Monday, July 20, 2009

பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?



பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?


பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கப்போகிறார் என்றவுடனேயே நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பரபரப்படைந்தனர். வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு தரப்போகிறார் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. ஊடகங்களும் அவர்களின் ஊகங்களுக்கு தீனி போட்டன. பட்ஜெட்டும் வந்தது. பரபரப்பும் அடங்கியது.மறுநாள் பத்திரிகைகளைப் பார்த்தவர்களுக்கு குழப்பம்.


இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று பெரிய, பெரிய பொருளாதாரப் புலிகளெல்லாம் கூறியிருந்தன. ஆனால் விபரமாகப் பார்த்தால் புலிகளெல்லாம் தாங்கள் அனைவரும் சைவம் என்று சத்தியம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் பொருளாதாரப் புலிகளின் கருத்துகளும் அமைந்தன.ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா பத்தாயிரமும், மூத்த குடிமக்களுக்கு பதினைந்தாயிரமும் வரம்பில் ஏற்றப்பட்டது. ஆனால் அதிக வருவாய் பெறுபவர்களுக்குத்தான் பெரிய ஆதாயம் என்பது அவர்களுக்கு எவ்வளவு சேமிப்பாகிறது என்ற கணக்கில் அம்பலமாகியுள்ளது.


2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவருக்கு பட்ஜெட் அறிவிப்பில் 1,300 ரூபாய் லாபம் என்றால் 25 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரோ 88 ஆயிரம் வரையில் லாபத்தை எடுத்து செல்கிறார். பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டியவர்கள் மேல் இருந்த பத்து சதவீதக் கூடுதல் வரியும்(சர்சார்ஜ்) நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் காட்டில் மழைதான்.


வீட்டுக்கடன் வாங்கியிருக்கோமே... அந்த வட்டிக்கான வரிச்சலுகையாவது உயர்ந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்து விட்டார்கள் நடுத்தர மக்கள். அதிலும் ஏமாற்றம்தான் மிச்சம்.

No comments:

Post a Comment