Friday, December 19, 2008

ஷு...ஷு...ஜார்ஜூ.. ஷு...ஷு...ஜார்ஜூ





பொம்மலாட்டம்


விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள் போன்ற பொம்மைகளை வைத்து நாயகர்கள் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் பந்தாடி விளையாடுகிறார்கள். இவர்களுக்கு எதிர் கோஷ்டியான அத்வானி, ராஜ்நாத்சிங், இவங்கள வெச்சு நாங்க ஆடாத ஆட்டமா... அது மாதிரிலாம் உங்களால முடியுமா என்கிறபோது, நாயகர்களுக்கு கோபம் வந்து, பொம்மைகளை உலுக்கி எடுத்து விடுகிறார்கள். இருவரின் ஆட்டமுமே முடிவுக்கு வந்துவிடுவது போன்ற நிலை ஏற்படுகிறது. அப்போது , எங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. நாங்களே தோற்கடித்துக் கொள்வோம் என்று அத்வானி கோபத்தில் பேசும்போது தியேட்டர் கலகலக்கிறது. கிளைமாக்சில்தான், இந்த இரண்டு கோஷ்டிகளும்கூட பொம்மைகள்தான் என்று தெரிகிறது. இவர்களை ஆட்டிவைப்பது யார் என்பதை படம் தெளிவாக சொல்லாவிட்டாலும், அமெரிக்க தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறப்பதை காட்டியவாறு படத்தை முடிக்கிறார்கள்.

----------------


தெனாவட்டு


"ராமசாமி தெருவில் அப்துல்லா கால் வைத்து விட்டார்" என்று கூறி ஊரையே கொளுத்துகிறார்கள் வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தளக் குண்டர்கள். ராமசாமி தெரு என்பதே அந்த ஊரில் இல்லை என்ற விபரமும் தெரிய வருகிறது. ராமசாமி தெருவில் அப்துல்லா நடந்தால் என்ன என்று கேட்கிறவர்களிடம், நீங்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று குண்டர்கள் கூட்டத்தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டுகிறார். கவரவ வேடத்தில் கிருஷ்ணர் நடித்துள்ளார். கொலை வெறித்தாக்குதல் நடக்கும்போது தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். "ரொம்பப் பேசினா போட்டுத் தள்ளிருவேன்" என்று ஒரு குண்டர் மிரட்டுகிறார். "மக்கள் உன்ன சும்மாவா விடுவாங்க" என்று கிருஷ்ணர் கேட்கிறபோது, "நானா கொன்னேன்னு சொல்வேன்... உன்னைய கொன்னுட்டு பக்கத்துல பச்சைக்கலர் தொப்பியப் போட்டுட்டு ஓடிருவேன்ல" என்ற பதிலைக்கேட்டு அதிர்ந்து போய்க் கிளம்புகிறார் கிருஷ்ணர். படத்திற்கான இசையை நரேந்திர மோடி அமைத்துள்ளார்.


------------


எல்லாம் அவன் செயல்


தாமரை மூவிசாரின் தயாரிப்பில் இல.கணேசன் நடித்துள்ள படம். வேறு யாராவது இயக்கினால் பாதிப்படத்திலேயே தனது நாயகன் ரோல் பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தால் அவரே இயக்கியுள்ளார். துணைக்கு ஆள் இல்லை என்றவுடன், எல்லாம் அவன் செயல் என்ற வசனத்தைப் பேசுகிறார். "அவன்" என்ற வார்த்தையைக் கூறும்போது நற, நறவென்று அவர் பல்லைக் கடிக்கும் காட்சி மிகவும் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில், எனக்கு ராமர் இருக்கிறார், அனுமார் இருக்கிறார் என்றெல்லாம் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கையில் யாராவது துணைக்கு வருகிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்ப்பதை கேமரா குளோஸ் அப்பில் படம் பிடித்துள்ளது அபாரம். "துன்பம் வரும் வேளையில சிரிங்க" என்ற பழைய மாடல் ரீ மிக்ஸ் ஆகியுள்ளது. காட்சிக்கு பொருத்தமான இடத்தில் இந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள்.


