாலும் போதிய அளவு நியமனம் நடைபெறவில்லை. குறிப்பாக, உணவு வழங்கல் ஆணையர் அலுவலகத்திலேயே எக்கச்சக்கமான இடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல் கூட்டுறவுத்துறையில் 600 காலியிடங்கள், தொழிலாளர் துறையில் 750 காலியிடங்கள், வணிகவரித்துறையில் 4 ஆயிரத்து 275 என்று கணக்கிட்டுக் கொண்டே சென்றால் மொத்தக் காலியிடங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இதில் அரசுசார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களும் அடங்கும்.
வேலைவாய்ப்புத்துறையின் நிலையே மோசமாகத்தான் இருக்கிறது. சராசரியாக ஐந்து லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். 62 லட்சம் பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளார்கள். இந்தத்துறையில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை 1,100. இருப்பதோ 630 பேர் மட்டும்தான். 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேலும் இரண்டு அல்லது மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்கள். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிடும். இந்தப் பணியிடங்களை நிரப்பும் வேலை ஒட்டுமொத்த சமூகத்திற்கு நல்லது என்பது ஒருபுறம். சமூக நீதிக்காக ஏங்கித்தவிக்கும் தலித்துகள் குறிப்பாக, அருந்ததியர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் அது ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment