Showing posts with label Economics. Show all posts
Showing posts with label Economics. Show all posts

Tuesday, August 25, 2009

பொதுத்துறையைக் கூறு போடுகிறார்கள்


இப்போது ஒரு வில்லையின் விலை ரூ.10 மட்டுமே என்று குளியல் கட்டி விளம்பரம் அமர்க்களமாக வெளிவரும். விளம்பரத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ 12 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப், பத்து ரூபாய்க்கு இறங்கிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். ஆனால் எட்டு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப்பின் விலையை பத்து ரூபாய்க்கு ஏற்றி, ரூ.10 மட்டுமே என்று கூறி ஏமாற்ற முயல்வது பழைய மளிகைக்கடை ரசீதைப் பார்த்தவுடன் புரிந்துவிடும். இத்தகைய உத்தியைத்தான் மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கிறது. ஒரு முறை இவ்வளவு பங்குகளுக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது என்று உத்தரவு போடப்போகிறார்கள்.

இந்திய உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் கருதும்போது, ஏதோ இவர்கள் மக்களின் கருத்தை மதிக்கும் வகையில் வெறும் பத்து சதவிகிதம் அல்லது பதினைந்து சதவிகிதம் பங்குகளைத்தான் விற்கப்போகிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான் பத்து சதவிகிதம் மட்டுமே அல்லது பதினைந்து சதவிகிதம் மட்டுமே என்று செய்திகளை உலவ விட்டுள்ளார்கள். ஆனால் அதோடு நிற்கப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். கேட்டால், இவ்வாறு செய்தால்தான் மற்ற பங்குகளை அதிக விலைக்கு விற்க முடியும் என்று வல்லுநர் கருத்துகளை அள்ளிவிடுகிறார்கள்.

முதன்முறையாக பங்குகளை விற்கும்போது பதினைந்து சதவிகிதம் மட்டுமே விற்பனை இருக்க வேண்டும் என்றும், அதற்குப்பிறகு ஒவ்வொரு முறையும் பத்து சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்றும் நிதித்துறை புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. தரப்பட்டியலை உருவாக்கும் நிறுவனமான கிரிசில், சீர்திருத்தப்பாதையில் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வைக்கிறார்கள் என்று அரசின் நாசகரப்பாதைக்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இடதுசாரிகள் இருந்தவரைக்கும் மக்களின் சொத்துகள் எதையும் தாரை வார்க்க முடியாமல் இருந்த தங்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ந்து கொள்கின்றன பெரு நிறுவனங்கள்.

பங்குச்சந்தை கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காலமிது. 21 ஆயிரம் புள்ளிகளில் கடந்த ஆண்டு இருந்த சென்செக்ஸ், 14 ஆயிரத்திற்கும், 16 ஆயிரத்திற்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு கடந்த ஆண்டில் வெளியேறிய அன்னிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பி வந்தார்கள். எட்டாயிரம் வரை சென்ற சென்செக்ஸ் கொஞ்சம் தலையை உயர்த்திப் பார்த்தது. ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் தலைகுப்புறப் பாய்கிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் சுமார் 700 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய நிதி நிறுவனங்கள் விற்றதே இத்தகைய இறக்கத்திற்குக் காரணமாகும்.

கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 170 புள்ளிகளை இழந்தது. இந்தியாவில் மட்டுமல்ல. பல்வேறு வளரும் நாடுகளில் தாங்கள் செய்திருந்த முதலீட்டை ஒரே நேரத்தில் விலக்கிக்கொண்டு லாபம் சம்பாதித்துள்ளார்கள். இந்தக் கொள்ளை லாபத்தின் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். அவ்வாறு வரும் பணமும் வெறும் லாபத்தை மட்டுமே குறிவைத்து வருவதால் பங்குச்சந்தைத் தடுமாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை மறைத்து விடுகிறார்கள். கேட்டால், சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பவர்கள்தான் சரியான முதலீட்டைச் செய்ய முடியும் என்று கூறிக்கொள்கிறார்கள்.

