Tuesday, July 28, 2009

திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!



அடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


வங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.


ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.


சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.

ஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Sunday, July 26, 2009

பழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,



பாட்டு வரும்...பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்..

அமெரிக்க வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு மன்மோகன்சிங் பாடுவதாகத்தான் பாடல் துவங்குகிறது. ஆனால் அவருடைய கைகளோ புஷ், ஒபாமா, ஹிலாரி ஆகியோர் கைகளில் இருக்கும் ஆவணங்களில் கையெழுத்து இட்ட வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்திய வரைபடத்தை "சுருட்டுவது" போன்ற காட்சியும் அருமை.


**************


மாணிக்கத்தேரில் மரகதக்கலசம் மின்னுவதென்ன...


தோற்றுப்போய்விட்டோம் என்ற கவலையே இல்லாமல் தேரில் கிளம்பும் அத்வானி உற்சாகமாகப் பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மரகதக்கலசம் என்ற வரி வரும்போதெல்லாம் பழைய துணியால் மறைக்கப்பட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியாதலால் பிரதமர் என்று அந்த இடத்தில் எழுதி வைத்திருந்தார்கள். கிழிசலுக்கிடையில் அது தெரியத்தான் செய்கிறது. தேரின் பாதையில் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, அருண்சோரி ஆகியோரின் வீடுகள் வரும்போது அத்வானி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காட்சி தத்ரூபமாகப் படமாகியுள்ளது.


**************


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...


முகேஷ் அம்பானி தலைமையில் முதலாளிகள் கூட்டம் குத்தாட்டம் போடுகிறது. அமர்சிங் இல்லாததால் ஒரு மூலையில் அனில் அம்பானி தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க மெட்டுக்கு ஆடுவதில் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். என்னடா இவங்க ஆடலையேன்னு பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும்பினால், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வேலையில் இருப்பது தெரிகிறது. பாட்டுக்கான மெட்டை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களின் அசைவிலிருந்து தெரிகிறது.


**************


மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...


இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பாடலைப் பாடுகிறார்கள். பொதுத்துறையை மாடாக உருவகப்படுத்தி கூறுகிறார்கள். பாடலுக்கு நடுவில் காங்கிரஸ்காரர்கள் மாட்டைக்கவருவதற்காக வருவதும், பாத்தியா உன்னால திருட முடியலை... நாங்க வந்திருந்தா இந்நேரம் திருடியிருப்போம் என்று பாஜக சொல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. கூடவே வரும் திமுககாரர்கள் எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் போயிராதீங்கன்னு கமுக்கமா சொல்றது பாடல் வரிகளை மீறி நமது காதுகளில் விழுகிறது.


**************


ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...


நாட்டு நிகழ்வுகளைப் பார்த்து தேசபக்த அக்கறையுடன் ஒரு தாய் இந்தப்பாடலைப் பாடுவதாக படமாகியுள்ளது. நியாயத்துக்குப் போராடும் மாணவர்கள், தொழிலாளர்கள் தடியடி வாங்கி சுருண்டு விழும் காட்சிகளின்போது அந்தத்தாய் விடும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்களிலும் நீரை வரச்செய்கிறது. இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக சில வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியாயத்திற்குப் போராடியும் உனக்கேன் இந்த குண்டாந்தடியடி என்ற அந்த வரிகளுக்குப்பிறகு, மீண்டும் ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ என்று துவங்கும்போது தியேட்டரே கண்ணீரில் மிதக்கிறது.


**************


தனிமையிலே இனிமை காண முடியுமா...


இப்பாடலை டி.ஆர்.பாலு பாடுகிறார். பதவியுடனேயே இருந்துவிட்ட அவரால் அதைப்பிரிந்து வாடும் சோகத்தை அப்படியே முகபாவனைகளில் கொண்டு வந்து விட முடிகிறது. வெளியிலிருந்து ஆதரவுன்னு என்ன வெச்சு சொல்ல வெச்சாங்களே... அப்பவே முழிச்சுகிடலை... கட்சி கிடையாது... நான்தான் வெளியிலருந்து ஆதரவு தரப்போறேன்னு தெரியாம கடுகடுன்னு முகத்தை வெச்சுகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்தேனே... என்று பாடலுக்கிடையில் அவர் சோக வசனம் பேசுவதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் கைதட்டலை அள்ளுகின்றன.


