Showing posts with label economic crisis. Show all posts
Showing posts with label economic crisis. Show all posts

Thursday, August 13, 2009

சோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...?



இது தாராளயுகம். அரசுடைமைக்காலம் என்பது மலையேறி விட்டது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மக்களவையில் கூறியுள்ளார்(தினமணி, ஆக.7). கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கொட்டிக்கிடக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை யார் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா.. அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசுடைமை ஆக்குங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரியதற்குத்தான் இப்படி பதிலளித்துள்ளார்.


கடந்த பத்து நாட்களாகவே இதுதான் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும் பிரச்சனையாகும். முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக அரசு விலையை நிர்ணயிக்கிறது. அனில் அம்பானிக்கு பாதிப்பு என்றவுடன் சமாஜ்வாதிக்கட்சி கொந்தளிக்கிறது. ஏதோ இந்த நாட்டின் வளம் இந்த இரு நபர்களுக்கு மட்டுமே சொந்தமானது போல இந்தக்கட்சிகள் லாவணி செய்தன. இந்த நிலையில் விவாதத்தை தேசத்தின் சொத்து பற்றியதாக இடதுசாரிக்கட்சிகள் மாற்றின. இவ்வளவு நாட்களும் நாற்காலியில் பசையைத் தேய்த்து அமர்ந்திருந்த முரளி தியோரா இது தனிப்பட்ட விஷயம் என்றவாறே எழுகிறார். அப்போதுதான் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லவும் முற்படுகிறார்.


இது தாராளயுகம் என்கிறார். எந்தயுகத்தில், "இந்திய வங்கிகள் சரிந்து விழாததற்கு அரசுடைமைதான் காரணம். அதனால் இந்தப் பெருமை எனது மாமியாரையே சாரும்" என்று அவரது கட்சித்தலைவர் சோனியா காந்தி பெருமிதத்தோடு கூறினாரோ, அதைத்தான் தாராளயுகம் என்று தியோரா வர்ணிக்கிறார். காங்கிரசிலேயே இரண்டு ரகம் உண்டு. ஒன்று, சோசலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள்.


இரண்டாவது, வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இதில் முரளி தியோரா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். ஈரானுடன் குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் போடக்கூடாது என்று அமெரிக்கா கூறியது. அப்போது அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் கையெழுத்திடுவதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரைத் தூக்கி கடாசிவிட்டார்கள். அமெரிக்காவின் பேச்சைத் தட்டாமல் இருக்க முரளி தியோரா அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இதிலிருந்தே அவரது விசுவாசம் யாரிடம் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


எந்தயுகம் மலையேறியுள்ளது என்பதைக் கொஞ்சம் பூமிப்பந்தின் மேற்கு திசையில் தியோரா பார்ப்பது நல்லது. தாராளமாக இயங்கியதால் மேற்கு நாடுகளில் உள்ள மக்களின் சேமிப்பு பறிபோயுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மலையேறிய தாராளயுகம் அங்கேயிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம்... இதோ மக்கள் பணத்தை எடுத்து தாரை வார்க்க இன்னும் தயாராகவே இருக்கிறோம் என்று ஆசை காட்டி மலையிலிருந்து இறக்க அங்குள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.


முரளி தியோரா ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மக்களவையில் இருப்பது அமெரிக்காவின் அல்லது அம்பானியின் பிரதிநிதியாக அல்ல. மக்களின் பிரதிநிதியே. யுகங்கள் மக்களின் யுகங்களாகவே இருக்க வேண்டும். அதற்கு அவர்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளே வர வேண்டும். தனது மாமியார் பற்றி சோனியா காந்தி பெருமைப்பட்டுக் கொண்டது நியாயமானதே. அந்த நியாயத்தைப் பலிகொடுத்துவிட வேண்டாம். மக்களின் யுகங்கள் மலையேறிவிடக்கூடாது. மாமியாரின் பெருமை பறிபோக சோனியா அனுமதிக்கலாம். ஆனால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Tuesday, August 11, 2009