இத்தகைய காலகட்டத்தில்தான் ஆயில் இந்தியா, தேசிய நீர்மின்நிலையக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது. பாஜக ஆட்சிக்காலத்தில் இதற்காக தனி அமைச்சகத்தையே உருவாக்கி 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொதுத்துறைப் பங்குகளை விற்றார்கள். இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவை நம்பியிருந்ததால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பொதுத்துறைப் பங்குகள் மீது பெருமளவு கை வைக்கமுடியவில்லை. இப்போது இடதுசாரிகள் என்ற தடை நீங்கிவிட்டதால் மக்களின் சொத்துகளை விற்கப்போகிறார்கள். எப்படியெல்லாம் விற்கப்போகிறோம் என்ற புதிய கொள்கையையும் உருவாக்கப்போகிறோம் என்கிறார் நிதித்துறைச் செயலாளர் அசோக் சாவ்லா.

விலை உயர்ந்தால் கொண்டாட்டம்!


கரும்பு விளைச்சல் இல்லை. சர்க்கரை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதன் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்திக்கும். இந்தச் செய்திகள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால் பங்குச்சந்தை சூதாட்டக்காரர்கள் உற்சாகக்குரல் எழுப்புகிறார்கள்.

எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லும் பங்குச்சந்தைப் பொருளாதாரப் புலிகள், சர்க்கரை நிறுவனங்களின் பங்குகளில் எது குறைவான விலைக்கு விற்கிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள். கோடிக்கணக்காக சாமான்ய மக்களின் வாழ்வில் அதிர்வை ஏற்படுத்தும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையுயர்வு சூதாட்டக்காரர்களின் களமாக மாறி விடுகிறது.

சர்வதேச அளவில் நிலைமை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தைப் புள்ளிகள் அதிகரிப்பு என்று செய்தி. அதற்கான காரணமும் எழுதுகிறார்கள். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்ததாம். சாமான்ய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு எகிறிப்போயுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோல் விலை மேலும் உயர்ந்தால் பங்குச்சந்தையும் நிமிர்கிறது. ஆனால் சாமான்ய மக்களைப் படுக்க வைத்து விடுகிறது.

Saturday, August 22, 2009

புதிய வரிக் கொள்(ளை!)கை



2011ல் நடைமுறைக்கு வரப்போகும் புதிய வரிக்கொள்கையின் வரைவு நகல் சுற்றிற்கு விடப்பட்டுள்ளது. இதன் மீது கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் அதைப் பதிவு செய்து கொள்ளலாம். உயர்தர மக்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வாரி வழங்கும் இந்தக் கொள்கை அந்தச் சலுகைகளை சரிக்கட்ட நடுத்தர மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்காக தண்ணீர் தெளித்துள்ளது.
சம்பளத்தோடு கிடைத்து வந்த இதுவரை வரிக்குட்படாத சலுகைகள், ஓய்வுக்காலப்பலன்கள் என்று வரி போடப்படும் பட்டியல் நீளுகிறது. ஊழியர்கள் தங்கியிருக்கும் வீடுகளை அரசோ அல்லது நிறுவனங்களோ அளித்திருந்தால் அந்த வீடுகளுக்கு வருமான வரிக்காக ஒரு வாடகை நிர்ணயிக்கப்படும். வரி கட்டுகிறீர்களோ... வாடகையைக் கட்ட வேண்டாமா என்றும் விரைவில் கேட்கலாம்.

ஓசையின்றி ராணுவத்தினர் கழுத்திலும் கத்தி வைத்து மிரட்டுவது போன்ற விஷயமாகும் இது. அவர்களுக்கு தரப்படும் வீடுகளுக்கும் இது பொருந்துமல்லவா... விலக்கு அளிப்பதற்கான எந்த ஆலோசனையும் அந்த வரைவுக் கொள்கையில் இல்லை.

30 அல்லது 35 ஆண்டுகள் கழித்து அக்கடா..வென்று உட்காரப் போகும்போது ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையை புதிய ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே அரசு ஏற்படுத்திவிட்டது. இப்போது ஓய்வின்போது வரவிருக்கும் பி.எப் மற்றும் கிராஜூவிட்டி ஆகியவற்றிலும் வரி என்ற பெயரில் அரசு கைவைக்கப்போகிறது. சேமிப்பு என்பதையே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கைவிட வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கிறது.

நிறுவன வரியை 25 சதவிகிதமாக்கப் போகிறார்கள். வருமானம் குறையுமே... என்ற சந்தேகமெல்லாம் வேண்டாம். அதுதான் நடுத்தர மக்களின் முதுகில் ஏறிவிட்டார்களே... இனி சவாரிதான்.

