பி.இ. படித்த ஒரு பெண் குப்பை அள்ளுகிறார் என்ற செய்தி முதன்முறையாகக் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது.
Image courtesy : Lovepik
என்ன கொடுமை சார் இதுனு கேக்கக் தோணுதா...? பொதுவாக, நன்றாகக் படித்தவர்கள் வேலையின்மைக் கொடுமையால், கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வரும் செய்திகள் வெளியாவது வழக்கம். "உச்" கொட்டாமல் அது போன்ற செய்திகளைக் கடக்க முடியாது. உண்மையில் கொடுமைதான்.
ஆனால்...
வழக்கம்போல நடக்கக் கிளம்பினேன். அந்த நேரத்தில் எப்போதுமே தூய்மைப் பணியாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். நல்ல உடையுடன் ஒரு இளம்பெண் குப்பைகளைத் தள்ளிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதிக்கு அவர் புதியவராக இருந்தார். டீக்கடையில் வழக்கம் போல ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கதையைத்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
"இந்தப் பொண்ணு பி.இ. படிச்சுருக்கு"
இதைக் கேட்டவுடன் எனக்கு "சுருக்"கென்றது. ஆனால் அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் இருந்தது.
2019 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பினார்கள். பி.இ. படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கிறார்கள் என்று அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதில் பலருக்கும் வேலை கிடைத்தது. பி.இ. என்பதைத் தாண்டி, கூட்டி அள்ளுவதற்கு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் முன் வருகிறார்களே என்ற உணர்வுதான் முன்வந்தது. நல்ல விஷயம்தானே..?
துப்புரவுப் பணிக்கு ஏதோ அருந்ததிய சமூகத்தினர் நேர்ந்து விடப்பட்டது போன்றுதான் சமூகம் நடந்து கொள்கிறது. பிற சாதியினர் இந்தப் பணிக்கு வர விரும்புவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், அந்தப் பணிக்கு அனைத்துச் சாதியினரும் விண்ணப்பிக்கிறார்கள் என்ற செய்தி நன்றாகவே பட்டது.
பணி நியமனம் பெற்ற பிறகுதான், சாதிக் கொடூரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியில் அமர்ந்த பிற சாதியினர் 325 பேர் அலுவலகங்களில் கோப்புகளைக் கொண்டு போய்க் கொடுப்பது, தபால் பிரிப்பது, அதைக் கொண்டு போய்க் கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்தனர். துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை. பீ அள்ளுவதெல்லாம் அப்புறம். துடப்பக் கட்டையைக் கையால் கூடத் தொடவில்லை. அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்தனர்.
தொடர்ந்து புகார்கள் தரப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையரும் மாறினார். சமூக நீதிக்கட்சியின் புகார் சரியான நேரத்தில் ஆணையரின் மேஜையில் தஞ்சம் புகுந்தது. அதிரடியான உத்தரவு வெளியானது. துப்புரவுப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பப்பட வேண்டும். அலுவலகங்களில் இருந்து விடுவிக்கப்படட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துப்புரவுப் பணியைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதோ, தெருக்களில் பி.இ. படித்த பெண் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். பி.இ. படித்தவர் இந்த வேலையைச் செய்கிறார் என்பது அவலம்தான். ஆனால், சாதிப் பாரபட்சம் நீக்கப்பட்டதன் விளைவாக அவர் குப்பை அள்ள வேண்டி வந்தது, எந்த வேலைக்கு விண்ணப்பித்து, அதில் சேர்ந்தாரோ அந்த வேலையைச் செய்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. தீண்டாமையின் கொடூர வடிவங்களில் ஒன்று நீக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி...