Tuesday, December 9, 2008

அமெரிக்க நெருக்கடி

நவ.5 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் வேலையற்றோர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது. இவ்வளவு வேகமாக இந்த எண்ணிக்கையை எட்டி விடுவார்கள் என்று யாரும் கணிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையிழப்புகள் ஏற்பட்டதால் வேலையற்றோரின் எண்ணிக்கை பாய்ச்சல் காட்டி அதிகரித்துள்ளது. இன்னும் சுமார் ஒன்றரை மாதத்தில் பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்குதான் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகிறது.கடந்த டிசம்பர் மாதமே அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கி விட்டது. இதையும் திட்டமிட்டே மறைத்து விட்டார்கள். இது ஏதோ ஜூலை, ஆகஸ்டில்தான் துவங்கியது என்பது போன்ற தோற்றத்தை முதலில் உருவாக்கினார்கள். இந்த மோசடி வேலை நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. முதலில் வங்கித்துறை மட்டும்தான் என்றார்கள். பிறகு நிதி நிறுவனங்கள் சரிந்தன. அதற்குப்பிறகுதான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே சரிந்ததோடு மற்ற நாடுகளையும் பாதித்தது.இதன் தாக்கத்தால் அமெரிக்காவிலுள்ள பல அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. சேவைத்துறையில் மட்டும் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலை நீக்கத்திற்கான அரக்கு வண்ணக்கடுதாசிகளோடு நிறுவனங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். உற்பத்தித்துறையில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேரின் வேலை பறி போயுள்ளது. 1930களில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடுத்து தற்போதுதான் இவ்வளவு பெரிய சிக்கல் என்று கூறி வந்தவர்களின் வார்த்தைகள் தற்போது நடுக்கத்துடன் வெளிவருகிறது. அதையும் மிஞ்சிவிடுமோ என்பதுதான் அதற்குக் காரணம். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 6.7 சதவீதத்தை அடைந்துள்ளது.2009ல் இது 8.7 சதவீதமாகவும், 2010ல் 9.8 சதவீதமாகவும் எகிறப்போகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை உள்ள அனுபவமே, நிபுணர்களின் கணிப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டவையாக இருந்துள்ளன என்பதுதான். மீட்புத்திட்டங்கள் நிறுவனங்களுக்கு உதவும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு உதவுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தங்கள் நிறுவனங்களும் மீட்புத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆட்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டு போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரக் ஒபாமா, பிரச்சனையை சமாளிக்க ஒட்டுவேலை எதையும் உடனடியாக செய்துவிட முடியாது என்று பொதுப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார். தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் சுருங்கிக் கொண்டே போகும் என்று பொருளாதார நிபுணர் ரியான் ஸ்வீட் கூறுகிறார். இதனால் வாங்கும் சக்தி பெரிய அளவில் அடிவாங்கும் என்றும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமே மேலும் 5 சதவீத வீழ்ச்சி அடையும் என்று வாசோவியா வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உதவுங்கள் என்ற அட்டைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு பிச்சைக்காரர்களாக சாலையோரம் உட்காருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தப் புள்ளிவிபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அது வரும்போது நிச்சயம் அதிர்ச்சியாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

No comments:

Post a Comment