--------------------


பூ


வன்முறை நிறைந்த காதல் படம். புஷ்சின் இராக் மீதான காதல் ஒருதலைக்காதலாகவே நகருகிறது. தனது காதலை எதிர்ப்பவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுகிறார். புஷ்சுக்கு எதிராக கிளம்புகிறர்வர்கள் ஷூவைக் கையில் எடுக்கிறார்கள். ஒருமுறை ஷூவால் அடி வாங்கிய அவர், அதற்குப் பிறகு அதைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கும் காட்சிகளில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். ஷூ தட்டுப்படும்போது அது என்ன நம்பர் என்ன என்பதைக் குறித்து வைத்துக்கொள்கிறார் நாயகன் புஷ். ஒரு கட்டத்தில் நொந்து போய், "எனது காதல் தவறோ" என்று புஷ் புலம்பும் காட்சி பார்ப்பவர் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தாமல் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. "ஷு... ஷு...ஜார்ஜூ, ஷு... ஷு... ஜார்ஜூ" என்ற பாடல் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறது. நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று, முதலில் படத்திற்கு ஷு என்றே பெயர் வைத்திருந்தார்கள். வரிச்சலுகைக்காக தலைப்பை மாற்றி விட்டார்கள்.
-------------

Friday, December 12, 2008

புகைக்க புகைக்க லாபம்!

என்னப்பா! புதிர் போடுறே!


அண்ணே! "மூன்றாவது தேசிய உடல் நல ஆய்வு" ஒன்றின் விவரங்களை ஜுன் மாதம் "பிசினஸ் வேர்ல்ட்" இதழில் போட்டிருந்தாங்க. இந்தியாவில் ஒரு வருசத்துல ஊதப்படுகிற பீடிகள் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடிகளாம். அதாவது சராசரியா ஒரு குடிமகன் வருசத்துக்கு 982 பீடிகளை ஊதித் தள்ளுகிறானாம்...


அடேயப்பா! சிகரெட்டு வேற இருக்கே!


ஆமாண்ணே! நீங்களெல்லாம் அந்தக் கணக்குலதானே வர்றீங்க. 11000 கோடி சிகரெட்டுகள் ஒரு வருசத்துல புகையாப் போகுதாம். இது கம்பெனி சிகரெட்டுகள்தான். 900 கோடி போலி சிகரெட்டுகள் வேற உலா வருதாம்.


சரிண்ணே! சட்டையிலே என்ன கறை?


இல்லப்பா யாரோ புகையிலை துப்புற போது சட்டையில தெரிச்சிச்சு!
நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க. புகையிலையும் 60,000 கோடி ரூபாய்க்கு ஒரு வருசத்துல விற்பனையாகுதாம். சரி பாதி ஆண்களுக்குப் புகையிலை பழக்கம் இருக்குதுன்னு அந்த சர்வேயில சொல்லியிருக்காங்க…...


பெண்களுக்குப் புகையிலைப் பழக்கம் குறைவாக இருக்குமோ!


ஆண்களை ஒப்பிடும் போது பெண்களிடம் இந்தப் பழக்கம் குறைவுதான்... 11 சதவீத பெண்கள் கிட்ட புகையிலை பழக்கம் இருக்குதாம்.


சில பேரு சிகரெட் குடிக்கிறதில்லை ... ஆனா தண்ணி அடிக்கறாங்களே!...


ஆமாம் 35 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகுதாம். 22 கோடி கே° கள்ளு வேறு உள்ளே போகிறதாம்.


உங்கிட்ட பேசிட்டுப் போனாலே நைட்டு கனவுல வெறும் நம்பரா வருதேப்பா!


ஆமாம்! ஒரு நாளைக்கு 37 கோடி ரூபாய்களை லாட்டரியிலும், 4 கோடியை குதிரை ரேஸிலும், 13 1/2 கோடியை சூதாட்டத்திலும் விடுறாங்களே!


என்னப்பா! இப்படியே குடியிலும், சூதாட்டத்திலும் பல குடும்பங்கள் அழிஞ்சு போயிடுமே!


ஏம்ப்பா! சூதாட்டம்தான் பொருளாதாரம்னு ஆனதாலே பெரிய பெரிய கம்பெனிகளே தள்ளாடித் தள்ளாடி விழுது. நம்ம பங்குச் சந்தை 10000 சென்செக்ஸ் புள்ளிகளைத் தொட முடியாமே கால்கள் பின்னிப் பின்னி விழுந்துக்கிட்டிருக்கு... அரசாங்கமே சூதாட்டங்களை ஊக்குவிக்கும் போது யாருக்கு, யார் அட்வைஸ் பண்றது.


அது சரிப்பா! பீடி, சிகரெட்டுக்கே நம்ம நாட்டுல இவ்வளவு பெரிய சந்தை இருக்குதேப்பா!


