Tuesday, January 20, 2009

நேர்மையான எம்.பிக்கள்!



நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவு பெறும் வேளையில் சில நேர்மையான உறுப்பினர்களை தி சண்டே இந்தியன் பத்திரிகை(ஜன.21) பட்டியலிட்டுள்ளது. இடதுசாரிக்கட்சிகளின் உறுப்பினர்களான ஹன்னன் முல்லா, பி.மோகன்(சிபிஎம்), குருதாஸ்தாஸ் குப்தா(சிபிஐ) ஆகியோர் உள்ளிட்ட சிலர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


பி.மோகன் பற்றி கீழ்க்கண்டவாறு அப்பத்திரிகை எழுதியுள்ளது.


"முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய பெண் பாரதி.
புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள் முதல் பக்க புகைப்படமானது.


டில்லியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நடந்து செல்வதைப் பார்க்கலாம். மூன்று முறை தேர்தலில் தோல்வியுற்று, 1999 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பி.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தில் தனது பணியை 1973 ஆம் ஆண்டு துவக்கினார். கடந்த சில ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மதுரைக்காரர்கள் சொல்லி வருகிறார்கள்.


மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.
கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.


மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.


யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.