Showing posts with label international. Show all posts
Showing posts with label international. Show all posts

Monday, September 7, 2009

இதுதான்(ங்க!) அரசாங்கம்...!

நெருக்கடி...
நெருக்கடி...
நெருக்கடி...
இந்த வார்த்தைதான் இன்றைய தினம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஆட்டம் கண்டால் தென் அமெரிக்க நாடுகள் உருளத் தொடங்கிய காலமும் இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும், சமாளிக்க முடியாத நிலைக்கெல்லாம் தென் அமெரிக்க நாடுகள் போய் விடவில்லை. ஐ.எம்.எப். கடனை ஏன் ஒரே தவணையில் திருப்பிக் கட்டுகிறீர்கள் என்று அர்ஜெண்டினா ஜனாதிபதியைப் பார்த்துக் கேட்டபோது, எங்கள் நாட்டு தலைவிதியை நாங்களே நிர்ணயிக்க விரும்புகிறோம் என்று பதிலளித்தார். அவர் கூறியது ஒரு சில ஆண்டுகளிலேயே நிரூபணம் ஆகிவிட்டது. நெருக்கடி காலத்திலும் அனைத்து தென் அமெரிக்க நாடுகளும் அடிப்படைத்துறைகளில் செய்த செலவைக் குறைக்கவில்லை.
வெனிசுலாவின் தேசிய புள்ளியியல் மையத்தின் தலைவர் எலியாஸ் எல்ஜூரி இதை விளக்குகிறார். உலகப் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் தனது வளர்ச்சியை வெனிசுலா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இயற்கை வளங்களை அன்னிய நிறுவனங்கள் தங்குதடையின்றி அள்ளிக் கொண்டு சென்ற காலத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இயற்கை வளங்கள் சேமிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மக்களின் நலன்களுக்காக செலவிடப்பட்டது. இந்தக் காலகட்டத்திலும் அந்தச் செலவு குறையவில்லை. கேந்திரத்துறைகளில் அரசின் முதலீடும் குறைக்கப்படவில்லை என்கிறார் எலியாஸ். நாட்டின் இயற்கை வளத்தால் கிடைக்கும் வருமானத்திற்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்போதுள்ள அரசின்கீழ் பெருமளவு அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியைச் சந்தித்ததால் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை இழுத்து மூடிய அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வெனிசுலாவில் உள்ள தொழிற்சாலையைத் திறக்கப்போகிறது. வெனிசுலா மக்களின் வாங்கும் சக்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால்தான் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 140 டாலரைத் தொட்டபோது வெனிசுலாவின் பட்ஜெட் போடப்பட்டது. தற்போது விலை பெரும் அளவில் சரிந்துள்ளதால் பட்ஜெட் கணக்கை சிறிது மாற்றியமைத்துள்ளார்கள். அப்போது ஒதுக்கப்பட்ட அளவிற்கு நிதியை பல்வேறு துறைகளுக்கும் வழங்க முடியாவிட்டாலும் குடியிருப்பு வசதி மற்றும் கல்வி ஆகிய இரண்டுக்குமான ஒதுக்கீட்டில் கைவைப்பதில்லை என்று சாவேஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த இரண்டு துறைகளின் முக்கியத்துவத்தைக் கருதி அரசின் முதலீட்டை அதிகரிக்கப்போகிறார்கள். கடந்த மாதத்தில் புதிய கல்வி மசோதா ஒன்றை வெனிசுலா நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தது. 20 சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்கி வெனிசுலா அரசு சாதனை பண்ணியுள்ளது. வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறைக்காக பத்து சதவிகிதமும், 50 சதவிகிதத்தை மாநில மற்றும் உள்ளாட்சி அரசுமைப்புகளுக்கும் ஒதுக்கியுள்ளார்கள். எஞ்சியுள்ள 20 சதவிகிதம் சுகாதாரம் மற்றும் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியை விட நடப்பாண்டில் குறைவாகவே வெனிசுலா அரசு செலவு செய்துள்ளது. இதை சமாளிக்க சிறிதளவு விற்பனை வரியை அரசு விதித்தது.
தற்போது எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை 40 டாலர் வரை சரிந்த நிலை மாறி தற்போது 65க்கும், 70க்கும் இடையில் அங்குமிங்குமாய் மாறிக் கொண்டிருக்கிறது. வெனிசுலாவின் ஏற்றுமதியில் எண்ணெயின் பங்கு 90 சதவிகிதமாகும். எண்ணெய் விலை சற்றே ஏறியதால் வெனிசுலா அரசுக்கும் நிதி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால்தான் உடனடியாக வீட்டுவசதி மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகப்படுத்திவிட்டது. எந்தவித பயனுமின்றி சும்மா கிடக்கும் அரசு மற்றும் தனியார் நிலங்களை அடையாளங்கண்டு அதில் ஏழை மக்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித்தர அரசு திட்டம் தீட்டியுள்ளது.
அதேவேளையில் சாமான்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, குறைந்தபட்ச ஊதியத்தின் வரம்பையும் உயர்த்தியுள்ளார்கள். குறைந்தபட்ச மாத ஊதியம் 447 டாலர்(22 ஆயிரத்து 350 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று அரசுத்தரப்பில் ஒரு உறுதிமொழியை அளித்தார்கள். கூடிய விரைவில் குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகித உயர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த உறுதிமொழி. தற்போதுள்ள மேற்கொண்டுள்ள உயர்வோடு அந்த உறுதிமொழி நிறைவேறிவிட்டது. தென் அமெரிக்க நாடுகளின் மக்கள் இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

