Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Tuesday, August 16, 2011

"பப பாப்பா... பாப்ப பாப்பா..."


தெய்வத் திருமகள்

வரும்போதே மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஹிலாரி கிளிண்டன்தான் படத்தின் நாயகி என்பதால் முதலில் அமெரிக்கத் திருமகள் என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். எப்போதெல்லாம் குண்டுகள் இந்தியாவில் வெடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் ஹிலாரிகள் வருகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து இவரைப் போன்றவர்கள் வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு தரப்படும் என்பதை மனதில் வைத்துதான் தெய்வத்திருமகள் என்று படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருபுறம், ஆயுத விற்பனையை கன ஜோராக தெய்வத்திருமகள் ஹிலாரி செய்து கொண்டிருக்கிறார். மறுபுறத்தில், அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு "பப பாப்பா... பாப்ப பாப்பா..." என்று மன்மோகன்சிங் பாடி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு "எனக்குத் தெரியாது.." என்று அவர் சொல்வது கலகலப்பூட்டுகிறது. படத்திற்கு சோனியா காந்தி இசையமைத்துள்ளார். ஒபாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திக்விஜய்சிங் குழுவினரின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அக்குழுவில் முகத்தை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்பவராக வரும் ராகுல் காந்தி அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை.

*********

அவன் - இவன்

இப்படத்தில் வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இரு நாயகர்களுமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். நிதானத்தோடு வரும் ஸ்டாலின் உள்ளுக்குள் பதற்றமாக இருப்பதாகவும், எந்நேரமும் முறுக்கிக் கொண்டே இருந்தாலும் உதறலோடு வலம் வருபவராக அழகிரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். காட்சிகள் தானாகவே நகரட்டும் என்று இயக்குநர் கருணாநிதி விட்டிருக்கிறார். முதல் பாதியில் கம்பீரமாக வளைய வந்த துணை நடிகர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொங்கலூர் பழனிச்சாமி போன்றவர்கள் இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் முகத்தை மூடியவாறே வருகிறார்கள். ஆர்க்காட்டார் வரும் கும்மிருட்டுக் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு.

************

காஞ்சனா முனி

இப்படத்தின் நாயகன் பாபா ராம்தேவ் வரும் துவக்கக்காட்சியே திகிலாகத்தான் உள்ளது. இரவு நேர யோகா நிகழ்ச்சி என்று அனுமதி வாங்கிக் கொண்டு "இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை" உண்ணாவிரதம் என்று அறிவித்து விடுகிறார். ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு உண்ணாவிரதப் பந்தலுக்கு ராம்தேவ் வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. பத்தேகால் மணிக்கு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வந்து எப்படியாவது அவரை "பீடா" சாப்பிட வைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு பீடா இருப்பதை கேமரா அற்புதமாகப் படமாக்கியிருக்கிறது.

அவர் மறுக்கவே ஒரு கடிதத்தைக் கையில் திணிக்கிறார்கள். 12 மணிக்கு தானே வந்து பீடாவைத் தரத்தயார் என்று மன்மோகன்சிங் அதில் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு, ம்...ஹூம்... என்று மறுக்கும் வகையில் தலையாட்டிய ராம்தேவ், "தூக்கம் வந்துவிடும். 11 மணிக்கெல்லாம் வந்தால்தான் ஆச்சு.." என்று ஆக்ரோஷமாக பதில் எழுதி ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். பக்கத்தில் இருக்கும் தனது பி,.ஏ. பாலகிருஷ்ணாவிடம், அன்னாவுக்கு வந்ததவிட நமக்குக்கூட்டம் அதிகமா...? என்று அடிக்கடி கேட்டுக் கொள்கிறார். இப்படிப் பரபரப்பான காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும், முடியும்போது ராம்தேவைக் காணவில்லை. நன்றி. வணக்கம் என்று போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

**************

ஆடுகளம்

திஹார் சிறையும், உச்சநீதிமன்றமும்தான் ஆடுகளங்களாக இருக்கின்றன. ராசா மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகிய இருவரும் நடிப்பில் பிச்சு உதறியுள்ளனர். சிறைக்குள் போய் மாதக்கணக்கில் ஆனாலும் கம்பீரமாக காட்சிகளில் தோன்றுகிறார்கள். சிறைக்குள்ளே இருவரும் டென்னிஸ் ஆடும் காட்சிகள் அபாரம். ஒரு முறை சர்வீஸ் போட்டுவிட்டு, "15-0" என்று நடுவர் தொழிலதிபர் பல்வா கூறும்போது, இல்லையில்லை... "70000-0" என்று போடுங்கள் என்கிறார் கல்மாடி. ஆமாம்... அடுத்த சர்வீசும் ஜெயிச்சா "176000-0னு" போடணும் என்கிறபோது அரங்கமே சிரிப்பொலியால் குலுங்குகிறது. உச்சநீதிமன்றத்தில் 2ஜி விவகாரத்துல பிரதமரையுமா உள்ளே போடணும் என்று கேள்விகேட்டுவிட்டு சிறைக்குத் திரும்பிய ராசா, யாத்தே... யாத்தே என்ற பாடலைப் பாடியவாறு ஆடும்போது பலத்த கைதட்டல்.

