Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

Friday, April 29, 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய சதி அம்பலம் !

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.

இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.

புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


Sunday, March 7, 2010

எதிரலையில் சிக்கிய மக்கள் டிவி!


அடித்து நொறுக்கப்பட்ட தீக்கதிர் வாகனம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் டிவி தோழர் உ.ரா.வரதராசன் மரணம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டது. ஜனநாயக முறையில் அந்த அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் கூறாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல் என்று மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எந்த பத்திரிகை தர்மத்தை மதிக்காமல் அவதூறு செய்தியை மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டதோ, அந்த அணுகுமுறை அடுத்த நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தியிலும் இருந்தது.


மக்களிடம் ஒரு தங்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்கும் முயற்சியாக தொலைபேசியில் மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் நேரலை என்று ஒளிபரப்பினார்கள். வன்முறை பற்றி ஒரு நேயர் பேச ஆரம்பித்தார். எந்த அரசியல் கட்சியும் இப்படி செய்யக்கூடாது.. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் இப்படியே பேசினால் நேயர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்தவர், இப்படி மார்க்சிஸ்ட் கட்சி செய்திருக்கக்கூடாது என்கிறீர்களா... என்று தலையை நுழைக்கிறார்.


மற்றொரு நேயரோ, "ஆயுதம் ஏந்துனா மாவோயிஸ்டு, கீழே போட்டா மார்க்சிஸ்டு" என்று பஞ்ச் டயலாக் விட்டார். அதன்பிறகு, மாவோயிஸ்டுகளைப் பற்றியே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். மாவோயிஸ்டுகளை வளரவிடவே கூடாது என்று அவர் கூறியபோது சலித்துப் போன தொகுப்பாளர் அடுத்த நேயரின் அழைப்பை எதிர்நோக்கத் துவங்கினார்.


காங்கிரசைச் சேர்ந்த இதயத்துல்லா பேசுகையில், இதை மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவரது வாயில் வார்த்தைகளைத் திணிக்க தொகுப்பாளர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. சில நேயர்கள் ஏதோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல எந்திரமாகப் பேசினார்கள். சிலர் பிருந்தா காரத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சம்பந்தா, சம்பந்தமில்லாமல் பேசினார்கள். இதற்கிடையில், ஜனநாயகத்தை அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும் இந்து முன்னணி போன்ற அமைப்பினர் வன்முறை பற்றி வியாக்கியானம் செய்தார்கள்.


சுவாரஸ்மான நிகழ்ச்சி இருக்க வேண்டுமே? ஒரு பெண்ணின் பேட்டி இடையில் ஒளிபரப்பாகியது. மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றுகிறார். "திடீரென்று சிலர் உள்ளே நுழைந்தார்கள். நான் பதற்றமாயிட்டேன். இன்னும் எனக்கு பட, படன்னு இருக்கு" என்று அவர் குறிப்பிட்டார். அடுத்து திரையில் தோன்றும் தொகுப்பாளர், "படுகாயமடைந்துள்ள பெண் ஊழியரின் பேட்டி அது" என்கிறார். அவர் படுகாயமடைந்ததாக இவர்கள் தொலைக்காட்சியே கூட காட்டவில்லை.
அடுத்து துவங்கியது சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்பு கருத்துகள். நேரலை என்றுதான் போட்டார்கள். புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் மற்றும் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் ஆகிய இருவரையும் தொகுப்பாளர் வரவேற்கிறார். மாலன் கருத்து தெரிவிக்கிறார். கருத்து மாறுபடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்கிறார். கொலை செய்யப்பட்டார் என்ற பொய்யான தகவலை செய்தியாக்கியதோடு, கட்சியின் ஒருபகுதியினர்தான் அந்தக் கொலைக்கு காரணம் என்று ஒளிபரப்பியதா கருத்து மாறுபாடு?


அவர் அதோடு நிற்கவில்லை. ஊடகவியலாளர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறத் துவங்கினார். மக்கள் தொலைக்காட்சி செய்தியே தவறு என்று கூறிவிடுவாரோ என்று பயந்த தொகுப்பாளர், வெப்துனியா அய்யநாதனிடம் பேசத்துவங்குகிறார். துவங்கும்போதே, நான் முன்பே கூறியபடி.. என்கிறார் அய்யநாதன். நேரலையாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அவர் வந்து அமர்ந்ததாகக் காட்டினார்கள். அப்புறம் எப்படி "நான் முன்பே கூறியபடி" என்று கூறுகிறார்? அப்படியால் அவர் முன்பே பேசியது வெட்டப்பட்டு விட்டதா? அந்த வெட்டப்பட்ட பகுதியில் அவர் என்ன பேசினார்? நேரலையில் எதிரலை அடித்துவிட்டதா?இந்த இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பாளர் தங்கள் தொலைக்காட்சி சார்பாக அந்தர் பல்டி ஒன்றை அடித்தார். மக்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களை செய்தியாக்கினோம் என்றார். செய்தி வாசிக்கும்போது இப்படிச் சொல்லவில்லையே? உடற்கூறு அறிக்கை என்றல்லவா கூறினீர்கள்? காவல்துறை அதை மறுத்துள்ளதே? அந்த மறுப்பு செய்தியையாவது நீங்கள் ஒளிபரப்பியிருக்க வேண்டுமே...


தாக்குதலுக்கு கடுமையான கண்டன அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தி ஆசிரியரிடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் பேசியதாகவும்(அவ்வாறு அவர் பேசவில்லை என்பது ஒருபுறம்), மறுப்பு அறிக்கை வெளியிட செய்தி ஆசிரியர் ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். வெறுப்புணர்வைக் கிளப்பிக் கொண்டிருந்த தொகுப்பாளரிடம் இதைச் சொல்லியிருக்கலாமே...??


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து தாக்கி அட்டுழியம் செய்துள்ளார்களே... பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர்.பி.ராமமூர்த்தியின் படத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்கள் விட்டுவைக்கவில்லை. எதையும் தயங்காமல் செய்தி வெளியிடும் மக்கள் தொலைக்காட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள், அதை செய்தியாக்கி வெளியிட்டீர்களா... அவர்கள்தான் உங்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என்பதால் பத்திரிகை தர்மத்தை காவு கொடுத்து விட்டீர்களா..??


நேரலையில் எதிரலைகள்தான் கிடைக்கும் என்பதால்தான் கடையை சீக்கிரமே இழுத்து மூடிவிட்டு கிளம்பி விட்டீர்களா? மக்கள் சந்தேகங்களை வைத்து செய்தியாக்கினீர்களே... இதோ, இந்த சந்தேகங்களை வைத்து செய்தியாக்குங்கள் பார்க்கலாம்..

* சந்தேகங்களை செய்தியாக்கிய நீங்கள், ஏதோ துப்பறிவு நிறுவனம் போலல்லவா செய்தியை வெளியிட்டீர்கள்... ஏன்?


* ஒருமுறையல்ல, இருமுறை செய்தி ஒளிபரப்பினீர்கள். இதில் பொதுவான நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரம் வேறு. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பத்திரிகை தர்மம் இல்லையே... ஏன்..?


* உங்கள் செய்தியை மறுநாள் காலையில் கூட வேறு எந்த ஊடகமும் வெளியிடவில்லையே... அது ஏன்?


* காவல்துறையின் மறுப்பு வந்தபிறகும் எதுவும் நடக்காததுபோல் இருந்தது ஏன்?


* பிரச்சனை ஆனவுடன் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைதான் செய்தியாக வெளியிட்டோம் என்று தொகுப்பாளர் மூலம் பல்டியடித்தது ஏன்?

* இதெல்லாம் இருக்கட்டும், கட்சி அலுவலகத்தின் முன் நின்ற தீக்கதிர் வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்களே? அது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானதா... இல்லையா??


கேள்விகளை தொடுத்துக் கொண்டே போகலாம். சிறப்புச் செய்தியாக்குவீர்களா?


- சந்தேகம் சாமிக்கண்ணு

Saturday, March 6, 2010

குஜராத் நிலைமை தெரியுமா?



அமிதாப் பச்சனுக்கு மல்லிகா சாராபாய்

திறந்த மடல்


எனதருமை பச்சன்ஜி,


குஜராத்தி என்ற முறையில் வாழ்த்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் அறிவுகூர்ந்தவர். புத்திசாலித்தனமான வர்த்தகர். ஆனால் எந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று நீங்கள் விளம்பரங்களில் சொல்கிறீர்ளோ, அதை நான் நம்ப வேண்டுமா? உங்களுக்கு எதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?(பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு சொல்வதாக இருந்தாலும்..!). பிபிஎல், ஐசிஐசிஐ, பார்க்கர் மற்றும் லக்சர் பேனாக்கள், மாருதி வெர்சா, காட்பரி சாக்கலேட்டுகள், நெரோலக் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி, எவரெடி, சஹாரா சிட்டி ஹோம்ஸ், டிஙடமாஸ், பினானி சிமெண்ட் மற்றும் ரிலையன்ஸ். இதுதான் அந்தப் பட்டியல். தற்போது குஜராத்.


