Wednesday, July 21, 2010

நான் பிள்ளையார் பேசுறேன்....



வணக்கம். நான்தான் கோவை, சிங்காநல்லூர் பத்தாவது வட்டம் ஜீவா வீதில குடியிருந்த பிள்ளையார் பேசுறேன். இவ்வளவு நாள் மவுனமா இருந்த நான் பேசுறது அவசியம்னு நெனச்சுதான் வாயத் துறந்துட்டேன். 1989 ஆம் ஆண்டுங்குறது நல்லாவே நெனவுல இருக்கு... அப்பதான் நான் ஜீவா வீதிக்குள்ள வர்றேன். என்னக் கொண்டு வந்தவங்க உள்மனசுல என்ன இருக்குன்னு அப்போ என்னால படிக்க முடியல. என் முதுகுக்குப் பின்னாலதான் பல வேலைகள் நடந்துருக்கு...

கும்பிடறதுக்குதான் என்ன கொண்டு வந்தாங்கன்னு நெனச்சேன்... வந்த அன்னிக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுச்சு. அதெல்லாம் கொஞ்ச நாள்தான். பக்கத்து வீட்டம்மா மாட்டைக் கொண்டு வந்து கட்டுச்சு. அது சாப்புடுற அழக ரசிச்சேன்... நாக்கை சுழற்றி அசை போட்டது பிரமாதமா இருந்துச்சு.. சாணம் போட்டப்ப கூட இயற்கைதானே என்றுதான் மனதுக்குள் ஓடியது.

ஆனால் மாடுகள் நிரந்தரமாகக் குடியேறினப்பதான் அது அவங்களுக்கு சொந்தமான இடம். நான் வெறும் வாட்ச்மேன்தான்னு புரிஞ்சுது. என் முதுகுக்குப் பின்னால் என்ன செய்யுறதுன்னு தெரியாம திகைச்சு நின்னவங்கள ஒரு வேளை நான் திரும்பிப் பார்த்துருவனோன்னு பயந்து ஒரு பெரிய சுவரை எழுப்பிட்டாங்க. நான்கூட அது என்னுடைய பாதுகாப்புக்குத்தானோன்னு நெனச்சுட்டேன். ஆனா அது தீண்டாமைச் சுவர். பெரியார் நகர்ல இருக்குற அருந்ததிய மக்கள் தங்களோட வீதிக்குள்ள வந்துரக்கூடாதுன்னுதான் எனக்கு கோவில்.

முதல் விநாயகர் சதுர்த்தி வந்தப்ப கொஞ்சம் பரபரப்பாக இருந்தேன். ஆனா எந்த அசைவும் இல்லை. வழக்கம்போல மாடுகள் மட்டும் வந்தன. இப்படியே ஒவ்வொரு சதுர்த்தியும் கழிஞ்சுது. ஒண்ணுல்ல... ரெண்டுல்ல... 20 விநாயகர் சதுர்த்திகள் கழிஞ்சு போச்சு. என்னோட தரப்புல இருக்குறவங்க கண்டுக்கல. அந்தத் தரப்புல இருக்குறவங்க பாதையத் திறக்க என்னவெல்லாமோ பண்ணிப் பாத்திருக்காங்க. முடியல.

திடீர்னு ஒருநாள் ஏதோ மின்னுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது புகைப்படம் எடுக்குறாங்கன்னு. மறுநாளும் வந்தாங்க. முதல்நாள் இல்லாத மாடுகள் அப்ப இருந்துச்சு. சாணம் போட்டு அந்த இடத்தையே நாறடித்த நிலைய அவங்கள்லாம் பாத்தாங்க. அதயும் ஃபோட்டோ எடுத்தாங்க. இப்படிப் பாதை போக வேண்டுமே... ஆனால் இடையில் எப்படி கோவில் வந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். குறுக்கே புகுந்து சொல்ல வாய்நுனி வரைக்கும் வார்த்தைகள் வந்துருச்சு, இது கோவிலல்ல. மாட்டுத்தொழுவம்தான் என்று. கட்டுப்படுத்திக்கிட்டேன்.

ஆனா ரெண்டு, மூணு நாட்கள்ல ஒண்ணு புரிஞ்சுது. இவங்க ஏதோ வந்தார்கள்,, சென்றார்கள் மாதிரி ஆட்களல்ல. அவங்க பேச்சுலருந்து புரிஞ்சுது, ஏற்கெனவே பல மனச்சுவர்களையும், கல் சுவர்களையும் தகர்த்தவங்க இவங்கன்னு. எனக்காகவும் சில பேர் பரிஞ்சு பேசுனாங்க. அவங்கள்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்புகளச் சேந்தவங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.

