Sunday, January 31, 2010

தகர்ந்தது தீண்டாமைச்சுவர்!21 ஆண்டு காலமாக நீடித்து வந்த கோவை, சிங்காநல்லூர், பத்தாவது வட்டம் ஜீவா வீதியில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தகர்க்கப்பட்டது. ஜேசிபி எந்திரம் அந்த சுவரைத் தள்ளியபோது பெரியார் நகர் மக்கள் எழுப்பிய கரவொலி நிற்க வெகு நேரமானது. சில பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். தாரை தாரையாக அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தது.


மூன்று நாட்கள்தான் எனக்கு அந்தப்பகுதியினர் பழக்கம். என்னைப்பார்த்து சில பெண்கள், அண்ணா... அதோ ரோடு தெரியுது... என்று சொன்னபோது எனக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது. அடப்பாவிகளா... உங்களால் எத்தகைய வேதனையை, துக்கத்தை இந்த அப்பாவிப் பெண்கள் அடக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்ற கோபமும் எழுந்தது.


சொடக்கு போடும் நேரத்தில் சாய்த்து விட்டீர்கள் என்று ஆண்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரைப் பார்த்து உற்சாகத்துடன் கூவினார்கள். எங்களுக்கும் உற்சாகம் தொற்றியது. விநாயகரை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து விட்டோம் என்று அவர்கள் சொன்னது மனதைத்தொட்டது.


அதைத்தான் கோவில் என்று சொல்லிக்கொண்டு இந்து மக்கள் கட்சியினர் கலகம் விளைவிக்க முனைந்தனர். விநாயகரை எங்களிடம் கொடுங்கள். எங்கள் கோவிலுக்குள் வைத்து அவரை வழிபடுவோம் என்று அருந்ததிய மக்கள் சொன்னதும் மதவெறியர்களின் கூக்குரல்கள் எடுபடவில்லை.


முழுமையான பாதை இன்னும் உருவாகவில்லை. அதை அடைந்துவிடுவோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இருப்பதால் அதைச் சாதித்து விட முடியும் என்று அந்த மக்கள் சொன்னார்கள்.


உண்மையும் அதுதானே...

Friday, January 29, 2010

கோவையில் ஒரு தீண்டாமைச்சுவர்..!!!கோவை மாநகராட்சி சிங்கை நகர் பத்தாவது வட்டம் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை ஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளது குறித்து கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவைச் சந்தித்து மனு அளித்துள்ளன.

கூட்டாக இரு அமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம் மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் ஆகிய இருவரும் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சி, சிங்கை நகர், பத்தாவது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள தந்தை பெரியார் நகர் உள்ளது. இக்குடியிருப்பு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக காமராஜர் ரோடு பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நகரில் மாநகராட்சியின் மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சில ஆதிக்க சாதியினர் தீண்டாமை எண்ணத்தோடு தீண்டாமை சுவர் கட்டி சாலையை அடைத்து மறித்துள்ளனர். எனவே, மேற்படி சாலையில் தீண்டாமை சுவர் கட்டியுள்ளதை மாநகராட்சியின் மூலம் உடன் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் வரை தடுப்புச்சுவர் எழுப்பப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச்சுவர் வைத்து, அந்தச்சுவரின் மறுபக்கத்தில், அதாவது தங்கள் பகுதியில் விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப்பலகையும் மாட்டியுள்ளார்கள்.

அந்தக் கோவிலில் பூசைகள் எதுவும் நடப்பதேயில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோவிலை மாட்டுத்தொழுவமாகவே பயன்படுத்தி வருகின்றார். தலித் மக்களுக்கு அந்தப் பாதையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோவில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணி என்று பெரியார் நகர் மக்கள் கூறுகிறார்கள்.

பாதை மறிக்கப்பட்டு இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பாதை திறக்கப்பட்டால் தங்களுக்குத் தேவையான வசதிகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்தப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மனைப்பட்டாக்கள் தரப்பட்ட வேளையில் இருந்த இரு பாதைகளும் அடைக்கப்பட்டே இருந்தன என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தருகிறார்கள். மற்ற பாதையைத் திறக்கவும் கடுமையான போராட்டம் நடந்துள்ளது. காவல்துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலையாகியுள்ளனர்.

அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. இதனால் தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பொதுப்பாதையை மறித்துதான் சுவர் எழும்பியுள்ளது என்பது உறுதியானதால் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்ற உறுதியை அளித்தார்.