Wednesday, August 19, 2009

அன்னியர்களின் பிடியில் இந்தியப் பங்குச்சந்தை



ஒரே நாளில்(ஆக.17) 1,226 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றதால் சென்செக்சில் 627 புள்ளிகள் சரிந்தன. அன்னிய முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையையே உலுக்கி விட முடியும் என்பதற்கு அவர்கள் கைவசம் இருக்கும் பங்குகளின் அளவு பற்றிய புள்ளிவிபரங்களே சாட்சியாகும். முதல் 500 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் குறித்த புள்ளிவிபரங்கள்தான் இத்தகைய எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்த மும்பை பங்குச்சந்தையின் முதலீட்டில் 93 சதவிகிதத்தை இந்த 500 நிறுவனங்கள்தான் வைத்துள்ளன. இந்த நிறுவனங்களில் 22.9 சதவிகிதத்தை அன்னிய முதலீட்டார்களே வைத்துக் கொண்டுள்ளனர். பெரும் தொழில்கள் என்று கருதப்படும் 20 துறைகளிலுமே இந்த நிலைமை உள்ளது.

இந்திய அரசின் வசம் 21.8 சதவிகிதப் பங்குகளே உள்ளன. தொழில்முனைவோர் வசம் 29.3 சதவிகிதமும், பொது மக்களிடம் 8.17 சதவிகிதமும், காப்பீட்டு நிறுவனங்களின் வசம் 4.74 சதவிகிதமும் உள்ளன. சீனா தவிர மற்ற நாடுகளின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியுள்ள நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சீனாவின் பங்குச்சந்தை முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பங்குகளை வாங்காமலேயே பல கை மாறும் இந்தியப் பங்குச்சந்தையில் உள்ள நடைமுறைகள் அங்கு கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. இதனால் பல ஓட்டைகளைக் கொண்டுள்ள இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள்.

சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண்ணைத்தான் பெரும் அளவில் பங்குச்சந்தையில் விவாதிக்கிறார்கள். பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதன் ஏற்றத்தையே இந்தியாவின் விடிவுகாலமாக வர்ணித்துக் கொள்ளும் மோசடியிலும் இறங்குவதுண்டு. ஆனால் பங்கு விற்பனையில் முதல் 30 இடங்களில் இருக்கும் நிறுவனங்களைத் தனியே பிரித்தெடுத்து அதன் ஏற்ற இறக்கத்தையே சென்செக்ஸ் புள்ளிகளாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நிறுவனங்களிலும் 26.1 சதவிகிதப் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களே வைத்துக் கொண்டுள்ளனர். தொழில் முனைவோர் வசம் 32.2 சதவிகிதமும், அரசின் கையில் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே உள்ளன.

2009 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்களுக்குத்தான் லாபம் கிடைத்துள்ளது. மற்ற நாடுகளில் நெருக்கடி முற்றிப் போனதால் குறைந்த தடுமாற்றத்துடன் இருந்த இந்தியச் சந்தையில் அவர்கள் விளையாடியுள்ளார்கள். அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 15 சதவிகிதத்திலிருந்து 15.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தொடர்ந்து சரிந்து வந்த இந்தியப் பங்குச்சந்தை நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மீண்டும் மேலே சென்றது. இதற்கு வெளியே சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பியதே காரணமாகும். அதிவிரைவு வேகத்தில் வெளியே சென்ற அவர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தது எதற்காக என்ற கேள்வி பங்குச்சந்தை நிபுணர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.

பங்குச்சந்தையில் புள்ளிகள் எகிறும்போது, காளை துள்ளிக் குதிக்கிறது என்றும், சரிவின்போது கரடி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் வர்ணிப்பார்கள். இந்தியப் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள்தான் காளை மற்றும் கரடி ஆகிய இரண்டு வேடத்தையும் போட்டுக்கொள்கிறார்கள்.ஜூலை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் போட்டுள்ளார்கள். இந்த வேகத்தில் சென்றால் தொழில் முனைவோரை விட அதிக சதவிகிதம் அவர்கள் கையில் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது. அதற்கடுத்த கட்டம் என்பது பெரும்பான்மை பங்குகள்தான். ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களின் அவர்களின் கைகளில் போய்விடும்.