**************


கல்வியா.. செல்வமா... வீரமா...


வீராவேசத்துடன் பாடல் துவங்கினாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டேயிருக்கிறது. பாடலின் நிறைவுப்பகுதி அந்த நெருடல் உண்மை என்று நிரூபிக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் வந்துள்ள பாடலின் கடைசி வரிகள் இந்த மூன்றை விட மின்வெட்டே பெரியது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிய வைக்கின்றன. அந்த வரிகளின்போது ஆர்க்காட்டார் கம்பீரமாக நடந்து வரும் காட்சி அற்புதம். பாடலின் நடுவில் பெண்கள் மின்கம்பத்தைச் சுற்றிவந்து வணங்குவது போன்ற காட்சி நன்கு படமாக்கப்பட்டுள்ளது.

Saturday, July 25, 2009

மூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா?



1983 ஆம் ஆண்டு. திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்தியக்குடியரசுக்கட்சி போன்ற மாநிலக்கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. மாநிலங்களுக்கு நிதி சுயாட்சி தேவை என்பது இந்த மாநாட்டின் முக்கியக்கருத்தாக இருந்தது. இந்தக்காலகட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.

தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இதே கட்சியின் நிதியமைச்சர் க.அன்பழகன், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து போர்க்குரல்கள் எழுப்பிய காலம்போய் இப்போது வெறும் கவலை தெரிவிப்பதோடு திமுக நிறுத்திக் கொள்கிறது.

மாறியுள்ள காலகட்டத்தில், அதுவும் மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் ஆட்சியே அமையாது என்றிருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்iவைக்க முடியும். சந்தையிலிருந்து பெறும் கடனில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பங்கு தற்போது 20:80 சதவீதமாக உள்ளது. ஆனால் 1950களில் 50:50 சதவீதமாக இருந்தது. இந்த சதவீதத்தை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது என்றும் அன்பழகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் தொடர்ந்து இக்கோரிக்கையை உரக்க எழுப்புகின்றன. திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். அதுதான் பேச வேண்டிய இடம். சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் அன்பழகனின் கவலைக்குரல், மத்திய அமைச்சரவையில் உரிமைக்குரல்களாக மாறினால்தான் பலன் கிடைக்கும். இது மூத்த அரசியல்வாதிக்கு தெரியுமல்லவா?

Friday, July 24, 2009

நெருக்கடியா... யாருக்கு..??




பொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.


ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இழப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.


உலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.

Wednesday, July 22, 2009

விடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...?!





சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள நெய்யமலை மற்றும் மன்னூர் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுதலை கிடைத்து 62 ஆண்டுகள் ஆகியும் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்பது அந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.


நெய்யமலை : நெய்யமலை அதை சுற்றியுள்ள அக்கரப்பட்டி, ஆலங்கடை ஆகிய மலை கிராமங்களில் சுமார் 1,300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். 653 பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். சேலத்திலிருந்து கருமந்துரை செல்லும் பிரதான தார் சாலையில் அக்கரப்பட்டி வரை செல்லலாம். அடர்ந்த காடுகள் வழியே 6 கிலோ மீட்டர் வரை சென்றால் நெய்யமலை அடிவாரம் வரும். அதன் பின் சுமார் 8 கிலோ மீட்டர் மூன்று மலைகளை கடந்து மலைப்பாதை வழியாக சென்றால் நெய்யமலை கிராமம் வரும்.


இக்கிராமத்திற்கு செல்ல மலைவாழ் மக்களே உருவாக்கிய மலைப்பாதைதான் உள்ளது. மழைக்காலங்களில் விளையும் உணவு தானியமும், ரேஷனில் கிடைக்க கூடிய பொருட்களும் தான் இம்மக்களுக்கு உணவாகும். ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரை தேக்கி வைத்து. துணியால் வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் உள்ளனர். மின்சாரம் என்பதை இதுவரை அந்த மக்கள் பார்த்ததே இல்லை. இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது பெண்களுக்கு பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. கடந்து ஆத்தூர் செல்ல வேண்டும் அல்லது 90 கி.மீ. கடந்து சேலம் செல்ல வேண்டும். இதனால் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக காக்கை, குருவி இறப்பதைபோல் நடந்து கொண்டிருக்கின்றது.