உங்கள் வீடு பினானி சிமெண்டால் கட்டப்பட்டதா? காட்பரி சாக்கலேட்டோ அல்லது டாபர் நிறுவனத்தின் ஹாஜ்மோலாவையோ உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா? எந்தப் பேனாவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? விளம்பரத்துக்கான படப்பிடிப்பு நேரத்தைத் தவிர, வேறு சமயத்தில் மாருதி வெர்சா காரை ஓட்டியதுண்டா? வீட்டிற்காக வாங்கச் சொல்லும் நெரோலக் பெயிண்டில் ஈயம் இருக்கிறது. அது உங்களையும், மற்ற பலரையும் கொஞ்சமாக, கொஞ்சமாக விஷமேற்றி விடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?(உங்கள் வீட்டில் அந்த பெயிண்டைதானே பயன்படுத்துகிறீர்கள்..?). இல்லையென்றால், வெறும் பணத்துக்காகத்தான் இந்த விளம்பரங்களில் தோன்றுகிறீர்களா?


ஆனால் எந்தவித நேரடியான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் குஜராத்தை முன்னிறுத்த ஒப்புக்கொண்டீர்கள்? பிராண்ட் குஜராத்தை முன்னிறுத்தும் முடிவுக்கு எப்படி சரி என்று சொன்னீர்கள்? மாநிலத்தின் நிலை என்ன என்பதை கேட்டீர்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த முடிவும், அறிவிப்பும் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு வெளிவந்தது. அதனால்தான் குஜராத்தில் உள்ள நிலைமை பற்றி நீங்கள் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.


அதனால் குஜராத்தி என்ற முறையில், எனது மாநிலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கொடுங்கள். துடிப்பான குஜராத் என்ற பெயரில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை வெறும் 23 விழுக்காடு ஒப்பந்தங்கள்தான் அடைகின்றன என்பதை குஜராத் அரசே ஒப்புக்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பெரும் பணம் படைத்த வணிக நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான மானியங்கள் அள்ளி வழங்கப்படுகின்ற வேளையில், 75 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்பது தெரியுமா?


குஜராத்தை வளப்படுத்த பெரும் முதலாளிகள் வரிசையாக நிற்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரை வளப்படுத்த? நமது ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். குடும்பத்தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயக்குடும்பமே குஜராத்தில் தற்கொலை செய்து கொள்கிறது.


நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு(எந்த சிமெண்டில் கட்டினார்கள் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்..!!) ஏற்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். உப்பளங்களில் இருந்து உப்பு அடித்துச் செல்லப்பட்டது. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.


குஜராத்தின் தலைமை நிர்வாகியாக சித்தரிக்கப்படும் எங்கள் முதல்வரின் தலைமையில் கடனாளிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. இந்தக்கடனைத் தீர்க்க ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது எங்கள் மாநில பட்ஜெட்டில் 25 விழுக்காடாகும்.


இதற்கிடையில், கல்வித்துறையில் சரிவு. ஏழைகளுக்காக புதிதாக எந்த அரசு மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மீனவர்கள் பிச்சைக்காரர்களாக மாறி வருகிறார்கள். பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் "விபத்தால்" 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும். உண்மையான விபரம் எவ்வளவு என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


சோமநாத் கோவிலும், காந்தியும் தன்னை ஊக்குவித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். சோம்நாத் கோவில் மக்களுக்காகக் கட்டப்பட்டது. காந்தியும் மக்களோடு மக்களாக இருந்தவர். உங்களுக்கு உண்மையிலேயே இந்த மாநில மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இருந்தால் உங்கள் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இக்கடிதத்தை படித்து முடிவெடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.


- மல்லிகா சாராபாய்

Friday, March 5, 2010

கடைசி இடமே நமது இலக்கு!



தங்கள் பொருளாதார அணுகுமுறையில் புதுமைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 56வது இடத்திற்கு இறங்கிவிட்டது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு 41வது இடத்தில் இந்தியா இருந்திருக்கிறது.


சுமார் 130 நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத்தள்ளிவிட்டது. முதல் பத்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் இடம் பிடித்துள்ளது.


இந்த ஆய்வு உலக வங்கி, உலகப் பொருளாதார மாமன்றம், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவற்றில் உள்ள விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த ஆய்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.


அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறிய பொருளாதார சிக்கலால் ஐஸ்லாந்து நாடே திவாலானது. ஒட்டுமொத்த நாடே திவாலாகும் அணுகுமுறைதான் உலகிலேயே சிறந்த அணுகுமுறை என்று ஆய்வு கருதினால் தரவரிசையை மேலிருந்து பார்க்க வேண்டுமா அல்லது கீழிருந்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.


வங்கிகள் திவாலில் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா 11வது இடத்தில் இருக்கிறது. அரசுக்கட்டுப்பாட்டில் நிதித்துறையை வைத்திருந்ததால் நெருக்கடியில் சிக்காமல் தப்பிப்பிழைத்த சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுமையைக் கடைப்பிடிக்கவில்லையாம்.


அபாயப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் புதுமை என்று இவர்கள் கருதினால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு புதுமையே அவசியமில்லை. இவர்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் ஈடுபட வேண்டும்.

Thursday, February 25, 2010

தோழர் உ.ரா.வரதராசனின் துயர மரணம்!


தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்வி என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர் மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.


பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரதராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பினை செய்த, பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட ஒரு தோழரின் இந்தத் துயரமான முடிவு கட்சிக்குள்ளும், அவரோடு இணைந்து பணியாற்றிய நம் அனைவருக்கும் மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.


அவர் மரணமடைந்த விதமானது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது இயல்பான ஒன்றே. ஆனால் இந்த துயரார்ந்த நிகழ்வை ஒரு பகுதி ஊடகத்தினர், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் கூறுவது விஷயத்தை திரித்துக் கூறுவது, அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புவது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை, எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்களை விளக்குவது அவசியம் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.


உ.ரா.வரதராசன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு புகார் வந்தது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது. இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூவருமே மாநிலக்குழு உறுப்பினர்கள். அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் கன்வீனராக செயல்பட்டார். மற்றொரு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர்.


விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25ந்தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு பரிந்துரைத்தது. ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், உ.ரா.வரதராசன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக்குழு கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக்குழுவின் கண்டறிதல்களை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டதோடு உ.ரா.வரதராசன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


உ.ரா.வரதராசன் கட்சியின் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், கட்சியின் மாநிலக்குழு முடிவு எடுக்க இயலாது. கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக்குழுவிற்கு அனுப்பியது.கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரா.வரதராசன் தனது நிலையை விளக்கி அனுப்பிய கடிதம் ஆகியவை மத்தியக்குழு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.


இந்தப்பொருள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உ.ரா.வரதராசன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்தியக்குழு முடிவு செய்தது. கூட்டத்தில் பங்கேற்ற 74 மத்தியக்குழு உறுப்பினர்களில் யாரும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆட்சேபிக்கவில்லை. வாக்கெடுப்பின்போது ஐந்து உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மத்தியக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப் போவதாகவும் உ.ரா.வரதராசன் தெரிவித்தார்.


மேற்கூறப்பட்ட வகையில்தான் உரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கட்சி உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது.


பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் அரைகுறையான உண்மைகள் என்ன? உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து விரட்டப்பட்டார் என்பது அவதூறுகளில் ஒன்று. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற ஒழுங்கு நடவடிக்கையின் பொருள், பொருத்தமான கட்சிக்குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்பதுதான். இதைப்பொறுத்தவரை பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழுவில் உ.ரா.வரதராசனை இணைத்துக்கொள்வது என்றும், தொழிற்சங்க அரங்கில் அவருக்கு பணி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது வெளியேற்றுவது என்பதல்ல; உ.ரா.வரதராசன், தொடர்ந்து தனக்குள்ள திறனை பயன்படுத்தி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி தங்களது தவறுகளை சரிசெய்து கொண்டு கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.


கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கைதான் ஒரு கட்சித்தலைவரை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியுள்ளது என்று சித்தரிப்பது முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்ல, இந்த துயரமான நிகழ்வை பயன்படுத்தி கட்சியையும் அதன் தலைமையையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதும் ஆகும். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியிருந்தால் அப்போது இதே ஊடகங்கள், தங்களது கட்சித்தலைவர் மீது ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை கண்டுகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுத்திருக்கும்.


நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்காத நிலையில், கட்சி “புரிந்துகொள்ள முடியாததாக” இருக்கிறது என்றும், இதற்கு முரண்பாடான வகையில் உ.ரா.வரதராசனை “வெளிப்படையாக அவமானப்படுத்தி”விட்டனர் என்றும் கட்சி மீது குற்றம் சாட்டப்படுகிறது. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படாத நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்தியக்குழு பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இதற்குக்காரணம் உ.ரா.வரதராசன், கட்சியில் தரப்படும் பொறுப்பை ஏற்று தனது பணியை ஆற்ற வேண்டும் என்பதே. தன்னுடைய ஊழியர்களை “வெளிப்படையாக அவமதிப்பதில்” மார்க்சிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கையில்லை. உ.ரா.வரதராசன் தன்னுடைய குறைபாடுகளை சரிசெய்துகொண்டு தொடர்ந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கட்சியின் ஸ்தாபனக்கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்தை இழிவுபடுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. மத்தியத்துவம் மற்றும் எதேச்சதிகார அடிப்படையிலேயே உ.ரா.வரதராசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புனைந்துரைக்கப்படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளே இந்த கூற்றில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்தும். அவர் நேரடியாக பணியாற்றிய மாநிலக்குழுதான் அவர் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை துவக்கியது. நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழு பிரச்சனையில் தலையிடுகிறது. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதேச்சதிகாரமாக முடிவெடுக்கக்கூடாது என்ற ஜனநாயக நடைமுறையும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. முறையான விசாரணைக்குப்பிறகு சம்பந்தப்பட்ட தோழரை நேரடியாக அழைத்து அவரது கருத்தையும் நேரடியாக கேட்டபிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்.


உ.ரா.வரதராசனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் கட்சி மேற்கொண்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்தையும் முடிச்சுபோடுவதற்கான முயற்சியும் நடக்கிறது. உ.ரா.வரதராசன் சம்பந்தப்பட்ட விசயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் மத்தியக்குழு நெறிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பே, இந்த விசயம் தொடர்பான புகார் வந்துவிட்டது. நெறிப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அதை சரிசெய்வதே ஆகும். கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கமல்ல.


தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தங்களுடைய முழு நேரத்தையும் வாழ்க்கையையும் கட்சிப்பணிக்காக ஒப்படைத்துள்ள ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது. தோழர்கள் தவறான நிர்ணயிப்புகளுக்கு வரும்போது அல்லது தவறிழைக்கும்போது, அவருடைய ஒட்டுமொத்த பங்களிப்பையும் கட்சி கவனத்தில் கொள்கிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட தோழர் தன்னுடைய தவறை சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற முறையிலேயே அமைந்திருக்கும். இத்தகைய நடைமுறையில் பல்வேறுகட்ட நடவடிக்கைகளுக்குப்பிறகு கடைசி கட்ட நடவடிக்கையாகவே கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்பது அமையும்.


உ.ரா.வரதராசன் விஷயத்தைப் பொறுத்தவரை அவர் தனது பிரச்சனையிலிருந்து மீண்டுவந்து கட்சிக்கும், இயக்கத்திற்கும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்றே கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அது நடைபெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


-பிரகாஷ்காரத்

Tuesday, January 19, 2010

தடுமாறும் நீதி!


முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது போன்று, மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையிடம் புகார் மனு கொடுத்த அந்த ஏட்டின் செய்தி ஆசிரியர் மற்றும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி உட்பட அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். மொத்தத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியான வழக்கில் யாரும் தண்டிக்கப்படவில்லை. கோவலன் கொலையுண்டதற்காக மதுரை நகரத்தின் வீதிகளில் ஒற்றைக் கையில் சிலம்பதனை ஏந்தி கண்ணகி நடந்தாள் என்றும், “தேரா மன்னா, செப்புவது உடையேன்” என்று பாண்டிய நெடுஞ்செழியனிடம் சென்று நீதி கேட்டாள் என்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.


ஆனால் கண்ணகி வழக்கு இன்றைக்கு நடந்திருந்தால், கோவலனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூட கண்ணகியை கூறவைத்திருப்பார்களோ என்னவோ?அன்றைக்கு கன்றைத் தேரில் ஏற்றிக் கொன்றதற்காக மனுநீதி சோழனிடம் சென்று நீதிகேட்டதாம் பசு ஒன்று. இன்றைக்கு நீதிகேட்கச் சென்ற பசுவையும் காணவில்லை. மனுநீதிச் சோழனையும் காணவில்லை.


தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு இந்த மோதலுக்கு சம்பந்தமில்லாத மூன்று உயிர்கள் பலியானதும் கலாநிதி மாறன் மதுரைக்கு வந்து `நீதி’ கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு `நிதி’ கிடைத்தது. கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ள கொலையும் செய்வார்கள், நடந்த கொலைபாதகங்களை மூடி மறைக்கவும் செய்வார்கள்.


இந்த வழக்கில் நீதியைத் தேடும் பயணம் தொடரும். கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.


மதுக்கூர் இராமலிங்கம்


-`புதிய ஆசிரியன்’ ( www.puthiyaaasiriyan.com) மாத இதழில் வெளியான கட்டுரை

Friday, December 11, 2009

மூடி மறைக்கப்படும் படுபாதகச்செயல்


திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் வெறிச்செயல்களால் டிச.10 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தச் செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் உள்பக்கங்களில் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது.

Thursday, December 3, 2009

கம்யூனிஸ்டுகள் சுமப்பது சுகமான சுமை


கே : கம்யூனிஸ்டுகளின் இப்போதைய முக்கிய எதிரி யார்?

ப : கம்யூனிசம்தான். அவர்கள் அதைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. பிரேதம் கனக்கத்தான் செய்யும். அதனால்தான் தடுமாற்றம். அதுதான் சுமை. அதுதான் சோதனை. அதுதான் எதிரி.

* * *

கே : இனி பா.ஜ.க.; இனிமேலும் பா.ஜ.க.; இனியுமா பா.ஜ.க.?

ப : உண்டு; தேவை; ஆமாம்.
* * *
டிச.9 தேதியிட்ட துக்ளக் இதழில் சோ அளித்த பதில்கள்தான் இவை. அண்மைக்காலமாகவே கம்யூனிஸ்டுகளைப் பற்றி அதிகமாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார் சோ. அதனால் கொள்கையே எதிரி என்பது போன்று சித்தரிக்க முனைந்துள்ளார். கனமாக இருப்பதெல்லாம் பிரேதம் என்று முடிவு செய்துவிட்டார் போலும். ராணுவத்தினருக்கான பிரேதப் பெட்டி வாங்கியதில்கூட ஊழல் செய்து சாதனை புரிந்த கட்சியின் ஆதரவாளராயிற்றே.. அதனால்தான் பிரேதம் நினைவுக்கு வருகிறது.

ஆம், கம்யூனிசம் கனக்கத்தான் செய்கிறது. பிரேதம் என்பதால் அல்ல, கனமான கொள்கை என்பதால். கனவான்களுக்காகவே கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேளையில் கனமான சுமைகளை வாழ்க்கையில் சுமந்துகொண்டிருந்த சாமான்யர்களுக்காக உருவான கனமான கொள்கைதான் கம்யூனிசம். கனக்கத்தானே செய்யும். இந்த கனமான கொள்கை மீதான அச்சத்தால்தான் உலகம் முழுவதும் சமூகப்பாதுகாப்புத்திட்டங்களை முதலாளித்துவ அரசுகள் கொண்டு வர நேர்ந்தது.

கம்யூனிசத்தைத் தூக்கி அலைய வேண்டியிருக்கிறது என்று கம்யூனிஸ்டுகள் சலித்துக் கொள்ளவில்லை. அண்மையில் தலைநகர் தில்லியில் நடந்த சர்வதேசக் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாடு இதைத்தான் காட்டியது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேசக் கட்சிகள் புலம்பித்தள்ளவில்லை. தெளிவாக வருங்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டிய பிரகடனத்தை வெளியிட்டது. அதுவும் கனமாகவே உள்ளது, உள்ளடக்கத்தில்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இவர் எதை மாற்றாகக் காட்டுகிறார்? அதைத்தான் இரண்டாவது பதில் காட்டுகிறது. இவரே மூக்கைப்பிடித்துக் கொள்ளும் அளவுக்கு கர்நாடகத்தில் நாறிப் போய்க்கிடக்கும் கட்சியைத் தூக்கிச்சுமக்கிறார். மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்த நரேந்திர மோடியை யோக்கிய சிகாமணி என்கிறார். இதெல்லாம் இவருக்கு கனக்கவில்லை.

தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாராம். அதனால்தான் இனியும் பாஜக உண்டு. இனிமேலும் பாஜக தேவை என்று வக்காலத்து வாங்கும் அவர், இனியுமா பாஜக என்று கேட்கும்போதும் ஆமாம் என்று வலுவாகக் குரல் கொடுக்கிறார். கரன்சிப் பெட்டிகளின் கனம் பற்றிய கவலைகளுடன் அலைபவர்களைத் தூக்கிப்பிடிக்கும் சோவின் தோள்களால் மக்களுக்கான கொள்கை கனமாகவே இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது கனக்கலாம். ஆனால் அது சுகமான சுமை. மக்களுக்கான சுமை. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு சோதனை. தேச விரோத சக்திகளுக்கு எதிரி.

