Friday, January 7, 2011

எந்திரன் வெற்றியா.. தோல்வியா..? ரஜினி குழப்பம்


முன்பெல்லாம் படம் வெளியாகி 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்று தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படும். வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். வெற்றிப்படமாக இருந்தால் கிட்டத்தட்ட அந்த 175 நாட்களையும் விழாக்காலமாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் என்று பலரும் சொல்லிக் கொள்ளும் எந்திரன் பல திரையரங்குகளில் இருந்து வெளியேறிவிட்டது. ரசிகர்கள் மூலம் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத்துறையின் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தொலைபேசி எண்களைத் தட்டியிருக்கிறார்.

திரையிடப்பட்ட அரங்குகளில் இன்னும் எத்தனை அரங்குகளில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை அவரிடம் கேட்டிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தனின் பதிலை வைத்து ரஜினியின் ஆய்வு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், திரைப்பட வட்டாரங்களில் எந்திரன் தயாரிப்புக்கும், விளம்பரத்திற்கும் செய்த செலவோடு ஒப்பிட்டால் படம் தோல்விதான் என்று பேசிக் கொள்கிறார்கள். அதுவும் யதார்த்தமான கதையைக் கொண்ட மைனாவின் வெற்றியைப் பார்த்தால், எந்திரன் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார்கள்.

Monday, January 3, 2011

"சார்... எனக்கு வேலை கிடைச்சுருச்சு...!""சார்... எனக்கு கோ-ஆபரேடிவ் பேங்குல வேல கிடைச்சுருச்சு..." செல்போனில் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருப்பது போன்ற குரல்.

பதில் சொல்வதற்கு முன்பே அந்தக்குரல் தொடர்கிறது. "சார்... நம்ம மையத்துல மேத்ஸ்(கணக்கு) எடுத்ததுதான் சார் ரொம்ப உதவியா இருந்துச்சு..." என்றார் கல்பனா என்ற அந்தப்பெண். கோவையில் அண்மையில் நிரப்பப்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் பணியிடங்களில் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் அட்டவணை சாதியினருக்காக கோவையில் நடத்தப்பட்டு வரும் டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.

இவர் மட்டுமல்ல. இங்கு நடத்தப்படும் வகுப்புகளால் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் மூவர் தேர்வு பெற்றனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சியைத் துவக்கினோம். ஏப்ரல் இறுதியில் அதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே, இப்போதுதான் எங்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு வகையில் வகுப்புகள் தொடரட்டும் என்றார்கள் வகுப்புகளுக்கு வந்தவர்கள். இதனால் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பைத் துவங்கினோம்.

தொழில் ரீதியாக இந்த வேலையைச் செய்யும் ஒருவரை அணுகலாம் என்று முடிவெடுத்தோம். திரு.சபாபதி என்பவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வகுப்புகளை நன்றாகச் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டோம். விஷயத்தை விளக்கிவிட்டு உங்களுக்கு எவ்வளவு கட்டணம் தர வேண்டும் என்று கேட்டோம். இவ்வளவு பெரிய பணியை உங்கள் மையம் செய்து வருகிறது. நானும் அதில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என்றபோது மையம் பரந்து விரிவடைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவரது வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

அது நிறைவுபெறும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) தேர்வுக்கான விளம்பரம் வந்தது. அதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது அதில் இரண்டாம் கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது கோவை டாக்டர்.அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். ஜனவரி 2 ஆம் தேதி முதல் வி.ஏ.ஓ தேர்வுக்காகவும், வரும் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதப் போகிறவர்களுக்காகவும் பயிற்சி வகுப்புகளை நடக்கப்போகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
பயிற்சி வகுப்புகள் துவங்குகையில் கணிதப் பாடத்திற்கென்று சிறப்பான கவனம் செலுத்துவதென்று முடிவெடுத்தோம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் அதைத்தாண்டி மற்ற தேர்வுகளுக்கு கணிதம் அத்தியாவசியம் என்பது நமது ஆசிரியர்களின் கணிப்பாக இருந்தது. அது சரியானது என்பதைத்தான் மையத்தைச் சேர்ந்த கல்பனா கூட்டுறவு வங்கித்தேர்வில் தேர்வு பெற்றது காட்டுகிறது.

