Friday, November 20, 2009

வாங்க... அரசு ஊழியராகலாம்...!

காலிப்பணியிடங்களை நிரப்புக, சம்பள விகிதத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். மத்திய சம்பளக் கமிஷனை அப்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுததுக என்றெல்லாம் முழக்கங்களை எழுப்பிவிட்டுக் கலைந்து செல்பவர்களாக அரசு ஊழியர் சங்கம் இல்லை என்று விருதுநகர் மாவட்டத்தில் வேலை தேடும் ஆண்களும், பெண்களும் பூரிப்போடு கூறுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர் சங்கத்தின் கட்டிடம் களைகட்டி விடுகிறது. சுமார் 500 பேர் ஒவ்வொரு வாரமும் தவறாது போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிக்காக வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

2006 ஆம் ஆண்டிலிருந்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் இதை நடத்தி வருகிறார்கள். தலைமைச் செயலக உதவியாளர்களுக்கான தேர்வுதான் இந்த சங்கத்தினருக்கு முதல் "தேர்வு". தேர்வு எழுதியவர்களைவிட வகுப்பு எடுத்தவர்கள் ஆவலோடு தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தார்கள். இந்த வகுப்பில் படித்தவர்கள் நான்கு பேர் தேர்வு பெற்றார்கள் என்ற செய்தி வெற்றி பெற்றவர்களைவிட அதிக மகிழ்ச்சியை அரசு ஊழியர் சங்கத்தினருக்கு பெற்றுத்தந்தது. அடுத்த போட்டித்தேர்வுக்கு கூடுதல் மாணவர்களைப் பெற்றுத்தந்ததோடு, இதோ நாங்களும் வகுப்புகள் எடுக்க வருகிறோம் என்று கூடுதல் ஆசிரியர்களையும் அழைத்து வந்தது.

வகுப்புகள் விருதுநகருக்கு சற்று வெளியேயுள்ள அரசு ஊழியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில்தான் வாராவாரம் வகுப்புகள் நடக்கின்றன. அண்மையில் வெளியான தொகுதி-2க்கான தேர்வு முடிவில் இந்த பயிற்சி மையத்திலிருந்து 60 பேர் தேர்வாகியுள்ளார்கள். கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 200 பேர் இங்கு பயிற்சி பெற்று அரசு ஊழியராகியுள்ளனர். கூட்டுறவுத்துறையில் சார்பதிவாளராக பணியாற்றும் போ.ரவீந்திரன் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் குழுவின் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். உங்கள் வகுப்பில் இவ்வளவு பேர் தேர்வு பெற்றிருக்கிறார்களாமே... வாழ்த்துக்கள் என்று யாராவது தொலைபேசியில் கூறினால், நன்றி.. என்ற வார்த்தையோடு நிறுத்துவதில்லை. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை விவாதிக்கத் தொடங்கி விடுகிறார். அவரோடு ஒரு பெரிய படையே இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.

லட்சுமணக்குமார், கந்தசாமி, சம்பத், லியாகத் அலி, ராமராஜ், முருகன், சவுந்திரபாண்டியன், வெங்கடேஷ், செல்வக்குமார், சந்திரசேகரன், ஸ்ரீதர், செந்தில்குமார் மற்றும் மாரிமுத்து என்று அந்தப்பட்டியல் செல்கிறது. இதில் கந்தசாமி, வெங்கடேஷ் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் இந்த அரசு ஊழியர் சங்கம் நடத்தும் வகுப்பில் கலந்து கொண்டு அரசு ஊழியர்களாகி, அடுத்த கட்டத்திற்காக படித்துக் கொண்டே ஆசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணி தலைமைச் செயலகத்தில் என்றாலும், வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு விருதுநகருக்கு வந்து வகுப்பு எடுக்கிறார்கள்.

வெளிமாவட்டங்களிலிருந்து வகுப்பில் பங்கேற்க வருபவர்களும் இருக்கிறார்கள். சனிக்கிழமை காலையில் வந்திறங்கி நேராக வகுப்புக்கு சென்று விடுவார்கள். அன்றிரவு உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கிவிட்டு ஞாயிறன்று வகுப்பில் பங்கேற்று அப்படியே சொந்த ஊருக்கு வண்டியேறி விடுகிறார்கள். இது வாராவாரம் தொடர்கிறது. இவ்வளவு பேரையும் உட்கார வைக்கும் அளவுக்கு சங்கத்தின் கட்டிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்கட்டிடத்திற்குப் பின்பும் ஒரு அர்ப்பணிப்பு இருப்பதை சங்கத்தினர் சொல்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியபோது பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சங்கத்தின் சார்பில் மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டு ஊதியம் கிடைத்தபோது, சங்கம் வழங்கிய உதவித்தொகையைத் திருப்பித்தருவது என்று அரசு ஊழியர்கள் முடிவெடுத்தார்கள். அதில் கணிசமான நிதி வந்ததால் கட்டிடத்தைக் கட்டி விடலாமே என்று வேலையைத் துவங்கிவிட்டார்கள். ஒரே நேரத்தில் மேல்தளத்தில் 500 பேர், கீழ்த்தளத்தில் 500 பேர் அமர்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தக்கட்டிடம் வளர்ந்து நிற்கிறது.

தொகுதி-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமானது தங்களது உரிமைகளுக்கு மட்டும் போராடாமல் சமுதாய நோக்கோடு பல்வேறு பயனளிக்கும் ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று மேடையிலேயே தனது பாராட்டைத் தெரிவித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இயங்கினாலும், அர்ப்பணிப்பு உணர்வோடு இலவசமாக இந்தப் பயிற்சியை அரசு ஊழியர் சங்கம் நடத்துகிறது. இதுபோன்று பழநி ஆயக்குடி மக்கள் மன்றமும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை தொடர்ந்து தருகிறது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் ஒரே கிராமத்தில் 50 பேருக்கு மேல் அவர்கள் நடத்திய வகுப்புகளிலிருந்து தேர்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் தயாராகிவருகிறது. பயிற்சிக்கான நிரந்தர மையம் என்ற இலக்கை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மக்களை நோக்கி என்பதுதான் அரசு ஊழியர் சங்கத்தின் முழக்கம். விருதுநகரைச் சேர்ந்த சங்கத்தினர் அந்தப் பாதையில் ஏற்கெனவே நடைபோடத் துவங்கிவிட்டார்கள்.

3 comments:

  1. பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
    “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

    ReplyDelete
  2. It is very encouraging to read such welfare minded activities. Kudos to all those who are involved in the noble effort and thanks to you for bringing it to light.

    ReplyDelete
  3. Still some good of kind of gov staffs are there this is an best example. i appreciate a lot.we hope so many youths will get a brightful future through this way. why its only for viruthunagar others also try this then only people will belive you. By taking viruthunagar as a lead every govt staff union has to start these type of courses. you can do it. You become a powerful teeam in future again i wishes those group who are taking classes. All the best keep continue success is not far away. Ur work will be come to brightness one day.

    ReplyDelete