Tuesday, October 20, 2009

குள்ள அப்புவின் சர்க்கஸ் துப்பாக்கியும், தங்க விலையும்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வாங்கும் சக்தியைத்தாண்டி விலை சென்றுவிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள், தங்கத்தின் மீது முதலீடு செய்வது பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை.

இந்த நிலை ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை மேலே, மேலே... மேலே என்று விளம்பரப்பாட்டைப் பாடிக் கொண்டே உயரப் பறக்க ஆரம்பித்தது. சர்வதேசச் சந்தையில் அதிகரித்துவிட்டதே... என்ன செய்வது என்று கையைப் பிசைவதைப் போல அபிநயம் பிடித்துக் காட்டினர் அத்துறையைச் சேர்ந்தவர்கள். அதையும் மீறி இந்தியர்கள் தங்கம் வாங்கினார்கள் என்று விலையேற்றத்திற்கு ஆதரவாக செய்திகளும் வெளிவந்தன. விலையேற்றம் காரணமாக பல திருமணங்கள் தள்ளிப் போயிருக்கின்றன என்பது பிரசுரமாகாத செய்திகளில் ஒன்றாக இருந்துவிட்டது.

அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் குள்ள வேடத்தில் நடித்த கமல்ஹாசன் கையில் ஒரு சர்க்கஸ் துப்பாக்கி இருக்கும். வில்லன் கையில் அந்தத் துப்பாக்கி சிக்கிவிடும். கமல்ஹாசனை குறிவைத்து வில்லன் சுடும்போது துப்பாக்கியின் பின்புறமிருந்து குண்டு கிளம்பி வில்லனையே பதம்பார்த்துவிடும். கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே சொல்வார், அது சர்க்கஸ் துப்பாக்கி. பின்னாடியும் சுடும் என்று. உடனே வில்லன், துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்துக் கொண்டு சுடுவார். அப்போதும் குண்டு அவர் மேல்தான் பாயும். முன்னாலும் சுடும் என்பார் கமல்.

இதுபோல்தான் தங்கத்தின் விலை ஆகிவிட்டது. சர்வதேசச் சந்தையில் ஏறும்போதும் ஏறியது. அங்கு இறங்கும்போதும் இங்கு ஏறுகிறது. ஒரேயொரு வித்தியாசம். படத்தில் அடிபட்டது வில்லன். இங்கு அடிபடுவது பொது மக்கள்.

Sunday, October 18, 2009

"தேசியவாதி நரகாசுரன்" - கற்பனை



தீபாவளி மலருக்கு சிறப்பு பேட்டி கேட்டு பலரைச் சந்திக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

வணக்கம். அத்வானிஜி, தீபாவளிக்கு சிறப்பு செய்தியா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

அத்வானி : நான் அப்புடி பாரபட்சமா பாக்குறதுல்லயே... எப்பவுமே சிறப்பு செய்திதான். ஜின்னா, காந்தஹார், ஜஸ்வந்த்சிங்னு தீபாவளி, தசரா பாத்தா கொடுத்தேன்...??

பத்திரிகையாளர் : இருந்தாலும் தீபாவளின்னா மக்கள்கிட்ட ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...

அத்வானி : ஓ... சரி...சரி.. தீபாவளின்னா நரகாசுரன்தான் நினைவுக்கு வர்றாரு...

பத்திரிகையாளர் : இயல்புதான... எல்லாருக்குமே நினைவுக்கு வருவாரு...

அத்வானி : அது வேற... என்னோட பார்வை வேற... நரகாசுரன் ஒரு தேசியவாதி.

பத்திரிகையாளர் : அப்படியா... சொல்லவே இல்லை...

அத்வானி : அதான் சொல்லிட்டனே... அவரு சமாதி எங்கருக்குனு தெரியாது. தெரிஞ்சா பெரிய மாலை ஒண்ணு வெச்சு தீபாவளி அன்னிக்கு அஞ்சலி செலுத்தலாம்...

பத்திரிகையாளர் : உங்க கட்சிக் கொள்கைக்கு எதிரா போற மாதிரில்ல இருக்கு...

அத்வானி : கட்சியா... அத ஆரம்பிக்குறதயே நான் ஒத்துக்கலை... கட்சி துவக்குறதுக்காக நடந்த கூட்டத்துல நான் கலந்துக்கல...
பத்திரிகையாளர் : இல்லையே... அந்தக்கூட்டப் புகைப்படத்துல நீங்க இருந்தது எங்களுக்கு ஞாபகம் இருக்கே...

அத்வானி : ஃபோட்டோவுல இருப்பேன்... ஆனா கூட்டத்துல இல்லை..

பத்திரிகையாளர் : தீபாவளி அதுவுமா சிறப்பா ஏதாவது பேட்டி கொடுப்பீங்கன்னு பாத்தா விவகாரமால்ல போகுது...

அத்வானி : தீபாவளி கொண்டாடுறதயே நான் ஒப்புக்கலை.. தெரியுமா...

அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்த பத்திரிகையாளர் மன்மோகன்சிங் முன்னால் மூச்சிரைக்க போய் நின்றார்.

(கவலையுடன் காட்சியளிக்கும் மன்மோகன்சிங்) : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் :தீபாவளிக்கு ஒரு சிறப்பு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன். நீங்க கவலையா இருக்குற மாதிரி இருக்கே...

மன்மோகன்சிங் : ஆமா... தீபாவளி அன்னக்கி எல்லாரும் அணுகுண்டு வெடிப்பாங்களே... ஒபாமா ஏதாவது நினைச்சுப்பாரோன்னு கவலையா இருக்கு...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

மன்மோகன்சிங் : ஒரே கோரிக்கைதான்... அணுகுண்டு வெடிய மட்டும் வெடிக்காதீங்கன்னு பெரியவங்க, சின்னவங்கங்களுக்கு கேட்டுக்குறேன்... அமெரிக்க இந்தியர்கள் வெடிச்சுக்கலாம்.. இந்திய இந்தியர்கள் தயவு செஞ்சு வெடிக்காதீங்க... ஒபாமா சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொல்லிட்டா அவ்வளவுதான்... என்னோட காதல் தோல்விக்கு நீங்க காரணமாயிராதீங்க...

அதற்குள் தொலைபேசி அழைப்பு.

மன்மோகன்சிங் : யாரு... குட்ரோச்சியா.. ஹேப்பி தீபாவளி...(என்று உற்சாகமாகிறார்) ஆமா... கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சின்ன வேலைதான்... உங்கள வழக்குலருந்து விடுவிக்குற வேலை... எவ்வளவு நாளாகிப்போச்சு...(மீண்டும் சோகம் அவரைக் கவ்வுகிறது)

இவர் சோகம் நம்மளத்தாக்கி... ம்..ஹூம்.. தாங்காது.. என்றவாறு நகர்கிறார் பத்திரிகையாளர்.

அடுத்து அவர் சந்தித்தது மத்திய அமைச்சர் அழகிரி. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாமே அவர் கையால்தான் இப்போதெல்லாம் வழங்கப்படுகிறது. மனுவில் குத்த குண்டுசி வேணும்னு ஒரு பொதுஜனம் கேட்டால்கூட அவரை அழைத்து அவர் கையால் கொடுக்க வைப்பார்கள் என்ற அளவிற்கு போயுள்ளது.

தீபாவளி வருது... விலைவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருக்கே.. என்று கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு இலவச கைக்குட்டையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அழகிரியே கைக்குட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்குக்கீழ் இருந்த கட்சிக்காரர்கள் சிலர், அடுத்தது அமைச்சரே கண்ணீரைத்துடைத்துவிடும் திட்டம்தான் என்றனர்.

பத்திரிகையாளர் : வணக்கம் சார். தீபாவளிக்கு ஏதாவது...

அழகிரி : அது வட இந்தியப் பண்டிகையாச்சே... இப்பல்லாம் வட இந்தியான்னாலே வெறுப்பாதான் இருக்குது... ஏன்னே புரியலை...

பத்திரிகையாளர் : பருவநிலை ஒத்துக்கலையோ...

அழகிரி : பருவநிலை, சூழ்நிலை, கோப்புநிலைனு எல்லாம்தான் ஒத்துக்க மாட்டேங்குது... மதுரைல இருந்தாதான் தெம்பா இருக்குற மாதிரி இருக்கு...

பத்திரிகையாளர் : என்ன சார்... தீபாவளிக்கு யாருமே சிறப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே...

அழகிரி : அப்படின்னா பல பேர்கிட்ட கேட்டுகிட்டு கடைசியாத்தான் இங்க வந்தீங்களா...?? (சுற்றியிருந்தவர்கள் பத்திரிகையாளரை நோக்கி பாய்ந்தனர்.)