மக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்



எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடமானக் கடன்களை, அடமானத்திற்கு மேல் அடமானம் வைத்து உருக்குலைந்து போன வங்கிகள் தங்களது மோசடி வேலைகளை மட்டும் கைவிடவில்லை. மீட்புத்திட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளை முழுங்கி ஏப்பம் விட்டு நிற்கும் வங்கிகளில் ஒன்பது பெரிய வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் மீண்டும் அம்பலமாகியுள்ளன. நெருக்கடி மற்றும் சொத்து மீட்புத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்றுக் கொண்ட வங்கிகள் கடந்த ஆண்டிற்காக அளித்த போனஸ் தொகை குறித்து அமெரிக்க நிதித்துறை ஆய்வு செய்துள்ளது. ஒன்பது பெரிய வங்கிகளின் கணக்குகள் மற்றும் போனஸ் தொகை பற்றிய விரிவான ஆய்வு வங்கிகளின் மோசடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

வங்கிகளிலேயே அதிகமான அளவு மீட்புத்திட்ட நிதியை சிட்டி வங்கிக்குழுமம்தான் பெற்றது. திவால் நிலைக்கு சென்ற இந்த வங்கியின் பங்குகளில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்க அரசே எடுத்துக் கொண்டது. மேலும் மீண்டு வரட்டும் என்பதற்காக நிதியை வாரி வழங்கியது. வங்கியின் மீட்சிக்காக அதைப் பயன்படுத்தாமல் போனஸ் வழங்குவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டுக்கான போனசாக சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாயை சிட்டி குழுமம் அளித்துள்ளது. இத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் மேலும் நஷ்டத்தைக் கண்டுள்ளது சிட்டி குழுமம். எவ்வளவு மீட்பு நிதி வாங்கினார்கள், அதற்கும் போனசிற்கும் என்ன விகிதம் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் இதில் பல விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த மோசடியாளர்களுக்கு இல்லை.

சிட்டி குழுமம் மட்டும் தனியாக இந்த வேலையைச் செய்யவில்லை. அதற்கு கூட்டாளிகளாக இருக்கும் வகையில் பேங்க் ஆப் அமெரிக்கா, மெர்ரில் அண்டு லின்ச், ஜே.பி.மார்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் குரூப் ஆகிய வங்கிகளும் மக்களின் வரிப்பணத்தை மீட்பு நிதியாகப் பெற்றுக் கொண்டு போனசையும் வாரி வழங்கியுள்ளார்கள். இவர்களின் போனசால் அதிகமாகப் பயனடைந்தவர்கள் வால் ஸ்டிரீட்டில் உள்ள முதலீட்டு வங்கியாளர்கள்தான். வங்கிகளை சிதைத்ததோடு நிற்காமல் மீட்புக்கான நிதியையும் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கவும் முடிவு செய்துவிட்டார்கள்.

பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெர்ரில் லின்ச் ஆகிய இரு வங்கிகளும் கூட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் போனசாக வாரி வழங்கியுள்ளன. மீட்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை இந்த இரு வங்கிகளும் இன்னும் திருப்பித்தரவில்லை. போனஸ் ஏன் தரப்பட்டது என்று கேட்டால், திறமையான நபர்களை போட்டி வங்கிகள் இழுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விட்டுள்ளார்கள். வங்கிகளிலிருந்து மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் முதல் 100 பேரை அடையாளங்கண்டு அவர்கள் வருமானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கென்னத் ஃபெய்ன்பர்க் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் 2009 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இழப்பீடு போன்றவற்றை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி பல்வேறு வடிவங்களில் வங்கியிலிருந்து வெளியேறி விட்டது. இந்த லட்சணத்தில் ஓரிரு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் இரண்டாவது மீட்புத்திட்ட நிதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதோடு, மாதாமாதம் திவாலாகிக் கொண்டிருக்கும் சிறிய வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 305 அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளன என்று மத்திய காப்பீட்டுக்கழகம் கணித்திருந்தது. திவாலாகும் வங்கிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இந்தக் கழகத்தின் தோள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

நிறுவன மேலாண்மையில் நேர்மை, நியாயம் என்ற வார்த்தைகள் அனைத்தையும் அமெரிக்க வங்கிகள் தொலைத்துவிட்டு நிற்கின்றன. மக்கள் பணம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை முதலீடு செய்வதும், திவாலான நிலையிலும் மக்கள் பணத்தை எடுத்து போனசாக அள்ளி வீசிக்கொண்டிருப்பதும் எதை, எதையெல்லாம் நிர்வாகம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளின் கைகளில்தான் இந்திய வங்கிகளை ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஒருநாளில் 26 மணிநேரம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

Tuesday, July 28, 2009

திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!



அடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


வங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.


ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.


சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.

ஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Friday, July 24, 2009

நெருக்கடியா... யாருக்கு..??




பொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.


ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இழப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.


உலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.