அட்டவணை சாதியினர் தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பது போலவே மையத்தின் பணிகளும் வெகு தூரம் செலல வேண்டியிருக்கிறது. அண்மையில் வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் கட்-ஆப் மதிப்பெண்களில் அட்டவணை சாதியினருக்கான கட்-ஆப் என்பது மற்ற பிரிவினரை விடக் குறைவாக இருந்தது. அட்டவணை சாதியினரிலும், அருந்ததியருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் மேலும் குறைவாகவே இருந்தது. இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு ஆகியவற்றை இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் நியாயப்படுத்துகின்றன.

தமிழக அரசுப்பணிகளில் நியாயமான அளவில் இடங்களைப் பெறுவதில் காட்டும் முனைப்பை மத்திய அரசுப்பணிகளும் காட்டிட அட்டவணை சாதியினர் முன்வர வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக, வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் சரியான வழிகாட்டுதலைப் பெற்று தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை கிராமப்புற அட்டவணை சாதியினரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புகளுக்கு டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உதவிடும் வகையில் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மையத்தின் பொறுப்பாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இதையுணர்ந்தே, போட்டித் தேர்வுகளுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளில் துவங்கி, திறன் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி, தொடர் மாதிரி தேர்வுகள், தேர்வு எழுதப்போகிறவர்களே வகுப்புகள் எடுப்பது, அவர்களே கேள்விகளைத் தயாரிப்பது என்று திட்டமிட்ட முறையில் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறைதான் வகுப்பு என்பதால், மற்ற நாட்களில் அவர்களைப் படிக்கச் செய்ய வகையில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் ஒவ்வொரு நாளும் மூன்று கேள்விகள் வரை அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போதைய பயிற்சி பிப்ரவரி 20 வரையிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குப்பிறகு திட்டமிட்டுள்ளபடி வங்கி, எல்.ஐ.சி. போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடத்தப்படும். கோவைப் பயிற்சி மையத்தின் உயிர்நாடியாக கோவைக் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் இயங்குகிறது. வகுப்புக்கு வருபவர்களின் நேரத்தை மிச்சம் பிடிக்க, சங்கத்தின் செலவில் வகுப்பறைக்கே தேநீர் வருகிறது. கேள்வித்தாள்கள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் போன்றவற்றை நகல் எடுப்பதற்காக சங்கத்தின் செலவில் ஒரு ஜெராக்ஸ் மிஷினையே இறக்கிவிட்டார்கள். ஓராண்டு காலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்திருக்கின்றன என்றால் அதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ ஊழியர் சங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்பு செயல்பாடுகள்தான் காரணம் என்றால் மிகையில்லை.

தோழியர் கல்பனாவின் வெற்றி ஆசிரியர்களையும், வேலைக்காகக் காத்திருப்பவர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. வேலையில் சேர்ந்து விட்டாலும், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்காக வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவேன் என்று அவர் சொன்னது இந்த மையத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக இருந்தது.


Sunday, January 2, 2011

தள்ளு மாடல் வண்டி இது.. தள்ளி விடுங்க...!!கடந்த வாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கட்கான் என்ற ரயில் நிலையத்திற்குள் நுழைந்த சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து இறங்கி ஓடத்துவங்கியது. நடைபாதையைத் தாண்டிய ரயில் சில இரு சக்கர வாகனங்களைச் சுக்குநூறாக்கியது. பாதை சரியாகத் தெரியாத அளவிற்கு பனி மூடியிருந்ததுதான் இதற்குக் காரணமாகும். நல்லவேளையாக, அதற்கு மேல் ஓடாமல் ரயில் நின்று விட்டது. ஆனால் இத்தகைய விபத்துகள் ஒவ்வொரு ஆண்டிலும் நடப்பது சாதாரண நிகழ்வாக ஆகி விட்டது என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதுதான் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தண்டவாளங்களை பனி மூடிக்கிடக்கும் நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையிலான கருவிகளை ரயில்களில் பொருத்த வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை இருந்து வருகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கோ கோப்புகளைப் பார்ப்பதற்கு நேரமில்லை. உயர் அதிகாரிகளோ பாதுகாப்புக் கருவிகள் வாங்குவது வீண் செலவு என்கிறார்கள். இத்தகைய பாதுகாப்புக் கருவிகளை அனைத்து ரயில்களிலும் பொருத்துவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் அவர்கள். ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள நிலையில் இத்தகைய கருவிகளை வாங்க முடியாது. இந்தக் கருவிகள் ஆண்டில் ஒரே ஒரு மாதம்தான் பயன்படும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.