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிய பத்திரிகையாளர் கமலாலயத்திற்குள் நுiஎழகிறார் பத்திரிகையாளர். கூட்டமாகத் தெரிந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் இல.கணேசன்.

பத்திரிகையாளர் : வணக்கம்.. கணேசன்ஜி..

இல.கணேசன் : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பு செய்தி வாங்க வந்தேன்...என்று இழுத்தார்.

இல.கணேசன் : அடடே.. வாங்க.. சிறப்போ சிறப்புதான்... தீபாவளிய ஒட்டி நாடே திரும்பிப்பாக்குற மாதிரி ஒண்ணு செய்யப்போறோம்...

பத்திரிகையாளர் : என்னது அது...இல.கணேசன் : தீபாவளியக் கொண்டாடுற எல்லாரும் எங்க கட்சி உர்ருப்பினர்கலனு அறிவிக்கப்போறோம்...

பத்திரிகையாளர் : அவங்க ஒப்புக்கணுமே...

இல.கணேசன் : ஒப்புக்குறவங்க மட்டும்தான் தீபாவளி கொண்டாடனும்... மத்தவங்கள்லாம் பாகிஸ்தானுக்கு போயிரலாம்... இதக்கண்காணிக்க முத்தாலிக் தலைமைல குழு போட்டிருக்கோம்...

பத்திரிகையாளர் : இதுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்...?

இல.கணேசன் : அதப்பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்... எங்க கட்சில இருக்கணும்னா பாகிஸ்தானத் திட்டணும்... கட்சில இருந்து வெளியேறணும்னா பாகிஸ்தானப் பாராட்டணும்... இதான் கொள்கை...

பத்திரிகையாளர் : நரகாசுரனக் கொன்னதுக்குதான தீபாவளி கொண்டாடுறோம்...

இல.கணேசன் : நஸ்ருதீன்தான் நரகாசுரன்... எல்லை தாண்டி வந்த ஆள்தான். பேர மாத்திக்கிட்டான்...

இளைப்பாறலாம் என்று வந்த இடத்தில் தலைவலி அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தில் பத்திரிகையாளர் வெளியேற முயன்றபோது, இருங்க... உறுப்பினர் கார்டு வாங்கிட்டுப்போய் தீபாவளி கொண்டாடுங்க... என்று தடுத்தார் இல.கணேசன்.

அய்யய்யோ... என்னை விட்டுருங்க... சிறப்புப் பேட்டியே வேண்டாம்.. என்றவாறு ஓடுகிறார் பத்திரிகையாளர்.

யார் மீதோ மோதி விடுகிறார். யார் என்று நிமிர்ந்து பார்த்தால் சாட்சாத் நரகாசுரனே நிற்கிறார்.

நரகாசுரன் : என்னைப் பார்த்தால் பயமாக இல்லையா...??

பத்திரிகையாளர் : யார் நீங்க...

நரகாசுரன் : நான்தான் நரகாசுரன்...

பத்திரிகையாளர் : துவரம்பருப்பு கிலோ 100 ரூபாயைத் தொட்டுக்கிட்டு இருக்குற பயங்கரத்த பாத்த மக்கள் உமக்கெல்லாம் இனி பயப்பட மாட்டார்கள்...

நரகாசுரன் : என்ன...

பத்திரிகையாளர் : இதுக்கு மேலயும் இங்க நின்னா ஏதாவது பெரிய ஜவுளிக்கடை வாசல்ல வர்றவங்கள வரவேற்குறதுக்கு நிறுத்திருவாங்க... போறவங்க, வர்றவங்க எல்லாம் காமெடி பண்ணிருவாங்க...
"அய்யய்யோ" என்று அலறியவாறு நரகாசுரன் ஓடுகிறார்.
பத்திரிகையாளர் நிதானமாக நடந்து செல்கிறார்.

Sunday, October 4, 2009

வரம் தர மறுக்கும் பூசாரி!

கிராமப்புற இந்தியாவில் வெறும் 28.3 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் வாக்குமூலம். வறுமையின் அளவைக் குறைக்க புதிய உத்தியையும் கண்டுபிடித்தார்கள். கிராமப்புற இந்தியர் மாதம் 365 ரூபாய் வருமானம் ஈட்டினால் வறுமைக்கோட்டைத் தாண்டி விடுகிறார் என்பதுதான் அந்த உத்தி. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கிலோரி உணவு அடிப்படையில் கணக்கிட்டால் உதைக்கிறதே என்பது ஆட்சியாளர்களின் கவலை. ஆட்சியாளர்களின் கணக்கு பல ஏழைக்குடும்பங்களை வறுமைக்கோட்டிலிருந்து உதைத்துத் தள்ளியுள்ளது.

இதற்கிடையில் மேலும் புதிய உத்திகளோடு வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை எதிர்கொள்ள(!) சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். இந்தக்குழு தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தங்களைப் பற்றி ஒரு குழு ஆய்வு செய்கிறது என்பது எத்தனை ஏழைகளுக்கு தெரியும் என்பது ஒருபுறம். மறுபுறத்தில், ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் இந்தக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இந்த அறிக்கையின் நிலைமை என்ன ஆகும் என்பதை திட்டக்குழு நடத்திக் காட்டியிருக்கிறது. வறுமைக்கோடு பற்றி கிராமப்புற மேம்பாட்டுத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதை திட்டக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க தற்போதுள்ள வருமான வரம்பின்படி சுமார் 1800 கலோரிகளைத்தான் கிராம மக்களால் பெறமுடியும் என்பது அத்துறையின் கண்டுபிடிப்பு. இதனால் தற்போதுள்ள வருமான வரம்புப்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற வருமான வரம்பை ரூ.700 ஆக உயர்த்தலாம் என்பது அக்குழுவின் பரிந்துரை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்று சொல்வார்கள். இங்கும் மாண்டேக்சிங் அலுவாலியா போன்ற பூசாரிகள் இடைமறிக்கிறார்கள்.

ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள் என்று சொல்வதா... என்று திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். சுரேஷ் டெண்டுல்கரின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அவரும் அபாயச் சங்கை கையிலெடுத்தால் பூசாரி அலுவாலியா பாய்ந்து பிடுங்கி விடுவார் போலிருக்கிறது.

Thursday, September 17, 2009

ஆந்திரா : அம்பலமாகும் தற்கொலை மோசடிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆந்திராவில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் மெயில் டுடே பத்திரிகை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வந்தது. செப்.3 அன்று ராஜசேகர்ரெட்டியின் உடல் கிடைத்ததாக செய்தி வெளியாகியது. அப்போதிருந்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சிலருக்கு அதில் சந்தேகங்கள் எழுந்தன. விசாரித்ததில் அந்த சந்தேகங்கள் சரிதான் என்று தெரிய வந்துள்ளது.

யாராவது இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து பணம் கொடுத்து ராஜசேகர்ரெட்டி இறந்த அதிர்ச்சியில்தான் அவர் இறந்தார் என்று சொல்லச் செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் மாநில அமைச்சர் ஒருவரே நேரிடையாகத் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. மறைந்த முதல்வரைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோன்றச் செய்யவும், ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தவுமே இத்தகைய செய்திகள் மோசடியாகப் பரப்பப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்புப் பட்டியலை வழங்கிக் கொண்டே இருந்தது.

அவர்களின் கடைசி பட்டியலின்படி மொத்தம் 462 பேர் உயிரிழந்தனர். அதில் 402 பேர் மாரடைப்பாலும், 60 பேர் தற்கொலை செய்தும் மரணமடைந்தனர். அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகம் பேர் இறந்தனர். அங்கு 58 பேரும், வாரங்கல்லில் 48 பேரும், கரீம்நகரில் 46 பேரும் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மெயில் டுடே பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை இறுதிச்சடங்களுக்காக காங்கிரஸ்காரர்களால் தரப்பட்டது என்பதும், அதற்குப்பதிலாக ராஜசேகர்ரெட்டியின் மறைவுதான் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல நிர்ப்பந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக, வாரங்கல் மாவட்டத்தின் பரக்கலா தாலுக்காவைச் சேர்ந்த எழுபது வயதான உப்பலய்யா மாரடைப்பால் இறந்து போனார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் மல்லையா கூறினாலும், ஒருமாதமாகவே மூச்சுவிட முடியாமல் உப்பலைய்யா அவதிப்பட்டு வந்ததாக மல்லையாவின் மனைவி லட்சுமம்மா கூறியுள்ளார். ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்சி தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்ட உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் ராஜசேகர்ரெட்டி மறைவின் அதிர்ச்சிச் செய்திதான் உப்பலய்யாவின் மரணத்திற்குக் காரணம் என்று செய்தி போடச் செய்துள்ளார்கள்.

