Friday, December 25, 2009

பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை என்பார்கள். அதுபோலத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை சென்று கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தூண்டுதலால் இந்தத் தாக்குதலை நடத்துவது தொடர்பான சதித்தீட்டம் தீட்டினார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் அவரது சகா தகாவுர் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை கைது செய்தது. இந்தக் கைதுக்குப்பிறகு விசாரணை வெகு வேகமாக நகர்வது போன்ற தோற்றம் ஏற்பட்டது.


ஆனால் புதிய, புதிய பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கைதாகியுள்ள டேவிட் ஹெட்லி அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் ஏற்கெனவே இருந்தார் என்ற செய்தி பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவ்வாறு கண்காணிப்பில் இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் செல்லுபடியாகக்கூடிய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவிற்குள் வந்து செல்வதற்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவைப் பயன்படுத்திதான் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தைத் தீட்டுவதற்காக அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளார்கள்.


அமெரிக்காவைத் தங்கள் தளமாகக் கொண்டு இயங்கிய இந்த இருவரின் விசா தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்று சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் அடுத்த குண்டை வீசியுள்ளது. கேட்டால், தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை பொறுப்பாகப்(!) பதிலளித்துக் கொண்டிருக்கிறது. இருவரையும் கைது செய்த அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு எந்த அளவுக்கு இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறது என்பதில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் கூட ஒருமித்த கருத்து இல்லை.


மும்பையில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரிகளை விசாரிக்க உங்களை அனுமதிக்க முடியாது என்று இந்திய விசாரணை அதிகாரிகளிடம் அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கூறிவிட்டனர். மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே ஹெட்லி மீது தங்கள் சந்தேகப் பார்வையைப் பதித்துவிட்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதை ஏன் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற நியாயமான கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளார்கள்.


அமெரிக்க உளவுத்துறை ஏஜண்டுகள் பட்டியலில் ஹெட்லியின் பெயரும் அடக்கம் என்று மார்க்சிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகளிடம் ஹெட்லியை ஒப்படைத்தால் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அதைச் செய்ய மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். போதை மருந்து கடத்தலை செய்து வந்த ஹெட்லி, 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க உளவுத்துறை சிஐஏவில் பணியாற்றியுள்ளார்.


முழுமையான விசாரணை நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அம்பலமாவதோடு, அந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவிகளும் வெளிச்சத்திற்கு வரும். குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமையை இந்தியா வலியுறுத்திப் பெறுவதன் மூலம் பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி எறியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவவிடக்கூடாது.

No comments:

Post a Comment