கல்வி நிலையம் என்ற பெயரில் 8வது வரையில் உள்ளது. ஆசிரியர், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வருவார். மற்ற நாட்களில் மாணவர்களே பாடம் நடத்தும் அவல நிலையும் உள்ளது. மேற்படிப்பிற்கு பல மைல் தூரம், அதுவும் மலையில் ஏறி இறங்கி செல்ல வேண்டியிருப்பதால் மேற்படிப்பிற்கு செல்வது இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்கவும் கூட மலையை விட்டு கீழே இறங்கி வரும் மோசமான நிலைமையில் இம்மக்கள் உள்ளனர்.


மன்னூர் : இம்மலையில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். இம்மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மண்பாதை கூட கிடையாது. பாறைகளின் சந்துகளிலும், புதர்கள் நிறைந்த வனப்பகுதியிலும் செல்ல வேண்டும். இடப்பட்டி பிரதான சாலையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை சமமான காட்டுப்பாதையில் சென்று சுமார் 12 கிலோமீட்டர் மலை ஏறிச் சென்றால் மன்னூர் கிராமம்.

5வது வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே ஆசிரியர் வருவார். மீத நாட்களில் 5 வது படிக்கும் மாணவர்கள் தான் ஆசிரியர்கள். குடிநீருக்கு 3 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் குடிநீர் தேக்க குட்டை வரும். அதுதான் மனிதனுக்கும், மிருகத்திற்கும், குடிநீர். ஒரே வித்தியாசம், மனிதன் துணியால் வடிகட்டி குடிக்கிறான். மிருகம் அப்படியே குடிக்கின்றது.


இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் பிரசவ காலங்களிலும் மூங்கிலில் தொட்டில் கட்டி இரண்டு பேர் தூக்கி கொண்டு கீழே வரவேண்டும். இப்படி வரும் பொழுது பலர் பாதியிலேயே இறந்து போய் உள்ளனர். பெண்களுக்கு பாதி வழியில் பிரசவம் நடந்துள்ளது. சின்ன குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் மலையை விட்டு கீழே பல மைல்கள் கடந்து தங்கி படிக்கின்றனர். மாதம் ஒரு முறை மட்டும் மலைக்கு செல்லும் கொடுமைகள். ரேஷன் பொருட்கள் வாங்கி வர சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வர வேண்டியுள்ளது.


பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பணிகள் நடக்காததால் ஜூலை 19 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தால் நான்கு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


போராட்டக் களத்திலேயே வெற்றி

காவல் துறையினர் பலமாக குவிக்கப்பட்ட மக்களை மிரட்டி பார்த்தனர். 62 ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவித்த மக்களின் கோபத்திற்கு முன் காவல்துறையினரின் மிரட்டல் பலிக்கவில்லை. அதன் பின் ஆத்தூர் தாசில்தாரும் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எழுதி அனைத்து துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டு இரண்டு மலைக்கும் உடனடியாக ரேஷன் கடை அமைக்க வழி வகை செய்தனர்.


மீதம் உள்ள பிரச்சனைகள் மின்சாரத்தை உடனடியாக கொண்டு வருவது வனத்துறை அதிகாரிகளுடன் பேசி சாலை வசதிகள் ஏற்படுத்துவது, குடிநிர் பிரச்சனை தீர்வு காண்பது ஆசிரியர்கள் எல்லா நாட்களும் இருக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செயல்படுத்த அனைத்து அதிகாரிகளும், மக்களும், வாலிபர் சங்கத் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 23 அன்று நடத்திட ஒப்புதல் எழுதி கொடுத்தனர்.

