Tuesday, August 25, 2009

பொதுத்துறையைக் கூறு போடுகிறார்கள்


இப்போது ஒரு வில்லையின் விலை ரூ.10 மட்டுமே என்று குளியல் கட்டி விளம்பரம் அமர்க்களமாக வெளிவரும். விளம்பரத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ 12 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப், பத்து ரூபாய்க்கு இறங்கிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். ஆனால் எட்டு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப்பின் விலையை பத்து ரூபாய்க்கு ஏற்றி, ரூ.10 மட்டுமே என்று கூறி ஏமாற்ற முயல்வது பழைய மளிகைக்கடை ரசீதைப் பார்த்தவுடன் புரிந்துவிடும். இத்தகைய உத்தியைத்தான் மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கிறது. ஒரு முறை இவ்வளவு பங்குகளுக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது என்று உத்தரவு போடப்போகிறார்கள்.

இந்திய உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் கருதும்போது, ஏதோ இவர்கள் மக்களின் கருத்தை மதிக்கும் வகையில் வெறும் பத்து சதவிகிதம் அல்லது பதினைந்து சதவிகிதம் பங்குகளைத்தான் விற்கப்போகிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான் பத்து சதவிகிதம் மட்டுமே அல்லது பதினைந்து சதவிகிதம் மட்டுமே என்று செய்திகளை உலவ விட்டுள்ளார்கள். ஆனால் அதோடு நிற்கப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். கேட்டால், இவ்வாறு செய்தால்தான் மற்ற பங்குகளை அதிக விலைக்கு விற்க முடியும் என்று வல்லுநர் கருத்துகளை அள்ளிவிடுகிறார்கள்.

முதன்முறையாக பங்குகளை விற்கும்போது பதினைந்து சதவிகிதம் மட்டுமே விற்பனை இருக்க வேண்டும் என்றும், அதற்குப்பிறகு ஒவ்வொரு முறையும் பத்து சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்றும் நிதித்துறை புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. தரப்பட்டியலை உருவாக்கும் நிறுவனமான கிரிசில், சீர்திருத்தப்பாதையில் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வைக்கிறார்கள் என்று அரசின் நாசகரப்பாதைக்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இடதுசாரிகள் இருந்தவரைக்கும் மக்களின் சொத்துகள் எதையும் தாரை வார்க்க முடியாமல் இருந்த தங்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ந்து கொள்கின்றன பெரு நிறுவனங்கள்.

பங்குச்சந்தை கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காலமிது. 21 ஆயிரம் புள்ளிகளில் கடந்த ஆண்டு இருந்த சென்செக்ஸ், 14 ஆயிரத்திற்கும், 16 ஆயிரத்திற்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு கடந்த ஆண்டில் வெளியேறிய அன்னிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பி வந்தார்கள். எட்டாயிரம் வரை சென்ற சென்செக்ஸ் கொஞ்சம் தலையை உயர்த்திப் பார்த்தது. ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் தலைகுப்புறப் பாய்கிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் சுமார் 700 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய நிதி நிறுவனங்கள் விற்றதே இத்தகைய இறக்கத்திற்குக் காரணமாகும்.

கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 170 புள்ளிகளை இழந்தது. இந்தியாவில் மட்டுமல்ல. பல்வேறு வளரும் நாடுகளில் தாங்கள் செய்திருந்த முதலீட்டை ஒரே நேரத்தில் விலக்கிக்கொண்டு லாபம் சம்பாதித்துள்ளார்கள். இந்தக் கொள்ளை லாபத்தின் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். அவ்வாறு வரும் பணமும் வெறும் லாபத்தை மட்டுமே குறிவைத்து வருவதால் பங்குச்சந்தைத் தடுமாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை மறைத்து விடுகிறார்கள். கேட்டால், சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பவர்கள்தான் சரியான முதலீட்டைச் செய்ய முடியும் என்று கூறிக்கொள்கிறார்கள்.

இத்தகைய காலகட்டத்தில்தான் ஆயில் இந்தியா, தேசிய நீர்மின்நிலையக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது. பாஜக ஆட்சிக்காலத்தில் இதற்காக தனி அமைச்சகத்தையே உருவாக்கி 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொதுத்துறைப் பங்குகளை விற்றார்கள். இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவை நம்பியிருந்ததால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பொதுத்துறைப் பங்குகள் மீது பெருமளவு கை வைக்கமுடியவில்லை. இப்போது இடதுசாரிகள் என்ற தடை நீங்கிவிட்டதால் மக்களின் சொத்துகளை விற்கப்போகிறார்கள். எப்படியெல்லாம் விற்கப்போகிறோம் என்ற புதிய கொள்கையையும் உருவாக்கப்போகிறோம் என்கிறார் நிதித்துறைச் செயலாளர் அசோக் சாவ்லா.

No comments:

Post a Comment