ஆமாம்! மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிற சந்தை... இந்தியாவோட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கு. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் அமோக லாபம் தான்.
நம்ம ஏதோ வெத்திலை, பாக்குக் கடைன்னு சாதாரணமா நினைக்கிறோம் ...


ஆனா அது இவ்வளவு பெரிய தொழிலா இருக்கே!


ஆமாண்ணே! "பிசினஸ் வேர்ல்ட்" இந்த சர்வேயை வெளியிட்டு அக்கட்டுரைக்கு வைச்சிருக்கிற தலைப்பு என்ன தெரியுமா? "பாவத் தொழிற்சாலை"


தம்பி, சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, மதுபானத்துக்கு கூட அந்தப் பெயர் சரிதான் ... பீடி சிகரெட்டை அந்த லி°டுல சேர்க்கக் கூடாதுல்ல


சாரிண்ணே! ரொம்பப் புண்பட்டுட்டிங்க போல இருக்கு. பீடி, சிகரெட்டெல்லாம் பாவப்பட்டவங்களும் ரொம்ப பேர் பிடிக்கிறாங்க... உடம்புக்கு கெடுதியில்லாமப் பாத்துக்க வேண்டியது தான்.


- அருண் பாரதி

Wednesday, December 10, 2008

ரஜினியைச் சீண்டும் இல.கணேசன்!

ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்று பாஜகவினர் அவர்களாகவே பத்திரிகைகளுக்கு சொல்லி வந்தனர். அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. "சினிமாவில் அதிக ஆர்வமுள்ள" எல்.கே.அத்வானி நேரிலேயே சென்று ரஜினிகாந்தைச் சென்று சந்தித்தும் பலனில்லாமல் போய்விட்டது.

இடதுசாரிக் கட்சிகளுடன் அதிமுக தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ளப்போகிறது என்று முடிவானதிலிருந்து தமிழக பாஜகவினரின் பதற்றம் அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பை இடதுசாரிக்கட்சிகள் உருவாக்கியுள்ளன என்று வடஇந்தியப் பத்திரிகைகள் எழுதத் துவங்கியுள்ளன.

தேமுதிகவுடன் சேருவோம், உறவு குறித்து முடிவு செய்யப்போகிறோம் என்றெல்லாம் வரிசையில் யாருமே காத்திராமலேயே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்கோபத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் மீதும் பாய்ந்துள்ளார். "பாஜவுக்கு ஆதரவாக ரஜினி வாய் கொடுக்கலாம். அதற்கு ஆண்டவன் அவருக்கு கட்டளையிட வேண்டும்" என்று நக்கலாக அவரை சீண்டியுள்ளார்.

அதோடு நில்லாமல் ராமனும், அனுமனும் எங்களோடு துணை நின்றால் போதும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். இவர் இந்தியாவின் தென் கோடியில் நின்று கொண்டு இதைச் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையில், டில்லி சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின்போது 'சேதுசமுத்திரத்திட்டத்தை வரவிடமாட்டோம்' என்று கூறியதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இது மதரீதியான பிரச்சாரம் என்று நறுக்கென்று குட்டு வைத்துள்ளது. யாருமே கிடைக்காததால்தான் ராமனும், அனுமனும் போதும் என்று ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட வேண்டாம் என்று கருதி ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. தங்கள் வாழ்வில் ஒருபோதும் விலையைக் குறைத்ததேயில்லை என்பதால் இதற்கு எதிராகவும் பாஜக குதிக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கடுமையான விலை குறைந்துள்ளபோது, இந்த விலைக்குறைப்பு போதாது மக்கள் குரல் எழுப்பிவரும் வேளையில் விலையைக் குறைத்திருக்கக்கூடாது என்கிறார் இல.கணேசன்.

அதிகாரப்பசி எந்த அளவுக்கு மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு உதாரண புருஷர் என்ற பட்டத்தை விரைவில் இல.கணேசன் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

அடிதடிக்கு பரபரப்பு;பூ தந்தால் புறக்கணிப்பா?


சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி உள் ளிட்ட அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் புதனன்று தேர்வுகள் துவங்கின.