40 வயதான பி.ஸ்ரீஹரி, 80 வயதான சுக்கா சாயம்மா என்ற பெண்மணி, 45 வயதான ராஜமவுலி ஆகியோரின் மரணங்களும் இயற்கையான மரணங்களே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களின் குடும்பங்களின் வாயை அடைக்க காங்கிரஸ்காரர்கள் பணம் தந்துள்ளார்கள். ஹனம்கொண்டாவைச் சேர்ந்த 25 வயதான தீகலா சிரஞ்சீவியின் கதை வித்தியாசமானது. அவருக்கென்று யாரும் கிடையாது. அதோடு அவர் ஒரு மனநோயாளி. செப்டம்பர் 5 அன்று அவர் திடீரென்று தனது உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார். அவரது உடலை வாங்கவோ அல்லது எரிக்கவோ யாரும் இல்லாததால் உள்ளுர் மாணவர் காங்கிரஸ்காரர்கள், இவரும் ராஜசேகர்ரெட்டியின் மறைவின் துயரம் தாங்காததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இத்தகைய மோசடியான தகவல்களைப் பரப்புவதில் ஜகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Thursday, July 16, 2009

ஆறு வித்தியாசங்கள்... கண்டுபிடியுங்களேன்!


"என்ன பாலு சவுக்கியமா.."

பாலு : வாங்க... மணி..(ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள்)

சலூன்காரர் : சார் எப்ப பாத்தாலும் உங்க வீட்டுல எத்தன சேனல்லே பேசுட்டுருக்கீங்களே... வேற மேட்டரே கிடைக்காதா...?

மணி : ஏம்பா... நானே இன்னக்கி வேற ஏதாவதுதான் பேசணும்னுதான் வந்தேன்...

பாலு : அதெல்லாம் சரி... ஆறு வித்தியாசங்கள், கண்டுபிடிங்களேன்...

மணி : என்ன.. படம் காட்டப் போறீங்களா...

பாலு : இல்லப்பா... ஓட்டுப்போட்டு புது அரசாங்கத்த கொண்டு வந்துட்டோம்... முன்னாடி இருந்தவங்கதான் இப்பவும் வந்துருக்காங்க... ஆனாலும் வித்தியாசம் இருக்கே... அதான் ஆறு வித்தியாசம் சொல்லுண்ணேன்...

மணி : எப்பா... வித்தியாசம் அதிகமா இருக்கும்போலருக்கே...

பாலு : சரிப்பா... குறைஞ்சது ஆறு வித்தியாசத்த சொல்லுப்பா...

மணி : சி.எம்.பிதான் முதல் வித்தியாசம்... போன தடவ குறைந்தபட்ச பொது செயல்திட்டம்னு ஒண்ணு இருந்துச்சு...இப்ப இல்ல...

பாலு : சரியா சொன்னீங்க... முக்கியமான வித்தியாசம்தான்..

மணி : இஷ்டத்துக்கு பொதுத்துறை பங்குகள விக்க முடியாதுங்குற நிலை இருந்துச்சு... இப்ப பட்ஜெட்ல அறிவிக்காமயே தனி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க..

பாலு : பெட்ரோல் விலையுயர்வத்தான் ரெண்டாவதா சொல்வீங்கன்னு நெனச்சேன்...

மணி : ஆமா சொல்லிருக்கணும்...வரலாற்றுல முதமுறையா போன ஆட்சிலதான் விலையக் குறைச்சாங்க... இந்த முறை எடுத்தவுடனே கோணல்தான்...

பாலு : ஆமா... போன தடவ ரெண்டு முறை விலை குறைஞ்சுது... அதுவரைக்கும் நமக்கு இருந்த அனுபவமே விலை ஏற்றம்தான்...

மணி : சாமான்ய மனிதர்களுக்கு உதவுற திட்டங்கள் போன தடவ வந்துச்சு... இத நாலாவது வித்தியாசமா சொல்லலாம்...

பாலு : வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்த சொல்றீங்களா...

மணி : ஆமா... கிராமப்புறத்துக்கான இந்தத்திட்டம் நகர்ப்புறத்துக்கும் வந்துரும்னு அறிகுறிலாம் இருந்துச்சு... இப்ப அது மறைஞ்சுருச்சு...

சலூன்காரர் : சார்.... நீங்க உக்காருங்க... இங்க உக்காந்துக்கிட்டே வித்தியாசத்தக் கண்டுபிடிங்க... நானும் என் வேலையப் பாக்குறேன்....

மணி : ஆன்லைனுல அத்தியாவசியப் பொருட்கள விக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு...

பாலு : இப்ப ஒவ்வொண்ணா சத்தமில்லாம எடுத்து விட்டுட்டாங்க... அப்படித்தான...

மணி(சலுhன்காரரைப் பார்த்து) : ஏம்பா... நாங்க ரெண்டு பேரு பேசுறதயும் கேட்டுக்கிட்டே இருக்கியே... ஏதாவது சொல்லேன்...

சலூன்காரர் : சார்... நீங்க சொல்றத நான் எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்... அஞ்சு சொல்லிட்டீங்க... என்கிட்ட கேட்டுருந்தா முத வித்தியாசமே போன தடவ இடதுசாரிக்கட்சிக்காரங்க ஆதரவுல ஆட்சி இருந்துச்சு... இப்ப இல்லன்னு சொல்லிருப்பேன்...

பாலு : சபாஷ்... இவ்வளவு நேரம் மணி சொன்ன வித்தியாசங்கள்லாம் இருக்குறதுக்கு இந்த வித்தியாசம்தான காரணம்... அவங்க ஆதரவோட ஆட்சி இருந்ததுனாலதான் 100 நாள் வேலைத்திட்டம் வந்துச்சு.. மக்கள் சொத்தான பொதுத்துறைக்கு பாதுகாப்பு...

சலூன்காரர் : ஆமா சார்... குறிப்பா அந்த பெட்ரோல் விலைக்குறைப்பு இருக்கு பாருங்க... நெனச்சுப் பாக்க முடியுமா...

மணி : பாத்தீங்களா பாலு... எந்த விஷயம் சாமான்ய மக்கள பாதிச்சுருக்குன்னு...

பாலு : பெட்ரோல், டீசல் விலை கூடுச்சுனா அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் விலை ஏறிடுமே...

மணி : ஆமா... ஆனா கேட்டா பணவீக்கம் குறைஞ்சுருச்சுன்னு புள்ளிவிபரத்த அள்ளித் தெளிக்குறாங்க...

பாலு : சரி.. மணி.. நேரமாச்சு... கிளம்புட்டுமா...

மணி : வாங்க... அடுத்த தடவ வேற மேட்டர் பேசலாம்.. வாங்க..

Wednesday, July 8, 2009

எளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்



காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி சண்டையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், என ம.பொ.சி கேலி செய்வார்.


அது உண்மை என்பதை இன்றைக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் பறைசாற்றும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாடு கமிட்டியிலும் கோஷ்டி சண்டையை மறந்து ஒன்றுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை.


1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப்பட் டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.


கக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.


மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என் னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணி யாத வைராக்கியத்தோடு பிள் ளைகளைப் படிக்கவைத்தார்.


இவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரி யர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப்படாதவர் வாழும்படி நிர்பந்திக் கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்தியநாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.


விடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.


1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவின ரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவை யில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.


1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என் கோபால்சாமி, தலை மையில் பூ.கக்கன், சாமிமுரு கானந்தம், முத்து, விஎஸ் முரு கானந்தம், வி.ஆர். பூவலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன் றைய காலகட்டத்தில் நாடார் களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவுஉரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனை “குருதி சிந்தாப் புரட்சி” என ராஜாஜி வர்ணித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசை யாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக் கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .


காமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.


மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்கார ராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெய ராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார்.


அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.
1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது. 1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது. கக்கனோடு எளிமையும் தியாகமும் காங்கிரசிடம் இருந்து விடைபெற்றுவிட்டது. அவர்கள் கக்கனை மறந்துவிட்டார்கள். ஆனால் நாடு மறக்கக் கூடாது. நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றி உரக்கப் பேசுவோம்.

சு.பொ.அகத்தியலிங்கம்
இணையாசிரியர், தீக்கதிர்

Monday, July 6, 2009

உள் ஒதுக்கீடா? உள் குத்தா?




கெடுவைத்துப் பேசுவது காங்கிரசாருக்கு வழக்கமாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிடுவோம் என்று மன்மோகன் சிங் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, நீங்கள் ஏற்கனவே ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தீர்களே...அப்போது அந்த 100 நாட்கள் கிடைக்கவில்லையா என்று சூடாகவும் சுவையாகவும் கேட்டார்.எப்படியோ மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிச்சயமாக 100 நாட்களுக்குள் ஒழித்து விடுவார். 101வது நாள் யாராவது வேலையில்லாதவர்கள் இருந்தால் மன்மோகன் சிங்கை அணுகலாம்.