இந்த அபாய அறிகுறிகள் எழுந்துள்ள நிலையிலும் மத்திய அரசு தனது தூக்கத்தை இன்னும் கலைத்துக் கொள்ளவில்லை. கோடிக்கணக்கான டாலர்கள் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருப்பதாகப் புள்ளிவிபரங்களை மட்டும் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வரும் டாலர்கள் மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விடுகின்றன. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில்தான் இந்திய அரசு முதலீடு செய்கிறது. டாலருக்கு மாற்றாக வேறு கரன்சி பற்றிய விவாதங்கள் சர்வதேச அளவில் நடந்தாலும் அமெரிக்க நெருக்கடிக்கு முட்டுக்கொடுப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது. வளைந்து நிற்கும் வளரும் நாடுகளின் முதுகுகளில் தனது சுமையை ஏற்றிவிட்டு நெருக்கடியிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட அமெரிக்கா தயாராகி வருகிறது.

Monday, August 17, 2009

"பொத்"தென்று விழப்போகும் தங்கம்!


தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1500 ரூபாயைத் தாண்டி சென்றுள்ளது. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் நெருங்கிய நேரம். தங்கத்துக்கான கிராக்கி இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அந்தக்கிராக்கி குறைந்துள்ளது. மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியே இதற்குக் காரணமாகும். இந்தியாவில் 14 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. இதில் 42 சதவிகிதம் மட்டுமே பாசன வசதியைப் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலங்கள் மழையை நம்பியே இருக்கின்றன. தற்போது மழை ஏமாற்றியுள்ளதால் வழக்கத்தை விட குறைவான அளவே பயிரிட்டுள்ளார்கள்.

இத்தகைய நிலை பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கப் போகிறது. இது பண்டிகைக்கால வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தங்கத்தின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்க சந்தையை தொடர்ந்து கவனித்து வரும் அதுல் ஷா, மழை பொய்த்துள்ளது உள்ளுர் சந்தையை பெரிதும் பாதிக்கும். விவசாயிகளுக்கு உபரி வருமானம் எதுவும் இருக்கப்போவதில்லை. இதனால் நாட்டின் பெரும்பான்மையான துறையைச் சேர்ந்தவர்கள் தங்கத்தை நாடிச் செல்லப்போவதில்லை என்கிறார். ஆக.8 ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, மழைப்பற்றாக்குறை 28 சதவிகிதமாக இருந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிதப்பங்கை செலுத்தும் விவசாயத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

23 கோடி விவசாயிகள் இந்த வறட்சியால் பாதிக்கப்படவுள்ளார்கள். கிட்டத்தட்ட 70 கோடிப்பேர் விவசாயத்தை நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். இவர்களைப் பொறுத்தவரை பண்டிகைக்காலம் கசப்பானதாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் வெவ்வேறு இடங்களில் தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்களில் அட்சய திரிதியை, சில இடங்களில் விநாயகர் சதுர்த்தி அல்லது தீபாவளி என்று தங்கத்தின் விற்பனை அமோகமாக இருப்பதுண்டு. ஆனால் இம்முறை தங்கள் விருப்பத்தையெல்லாம் தாண்டு இரு காரணங்களுக்காக தங்க விற்பனை குறைவாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

முதல் காரணம், பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதுதான். தங்கம் வாங்குவதை பெரும்பாலும் அதன் விலைதான் நிர்ணயிக்கிறது என்பது இரண்டாவது காரணம். குழந்தைப்பிறப்பு, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கினாலும், அதன் விலையும் பெரும்பங்கை வகிக்கிறது. இந்த இரு காரணங்களும் தங்க இறக்குமதியில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். கிராக்கி குறைவதால், இறக்குமதியும் குறைய வாய்ப்புள்ளது என்கிறார் தங்க விற்பனையில் ஈடுபட்டுள்ள நவீன் மாத்தூர்.