Tuesday, January 26, 2010

ஜப்பானில் விழுந்த அடுத்த "குண்டு"!ஜப்பானில் மற்றொரு குண்டு விழுந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் திவால் என்ற பொருளாதார குண்டுதான் அது. அந்நாட்டில் மட்டுமல்ல, ஆசியக்கண்டத்திலேயே ஜப்பான் ஏர்லைன்ஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனமாகும்.


தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது என்பதால் கடன்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று நீதிமன்றத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. கடன் தொகை மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ஏகப்பட்ட நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் தொழில் நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக இந்த சம்பவம் அமையும் என்று தொழில் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


லட்சம் கோடிகளில் புரண்டு கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்சின் மதிப்பு வெறும் 414 கோடி ரூபாய் என்று குறைந்துவிட்டது. ஒரு புதிய ஏ-380 ரக விமானத்தை வாங்க வேண்டுமென்றால் கூட இது போதாது. ஒரு சிறிய இடைவெளியைத் தவிர, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தொடர்ந்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்தது.


நிலையான அரசு என்று சொல்லிக் கொண்டவர்களின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. பெரிய எதிர்பார்ப்போடு தேர்வு செய்யப்பட்ட புதிய ஆட்சியாளர்கள் பழைய பாதையிலேயே செல்ல முனைந்துள்ளார்கள்.


மறுபுறத்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பு ஜப்பானில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ராணுவக்கப்பல்கள் முகாமடிக்கும் நாட்கள் 2008 ஆம் ஆண்டில் 260 ஆக இருந்தது. தற்போது 300யைத் தாண்டிவிட்டது. பல முனைகளிலும் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் புதிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Friday, January 22, 2010

"சந்திப்பு" நின்றது!


சந்திப்பு வலைதளத் தோழர். கே.செல்வப்பெருமாள் நேற்று இரவு(22.01.2010) காலமானார்.


பெரிய அளவுக்கு அவரோடு பழகிய அனுபவம் இல்லையென்றாலும், மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடந்த ஊடகப் பட்டறையில் தோழர்கள் எஸ்.ஏ.பி, பேராசிரியர் சந்திரா, முருகன், எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோரோடு நாங்கள் இருவரும் இருந்தோம். அப்போதுதான் வலைப்பதிவுலகத்தில் நாம் செய்ய வேண்டியவை ஏராளமான இருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதன்பிறகுதான் எனது வலைப்பூ உருவானது.


எத்தகைய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கு "அதி தீவிரவாதிகள்" அவரைத்தாக்கி தொடர்ந்து எழுதிவந்ததே சாட்சி. மகஇகவினரைப் பார்த்து உங்கள் திட்டம் எங்கே என்று கேட்டு ஓட ஓட விரட்டினார் சந்திப்பு செல்வப்பெருமாள். அவர் எழுதுவதை நிறுத்தியபிறகுதான் மாதவராஜ் மற்றும் என்னைப் போன்றவர்களை "எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்" என்று கூப்பிட்டு வம்புக்கு இழுத்தார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.


நேரில் இல்லையென்றாலும் வலைத்தளம் மற்றும் தொலைபேசி மூலமாகவாவது நாம் பேசிக் கொண்டிருந்தோம். இனி நமது "சந்திப்பு" எப்படி நடக்கும், தோழர் செல்வப்பெருமாள்..?

நிஜமாவே ஹீரோதான்!


சில நாட்களுக்கு முன்பு, சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டு பாரதி அண்ணன் அனுமதிக்கப்பட்டார் என்று தோழர் கோவிந்தராஜன் குறிப்பிட்டார். இரண்டு நாட்கள் முன்புகூட தோழர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, நன்றாக இருக்கிறார். ஆஞ்சியோ செய்துள்ளார்கள் என்றார். பார்க்கப் போகவில்லையே என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் இருந்தது.

ஆனால் இன்று வந்த எஸ்.எம்.எஸ்.தான் என்னை உலுக்கி எடுத்துவிட்டது. ஆஞ்சியோ செய்து நான்கு நாட்களே ஆகியிருந்த நிலையில் ஜன.22 அன்று பணியில் சேர்ந்துள்ளார். அதற்குக் காரணம் ஜன.21 அன்று நாடு தழுவிய அளவில் எல்.ஐ.சி.ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததுதான். 22 அன்று வேலையில் சேரவில்லை என்றால், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் விடுப்பில் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுவிடும்.

நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் வேலை நிறுத்தப்போராட்டம் முழு வெற்றி என்ற செய்தியைத் தவிர வேறு எதையும் கேட்க விரும்பாத போர்க்குணம்தான் ஜன.22 அன்று அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. 21 அன்று நடந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்றனர் என்பதுதான் அவர் கேட்க விரும்பிய செய்தி. தன்னைத்தவிர என்று ஒரு கொசுறு அந்தச் செய்தியில் தொங்கிக் கொண்டிருப்பதை வெறுத்திருக்கிறார்.

அற்புதமான தொழிற்சங்கப் போராளியான பாரதி அண்ணன் சக சங்க உறுப்பினர்களுக்கு செய்முறை வகுப்பு எடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாவே ஹீரோதான்.
அவரது உடல் விரைவில் தேற வாழ்த்தியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள் தோழரே...
(எங்களால் அன்புடன் பாரதி அண்ணன் என்று அழைக்கப்படும் தோழர்.சந்திரசேகரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், மதுரைக்கோட்டத்தின் தலைவராக உள்ளார்.)

Tuesday, January 19, 2010

தடுமாறும் நீதி!


முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது போன்று, மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையிடம் புகார் மனு கொடுத்த அந்த ஏட்டின் செய்தி ஆசிரியர் மற்றும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி உட்பட அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். மொத்தத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியான வழக்கில் யாரும் தண்டிக்கப்படவில்லை. கோவலன் கொலையுண்டதற்காக மதுரை நகரத்தின் வீதிகளில் ஒற்றைக் கையில் சிலம்பதனை ஏந்தி கண்ணகி நடந்தாள் என்றும், “தேரா மன்னா, செப்புவது உடையேன்” என்று பாண்டிய நெடுஞ்செழியனிடம் சென்று நீதி கேட்டாள் என்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.


ஆனால் கண்ணகி வழக்கு இன்றைக்கு நடந்திருந்தால், கோவலனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூட கண்ணகியை கூறவைத்திருப்பார்களோ என்னவோ?அன்றைக்கு கன்றைத் தேரில் ஏற்றிக் கொன்றதற்காக மனுநீதி சோழனிடம் சென்று நீதிகேட்டதாம் பசு ஒன்று. இன்றைக்கு நீதிகேட்கச் சென்ற பசுவையும் காணவில்லை. மனுநீதிச் சோழனையும் காணவில்லை.


தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு இந்த மோதலுக்கு சம்பந்தமில்லாத மூன்று உயிர்கள் பலியானதும் கலாநிதி மாறன் மதுரைக்கு வந்து `நீதி’ கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு `நிதி’ கிடைத்தது. கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ள கொலையும் செய்வார்கள், நடந்த கொலைபாதகங்களை மூடி மறைக்கவும் செய்வார்கள்.


இந்த வழக்கில் நீதியைத் தேடும் பயணம் தொடரும். கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.


மதுக்கூர் இராமலிங்கம்


-`புதிய ஆசிரியன்’ ( www.puthiyaaasiriyan.com) மாத இதழில் வெளியான கட்டுரை

Saturday, January 16, 2010

இளைஞரின் வாயில் மனித மலம்!

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில், 'கடந்த 7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை வழிமறித்தனர். இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.


நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர். அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.இரண்டுபேர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.


சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார். இதையடுத்து நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

மதம் மாறினாலும் சாதித் திமிர் மட்டும் போவதில்லை.

Friday, January 15, 2010

நான் அவன் இல்லை - 3


நான் அவன் இல்லை - 3


கதாநாயகனான என்.டி.திவாரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்திலேயே அப்பாவிப் பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கிலிருந்து விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியே வருவது போன்ற காட்சிதான். அப்பாவிதானோ என்று நினைப்பதற்குள் வில்லத்தனமான காட்சிகள் துவங்குகின்றன. சிக்கியவுடன் இதெல்லாம் செட்டப்...என்று அலறுகிறார் திவாரி. கிளைமாக்சில் சொந்த ஊருக்கு ரகசியமாகத் திரும்புகிறார். ஊரில் இறங்கியவுடன் நான் அவன் இல்லை என்கிற போது வில்லன் திவாரி காமெடி பீஸ் ஆகிவிடுகிறார்.
**********

வேட்டைக்காரன்


பாஜகவின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறார் கதாநாயகர் மோகன் பாக்வத். அத்வானியுடனான மோதல்தான் கதையின் முக்கியமான பகுதி. படத்தின் முதல் பாதியில் அத்வானி தாக்குப்பிடித்தாலும் இரண்டாவது பாதியில் வெள்ளைக் கொடி காட்டுகிறார். வெளியில் அது சமாதானம் போலத் தெரிந்தாலும், சரணாகதி என்பது அவரது வசனங்களில் தெரிகிறது. அடைக்க முடியாத பெரிய ஓட்டையை பாஜகவில் வேட்டைக்காரன் போட்டுள்ளான்.
---------------