பெரும்வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகமே அதைப்பார்த்து அதிர்ந்து போன சூழலில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகள் தற்போது துவங்கியுள்ளன.
கல்விக் கூடங்கள் சமத்துவத்தின் இருப்பிடங்கள், அங்கு சாதியச் சிந்தனைக்கோ, வெறிக்கோ, வன்முறைக்கோ இட மில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி இயங்கிவரும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென் னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதவந்த அனைத்து மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். மாணவர்களிடையே, ஒற்றுமை உணர்வு வலுப்படட்டும் என்ற முழக்கத்துடன் நடந்துள்ள இந்த நிகழ்வை படம் பிடிக்க எந்த டி.வி. கேமராவும் வர வில்லை. தீக்கதிர் தவிர, எந்த பத்திரிகையிலும் மீடியாவிலும் இப்படியொரு வரவேற்பு நடந்ததாகக்கூட பதிவாகவில்லை.


இதே பத்திரிகைகளும், 24 மணிநேர செய்தி சேனல் களும்தான், சட்டக்கல்லூரி மாணவர்களின் கொடிய வன் முறையை இடைவிடாமல் ஒளிபரப்பிக்கொண்டே இருந் தன. தமிழகத்தையே பெரும் பீதிக்குள்ளாக்கின.
வன்முறையை திரும்பத்திரும்ப ஒளிபரப்பிய மீடியாக் கள், அதே கல்லூரியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் மாணவர் சங்கத்தின் சீரிய முயற்சியை ஒளிபரப்பவில்லை.


இதுதான் வன்முறையை காசாக்கத் தெரிந்த முதலாளித் துவ மீடியாக்களின் பத்திரிகை தர்மம்!

- எஸ்.பி.ராஜேந்திரன்

Tuesday, December 9, 2008

அமெரிக்க நெருக்கடி

நவ.5 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் வேலையற்றோர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது. இவ்வளவு வேகமாக இந்த எண்ணிக்கையை எட்டி விடுவார்கள் என்று யாரும் கணிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையிழப்புகள் ஏற்பட்டதால் வேலையற்றோரின் எண்ணிக்கை பாய்ச்சல் காட்டி அதிகரித்துள்ளது. இன்னும் சுமார் ஒன்றரை மாதத்தில் பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்குதான் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகிறது.கடந்த டிசம்பர் மாதமே அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கி விட்டது. இதையும் திட்டமிட்டே மறைத்து விட்டார்கள். இது ஏதோ ஜூலை, ஆகஸ்டில்தான் துவங்கியது என்பது போன்ற தோற்றத்தை முதலில் உருவாக்கினார்கள். இந்த மோசடி வேலை நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. முதலில் வங்கித்துறை மட்டும்தான் என்றார்கள். பிறகு நிதி நிறுவனங்கள் சரிந்தன. அதற்குப்பிறகுதான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே சரிந்ததோடு மற்ற நாடுகளையும் பாதித்தது.இதன் தாக்கத்தால் அமெரிக்காவிலுள்ள பல அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. சேவைத்துறையில் மட்டும் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலை நீக்கத்திற்கான அரக்கு வண்ணக்கடுதாசிகளோடு நிறுவனங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். உற்பத்தித்துறையில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேரின் வேலை பறி போயுள்ளது. 1930களில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடுத்து தற்போதுதான் இவ்வளவு பெரிய சிக்கல் என்று கூறி வந்தவர்களின் வார்த்தைகள் தற்போது நடுக்கத்துடன் வெளிவருகிறது. அதையும் மிஞ்சிவிடுமோ என்பதுதான் அதற்குக் காரணம். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 6.7 சதவீதத்தை அடைந்துள்ளது.2009ல் இது 8.7 சதவீதமாகவும், 2010ல் 9.8 சதவீதமாகவும் எகிறப்போகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை உள்ள அனுபவமே, நிபுணர்களின் கணிப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டவையாக இருந்துள்ளன என்பதுதான். மீட்புத்திட்டங்கள் நிறுவனங்களுக்கு உதவும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு உதவுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தங்கள் நிறுவனங்களும் மீட்புத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆட்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டு போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரக் ஒபாமா, பிரச்சனையை சமாளிக்க ஒட்டுவேலை எதையும் உடனடியாக செய்துவிட முடியாது என்று பொதுப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார். தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கிக் கொண்டே போகும் என்று பொருளாதார நிபுணர் ரியான் ஸ்வீட் கூறுகிறார். இதனால் வாங்கும் சக்தி பெரிய அளவில் அடிவாங்கும் என்றும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே மேலும் 5 சதவீத வீழ்ச்சி அடையும் என்று வாசோவியா வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உதவுங்கள் என்ற அட்டைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு பிச்சைக்காரர்களாக சாலையோரம் உட்காருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தப் புள்ளிவிபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அது வரும்போது நிச்சயம் அதிர்ச்சியாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.