படம் நன்றி - india.com 2017
ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று பஞ்சாப் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அடுத்த தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும். இன்னும் ஆறேழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுளள்து. 117 தொகுதிகள் உள்ள சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகளைப் பெற வேண்டும்.
கடந்த தேர்தலின்போது காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகளும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் கூறின. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி மூன்றாமிடத்துத் தள்ளப்படும் என்றுதான் அவற்றில் இருந்தது. அப்படித்தான் தேர்தல் முடிவுகள் இருந்தன என்று சொல்ல முடியாது.
வெற்றி பெற்ற இடங்களின்(20) எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் சிரோமணி அகாலிதளம்தான் இரண்டாவது இடத்தில் இருந்தது. போட்டி நெருக்கமாக இருக்கும் என்று கணிப்புகள் சொன்னாலும் காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்தன.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முதலிடத்திலும், சிரோமணி அகாலி தளம் இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்நிலையில்தான் விவசாயிகள் மசோதா தொடர்பான பிரச்சனை எழுந்தது. இன்றும் கூட 200 நாட்களைத் தாண்டி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜகவோடு 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்திருந்த சிரோமணி அகாலி தளம், அதை முறித்துக் கொண்டது. முதலில் சிரோமணி அகாலி தளமும் விவசாயிகள் மசோதாவிற்கு ஆதரவு தந்தது. விவசாயிகளின் பெரும் எழுச்சியைப் பார்த்த பிறகு, விலகிக் கொண்டது.
2021 பிப்ரவரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. இதில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலிலும் சிரோமணி அகாலிதளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தற்போதுள்ள நிலை
படம் நன்றி - medium.com
வரும் தேர்தல் மும்முனைப் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான சரிவைச் சந்தித்தாலும் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களைப் பெறும் என்று சொல்லப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள பாஜக விரக்தியின் விளிம்பில் உள்ளது.
முதலில் சறுக்கினாலும், விழித்துக் கொண்ட சிரோமணி அகாலி தளம் தனது தனிமையிலிருந்து வெளியில் வரும் முயற்சியில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, முக்கியமான அரசியல் சக்தியாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை அறிவித்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் முன் நிற்கும் இடதுசாரிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் தங்களுக்குதான் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. ஆனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல்வர் அமரிந்தருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் பதவிப் போராட்டம் நடக்கிறது.
படம் நன்றி - The Quint
தில்லி மேலிடம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. கோஷ்டிப் பூசலைக் கட்டுப்படுத்தாவிட்டால், வாக்குகள் திசை மாறுவது திண்ணம்.
(தொடரும், பின்னொரு நாளில்)
No comments:
Post a Comment