சொத்துகளை விற்றாவது பெண்ணின் திருமணத்தை நடத்தும் ஆந்திர விவசாயிகளின் வாழ்க்கையே அபாயகட்டத்தில் உள்ளது. கடந்த நாற்பது நாட்களில் தற்கொலை செய்து கொண்ட ஆந்திர விவசாயிகளின் எண்ணிக்கை 21ஐத் தாண்டிவிட்டது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தற்போது அந்த நெருக்கடி அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு, அசாம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுமையும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய நெருக்கடி தங்கம் வாங்குவதை மட்டுமல்ல, அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியுமா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.

சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் தங்கத்திற்கான கிராக்கி குறைந்துள்ளது. ஆனாலும், அதன் விலையேற்றத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. பங்குச்சந்தைகள் கடுமையான அடி வாங்கியுள்ளதும் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிதித்துறை வல்லுநர்கள். மக்களுக்கு முதலீடு செய்ய வேறு வழி தெரியவில்லை. இதுதான் அவர்களை தங்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இதனால்தான் அதன் தேவை மற்றும் மதிப்பு குறைந்தாலும், விலையில் இறக்கம் தெரிய மாட்டேனென்கிறது. மற்ற முதலீடுகளுக்காக வாய்ப்புகள் அதிகரித்தால் உச்சாணிக்கொம்பில் இருக்கும் தங்கம் கீழே பொத்தென்று விழும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

Saturday, August 1, 2009

பணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி


ஜூலை 18 அன்று நிறைவு பெற்ற வாரத்திற்கான பணவீக்க விகிதம் (-)1.54 ஆக இருந்தது. அதாவது விலைவாசி செங்குத்தாக சரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க. புள்ளிவிபரத்தை மட்டும் பார்த்தால் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கத்தை விட வேகமாக விலைவாசி ஓடிக்கொண்டிருக்கிறது.


கனிமங்களுக்கான விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. சுமார் 16.8 சதவீத அளவிற்கு இதன் விலைகள் குறைந்தன. இரும்புத்தாதுவின் விலைதான் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விலை 24 சதவீதம் சரிந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் கடும் எதிர்ப்புக்கிடையிலும் உயர்த்தப்பட்டன. ஆனால் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் விலையை சத்தமில்லாமல் குறைத்துவிட்டார்கள். குறைவான பணவீக்கத்தை அனுபவிக்க விரும்பும் குப்பனும், சுப்பனும் ஜெட்டில் பறந்து கொள்ள வேண்டியதுதான்.


காய்கறிகளின் விலைகள் 4.9 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 4.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றின் விலைகளும் ஏறுமுகம்தான். பல மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை சில்லரை விலைக்கடைகளில் நூறு ரூபாயைத் தாண்டி ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருக்கிறது.


இந்த பணவீக்க அளவைக் கொண்டுதான் வளர்ச்சியை அளவிடப்போகிறார்கள். யானைக்கால் நோய் வந்தவரைப் பார்த்து, பார்த்தாயா...அவருடைய கால் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்களின் வளர்ச்சி பற்றிய வியாக்கியானம் இருக்க முடியும்.

Monday, July 20, 2009

பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?



பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?


பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கப்போகிறார் என்றவுடனேயே நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பரபரப்படைந்தனர். வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு தரப்போகிறார் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. ஊடகங்களும் அவர்களின் ஊகங்களுக்கு தீனி போட்டன. பட்ஜெட்டும் வந்தது. பரபரப்பும் அடங்கியது.மறுநாள் பத்திரிகைகளைப் பார்த்தவர்களுக்கு குழப்பம்.


இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று பெரிய, பெரிய பொருளாதாரப் புலிகளெல்லாம் கூறியிருந்தன. ஆனால் விபரமாகப் பார்த்தால் புலிகளெல்லாம் தாங்கள் அனைவரும் சைவம் என்று சத்தியம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் பொருளாதாரப் புலிகளின் கருத்துகளும் அமைந்தன.ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா பத்தாயிரமும், மூத்த குடிமக்களுக்கு பதினைந்தாயிரமும் வரம்பில் ஏற்றப்பட்டது. ஆனால் அதிக வருவாய் பெறுபவர்களுக்குத்தான் பெரிய ஆதாயம் என்பது அவர்களுக்கு எவ்வளவு சேமிப்பாகிறது என்ற கணக்கில் அம்பலமாகியுள்ளது.