மன்மோகன் சிங் அரசு வைத்த அடுத்த கெடு குடியரசுத்தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. 100 நாட்களுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதுதான் அது. குடியரசுத்தலைவர் பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்கும் நிலையில், மக்களவை சபாநாயகராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியின் அதிகார மையமாக பெண் ஒருவர் நீடிக்கும் நிலையில் மகளிர் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது.கேட்டால் சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் இம் மசோதாவை இப்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்றக்கூடாது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்களோடு பேசி கருத்தொற்றுமையை உருவாக்கப்போகிறோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.



அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட இத்தகைய கருத்தொற்றுமையை உருவாக்குவது பற்றி காங்கிரசார் கவலைப்படவில்லை. உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததால் இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், முலாயம்சிங் யாதவை வளைத்துப்போட்டு, காந்தி நோட்டைக் காட்டி ஆட்சியை வெட்கமின்றி தக்கவைத்துக்கொண்டனர். இம்மாதிரி நேரங்களில் அமர்சிங் விசுவரூபம் எடுத்துவிடுவார். எடுத்தார். மகளிர் மசோதா விஷயத்தில் மட்டும் கருத்தொற்றுமை என்று கழுத்தறுப்பு நாடகம் நடத்துகின்றனர். அதிலும் சரத்யாதவ் இம்மசோதவை நிறைவேற்றினால் விஷம் குடித்துச்சாவேன் என்று வீரவசனம் பேசினார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அமுதமும் விஷமும் ஒருசேர வந்ததாம். பகவான் பரமசிவன் விஷத்தை எடுத்துக்குடிக்க பார்வதிதேவிதான் விஷத்தை பரமசிவனின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காமல் தடுத்து உடையவனைக் காப்பாற்றினாராம்.இது புராணக்கதை. ஆனால் நடைமுறையில் ஆணாதிக்க சமுதாயம் அமுதத்தை தான் குடித்துவிட்டு விஷத்தை மட்டுமே பெண்களுக்கு கொடுத்து வருகிறது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு கேட்பதே பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற ஆதிக்க வெறி மனோபாவத்தில்தான்.



மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை நிறுத்துவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்போது இந்தக்கட்சிகளின் சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்கள்தான் பெரும்பாலோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சொல்லப் போனால் எந்தக் கட்சியுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்க, மசோதா நிறைவேறி விட்டால் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து வார்கள் என்று இவர்கள் கட்டை போடுவது மகளிருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கின்றன. அரசு நினைத்தால் நிச்சயம் மசோதாவைநிறை வேற்றிவிடமுடியும்.



அதற்கான அரசியல் உறுதி காங்கிரசுக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.

- மதுக்கூர் இராமலிங்கம்

நன்றி : புதிய ஆசிரியன்
www.puthiyaaasiriyan.com

Friday, July 3, 2009

எப்படித்தயாராகிறது பட்ஜெட்?



பட்ஜெட் உரைக்காக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது கேமராக்களின் கண்கள் அவர் கையில் உள்ள பெட்டி மீதுதான் பதிந்திருக்கும். அந்தப் பெட்டிக்குள் பட்ஜெட் உரை போவதற்குள் ஏழு மலை மற்றும் ஏழு கடல்களைத் தாண்டுகிறது. சத்தமே இல்லாமல் திட்டக்குழுதான்(ஆமாங்க... ஆமாம்... எல்லாத்தையும் தனியார் மயமாக்கனும்னு துடிக்குற அந்த அலுவாலியாதான் இதுக்கு பொறுப்பு!!) துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும். அரசின் பல்வேறு துறைகளிடம் திட்டக்குழுதான் பழைய மற்றும் புதிய திட்டங்களைப் பற்றிப் பேசி தகவல்களை நிதித்துறையிடம் கொண்டு சேர்க்கிறது.

அதேபோல் நிதித்துறையின் ஒரு பிரிவான பொருளாதார விவகாரத்துறையும் திட்டக்கமிஷனைப் போலவே திட்டங்களை அடையாளம் காணும் வேலையைச் செய்கிறது. முதலாளிகள், தொழிலாளிகளை அழைத்து பட்ஜெட்டில் என்ன வேண்டும் என்று இத்துறையினர் கேட்பார்கள். சில கூட்டங்களில் நிதியமைச்சரே கலந்து கொள்வார். தொழிலாளிகள் கேட்டது, கேட்டதோடு நின்றுவிடும். கண்துடைப்பு சமாச்சாரம்தான் என்றாலும் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடக்கின்றன.

நிதியமைச்சகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகிய இரண்டும் தனியாக விபரங்களைத் தயாரிக்கின்றன. கையைக் கடிக்கும் பட்ஜெட்டுகள்தானே நமது ஆட்சியாளர்களின் சாதனை. திட்டங்களை அறிவித்துவிட்டு கூடவே இவ்வளவு பற்றாக்குறை என்று கூறி திட்டத்திற்கு எதிரில் கேள்விக்குறியைப் போடும் வேலை பட்ஜெட்டில் நடைபெறும்.

திட்டக்குழு, பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகியவை அளிக்கும் விபரங்களைக் கொண்டுதான் பட்ஜெட் தயாராகிறது. பட்ஜெட் உரையைக் கணினியில் அடிப்பவர், பிரிண்ட் எடுப்பவர் எல்லாரும் பெட்டி, படுக்கைகளோடு வந்துவிட வேண்டும். பட்ஜெட் வெளியாகும் வரை அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது.

பட்ஜெட் ரகசிய ஆவணம் என்பது இந்தியக் குடிமகன்களுக்குத்தான். ஆட்சியாளர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் கைகளில் முன்கூட்டியே இதன் விபரங்கள் தவழ்கின்றன என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாகும்.

Monday, June 29, 2009

எருமை ஓட்டிய ஏரோப்ளேன்...




மார்ச் 2009 கணக்குப்படி ஜெர்மனியில் வங்கிப்பணிகளை மேற்கொள்வதற்கு 441 வங்கிகள் அனுமதி பெற்றுள்ளன. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியில் இந்த வங்கிகளுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. மோசமான முதலீடுகள் என்று ஒரு பட்டியலை இந்த வங்கிகள் தயாரித்து யார் தோள்களில் ஏறிக்கொள்ளலாம் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மொத்த மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

காந்தி கணக்கு என்று நம் ஊரில் சொல்வார்களே... அதுபோல ஒரு கணக்கைத் துவங்கினால் என்ன என்று அந்த ஊர் சீர்திருத்தவாதிகள் அந்நாட்டு அரசை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த மோசமான முதலீடுகளை தள்ளுபடி செய்து விடுவார்கள். என்ன, பணத்திற்கு எங்கே போவார்களா... இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் தலை இப்போது பயன்படாவிட்டால் பிறகு எப்போது பயன்படப்போகிறது...?

இந்த மோசமான முதலீடுகளை அரசுப்பத்திரங்களாக மாற்றி விடுவார்களாம். அதை அந்த வங்கிகள் இருபது ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்த வேண்டுமாம். எருமை ஏரோப்ளேன் ஓட்டிய கதைதான் போங்கள். இப்போதெல்லாம் அடிக்கடி இக்கதையை சொல்கிறார்கள்.

மக்கள் ஆதரவு மார்க்சிஸ்டுகளுக்கா... கொள்ளையர்களுக்கா..?

பிரவீண் சுவாமியின் நேரடி ரிப்போர்ட்

லால்கார் பகுதியைச் சுற்றியுள்ள காடுக ளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியபோது, சல்போனி யில் இருக்கும் பழங்குடி மக்களிடம் சென்ற மாவோயிஸ்ட்டுகள், தடுப்பு அரண்களை கட்டுமாறு நிர்ப்பந்தித்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு கூடிய அந்த பயங்கரவாதிகளின் உத்தரவுக்கு கீழ் படிந்து கிராம மக்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர்; சாலைகளில் பெரும் பள்ளங் களை வெட்டி துண்டித்தனர். எவரும், அவர்களது உத்தரவுகளை எதிர்த்துக் கேட்கவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல.

ஆனாலும், கடந்த திங்களன்று, இப்படி கடும் நிர்ப்பந்தத்தின் பேரில் தடுப்பு அரண்களை அமைக்க கட்டாயப்படு த்தப்பட்ட ஏராளமான உள்ளூர் மக்களின் சார்பாக துணிச்சலுடன் போங்காராம் லோகர் என்ற கிராமவாசி பேசினார். இந்த “ஒழுங்கீனத்திற்காக” போங்காராம் லோகர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்; அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றப்பட்டார்.