எம்.குணசேகரன்

நன்றி : தீக்கதிர்

Tuesday, July 21, 2009

தினமலரின் டாப்-டென் புளுகுகள்

அண்டப்புளுகுகளையும், ஆகாசப் புளுகுகளையும் கொண்டு "நிறம் மாறுது சிவப்பு" என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ரீல் விட்டுள்ளது தினமலர் நாளிதழ்(ஜூலை 19). வலியப்புனைந்து எழுதப்பட்டுள்ள இந்த கற்பனைக் கட்டுரை அப்பத்திரிகையின் வாசகர்களை தவறான வழியில் அழைத்துச் செல்லவே முயல்கிறது.

இந்த ஒருபக்கக் கட்டுரையிலிருந்து வெறும் பத்து புளுகுகள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.

1. புளுகு - அச்சுதானந்தனை பொலிட்பீரோவில் இருந்து மட்டுமின்றி கட்சிப்பொறுப்பு எதிலும் இருக்காமல் நீக்கி விட்டது,

உண்மை - பொலிட்பீரோவில் இருந்து மட்டும்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்தியக்குழுவில் அவர் இன்னும் நீடிக்கிறார். அதோடு கேரள மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுக்களிலும் அவர் தொடர்கிறார்.

2. புளுகு - அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியவர்கள்.

உண்மை - இது கடைந்தெடுத்த பொய். தற்போதுள்ள அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

3. புளுகு - தனியே கட்டம் கட்டி பினராயி விஜயன் "மகனுக்கு அமெரிக்க படிப்பு" என்று தலைப்பு போட்டுள்ளது.

உண்மை - கட்டத்திற்குள் உள்ள செய்தியிலேயே உண்மை உள்ளது. பிரிட்டனில்தான் அவர் கல்வி கற்றுள்ளார். தினமலருக்குதான் அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது.

4. புளுகு - சீன போரில் கம்யூ. வேஷம் என்ற தலைப்பிலான தனி பாக்ஸ் செய்தி உள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தபோது கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த ஜோதிபாசு உடனே கேரள முதல்வராக இருந்த நம்பூதிரிபாடை போனில் அழைத்துப்பேசினார் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உண்மை - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி, பிரிந்தபிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி ஜோதிபாசு பொதுச்செயலாளர் பொறுப்பை வகிக்கவேயில்லை. மேலும் இவர்கள் சொல்லும் காலகட்டத்தில் இ.எம்.எஸ். கேரள முதல்வர் பொறுப்பிலும் இல்லை.

5. புளுகு - மக்களவைத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று கூட சரிவர முடிவுக்கு வரமுடியாத நிலை உள்ளது.

உண்மை - அகில இந்திய நிலை குறித்து மத்தியக்குழுவும், ஒவ்வொரு மாநில நிலைமை குறித்து அந்தந்த மாநிலக்குழுக்களும் ஆய்வை நிறைவு செய்து அடுத்த கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டன.

6. புளுகு - முதல்வர் அச்சுதானந்தன் சபரிமலை சென்று வந்த நிகழ்வை சபரிமலை சர்ச்சை நாயகன் என்ற பெயரில் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.

உண்மை - அதில் சர்ச்சை எழவில்லை. முதல்வர் என்ற முறையில் சபரிமலை பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அறிய நடந்தே சென்று வந்தார்.

7. புளுகு - 374 கோடி ரூபாய் லால்லின் ஊழல் வழக்கில் சிக்கிய போதும்... என்று தினமலரின் செய்தி செல்கிறது.

உண்மை - திட்டத்தின் மொத்த மதிப்பையே போட்டு அவ்வளவு ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகத் தொடர்ந்து கயிறு திரிக்கிறார்கள். அதோடு, இதை விசாரிக்கும் சிபிஐயே பினராயி விஜயன் எந்தவித சொந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் கூறியிருக்கிறதே...

8. புளுகு - கேரளாவில் பினராயி நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து மேலிடம் என்றுமே கண்டு கொண்டதில்லை,

உண்மை - வெளிப்படையாக விவாதம் நடத்திய காரணத்திற்காக பொலிட்பீரோவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டாரே... ஒருபக்கக் கட்டுரையில் அந்தச் செய்தியும்தான் இருக்கிறது.

