Wednesday, August 26, 2009

கள்ளச்சாராயம் வேணுமா... கள்ளச்சாராயம்...!!!

* குஜராத்தில் நடைபெற்று வரும் கள்ளச்சாராய வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

* 1960களில் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தாலும், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை தடையில்லாமல் குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

* கள்ளச்சாராயம் குடித்ததால் கடந்த மாதத்தில் 150 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் நடந்தது. இந்த கள்ளச்சாராய வியாபாரிகளுடன் பாஜக கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அகமதாபாத் நகரில் கள்ளச்சாராயம் குடித்து 150 பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த மாதம் நடந்தது. கள்ளச்சாராய விற்பனையைக் கண்டும், காணாமல் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு உயிரிழப்பு என்றவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக்கொண்டது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு புதிய சட்டம் கொண்டு வருவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் எப்படி நடந்து கொண்டிருந்ததோ, அதே அமர்க்களத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தோடு வேறு எந்த நிறுவனம் தயாரிக்கும் மதுபானம் வேண்டுமானாலும் தாராளமாகக் கிடைக்கிறது.



அகமதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட சர்கேஜ் நகரில் உள்ள மகர்பா பகுதியில் புதிதாக ஒருவர் வருகிறார் என்றாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர் கள்ளச்சாராயம் வாங்குவதற்காகத்தான் வருகிறார் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. சிறு குழந்தையையிடம் கேட்டால்கூட அதோ... என்று விரலை நீட்டிக்கூறும் என்று அந்த ஊர்க்காரர்கள் பெருமையோடு(!) கூறிக்கொள்கிறார்கள். வெளியூர்க்காரர்கள் வந்தால் அந்தப் பகுதியினர் உற்சாகமாகி விடுகிறார்கள். கேள்விகள் எதையும் கேட்பதில்லை. எவ்வளவு வேண்டும் என்று கேட்டு பிளாஸ்டிக் பை அல்லது பாட்டிலில் தந்து பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.



மேலும், உயிரிழப்பிற்குப் பிறகு அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது பெரும் மோசடி என்பதும் அம்பலமாகியுள்ளது. வியாபாரிகள் விலையை ஏற்றி விட்டார்கள். பத்து ரூபாய்க்கு விற்று வந்த பாக்கெட் சாராயம் தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆட்சியாளர்களையும், காவல்துறையினரையும் சமாளிக்கவே இந்த விலையேற்றம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. பிரச்சனைகள் அதிகரித்து விட்டதால் எங்களுக்கு லாபம் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த விலையேற்றம் என்கிறார் ஒரு சாராய வியாபாரி. எந்த நேரம் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் இரவு பத்து மணிக்குப்பிறகு வர வேண்டாம் என்கிறார் அவர்.

கள்ளச்சாராயத்திற்கு எதிராக இயக்கம் நடத்திவரும் அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பாண்டியா பாஜக தலைமையிலான மாநில அரசை நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார். அரசின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் சாராய வியாபாரம் குஜராத்தில் நடக்கிறது. உள்ளுர் காவல்துறையினர் முதல் அதற்கு மேலேயுள்ள அனைவருக்கும் இதில் பங்கு கிடைக்கிறது. சில சமயங்களில் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதுபோல அரசு நடந்து கொண்டு, பின்னர் வியாபாரம் கொழிக்கவும் வழி செய்து கொடுக்கிறது. பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இந்தக்காலத்தில்தான் வெளிமாநிலங்களிலிருந்து சாராயம் வருவது மற்றும் உள்ளுரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற வேலைகள் அதிகரித்துவிடும் என்கிறார் அவர்.

கள்ளச்சாராயத்திற்கு உதவுவதற்காக மோடி அரசு கையாளும் புதுமையான உத்திகளையும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோட்வாடியா அம்பலப்படுத்துகிறார். கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அவர்கள் நியமிக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் பட்டியலைப் பார்த்தாலே இவர்கள் எந்த அளவிற்கு கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். காவல்துறை பணியை விட அரசியல் வேலை பார்ப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். கள்ளச்சாராயம் பெருகி ஓடுவதை அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மோட்வாடியா.

வழக்கம்போலவே, நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்கிறார் காவல்துறை டி.ஐ.ஜி. ஹஸ்முக் படேல். கள்ளச்சாராயம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் மற்ற குற்றங்களைப் போல கள்ளச்சாராயம் காய்ச்சும் குற்றமும் நடக்கத்தான் செய்யும். அதை முழுமையாக ஒழித்துவிட முடியாது. இருந்தாலும் எங்களிடம் இருக்கும் குறைவான ஆட்களை வைத்து முயற்சி செய்து வருகிறோம் என்கிறார் அவர். கள்ளச்சாராயம் ஒருபோதும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்று அந்தப்பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தையும அவர் அளித்தார். 150 உயிர்களை இழந்தபிறகும் நடவடிக்கை எடுப்பதற்கான மனநிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு வரவில்லை என்று பல கள்ளச்சாராய ஒழிப்பு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

செய்தி ஆதாரம் - மெயில் டுடே.

No comments:

Post a Comment