ஜன.30. அரசு அதிகாரிகள் வந்தப்ப இவ்வளவு சீக்கிரமாவா நம்மை இந்த இடத்த விட்டு கூட்டிட்டுப் போயிருவாங்கன்னு நானும் மத்தவங்களப் போல நெனச்சேன். ஆனா இறங்குறப்பயே வந்த எல்லா அதிகாரிகள் கைலயும் பாத்தேன். தீக்கதிர்தான் இருந்துச்சு. அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சு அங்கு கூடுன பெரியார் நகர் மக்களும் ஒவ்வொருத்தர் கைலயும் தீக்கதிரோடதான் நின்னாங்களாம். தீக்கதிரோட முதல் பக்கச் செய்திதான் மந்திரமாக இருந்துருக்கு. ஜேசிபி எந்திரம் வந்துச்சு. முதல்ல என்னோட முதுகுப்புறந்தான் வந்து நின்னுச்சு.
நான் மாட்டுத் தொழுவத்துல மூக்கைப் பிடிச்சுட்டு உக்காந்திருந்தப்ப வராத சில பேரு அப்ப வந்து விநாயகர் மேல கை வெச்சுருவீங்களான்னு வாய்ச்சவடால் பேசுனாங்க. வந்தவங்களோட அடைமொழியக் கேட்டா எனக்கு சிரிப்புதான் வந்துச்சு... ஒருத்தரு எரியீட்டி, இன்னொருத்தரு ஸ்டோனு. அவங்க பாச்சா பலிச்சுரக்கூடாதுன்னு அப்ப வேண்டிக்கிட்டேன். யார்கிட்ட வேண்டிக்க முடியும்.. என்கிட்டயே வேண்டிக்கிட்டேன். சுவரைப் பாத்து ஜேசிபி எந்திரம் போனதுதான் தாமதம். ஏதோ அதுக்காகவே காத்துருந்த மாதிரி பொல, பொலன்னு சுவர் உதிர்ந்து போச்சு.

சுவரை எடுத்த ஜேசிபி நானிருந்த மாட்டுத் தொழுவத்தோட வளாகச் சுவர்களையும் தீண்டுச்சு. அடுத்து நான்தான்னு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு உட்காந்திருந்தேன். ஆனா ஜேசிபி பின்வாங்குச்சு. பேசிக்கலாம்னு கிளம்பிட்டாங்க. அச்சச்சோ... நம்மள விட்டுட்டாங்களேன்னு நெனச்சேன். ஆனா அதுக்கப்புறமும் ஒவ்வொரு நாளும் பாத்துட்டுப் போனாங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்காரங்க.

பிப்ரவரி 6. காலைல என்னோட முதுகுப்பக்கம் பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் தீக்கதிர் வாங்கிப் படிச்சுட்டுருக்குற சத்தம் கேட்டுச்சு. ஏதோ மார்க்சிஸ்ட் கட்சியோட மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் முதல்வருக்கு கடிதம் எழுதிருக்காருன்னு வாசிச்சாங்க. அப்பவே நெனச்சேன், இன்னக்கி ஏதாவது நடக்கும்னு. நெனச்ச மாதிரியே மீண்டும் ஜேசிபி.

என்னைத் தூக்க மாநகராட்சி ஊழியர் தொட்டப்ப ஏதோ சாப விமோசனம் கிடைச்ச உணர்வுதான். பெரியார் நகர் நோக்கி என்னை அவர் எடுத்துட்டுப் போனப்பதான் அவ்வளவு நாளும் எனது முதுகுப்புறத்துல இருந்தவங்கள பாக்க முடிஞ்சுது. என்னை ஆவலா பாத்தாங்களே ஒழிய, குத்துக்கல் மாதிரி இவ்வளவு நாள் எங்கள மறிச்சு உட்கார்ந்திருந்தாயேனு யாரும் பாக்கலை. அங்கருந்து என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வந்தவர் அருந்ததியர்னு பேசிக்கிட்டதும் என்னோட காதுல விழுந்துச்சு.

எனக்காக அருந்ததியர் சமூகத்தினர் செஞ்சு வெச்ச மேடைல ஜம்முனு உக்கார வெச்சாங்க. முறைப்படி எனக்கு எதெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சாங்க. பாதை கிடைத்ததோடு, போனசாக நானும் கிடைத்தேன்னு மக்கள் பேசுனாங்க. வழிவிட்டான் பிள்ளையார் என்று எனக்கு பெயரும் சூட்டிட்டாங்க. எனக்குமல்லவா சேர்த்து வழி பிறந்துருக்கு...