Friday, July 24, 2009

நெருக்கடியா... யாருக்கு..??




பொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.


ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இழப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.


உலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.

Monday, July 20, 2009

அகல உழாமல் ஆழ உழுது...!


அவர் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெஞ்சில் கைவைத்தபடி காத்திருந்தனர். இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்று சாவேஸ் கூறியவுடன் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்தனர். கொண்டாட்டங்கள் துவங்குவதற்கு முன்பாக வெனிசுலாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். தேசிய கீதம் நிறைவு பெற்றதுதான் தாமதம். ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். மடேசி, கான்சிகுவா, காரபோபோ, டாவ்சா உள்ளிட்டு நமது வாயில் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட அந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளின் நிர்வாகம் இனிமேலும் நம்மைச் சுரண்டாது என்ற நிலையே அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்று அந்தக் கொண்டாட்டங்கள் உணர்த்தின. இது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் போன்ற விஷயமல்லவே... அகல உழாமல் ஆழ உழுத பெருமை சாவேசுக்குதான் சேர வேண்டும். ஆனால் தனி ஆளாக இதை சாதித்து விடவில்லை. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது லட்சக்கணக்கான வெனிசுலா மக்களின் கரங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து கொண்டே யிருந்தன.


மே மாதத்தில் மட்டும் இரும்பு எஃகு, இயற்கை எரிவாயு மற்றும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை நாட்டுடைமையாக்கப்பட்டன. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றெல்லாம் திடீரென்று கிளம்பிவிடவில்லை வெனிசுலா அரசு. வெனிசுலாவைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் என்பது 1998லேயே ஏற்பட்டு விட்டது. ஆனால் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏற்கெனவே உருவாக்கிவைக்கப்பட்டிருந்த சட்டங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருந்தன.


தாண்டி வந்த பாதை


சினிமாவில் வரும் ஒன் மேன் ஆர்மி போல நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியாது என்பதை மனதில் கொண்ட சாவேஸ், ஒரு அமைப்பின் தேவையைப் புரிந்து கொண்டார். ஐக்கிய வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது. சோசலிசத்தை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பல்வேறு இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பாதையில் சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு முதலில் கையில் எடுத்த ஆயுதம் பிடிவிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம்தான். சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானம் அன்னிய மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது. 1976இல் நாட்டுடைமையாக்கப்பட்ட கச்சா எண்ணெய்த் துறையை மீண்டும் தனியார் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி 1996இல் மீண்டும் துவக்கப்பட்டது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் 1998இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.