9. புளுகு - கேரளாவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மை - அப்படியொன்றும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

10. புளுகு - ஏழைகள் கட்சி என்ற போக்கில் இருந்து மார்க்சிஸ்ட் விலகிச் செல்வது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

உண்மை - மத்திய ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்தபோது மட்டும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டம், அனைத்துத்தரப்பினரின் வங்கி சேமிப்பு பாதுகாக்கப்பட்டது, பழங்குடியினருக்கு பாதுகாப்பு மசோதான்னுதான் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

எந்தவித ஆதாரமுல் இல்லாமல், கேரளாவில் அந்த கட்சி ஒன்றுமில்லாமல் ஆவதற்கான அறிகுறி, பினராயிக்கு காரத் முழு ஆதரவு தருகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது, பினராயி மீது ஊழல் புகார்கள் ஏராளம், லாவலின் குறித்து கட்சி மவுனம் சாதிக்கிறது என்றெல்லாம் வதந்திச் சேற்றை வாரி இறைத்துள்ளது.

நிதானமாக, அதே நேரத்தில் உறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி நடைபோடுவதால்தான் தினமலர் போன்ற பத்திரிகைகள் பதற்றத்தால் பரபரப்பாகி உள்ளன. தங்கள் பதற்றத்தை மறைக்கவே கட்சியினர் மத்தியில் சலசலப்பு, பரபரப்பு என்றெல்லாம் இவர்களாகவே கிளப்பி விட்டுப்பார்க்கின்றனர்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி செய்தியைப் போட்டாலும் அவரது படத்தையோ, பெயரையோ வெளியிடுவதில்லை என்று கொள்கை முடிவை எடுத்துள்ள தினமலர், விளம்பரம் தந்தால் மட்டும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சாக்கடையில் கொள்கையை வீசி எறிந்து விடுவார்கள்.

பணம் வருகிறதே ... கொள்கையாவது, மண்ணாவது..

இதுபோன்று மார்க்சிஸ்ட் கட்சியை நினைத்துவிட்டார்கள் போலும்.

Monday, July 20, 2009

பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?



பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?


பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கப்போகிறார் என்றவுடனேயே நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பரபரப்படைந்தனர். வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு தரப்போகிறார் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. ஊடகங்களும் அவர்களின் ஊகங்களுக்கு தீனி போட்டன. பட்ஜெட்டும் வந்தது. பரபரப்பும் அடங்கியது.மறுநாள் பத்திரிகைகளைப் பார்த்தவர்களுக்கு குழப்பம்.


இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று பெரிய, பெரிய பொருளாதாரப் புலிகளெல்லாம் கூறியிருந்தன. ஆனால் விபரமாகப் பார்த்தால் புலிகளெல்லாம் தாங்கள் அனைவரும் சைவம் என்று சத்தியம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் பொருளாதாரப் புலிகளின் கருத்துகளும் அமைந்தன.ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா பத்தாயிரமும், மூத்த குடிமக்களுக்கு பதினைந்தாயிரமும் வரம்பில் ஏற்றப்பட்டது. ஆனால் அதிக வருவாய் பெறுபவர்களுக்குத்தான் பெரிய ஆதாயம் என்பது அவர்களுக்கு எவ்வளவு சேமிப்பாகிறது என்ற கணக்கில் அம்பலமாகியுள்ளது.


2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவருக்கு பட்ஜெட் அறிவிப்பில் 1,300 ரூபாய் லாபம் என்றால் 25 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரோ 88 ஆயிரம் வரையில் லாபத்தை எடுத்து செல்கிறார். பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டியவர்கள் மேல் இருந்த பத்து சதவீதக் கூடுதல் வரியும்(சர்சார்ஜ்) நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் காட்டில் மழைதான்.


வீட்டுக்கடன் வாங்கியிருக்கோமே... அந்த வட்டிக்கான வரிச்சலுகையாவது உயர்ந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்து விட்டார்கள் நடுத்தர மக்கள். அதிலும் ஏமாற்றம்தான் மிச்சம்.