அவதார்


ஒபாமாவை நாயகனாக அவதாரம் எடுக்க வைத்த ஆங்கிலப்படம். தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளனர். நோபல் பரிசை ஒபாமா பெற்றுக் கொள்ளும் காட்சியில் தியேட்டரே குலுங்கும் அளவுக்கு சிரிப்பொலி. பரிசைப் பெற சென்று கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு நிமிடம் என்று மேடையில் நின்றவாறே, என்ன... மக்களைக் கொன்று குவிக்க இன்னும் 30 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேவைப்படுகிறார்களா... உடனே அனுப்புகிறேன் என்று சொல்வதால் கூடுதல் சிரிப்பலைகள். பரிசுக்குழுவினர் முணுமுணுக்கிறார்கள், அடுத்த ஆண்டும் கொடுக்க வேண்டி வரும்போலருக்கே... என்று.

Thursday, January 7, 2010

கால் நூற்றாண்டைக் கடக்கிறது ஃபிரண்ட்லைன் பத்திரிகை

'இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்' என்று துவங்கும் தனது அருமையான கவிதையை மகாகவி இப்படி முடிக்கிறான்: சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. விடுதலையின் உண்மையான பொருள் சுதந்திரம் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம். பரந்துபட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய பத்திரிகை உலகிற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெயரிட்டிருக்கின்றனர். பத்திரிகையின் சுதந்திரத் தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிற சூழல் இது.

இதில் சமகால நடப்புகள் குறித்த பொதுவிவாத மேடை எங்கே இருக்கிறது என்பதைத் தேட வேண்டியிருக்கிறது. உலகமயம் என்ற மாயவலை பின்னப்பட்டிருக்கிற சவால் நிறைந்த வெளியில், எச்சரிக்கை மணியடிக்க வேண்டிய வேலையைச் செய்பவர்கள் மிகச் சிலராகவே இருப்பது தற்செயலானதல்ல, அதுவும் உலகமயத்தின் சவால்களில் ஒன்று. கசப்பான நிஜங்களைச் சுட்டிக் காட்டியவாறும், அதிர்ச்சியான நிகழ்வுகளின்மீது பிரதிபலித்துக் கொண்டும், அதே வேளையில் நம்பிக்கையாக இங்குமங்கும் ஒளிரும் சுடர்ப்படங்களைப் பதியவைத்தவண்ணமும் இயங்கிக் கொண்டிருக்கிற வித்தியாசமான ஓர் இதழ் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே வாசகர்களைச் சிறப்பிக்கிற விஷயமாகும்.


1984ல் வரத் துவங்கிய ஃபிரண்ட்லைன் பத்திரிகை கால் நூற்றாண்டைக் கடந்திருப்பதைப் பதிவு செய்து ஒரு சிறப்பிதழ் வந்திருப்பது உற்சாகம் கரைபுரளத்தக்க விஷயமாகும். 'பத்திரிகை தளத்தில் 25 ஆண்டுக்காலச் செம்மைப்பணி' என்று அதன் முகப்பில் பொலியும் வாசகங்கள் உண்மையிலேயே அர்த்தம் நிறைந்தவை. நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட 1975ன் இருண்டகாலத்திற்குப்பின்னான இந்திய அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டுக் காட்சிகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவை. 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் அதுவரை நாடு சந்தித்திராத அதிர்ச்சி முடிவுகளையும், புதிய கதாபாத்திரங்களையும் மக்கள்முன் வழங்கின. 1980ல் இந்திராகாந்தி ஆட்சியை மீட்டெடுத்தாலும், வேகமான வெவ்வேறு நடப்புகள் அதற்குப்பின் நடக்கக் காத்திருந்தன. இந்தப்பின்புலத்தில், ஹிந்து பத்திரிகைக் குழுமத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய ஃபிரண்ட்லைன், ஆங்கில வாசக உள்ளங்களில் அதன் நூதன வடிவம், கருத்தாக்கம், தீர்மானமான நிலைபாடுகளால் புதுவித விவாதத்தையும், கிளர்ச்சியையும் உருவாக்கியதை மறக்க முடியாது.