இருப்பினும் எண்ணெய் நிறுவன முதலாளிகளின் தூண்டுதலின்பேரில் 2002 ஆம் ஆண்டில் எண்ணெய் துறையை முடக்கும் முயற்சிகள் நடந்தன. உற்பத்தியே நின்று போகும் அளவிற்கு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மக்களின் துணையோடு அதை முறியடித்த வெனிசுலா அரசு நிதானமாக, அதே வேளையில் தனது பாதை எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. 2007 ஆம் ஆண்டில் அரசியல் சட்டத்திருத்தங்களை மக்கள் முன் வைத்தபோது அது பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ஜனாதிபதி தேர்தல், பல பொது வாக்கெடுப்புகள் என்று தொடர்ந்து வெற்றியே பெற்றுக் கொண்டிருந்ததால் சாவேஸ் ஆதரவாளர்கள் அசட்டையாக இருந்ததுதான் அந்தத் தோல்விக்குப் பிரதான காரணமாக இருந்தது. மக்கள் ஆதரவோடு மீண்டும் பிப்ரவரி 2009இல் மிகவும் கவனமாக மக்கள் முன் சீர்திருத்தங்களை வைத்தபோது அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. இதையா தோற்கடித்தோம் என்ற எண்ணம் பரவலாகக் காணப்பட்டதை அமெரிக்கக் கண்காணிப்பாளர்கள் சிலரே தெரிவித்தனர். முந்தைய பொது வாக்கெடுப்பில் 49 சதவீத மக்களே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்முறை 54 சதவீத மக்கள் சாவேசின் கரங்களை உயர்த்திப் பிடித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வளர்ச்சித்திட்டம் ஒன்றை வெனிசுலா அரசு முன்வைத்திருந்தது. பொதுவாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி அந்தத்திட்டத்தை செயல்படுத்த உதவியது.


அந்தத்திட்டத்தின் குறிப்பிட்ட அங்கமாகவே நாட்டுடைமை நடவடிக்கைகள் நடந்துள்ளன. நாட்டுடைமை என்று அறிவித்தவுடன் லியனார்டோ கொன்சால்ஸ் என்ற தொழிலாளி, அப்பாடா... பாவிகள் ஒழிந்தார்கள். எங்களுக்கு ஏழு மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை என்று கைகளை சொடுக்காத குறையாக திட்டித் தீர்த்தார். இழந்த சம்பளத்தை மட்டும் இந்த நாட்டுடைமை நடவடிக்கை மீட்டுத் தரவில்லை. ஒரு நாள் சம்பளத்தில் 14 டாலர்கள் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் உதிக்கச் செய்தது.


ஒவ்வொரு நாட்டுடைமைக்கும் ஒரே மாதிரியான உத்தியை சாவேஸ் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கவில்லை. சில துறைகளை அப்படியே அரசுடைமை ஆக்கியது. சில நிறுவனங்களில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்க மறுத்த நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக் கையால் அரசின் கைவசம் சென்றன. அதிரடி சண் டைக்காட்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள், சிடோர் என்று அழைக்கப்படும் வெனி சுலாவின் பெரிய உருக்காலை, நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி, சிமெண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மின்துறை நிறுவனங்கள் ஆகியவை அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.


