Saturday, July 25, 2009

மூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா?



1983 ஆம் ஆண்டு. திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்தியக்குடியரசுக்கட்சி போன்ற மாநிலக்கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. மாநிலங்களுக்கு நிதி சுயாட்சி தேவை என்பது இந்த மாநாட்டின் முக்கியக்கருத்தாக இருந்தது. இந்தக்காலகட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.

தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இதே கட்சியின் நிதியமைச்சர் க.அன்பழகன், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து போர்க்குரல்கள் எழுப்பிய காலம்போய் இப்போது வெறும் கவலை தெரிவிப்பதோடு திமுக நிறுத்திக் கொள்கிறது.

மாறியுள்ள காலகட்டத்தில், அதுவும் மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் ஆட்சியே அமையாது என்றிருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்iவைக்க முடியும். சந்தையிலிருந்து பெறும் கடனில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பங்கு தற்போது 20:80 சதவீதமாக உள்ளது. ஆனால் 1950களில் 50:50 சதவீதமாக இருந்தது. இந்த சதவீதத்தை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது என்றும் அன்பழகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் தொடர்ந்து இக்கோரிக்கையை உரக்க எழுப்புகின்றன. திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். அதுதான் பேச வேண்டிய இடம். சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் அன்பழகனின் கவலைக்குரல், மத்திய அமைச்சரவையில் உரிமைக்குரல்களாக மாறினால்தான் பலன் கிடைக்கும். இது மூத்த அரசியல்வாதிக்கு தெரியுமல்லவா?

1 comment:

  1. நல்ல பதிவு.
    ஆனாலும்,
    பேராசிரியர் என்பதற்க்காக அவரை யோசிக்கல்லாம் சொல்ல கூடாது. இதெல்லாம் அதிக பிரசிங்கிதனம். காலத்துக்கும் ரெண்டாம் இடத்துல நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா?

    ReplyDelete