இவர்களின் கருத்துகளைத் தாண்டி மக்களின் பாதுகாப்புக்காக இந்தக் கருவிகள் அவசியம் என்று சொல்வதற்கு மக்களின் பிரதிநிதியான அமைச்சர் வேலைக்குச் செல்வதே அபூர்வமானதாக இருப்பதே காரணமாகும். ஆனால் மேடைகளில் ரயில்வே பாதுகாப்பு பற்றி மம்தா பானர்ஜி பொரிந்து தள்ளி வருகிறார். விபத்தே இல்லாத ரயில்வே என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். கொல்கத்தாவில் மெட்ரோ சேவை ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், விபத்துகளைத் தடுக்கும் வகையிலான கருவிகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பொருத்தி விடுவோம். எந்தவிதமான விபத்தும் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதோடு, வருங்காலத்தில் விபத்தே இல்லாத நிலைமை உருவாகும் என்று பேசினார். ஆனால் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு தலைநகரில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

3 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் ஆயிரம் சரக்கு ரயில்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவற்றோடு சிக்னல்களின் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பாகத்தில் ரயில்வேதுறை பெரிய அளவில் முன்னேறியிருப்பதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டனர். ஆனால் பாதுகாப்பு தொடர்பான ஊழியர்கள் பணியிடங்களில் சுமார் 90 ஆயிரம் இடங்களை நிரப்பவேயில்லை. தற்போது அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்தப் பணியிடங்கள் பற்றி வாய் திறக்கவேயில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பனி மூடிக்கிடந்ததால் தில்லி-லக்னோ ரயில் பாதையில் இரண்டு விபத்துகள் நடந்தன. அதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கடுமையான குளிர் இருக்கும்போது வட மாநிலங்களில் பயணம் செய்யும் மக்களில் பெரும்பாலானர்கள் தங்கள் பயணத்தை நேரத்தில் முடிக்கவில்லை. பலரும் பயணத்தையே ரத்து செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் தில்லிக்கு வந்து சேர வேண்டிய 45 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரே நாளில் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தடுக்கக்கூடிய பாதுகாப்புப் கருவிகளைப் பொருத்துவது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துவிட்டன. அதிகாரிகளின் கருத்துதான் மேலோங்கி நிற்கிறது. மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை, அமைச்சரின் நாற்காலியில் வந்து அமர்வதே பத்திரிகைகளில் செய்தியாகும் அளவுக்கு அவருடைய வருகை இருக்கிறது.

இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் நிர்ப்பந்தத்தால் பாதுகாப்பு கருவிகளை வாங்க முயற்சிக்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிக்கும் வேறு ஏதாவது முட்டுக்கட்டை வராமல் இருந்தால், அடுத்த ஆண்டு குளிர்காலத்திலாவது பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுவிடும். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அடுத்த ஆண்டும் இதேகதைதான் இருக்கும் என்று ரயில் அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

Saturday, January 1, 2011

குடியிருப்புகளாகும் இன்டர்நெட் மையங்கள்!“அது ஏப்ரல் மாதமிருக்கும். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கான குத்தகையை நீட்டிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான 500 டாலர்கள் எங்களிடம் இல்லை. உடைந்து போய் உட்கார்ந்திருந்தோம். உலகிலேயே விலைவாசி அதிகமாகயிருக்கும் டோக்கியோ நகரத்தில் வறுமையில் உழலத் துவங்கியிருந்தோம்...”

டோக்கியோ நகரத்திற்கு சற்று வெளியே இருக்கும் இன்டர்நெட் மையத்திலிருந்து வலைப்பூ மூலமாக உலகிற்கு தனது நிலைமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானிய இளைஞர் ஒருவர். தான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே கண்கள் சுழன்று உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். பிறகு அந்த மையத்திலேயே உறங்கிவிடுகிறார். காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு அங்கிருக்கும் எந்திரத்தில் தேநீரை அருந்திவிட்டு வேலை தேடச் செல்கிறார். 24 மணிநேரமும் இயங்கும் அந்த மையத்தையே தனது வீடாக அவர் மாற்றிக் கொண்டுவிட்டார்.