சிறப்பிதழின் நுழைவாசலில், தலைமை ஆசிரியர் என் ராம் நிறுவுவதுபோல், ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால், இந்த நேர்க்கோட்டிற்கு எதிரான திசையிலிருந்து இதற்கு ஒவ்வாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், சமகால நடப்புகள் குறித்த சீரிய பார்வை பெற விரும்புவோர் தவிர்க்க முடியாத இதழாக நிலைபெற்றிருக்கிறது ஃபிரண்ட்லைன்.


தேச, சர்வதேச அரசியல் விவாதங்களே ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கிறது என்றாலும், ஃபிரண்ட்லைன் இதழை வருடத் துவங்குகிற ஒவ்வொரு தருணமும் அதன் வகைப்படுத்தப்பட்ட வெவ்வேறு ரசனைக்குரிய அம்சங்களை நினைவூட்டும். கலை, இலக்கியம், நாடக அரங்கம், திரை உலகம் போன்றவற்றிலும் மரபார்ந்த விஷயங்கள், புதிய பரிசோதனைகள் இரண்டின் சுவைகளையும் பருகத் தந்து கொண்டேயிருப்பது இதன் அரிய நேர்த்தி. ஆங்கில மொழியின் வித்தியாசமான இலக்கண விவகாரங்களை வாசிக்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், சமூக முரண்பாடுகள் என இந்தக்காலத்தில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கும் பொருள் மீது ஃபிரண்ட்லைன் படைப்பாக்கங்கள் செய்துவரும் தாக்கம் அளப்பரியது.


இந்தப் பின்னணியில் வந்திருக்கும் சிறப்பிதழ் பொருளாதாரம், மத அடிப்படைவாதம், சமூக நீதி, உலக விவகாரம், கல்வி-பொது சுகாதாரம்-சுற்றுச்சூழல்-வரலாறு-அறிவியல்-கலை, இலக்கிய, இசை உலகம் என்ற தலைப்புகள் ஒவ்வொன்றின்கீழும் தேர்ந்த சிறப்புக் கட்டுரை ஒன்றும் தொடர்ந்து பழம்பதிவுகளின் நினைவுகூரலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. வழக்கம்போலவே கவனத்தை ஈர்க்கின்றன புகைப்படங்கள். அவற்றில் எழில் கொஞ்சுபவையும் உண்டு, துயரங்களைப் பெருக்குபவையும், அதிர்ச்சி உறைய வைப்பவையும் உண்டு. தீண்டாமைக் கொடுமை, மனிதர் மலத்தை மனிதரே அள்ளும் அவலம் உள்ளிட்ட விஷயங்களையும், உலகமய பொருளாதாரத்தின் மனிதவிரோத விளைவுகளையும், மத வெறியின் பேயாட்டத்தையும் அம்பலப்படுத்தியதில் ஃபிரண்ட்லைன் தனிப்பெருமை மிக்க பங்களிப்பைச் செய்திருப்பது சிறப்பிதழில் தனி கவனம் பெறுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி வெளிப்பாடுகள் உள்ளிட்ட பதிவுகள் ஃபிரண்ட்லைன் இதழுக்கு வெளியே அரிதானவை.


ஒரு கால் நூற்றண்டுக்காலம் நடந்த நடையை ஒரு சின்ன விழிப்பார்வையால் தன்னைத்தானே சொக்கி நின்று பார்த்துக் கொள்கிற பார்வையாக ஃபிரண்ட்லைன் சிறப்பிதழ் வந்திருப்பது நீண்டகால வாசகர்களுக்கு ஒரு சொந்தவூர் திரும்புதல் மாதிரி என்றால், புதியவர்களுக்கு ஒரு புதையலின் அடையாளச் சீட்டு அது. எதைத்தவிர்ப்பது, எதை விட்டுவிடாதிருப்பது என்று ஆசிரியர்குழு திணறியிருப்பது ஒரு பத்திரிகையினது கடந்தகாலச் சுவடுகளின் பெருமை. ஃபிரண்ட்லைன் தொட்ட எல்லைகள், கடந்த வெளிகள் எல்லாம் பலம்-பலவீன சுய விமர்சன அட்டவணைகளால் இறுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றின்மீது டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா தொகுத்துத்தரும் ஒரு நறுக்குப்பதிவில் புள்ளிவிவரங்கள் மூலமாக அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஃபிரண்ட்லைன், இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி காலத்தில், மாற்று உலகத்தின் வாசலுக்கான வெளிச்சத்தின் திசையைத் தேடுபவர்களுக்கு நிச்சயம் ஒரு கைவிளக்கு. சிறப்பிதழ் அதன் முகவரி.

எஸ் வி வேணுகோபாலன்
- பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி - ஜனவரி 2010 இதழ்