2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவருக்கு பட்ஜெட் அறிவிப்பில் 1,300 ரூபாய் லாபம் என்றால் 25 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரோ 88 ஆயிரம் வரையில் லாபத்தை எடுத்து செல்கிறார். பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டியவர்கள் மேல் இருந்த பத்து சதவீதக் கூடுதல் வரியும்(சர்சார்ஜ்) நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் காட்டில் மழைதான்.


வீட்டுக்கடன் வாங்கியிருக்கோமே... அந்த வட்டிக்கான வரிச்சலுகையாவது உயர்ந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்து விட்டார்கள் நடுத்தர மக்கள். அதிலும் ஏமாற்றம்தான் மிச்சம்.

Friday, December 12, 2008

புகைக்க புகைக்க லாபம்!

என்னப்பா! புதிர் போடுறே!


அண்ணே! "மூன்றாவது தேசிய உடல் நல ஆய்வு" ஒன்றின் விவரங்களை ஜுன் மாதம் "பிசினஸ் வேர்ல்ட்" இதழில் போட்டிருந்தாங்க. இந்தியாவில் ஒரு வருசத்துல ஊதப்படுகிற பீடிகள் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடிகளாம். அதாவது சராசரியா ஒரு குடிமகன் வருசத்துக்கு 982 பீடிகளை ஊதித் தள்ளுகிறானாம்...


அடேயப்பா! சிகரெட்டு வேற இருக்கே!


ஆமாண்ணே! நீங்களெல்லாம் அந்தக் கணக்குலதானே வர்றீங்க. 11000 கோடி சிகரெட்டுகள் ஒரு வருசத்துல புகையாப் போகுதாம். இது கம்பெனி சிகரெட்டுகள்தான். 900 கோடி போலி சிகரெட்டுகள் வேற உலா வருதாம்.


சரிண்ணே! சட்டையிலே என்ன கறை?


இல்லப்பா யாரோ புகையிலை துப்புற போது சட்டையில தெரிச்சிச்சு!
நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க. புகையிலையும் 60,000 கோடி ரூபாய்க்கு ஒரு வருசத்துல விற்பனையாகுதாம். சரி பாதி ஆண்களுக்குப் புகையிலை பழக்கம் இருக்குதுன்னு அந்த சர்வேயில சொல்லியிருக்காங்க…...


பெண்களுக்குப் புகையிலைப் பழக்கம் குறைவாக இருக்குமோ!


ஆண்களை ஒப்பிடும் போது பெண்களிடம் இந்தப் பழக்கம் குறைவுதான்... 11 சதவீத பெண்கள் கிட்ட புகையிலை பழக்கம் இருக்குதாம்.


சில பேரு சிகரெட் குடிக்கிறதில்லை ... ஆனா தண்ணி அடிக்கறாங்களே!...


ஆமாம் 35 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகுதாம். 22 கோடி கே° கள்ளு வேறு உள்ளே போகிறதாம்.


உங்கிட்ட பேசிட்டுப் போனாலே நைட்டு கனவுல வெறும் நம்பரா வருதேப்பா!


ஆமாம்! ஒரு நாளைக்கு 37 கோடி ரூபாய்களை லாட்டரியிலும், 4 கோடியை குதிரை ரேஸிலும், 13 1/2 கோடியை சூதாட்டத்திலும் விடுறாங்களே!


என்னப்பா! இப்படியே குடியிலும், சூதாட்டத்திலும் பல குடும்பங்கள் அழிஞ்சு போயிடுமே!


ஏம்ப்பா! சூதாட்டம்தான் பொருளாதாரம்னு ஆனதாலே பெரிய பெரிய கம்பெனிகளே தள்ளாடித் தள்ளாடி விழுது. நம்ம பங்குச் சந்தை 10000 சென்செக்ஸ் புள்ளிகளைத் தொட முடியாமே கால்கள் பின்னிப் பின்னி விழுந்துக்கிட்டிருக்கு... அரசாங்கமே சூதாட்டங்களை ஊக்குவிக்கும் போது யாருக்கு, யார் அட்வைஸ் பண்றது.


அது சரிப்பா! பீடி, சிகரெட்டுக்கே நம்ம நாட்டுல இவ்வளவு பெரிய சந்தை இருக்குதேப்பா!


ஆமாம்! மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிற சந்தை... இந்தியாவோட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கு. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் அமோக லாபம் தான்.
நம்ம ஏதோ வெத்திலை, பாக்குக் கடைன்னு சாதாரணமா நினைக்கிறோம் ...


