Wednesday, June 30, 2021

டி.வி.சீரியலும், கெட்ட வங்கியும்..😊😊

 "என்ன மேடை மேதாவி, சௌக்கியமா?"

"அடடே.. என்ன முத்து... நல்லா இருக்கேன்... நீங்க நலமா?"

"இந்தக் கொரோனா ரொம்ப முடக்கிப் போட்டுருச்சு...  பூங்கால நடக்கலாம்னு சொன்னாங்க... அதான் வந்தேன்..."

"ஆமா. நானும் இன்னிக்குதான் வந்தேன்.. என்னை இப்புடி மேடை மேதாவின்னு கிண்டலா யாராவது கூப்புட்டு எவ்வளவு நாளாச்சி.. உங்கள மாதிரி சில பேருதான் அப்புடிக் கூப்புடுவீங்க..."

"இந்த லாக்டவுன்ல உங்களுக்கு எப்புடி பொழுது போச்சு..."

"வழக்கம் போல பேப்பரு, புக்... அப்புறம் டி.வி. சீரியல்..."

"டி.வி.சீரியலா... நீங்களா... ஆச்சரியமா இருக்கே... அதையெல்லாம் ரொம்ப கிண்டல் பண்ணுவீங்களே.."

"இன்னிக்குப் பேப்பர் பாத்தீங்களா..."என்று திடீரென்று கேட்டார் மேடை மேதாவி.

"கொஞ்சம் பாத்தேன்... இனிமேதான் முழுசாப் படிக்கணும்"

"Bad Bankனு ஒண்ணு ஆரம்பிக்குறாங்கள்ல..." என்றபோது குறுக்கே பாய்ந்தார் முத்து. 

"இதுக்குதான் உங்கள மேடை மேதாவின்னு நாங்க கிண்டல் பண்றது... டி.வி. சீரியல் ஏன் பாக்குறீங்கன்னு கேட்டா, மேதாவி அங்க தாவிட்டீங்க, பாருங்க.." என்று நக்கலாகச் சொன்னார்.

"நான் பாக்குற சீரியல்ல, ஒரு பொண்ணு ஒரு பையனக் காதலிக்குறா... அந்தப் பையன் வேற ஒரு பொண்ணக் காதலிக்குறான்... அந்தப் பொண்ணுக்கு அத்தை பையனோட கல்யாணம் நிச்சயம் பண்ணுறாங்க... அந்தப் பையனோ ரெண்டாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணனும்னு நெனக்குறான்.. இதுல அந்த அத்தை பையன வேற ஒரு பொண்ணும் காதலிக்குறா... இதுல யாரு கதாநாயகின்னு  பாக்குறதுக்குள்ள வேற ஒரு பொண்ணு கதைக்குள்ள வருது..."

"அய்யோ... நான் கேக்காமலேயே இருந்திருக்கலாமோ... தலையும் புரியல,, காலும் புரியல... இதெல்லாம் என்ன இழவுன்னு பாத்துக்கிட்டு இருக்கீங்க... நீங்க அந்த பேங்க் பத்தியே சொல்லுங்க..."

"ஆமா... வராத கடனையெல்லாம் ஒரு பேங்குல போடப் போறாங்க... "

"வராத கடன வேற பேங்குல போட்டா வந்துருமா.."

"கேளுங்க சொல்றேன்... இதுக்கு முன்னாடி  ஒரு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்னு ஒண்ணு வெச்சுருக்காங்க... அதையும் இந்த வங்கியோட இணைக்குறாங்க... இந்த வங்கியோட கணக்குல எத சேக்குறதுன்னு ஒரு 22 பெரிய கணக்குகள அடையாளம் பாத்து வெச்சுருக்காங்க.. 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு அதுக்கு..."



Image courtesy : Indibuzzonline

"அடேங்கப்பா...."

"ஆமா... வீடியோகோன், ரிலையன்ஸ்லாம் அதுல இருக்கு... இந்த வங்கிய யாரு நடத்தப் போறாங்கன்னா... 51 சதவிகிதப் பங்குகள பொதுத்துறை வங்கிகள் கிட்ட குடுத்துருவாங்க.. அதாவது எந்த வங்கிகளோட வராத கடன்கள இந்தப் புது வங்கி தலைல கட்டுறாங்களோ, அந்தப்புது வங்கிக்கும் அவங்கதான் முதலாளிங்க... "

முத்துக்கு தலை சுற்றத் துவங்கியிருந்தது.

