Tuesday, April 13, 2010

"அங்காடித் தெரு"வாகும் பொதுத்துறை உருக்காலை!


தனது நாசகர உலகமய, தனியார் மய மற்றும் தாராளமயப் பாதையில் மத்திய அரசு தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு புதிதாக உருவாக்கவில்லை. அதோடு ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. நிரந்தர மற்றும் முறையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இன்றைக்கு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இன்றைக்கு ஏராளமான பணத்தை ஒவ்வொருவரும் தங்கள் கல்விக்காக செலவழித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி தங்கள் படிப்புகளை முடிக்கிறார்கள். சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் அமரும் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்க்க சம்மதிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் சுரண்டி எடுக்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமோ அற்பமானதாகும். அதோடு, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, இருப்பதையும் பிடுங்கிவிடும் அபாயத்தை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பணியிடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் வசிக்கும் இடங்களில் போய் ஆய்வு நடத்தினார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பிகொண்டா மற்றும் சப்பாவரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அவர்களின் ஊதியம், பணியால் உண்டாகும் நோய்கள், பொருளாதார நிலை, நவீனமயத்தின் பாதிப்பு, வாழ்விடத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சுற்றியே கேள்விகள் அமைந்திருந்தன.


சுமை தூக்கும் பணியாளர்களின் ஊதியம் பரிதாபமாக உள்ளது. இந்தப்பணியில் இருப்பவர்களில் பலர் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு சுமை தூக்கும் பணியாளரின் சம்பளம் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான். இந்த அதிகபட்ச ஊதியம்கூட மாநில அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக்குறைவானதாகும். அதிலும் வேலை இருந்தால்தான் சம்பளம் கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் அவர்களுக்கு இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்காகத் தனி ஊதியம் எதுவும் கிடையாது. வேலை செய்யும் நாட்கள் குறைவாக இருந்தால் பி.எப் மற்றும் ஈ.எஸ்.ஐ. பிடித்தம் எல்லாம் கிடையாது. அதனால் முடிந்த அளவிற்கு இந்தப்பிடித்தம் இல்லாத அளவிற்கு நாட்களைக் குறைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்துவிடுகிறது.


இந்தப் பொதுத்துறை ஆலையில் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலைக்குள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானப்பணியில் 15 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆலைக்குள் பணியாற்றும் 10 ஆயிரம் பேரில் சுமார் 4 ஆயிரம் பேர் நிரந்தரப்பணியாளர்கள் போலவே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் பணி, வேலை நேரம், பொறுப்பு ஆகிய நிரந்தரப் பணியாளர்களுக்குள்ளது என்றாலும் சம்பளம், படிகள் மற்றும் இதர சலுகைகள் மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களின் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு சொந்தக்காரர்களாவர். தார், கால்சியம், அம்மோனியா சல்பேட், அசிட்டிலின் ஆகியவற்றை இவர்கள் கையாளுவதால், இளம் வயதிலேயே தோல் மற்றும் தொண்டை தொடர்பான வியாதிகள், எலும்புருக்கி நோய் மற்றும் முகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.


700 டிகிரி முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் உள்ள இடங்களில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். 60 முதல் 80 மீட்டர் உயரத்தில் பணிபுரிபவர்களில் பலர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். கிடைக்கும் வருமானம் போதாததால் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களுமே கடனில் மூழ்கி விடுகிறார்கள். போதாக்குறைக்கு, நவீனமயம் வேறு. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 300 பேரில் சுமார் 50 பேருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதோடு, தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர்.


அவர்களிடம் ரேசன் அட்டைகள் கிடையாது. குழந்தைகளின் கல்விக்காக மாதாமாதம் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இதெல்லாம் போதாதென்று ஏறிக்கொண்டே போகும் விலைவாசியும் இவர்களை வாட்டி எடுக்கிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த ஊர்ல பிச்சை கூட எடுக்க முடியாது என்று. விசாகப்பட்டின உருக்காலையில் பணியாற்றும் பலருக்கும் அந்த நிலைதான். இவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது சிஐடியு இறங்கியுள்ளது.

Monday, April 5, 2010

"குழந்தைகள் தியாகம் வீண் போகாது...!"என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.


இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.


இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.


சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.


உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.