இவ்வாறு இவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான ஜப்பானிய இளைஞர்கள் தங்குவதற்கு வீடில்லாமல் இன்டர்நெட் மையங்களில் தங்கி விடுகிறார்கள். எவ்வளவு மணி நேரம் தங்குகிறார்களோ, அதற்கு பிரவுசிங் பார்ப்பதற்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ அவ்வளவு தந்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறார்கள். சிறிய, சிறிய அறைகளாகக் கட்டி வைத்திருக்கும் இன்டர்நெட் மையங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது. முண்டியடித்துக் கொண்டு போய் இடம் பிடிக்கிறார்கள். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு தனி கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம், தாமதமாகி விட்டாலோ அல்லது காலையில் விரைவாக வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் இப்படி இன்டர்நெட் மையங்கள் போன்ற இடங்களில் தங்கினார்கள். இரவு நேரங்களில் அலுவலகத்திற்குச் செல்லாமல் பணியாற்ற விரும்பியவர்களும் இத்தகைய மையங்களில் இரவு நேரங்களில் அமர்ந்து வந்தனர். இரவு நேர விருந்துகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல விரும்பாதவர்கள், காதலிகளிடம் இணையதளம் மூலமாகப் பேச விரும்புபவர்கள், தூக்கம் வராமல் கணினி விளையாட்டில் இறங்க விரும்புபவர்கள் என்று பெரிய பட்டியலே இந்த மையங்களுக்கு வருபவர்கள் பற்றி உள்ளது. ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைப்பது தற்போது அரிதாகிவிட்டது.

இவ்வாறு குடியிருக்க இடம் இல்லாதவர்கள் பற்றிய சிறப்பு ஆய்வு ஒன்றினை பிக் இஷ்யூ ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தங்களின் 20கள் மற்றும் 30களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களின் சராசரி வயது 32.3 ஆக இருந்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது ஆறு மாதங்களாவது வீடு இல்லாமல் சாலையோரங்களில் தங்கினார்கள் என்பது தெரிய வந்தது. வீடில்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிக வேலைகள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற வேலைகளில்தான் அமர்கின்றனர். இதனால் பணிக்காலத்தில் உயர் தொழில்நுட்பம் எதையும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் இருக்கிறது.

ஒரே நேரத்தில் படித்துக் கொண்டே வேலை பார்க்கலாம் என்று கிளம்பிய ஒருவர், இப்படி நினைத்து 31 வயதை எட்டிவிட்டேன். படிக்கவும் இல்லை, நிரந்தர வேலையும் கிடைக்கவில்லை என்கிறார். மாலை எட்டு மணிவரையிலும் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. 20 வயதில் ஒசாகாவுக்கு வேலைக்காக சென்றேன். சில மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணியாற்றினேன். மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் வேலையில் இருந்தேன். சில சமயங்களில் பாதுகாப்பு ஊழியராகவும் இருந்தேன். ஆனால் ஒருபோதும் நிரந்தர ஊழியராக என்னை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் புலம்புகிறார்.

வேலையில் சேரும்போது நிறுவனங்கள் சொல்லும் ஊதியம் ஒன்றாகவும், கையில் வாங்கும்போது அது வேறாகவும் பல சமயங்களில் இருக்கிறது என்று தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சில சமயங்களில் ஊதியமே இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்டவர்கள்தான் குடியிருக்க இடமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களும் இவர்களோடு இணைந்துள்ளார்கள். மாத வாடகை தரும் அளவுக்குக்கூட பணமில்லாத நிலையில், ஏழு மணிநேரம் இன்டர்நெட் மையங்களில் நாற்காலிகளிலேயே அமர்ந்தும், தரையில் விரிப்பை விரித்தும் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“குட்டி ஜப்பான்" என்ற பெயர் சூட்டப்பட்ட மற்ற நாட்டு நகரங்கள் வெட்கப்படும் அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி வருகிறது.