"அப்புறம் இந்தப் பொதுத்துறை வங்கிகளோட பங்குகள வித்து அதத் தனியார் கிட்ட குடுத்துருவாங்க... அந்தப் பங்குகள ரிலையன்ஸ் வாங்கிருவாங்க... கடன் தராத பட்டியல்ல இருக்குற ரிலையன்ஸ், புது வங்கிக்கும் சேத்து முதலாளியாகிடுவார்..."

"என்னங்க இது... புரியலையே... "

"கிட்டத்தட்ட அந்த சீரியல் மாதிரிதான்... தொடர்ந்து பார்த்தா புரிஞ்சுடும். இதப் பத்தியும் தொடர்ந்து படிங்க. புரியும்.. பேரே கெட்ட வங்கினா பாத்துக்குங்களேன்.. போறதும் நீங்க போட்ட பணம்தானே... வங்கில இருக்குற பணத்துல 85 சதவிகிதம் நம்மள மாதிரி ஆட்களோடதுதான்... என்ன சத்தத்தையே காணோம்..."

திரும்பிப் பார்த்தால், பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் முத்து. 😄

Monday, June 28, 2021

அசத்துகிறார்கள், செந்தொண்டர்கள்... 👍

முகநூலில் பார்த்த படம் என்னவோ நினைவில் இருந்து நீங்காமலேயே பல மணி நேரங்கள் இருக்கிறது..,


91 வயது முதியவர் இறந்து விடுகிறார். அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை. உறவினர்களோ வர விரும்பவில்லை. அவரது உடல் அப்படி இருந்து விடுமோ என்ற அச்சம் நிலவிய சூழலில், பக்கத்தில் குடியிருக்கும் ஒருவர் செந்தொண்டர்களுக்கு அழைப்பு விடுகிறார். 

உடனடியாக அவருடைய வீட்டிற்கு வந்த செந்தொண்டர்கள் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று அனைத்து மரியாதைகளுடன் எரியூட்டச் செய்திருக்கிறார்கள். குடும்பத்தினர் இருந்தால் எப்படிக் கவனமாகச் செய்வார்களோ, அப்படிச் செய்தனர்.

அசத்துகிறார்கள்...

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது தொற்று அலை உருவானதிலிருந்து செந்தொண்டர்களின் பணி அளப்பரியதாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை வீடு, வீடாகச் சென்று செய்கிறார்கள். இலவச ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயங்குகின்றன. அவசரத் தேவைக்கு உதவட்டும் என்று அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டினியால் யாரும் வாடி விடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதில் அவர்களின் கவனம் இருக்கிறது. ஏழைகளுக்கு உணவு தருவதோடு, மாநிலம் முழுவதும் மிகவும் குறைந்த விலையில் உணவு தயாரித்து வழங்கும் உணவு மையங்களையும் அமைத்துள்ளனர். 

ஒருநாள் அலைபேசி அழைப்பு வருகிறது. ஒருவருக்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. பலரிடமும கேட்டுப் பார்த்து விட்டு, கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிலைமை மோசமாகி விடுமோ என்ற கவலையுடன் அந்த அழைப்பு வருகிறது. உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு விரைகிறார்கள்,  செந்தொண்டர்கள். 


புகைப்படம் - தி டெலிகிராப்

உயிர் காக்கும் வேலையை உடனடியாகச் செய்ததற்கு குடும்பத்தினர் செந்தொண்டர்களுக்கு நன்றி சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் வேறு யாருமில்லை, அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ரனாகாட் வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சாட்டர்ஜிதான். 

வாழ்த்துக்கள், செந்தொண்டர்களே...👋👋

Saturday, June 26, 2021

"கும்பல்" அல்ல, "கூட்டணி" - மக்கள் தீர்ப்பு

திடீர் ஞானோதயம் வந்து காஷ்மீர் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தையை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது.


புகைப்படம் - தி இந்து ஆங்கில நாளிதழ்

இந்தக் கூட்டத்தில் குப்கார் கூட்டணியும் கலந்து கொண்டது. இந்தக் கூட்டணியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குப்கார் கும்பல்" என்று கிண்டலாக அழைத்துக் கொண்டிருந்தார், அதோடு நிற்காமல் காஷ்மீருக்கு இவர்கள் "தேவையற்றவர்கள்" என்றார். இதன் தலைவர்கள் சிறைகளிலும், வீட்டுக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலர் 14 மாதங்களாகியும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

யார் இந்தக் குப்கார் கூட்டணி

2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வில் அதுவரையில் பார்த்தாலே தீட்டு என்பதைப் போன்று பிற எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்க்காமல் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா, பரூக் அப்துல்லாவைச் சந்திக்கிறார். அவர்கள் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே, 370வது பிரிவு நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பு ஆகஸ்டு 5, 2019 அன்று வெளியாகிறது.