ஆனா அது இவ்வளவு பெரிய தொழிலா இருக்கே!


ஆமாண்ணே! "பிசினஸ் வேர்ல்ட்" இந்த சர்வேயை வெளியிட்டு அக்கட்டுரைக்கு வைச்சிருக்கிற தலைப்பு என்ன தெரியுமா? "பாவத் தொழிற்சாலை"


தம்பி, சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, மதுபானத்துக்கு கூட அந்தப் பெயர் சரிதான் ... பீடி சிகரெட்டை அந்த லி°டுல சேர்க்கக் கூடாதுல்ல


சாரிண்ணே! ரொம்பப் புண்பட்டுட்டிங்க போல இருக்கு. பீடி, சிகரெட்டெல்லாம் பாவப்பட்டவங்களும் ரொம்ப பேர் பிடிக்கிறாங்க... உடம்புக்கு கெடுதியில்லாமப் பாத்துக்க வேண்டியது தான்.


- அருண் பாரதி

Tuesday, December 9, 2008

அமெரிக்க நெருக்கடி

நவ.5 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் வேலையற்றோர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது. இவ்வளவு வேகமாக இந்த எண்ணிக்கையை எட்டி விடுவார்கள் என்று யாரும் கணிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையிழப்புகள் ஏற்பட்டதால் வேலையற்றோரின் எண்ணிக்கை பாய்ச்சல் காட்டி அதிகரித்துள்ளது. இன்னும் சுமார் ஒன்றரை மாதத்தில் பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்குதான் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகிறது.கடந்த டிசம்பர் மாதமே அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கி விட்டது. இதையும் திட்டமிட்டே மறைத்து விட்டார்கள். இது ஏதோ ஜூலை, ஆகஸ்டில்தான் துவங்கியது என்பது போன்ற தோற்றத்தை முதலில் உருவாக்கினார்கள். இந்த மோசடி வேலை நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. முதலில் வங்கித்துறை மட்டும்தான் என்றார்கள். பிறகு நிதி நிறுவனங்கள் சரிந்தன. அதற்குப்பிறகுதான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே சரிந்ததோடு மற்ற நாடுகளையும் பாதித்தது.இதன் தாக்கத்தால் அமெரிக்காவிலுள்ள பல அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. சேவைத்துறையில் மட்டும் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலை நீக்கத்திற்கான அரக்கு வண்ணக்கடுதாசிகளோடு நிறுவனங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். உற்பத்தித்துறையில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேரின் வேலை பறி போயுள்ளது. 1930களில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடுத்து தற்போதுதான் இவ்வளவு பெரிய சிக்கல் என்று கூறி வந்தவர்களின் வார்த்தைகள் தற்போது நடுக்கத்துடன் வெளிவருகிறது. அதையும் மிஞ்சிவிடுமோ என்பதுதான் அதற்குக் காரணம். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 6.7 சதவீதத்தை அடைந்துள்ளது.2009ல் இது 8.7 சதவீதமாகவும், 2010ல் 9.8 சதவீதமாகவும் எகிறப்போகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை உள்ள அனுபவமே, நிபுணர்களின் கணிப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டவையாக இருந்துள்ளன என்பதுதான். மீட்புத்திட்டங்கள் நிறுவனங்களுக்கு உதவும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு உதவுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தங்கள் நிறுவனங்களும் மீட்புத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆட்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டு போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரக் ஒபாமா, பிரச்சனையை சமாளிக்க ஒட்டுவேலை எதையும் உடனடியாக செய்துவிட முடியாது என்று பொதுப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார். தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கிக் கொண்டே போகும் என்று பொருளாதார நிபுணர் ரியான் ஸ்வீட் கூறுகிறார். இதனால் வாங்கும் சக்தி பெரிய அளவில் அடிவாங்கும் என்றும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே மேலும் 5 சதவீத வீழ்ச்சி அடையும் என்று வாசோவியா வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உதவுங்கள் என்ற அட்டைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு பிச்சைக்காரர்களாக சாலையோரம் உட்காருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தப் புள்ளிவிபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அது வரும்போது நிச்சயம் அதிர்ச்சியாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.