லால்கார் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை, பழங்குடி மக்களின் கோப உணர்வின் வெளிப்பாடு என்று பெரும்பாலான மீடியாக்கள் எழுதுகின்றன. தங்கள் பகுதிக்கு வளர்ச்சியும், நீதியும் மறுக் கப்பட்டதை எதிர்த்தே அவர்கள் இவ் வளவு கோபத்துடன் திருப்பி அடிக்கி றார்கள் என்று எழுதுகிறார்கள். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேயே சென்று, கடந்த 30 ஆண்டுகளாகவே லால்கார் பகுதியில் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், போங்காராம் லோகரின் கதை - இந்தப் பகுதியில் இருக்கும் வெகு மக்களின் வாழ்க்கை - மேற்கண்ட கருத் துக்கள் வெறும் கதைகளே என்பதை உணர்த்துகின்றன.

வளர்ச்சி இல்லையா?

1977-ம் ஆண்டுக்கு செல்வோம்.
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத் தின் லால்கார் பகுதியில் நிலப்பிரபுக் களின் பிடியில் சிக்கியிருந்த ஒட்டு மொத்த கிராமங்களையும் அவர்களிட மிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் விடுவித்தனர்.
இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்கு இலக்காகியுள்ள ஜார்க்ரம், பின்பூர் மற்றும் சல்போனி ஆகிய ஒன்றி யங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2002-03-ம் ஆண்டு வரை 16 ஆயிரத்து 280 ஹெக்டேர் நிலம் விநியோகம் செய்யப்பட் டுள்ளது. இதை மேற்கு வங்க அரசின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் தொடர்பாக கொல்கத்தாவில் இருக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத் தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபராஜிதா பக்ஷி, ஆய்வு செய்துள்ளார். ஜார்க்ரம் ஒன்றியப் பகுதியில் நடத்திய ஆய்வில், “மொத்தமுள்ள குடும்பங்களில் 75 சதவீத குடும்பங்கள் நிலச்சீர்திருத்தத்தால் பயன டைந்தவர்கள். குறிப்பாக, பழங்குடி மக்க ளின் குடும்பங்களில், சுமார் 70 சதவீதம் குடும்பங்கள் விவசாய நிலத்தை பெற்றி ருக்கிறார்கள்; 90 சதவீதத்திற்கும் அதிக மானோர் வீட்டுமனை நிலங்களை பெற் றுள்ளனர். இது முற்றிலும் நிலச்சீர் திருத்தத்தின் விளைவாக கிடைத்த பலனே” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச்சீர்திருத்தம், நாட்டின் இதர பகு திகளில் வாழும் பழங்குடி மக்களை விட இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சுதந்திரத்தையும், வாழ்வுரிமையையும், சுய பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது என் பதே உண்மை.


லால்கார் பகுதி, மாவோயிஸ்ட்டுகளால் “விடுதலை” செய்யப்பட் டிருப்ப தாக, நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் எழுதி வியாபாரம் செய்து கொண்டிருக் கின்றன. ஆனால் அங்கு, பழங்குடி மக்களின் வாழ்நிலை தற்போது கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. அன்றாடம் வனப் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மூலம் இப்பகுதி முழுவதும் இருக்கும் பழங்குடி மக்களுக்கு வருமா னம் கிடைத்து வந்தது. அந்த வருமானம் தற்போது முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த மக்களின் வாழ்க்கையை சீராக வைத்திருந்த அரசின் திட்டங்கள், தற்போது செயல்படுத்த முடியாததால், அவர் களின் வாழ்நிலை மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது.


பூமிதன்சோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மானேக் சிங், “கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, காட்டுப் பகுதிக்குள் நுழைந்து நாங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யவிடாமல், மாவோயிஸ்ட்டுகள் தடுத்து விட்டார்கள். தினந்தோறும் காடுகளில் இலைகளை சேகரித்து சிறிய சிறிய இலை தட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நாங்கள் உற்பத்தி செய்வது வழக்கம். ஒவ் வொரு நாளும் இதற்காக வனத்துறை ஒரு தொழிலாளிக்கு ரூ.70 கூலியாக கொடுத்து வந்தது. தற்போது இது அனைத்தும் கெட்டுப் போய்விட்டது” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

கொள்ளையும் தாக்குதலும்

மாவோயிஸ்ட்டுகள் வழிப்பறியிலும், கொள்ளையிலும் ஈடுபட்டதால் அதை தாங்க முடியாமல் லால்கார் பகுதியிலிருந்து அரசு ஊழியர்களும் வெளியேறியுள் ளனர். இப்பகுதியில் உள்ள கிராமப்புற சத்துணவு மையங்களில் வேலை செய்யும் அப்பாவி அங்கன்வாடி ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கொடுக்க வேண்டு மென்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்; பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் இதே போல இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டுமென்று உள்ளூர் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத் துவர் ஹோனிரன் முர்மு மற்றும் அவரது மருத்துவமனையில் பணியாற்றும் செவி லிப் பெண் பாரதி மஜ்கி ஆகியோர் மிகக் கொடூரமான முறையில் காரில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர், இப்பகுதியில் சுகாதாரப் பணி களும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன.

மக்கள் ஆதரவு யாருக்கு?

இது மட்டுமின்றி, லால்கார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக மக்கள் பெருமளவில் திரண்டு மாபெ ரும் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக ஊதப் படும் செய்திகளை, அப்பகுதியின் தேர்தல் புள்ளி விபரங்கள் முற்றிலும் நிராகரிக் கின்றன.


கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், லால்கார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஜார்க்ரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்ரம் மக்கள வைத் தொகுதியில் கிழக்கு கார்பேடா, மேற்கு கார்பேடா (எஸ்.சி.), சல்போனி, நயாக்ரம் (எஸ்.டி.), கோபிபல்லவபூர் மற்றும் ஜார்க்ரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமின்றி ஜார்க்ரம் மக்களவைத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றுள் ளது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் 1977-ம் ஆண்டு முதல் ஜார்க்ரம் மக்களவைத் தொகுதி இன்றைக்கு வரைக் கும் 32 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமே உள்ளது.

காவல்துறை சோதனைகள்

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம்தேதி சல்போனியில் நடைபெற்ற இரும்பு எஃகு தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார் யாவை படுகொலை செய்ய குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, லால்கார் பகுதி முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனைகளின் போது, காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது; இதில் பலர் காயமடைந்தனர்.


இதைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம்தேதி நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் முதன்மை குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டவரின் உடன் பிறந்த சகோதரரும், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதரவாளருமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாத்ரதார் மகதோ, “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி முழுவதும் சாலைகளை மறித்தனர். காவல்துறையினரை தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.


கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் பணிகளுக்கு கூட காவல்துறையை நுழையவிடக்கூடாது என்று போரோ பெலியா, சோட்டோபெலியா, தலீல்பூர் சவுக் மற்றும் காஸ் ஜங்கிள் ஆகிய கிரா மங்களில் மாவோயி°ட்டுகள் துப்பாக்கி முனையில் “போராட்டம்” நடத்தினர்.


மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” ஆகியவற்றுக்கு ஆதரவாக அப்பகுதி பழங்குடி மக்கள் அனைவரும் அணி திரண்டு விட்டார்கள் என்று கூறப்படுவது உண்மையானால், அதற்கு அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநிலத் திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்க முடியாது.


(பழங்குடி மக்கள் தொகுதியான) ஜார்க்ரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அலை ஏதும் இல்லை. தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட புலின் பிகாரி பாஸ்கி, 5 லட்சத்து 45 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்றார். இது, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரித் ஹன்ஸ்தா பெற்ற 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 வாக்குகளை விட மிகப்பெரும் வித்தியாசம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வெற்றியின் போது, சிபிஎம் வேட்பாளர் பாஸ்கி, லால்கார் கிராமம் உள்ளடங்கிய பின்பூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அச்சத்தின் பிடியில்...

அப்படியானால், மாவோயிஸ்ட்டுகள் எப்படி இவ்வளவு “செல்வாக்கை” பெற் றார்கள்?
இந்த கேள்விக்கு மக்களவைத் தேர்த லின் போதே இத்தொகுதியில் போட்டி யிட்ட ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் சுனிபால ஹன்ஸ்தா ஒரு பேட்டியில் எளிமையான பதில் ஒன்றை அளித்தார். அது: “மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.”

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.


கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசுக்கு எதிராக மேற்படி “காவல்துறை அராஜகங் களுக்கு எதிரான மக்கள் குழு” மக்களை திரட்ட முயன்றபோது, மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவோடு இவ்வமைப்பினர் மேற்கொண்டு வரும் வன்முறையை எதிர்த்து பாரத் ஜகத் மஜ்ஹி மார்வா என்ற பாரம்பரிய பழங்குடி அமைப்பு கடந்த டிசம்பர் 9-ம்தேதி பேல்பகாரியில் ஒரு பேரணி நடத்தியது. இந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானவர்கள்தான்.

எனினும், தங்களை எதிர்த்து பேரணி நடத்தினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அதற்கு தலைமை தாங்கிய பழங்குடி தலைவர் சுதிர் மந்தல், அடுத்த 48 மணி நேரத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிகக் கொடூரமாக துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்.

(ஜூன் 26, இந்து நாளேட்டிலிருந்து)
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்