அதற்கு ஒருநாள் முன்பாக, முக்கியமான அரசியல் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டு, பங்கேற்ற கூட்டம் பரூக் அப்துல்லா வீட்டில் நடந்தது. அதில் ஒரு உறுதிமொழி ஆவணத்தை நிறைவேற்றினார்கள். அதை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம் என்றும் முடிவெடுத்தனர்.

பரூக் அப்துல்லாவின் வீடு குப்கார் சாலையில் உள்ளது. அங்கு அமர்ந்து இந்த உறுதிமொழி ஆவணத்தை வெளியிட்டு உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு "People's Alliance for Gupkar Declaration" என்று  பெயரிட்டார்கள். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த வீட்டை 1970களின் துவக்கத்தில் ஷேக் அப்துல்லா விலைக்கு வாஙகியிருக்கிறார். 

வெற்றி

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் குப்கார் கூட்டணி வேட்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டதைத் தாண்டி மொத்தமுள்ள 280 வார்டுகளில் 100 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இந்த முடிவுகளுக்குப் பிறகுதான் "குப்கார் கும்பல்" என்று சொல்வது "குப்கார் கூட்டணி" என்ற வார்த்தை மாற்றத்தை ஏற்படுத்தியது. கும்பல் என்று சொல்லாதீர்கள், கூட்டணி என்று சொல்லுங்கள் என்று மக்கள் கட்டளையிட்டது போன்று இருந்தது.

இந்தக் கூட்டணிதான் இப்போதைக்கு நம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றிருப்பது நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.  தேசிய மற்றும் பிரதேச உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. மாநில அந்தஸ்து மற்றும் அதைத் தொடர்ந்து தேர்தல்கள் என்று அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் அவசியம். 

சூடு பிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்...

  



படம் நன்றி - india.com 2017 


ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று பஞ்சாப் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அடுத்த தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும். இன்னும் ஆறேழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுளள்து. 117 தொகுதிகள் உள்ள சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகளைப் பெற வேண்டும்.  


கடந்த தேர்தலின்போது காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகளும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் கூறின. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி மூன்றாமிடத்துத் தள்ளப்படும்  என்றுதான் அவற்றில் இருந்தது. அப்படித்தான் தேர்தல் முடிவுகள் இருந்தன என்று சொல்ல முடியாது. 

வெற்றி பெற்ற இடங்களின்(20) எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் சிரோமணி அகாலிதளம்தான் இரண்டாவது இடத்தில் இருந்தது. போட்டி நெருக்கமாக இருக்கும் என்று கணிப்புகள் சொன்னாலும் காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்தன.  

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முதலிடத்திலும், சிரோமணி அகாலி தளம் இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்நிலையில்தான் விவசாயிகள் மசோதா தொடர்பான பிரச்சனை எழுந்தது. இன்றும் கூட 200 நாட்களைத் தாண்டி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜகவோடு 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்திருந்த சிரோமணி அகாலி தளம், அதை முறித்துக் கொண்டது. முதலில் சிரோமணி அகாலி தளமும் விவசாயிகள் மசோதாவிற்கு ஆதரவு தந்தது. விவசாயிகளின் பெரும் எழுச்சியைப் பார்த்த பிறகு, விலகிக் கொண்டது. 

2021 பிப்ரவரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. இதில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலிலும் சிரோமணி அகாலிதளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 

தற்போதுள்ள நிலை 




படம் நன்றி - medium.com  


வரும் தேர்தல் மும்முனைப் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான சரிவைச் சந்தித்தாலும் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களைப் பெறும் என்று சொல்லப்படுகிறது.  விவசாயிகள் போராட்டத்தால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள பாஜக விரக்தியின் விளிம்பில் உள்ளது.  

முதலில் சறுக்கினாலும், விழித்துக் கொண்ட சிரோமணி அகாலி தளம் தனது தனிமையிலிருந்து வெளியில் வரும் முயற்சியில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, முக்கியமான அரசியல் சக்தியாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை அறிவித்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் முன் நிற்கும் இடதுசாரிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் தங்களுக்குதான் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. ஆனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல்வர் அமரிந்தருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் பதவிப் போராட்டம் நடக்கிறது. 



படம் நன்றி - The Quint 


தில்லி மேலிடம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. கோஷ்டிப் பூசலைக் கட்டுப்படுத்தாவிட்டால், வாக்குகள் திசை மாறுவது திண்ணம். 


(தொடரும், பின்னொரு நாளில்)