நிதானமான நடை


எட்டடி, பதினாறு அடிப்பாய்ச்சலெல்லாம் வெனிசுலாவின் நடையில் இல்லை. ஒவ்வொரு அடியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள். நாட்டுடைமை நடவடிக்கை முழுமையடைந்தவுடன் சோசலிச தொழில் வளாகம் அமைகிறது. இதில் சிறிது சிறிதாக நிறுவனங்களும், ஆலைகளும் தொழிலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்படும். இது இத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. இது நடக்கும் என்பதோடு நிற்கிறார்கள். ஆனால் உறுதியோடு. ஏற்கெனவே பல நிறுவனங்களில் தேர்தல்கள் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கேற்கும் நடைமுறை வந்துள்ளது. அதிலும் எந்த அவசரமும் காட்டப்படவில்லை. சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தந்தது. சில இடங்களில் உடனடியாக நிர்வாகத்தில் பங்கு தர வேண்டியதில்லை என்ற நிலையும் காணப்பட்டது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செல்லாமல் பொறுமையுடன் இத்தகையப் பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. கால அவகாசம் தேவைப்படுவதால் தான் ஜனாதிபதியாகத் தொடர வேண்டிய அவசியத்தை உணர்ந்த சாவேஸ் அதற்கான சட்டத்திருத்தத்தையும் மக்கள் முன் வைத்தார்.


ஒருவர் தொடர்ந்து இரு முறைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் அதிருப்தியும் இல்லாமலில்லை. பெரும்பான்மை பங்குகளை விலைக்கு வாங்கி நாட்டுடைமை ஆக்கும் உத்தியை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டு வளத்தை சுரண்டிக் கொண்டிருந்தவர்களுக்கு தாம்பூலப்பை கொடுத்து அனுப்பும் வேலை எதற்கு என்பதுதான் அவர்களின் கேள்வி. அடுத்த திருமணம் எப்போது... மீண்டும்பத்திரிகை அடித்து தங்களை அழைக்க மாட்டார்களா... என்று காத்திருக்கும் எண்ணம்தான் சுரண்டல்வாதிகளின் மனதில் நிறைந்து கிடக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறத்தில் அரசியல் சீர்திருத்தங்களை நோக்கிய பாதையில் சரி செய்யும் வேலை நடக்கிறது. சில அரசியல் அம்சங்களில் பாதையே இப்போதுதான் போடுகிறார்கள். மாகாண அரசுகளின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் தெளிவாக வடிவம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முறையான தேர்தல் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு தேர்தல்கள் நடந்தன. ஒன்றுபட்ட வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான மாகாணங்களில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொள்கைகள் எதுவுமின்றி நீயா.. நானா.. என்ற போட்டிகளைத் தாண்டி சோசலிசக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்த வெற்றிகள் ஈட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தடைக்கற்களைப் பொறுக்கி ஓரமாக வைத்துவிட்டு புரட்சியை நோக்கி செல்கிறோம் என்கிறார் சாவேஸ். அதோடு தங்களைத் தாங்களே புனரமைத்துக் கொண்டு புரட்சியை எவ்வாறு நடத்தினோம் என்று வெனிசுலா தொழிலாளி வர்க்கம் விரைவில் உலகிற்கு பாடம் நடத்தும் என்று அவர் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கூறினார். அப்போது கூடியிருந்த தொழிலாளர்களின் உதடுகளில் ஏற்பட்ட வெறும் அசைவு கூட புரட்சி வாழ்க என்ற உச்சரிப்பையே உணர்த்தியது.

Sunday, July 19, 2009

சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்!


பெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. தகர்க்கப்படுவதற்கு முன்பாக இருந்த கிழக்கு ஜெர்மனி என்ற நாடு சட்டவிரோதமானது என்றெல்லாம் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அடிமைத்தளை முறிந்தது என்று அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் உரக்கக் கத்தின. அமெரிக்க மற்றும் மேற்கு ஜெர்மனி ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த மக்களில் கணிசமான பகுதியினர் கம்யூனிச முழக்கங்களை எழுப்பினர். இது பெர்லின் சுவரைத் தகர்த்ததோடு, 1990 அக்டோபரில் இரு ஜெர்மனிகளும் இணைந்து ஒன்றுபட்ட நாடாக உருவாவதற்கு வழி வகுத்தது.


அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்று, கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை மிகவும் மேம்பட்டதாக இருந்தது என்ற கருத்தை மக்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. ஜெர்மனியின் கிழக்குப்பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் முன்னாள் கிழக்கு ஜெர்மனிக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக 49 சதவீதம் பேர் மிகவும் தெளிவான பதிலுடன் இருந்துள்ளார்கள். சில பிரச்சனைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தது உண்மைதான். ஆனால் வாழ்க்கை அங்கு நன்றாக இருந்தது என்கிறார்கள் அவர்கள். மேலும், நல்ல அம்சங்கள்தான் கிழக்கு ஜெர்மனியில் அதிகமாக இருந்தது. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ள வாழ்க்கையை விட நன்றாகவும், மகிழ்ச்சியானதாகவும் அப்போது இருந்தது என்கிறார்கள் கணிசமான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள்.


இந்தக் கருத்துக்கணிப்பு மீது ஜெர்மனியின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிளாஸ் ஸ்°ரோடர் என்ற பிரபல வலதுசாரி அரசியல் ஆய்வாளர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். பிரதேசப் பற்றே இத்தகைய கருத்துக்களுக்கு காரணம் என்று அந்தப் பகுதி மக்களின் கருத்துகளை நிராகரிக்கிறார் ஸ்ரோடர். தங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதன் மூலமே இளம் பிராயத்தினர் கிழக்கு ஜெர்மனி பற்றி தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியின் இளைஞர்களில் பாதிப்பேர் கூட முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்று கூற மாட்டேனென்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் அவர்.


இவரது இந்த விமர்சனம் கிழக்குப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு கடிதங்கள் அனுப்பினர். பாடப்புத்தகங்கள் பதவியில் இருக்கும் வலதுசாரிகளின் ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. மக்களின் அனுபவத்தை விடவா வேறு பாடம் இருக்கப்போகிறது என்று குடும்ப உரையாடல்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நியாயப்படுத்துகிறார்கள் அவர்கள். முன்னாள் கிழக்கு ஜெர்மனி நாட்டை சட்டவிரோதமானது என்று கூறுவதைக் கண்டிக்கிறார் பிர்கர் என்பவர். கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்கிறார்கள். ஆனால் இப்போதுதான் எங்களைப் பற்றி உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான விபரங்களைச் சேகரித்து வருகிறார்கள் என்கிறார்.இப்போதுள்ள நிலையைப்பார்த்தால், பெர்லின் சுவரை உடைத்தபோது நாங்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவே உணர்கிறோம் என்கிறார் ஸ்ரோடருக்கு கண்டனக் கடிதம் எழுதியவர்களில் ஒருவர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் வாழ்ந்த அனுபவம் கிடைத்ததற்காக 38 வயதான ஒருவர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார். ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானபிறகுதான் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் வீடில்லாமல் உழன்றவர்கள் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எனது கிழக்கு ஜெர்மனி அனுபவத்தில் பார்க்கவில்லை என்கிறார் அவர். தற்போதுள்ள ஜெர்மனியில் மக்கள் அடிமைகளாகவும், மூலதன சர்வாதிகாரம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்றும் பலர் தங்கள் கடிதங்களில் குறிப்பிடுகிறார்கள்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதி வந்த கிழக்கு ஜெர்மனி மக்களின் வாழ்க்கையை சோகம்தான் கவ்விப்பிடித்துள்ளது. தவறான பிரச்சாரங்கள் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பிவிட்டன என்றுதான் பெரும்பாலான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் அதிருப்தியுற்றிருக்கிறார்கள் என்பதுதான் கருத்துக்கணிப்புகளில் தெரிய வருகிறது. "தங்கள் வரலாறு மோசமானதல்ல என்பதை இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் கூட அதன் வாழ்க்கைத்தரம் குறித்து பேசத் துவங்கியுள்ளார்கள்" என்கிறார் வரலாற்றாய்வாளர் ஸ்டீபன் ஓலே. ஏழைகளுக்கு வாழ்வதற்கான சுதந்திரத்தைத் தவிர மற்ற அனைத்து சுதந்திரங்களும் ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ளன என்கிறார்கள் கிழக்கு ஜெர்மனியினர். அக்காலகட்டத்து அரசின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வுகள் தற்போது ஜெர்மனியில் அதிகமாகி வருகின்றன.