Saturday, August 1, 2009

பணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி


ஜூலை 18 அன்று நிறைவு பெற்ற வாரத்திற்கான பணவீக்க விகிதம் (-)1.54 ஆக இருந்தது. அதாவது விலைவாசி செங்குத்தாக சரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க. புள்ளிவிபரத்தை மட்டும் பார்த்தால் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கத்தை விட வேகமாக விலைவாசி ஓடிக்கொண்டிருக்கிறது.


கனிமங்களுக்கான விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. சுமார் 16.8 சதவீத அளவிற்கு இதன் விலைகள் குறைந்தன. இரும்புத்தாதுவின் விலைதான் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விலை 24 சதவீதம் சரிந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் கடும் எதிர்ப்புக்கிடையிலும் உயர்த்தப்பட்டன. ஆனால் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் விலையை சத்தமில்லாமல் குறைத்துவிட்டார்கள். குறைவான பணவீக்கத்தை அனுபவிக்க விரும்பும் குப்பனும், சுப்பனும் ஜெட்டில் பறந்து கொள்ள வேண்டியதுதான்.


காய்கறிகளின் விலைகள் 4.9 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 4.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றின் விலைகளும் ஏறுமுகம்தான். பல மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை சில்லரை விலைக்கடைகளில் நூறு ரூபாயைத் தாண்டி ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருக்கிறது.


இந்த பணவீக்க அளவைக் கொண்டுதான் வளர்ச்சியை அளவிடப்போகிறார்கள். யானைக்கால் நோய் வந்தவரைப் பார்த்து, பார்த்தாயா...அவருடைய கால் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்களின் வளர்ச்சி பற்றிய வியாக்கியானம் இருக்க முடியும்.

No comments:

Post a Comment