************
கற்பனை : கணேஷ்

Friday, January 15, 2010

நான் அவன் இல்லை - 3


நான் அவன் இல்லை - 3


கதாநாயகனான என்.டி.திவாரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்திலேயே அப்பாவிப் பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கிலிருந்து விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியே வருவது போன்ற காட்சிதான். அப்பாவிதானோ என்று நினைப்பதற்குள் வில்லத்தனமான காட்சிகள் துவங்குகின்றன. சிக்கியவுடன் இதெல்லாம் செட்டப்...என்று அலறுகிறார் திவாரி. கிளைமாக்சில் சொந்த ஊருக்கு ரகசியமாகத் திரும்புகிறார். ஊரில் இறங்கியவுடன் நான் அவன் இல்லை என்கிற போது வில்லன் திவாரி காமெடி பீஸ் ஆகிவிடுகிறார்.
**********

வேட்டைக்காரன்


பாஜகவின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறார் கதாநாயகர் மோகன் பாக்வத். அத்வானியுடனான மோதல்தான் கதையின் முக்கியமான பகுதி. படத்தின் முதல் பாதியில் அத்வானி தாக்குப்பிடித்தாலும் இரண்டாவது பாதியில் வெள்ளைக் கொடி காட்டுகிறார். வெளியில் அது சமாதானம் போலத் தெரிந்தாலும், சரணாகதி என்பது அவரது வசனங்களில் தெரிகிறது. அடைக்க முடியாத பெரிய ஓட்டையை பாஜகவில் வேட்டைக்காரன் போட்டுள்ளான்.
---------------


அவதார்


ஒபாமாவை நாயகனாக அவதாரம் எடுக்க வைத்த ஆங்கிலப்படம். தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளனர். நோபல் பரிசை ஒபாமா பெற்றுக் கொள்ளும் காட்சியில் தியேட்டரே குலுங்கும் அளவுக்கு சிரிப்பொலி. பரிசைப் பெற சென்று கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு நிமிடம் என்று மேடையில் நின்றவாறே, என்ன... மக்களைக் கொன்று குவிக்க இன்னும் 30 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேவைப்படுகிறார்களா... உடனே அனுப்புகிறேன் என்று சொல்வதால் கூடுதல் சிரிப்பலைகள். பரிசுக்குழுவினர் முணுமுணுக்கிறார்கள், அடுத்த ஆண்டும் கொடுக்க வேண்டி வரும்போலருக்கே... என்று.

Friday, December 18, 2009

மதுரை இன்னும் அங்கதான் இருக்கா...?


தீர்ப்பு வந்தவுடன் போனால் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்திருந்த பத்திரிகையாளர்கள் சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கிறார்கள். தினகரன் ஊழியர்கள் எரிந்து சாம்பலானபோது கொந்தளிப்போடு பேட்டி கொடுத்த கலாநிதி மாறனின் மனநிலை தீர்ப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
பத்திரிகையாளர்கள் : தினகரன் அலுவலகம் தாக்குதல் தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டதே...?
கலாநிதி மாறன்(உற்சாகமாக) : ஆமாம், நீதி வென்றது.
பத்திரிகையாளர்கள் : அலுவலகம் எரிக்கப்பட்டப்ப நீங்க என்ன சொன்னீங்களா அதுக்கு மாறான தீர்ப்பு வந்துருக்கே...
கலாநிதி மாறன் : நீங்கள் வேண்டுமென்றே எதையோ கிளறுகிறீர்கள்... நானாகவே சொல்லிடுறேன்... உங்க எதிர்பார்ப்பு பொய்யாகிரும்.. நான் கடைசியாக மதுரைக்கு போனது இன்னும் நினைவுல அப்படியே இருக்கு... அப்ப சின்னப்பையனா எங்கப்பாவோட விரலைப் புடிச்சுக்கிட்டே போனேன்...அதுக்கப்புறம் மதுரைய பாக்கவே இல்லை... தெற்குப்பகுதிலதான இருக்கு..
பத்திரிகையாளர்கள் : இன்னும் அங்கதான் இருக்கு...நாங்க அதக் கேக்க வரல...
கலாநிதி மாறன் : பின்ன என்ன கேக்கப்போறீங்க... தினகரன்னு சொல்றீங்களே... அப்படி ஒரு பத்திரிகையே இல்லை..அது நின்னு போய் பல வருஷம் ஆச்சு... இதெல்லாம் நீங்க கௌப்பி விட்டதுதான...
பதறிப்போன பத்திரிகையாளர்கள் தயாநிதி மாறனிடமாவது கேட்கலாம் என்று அவரைத் தேடினார்கள். அவர் கோபாலபுரத்தில் இருப்பது தெரிந்து "ஆஹா... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம். கலைஞரிடமும் அப்படியே கேட்டு விடலாம்" என்று அங்கு படையெடுக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி : என்ன... பத்திரிகை அன்பர்கள்லாம் சேந்து வந்துருக்குற மாதிரி இருக்கே.. உங்களுக்கு தொந்தரவு வேணாம்னுதான நானே கேள்வி கேட்டு பதில் தந்துட்டு இருக்கேன்...
பத்திரிகையாளர்கள் : நாங்க கலாநிதி மாறன் வீட்டுல இருந்து வர்றோம்...
கருணாநிதி : இப்பதான் கண்மணி மாறனின் அன்புச் செல்வத்துக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது... நானும் கேள்விப்பட்டேன்...
பத்திரிகையாளர்கள் : என்ன கேள்விப்பட்டீங்க...
கருணாநிதி : தினகரன் பத்திரிகை நின்னு போய் ரொம்ப நாளாச்சுன்னு...
பத்திரிகையாளர்கள் : உறுதியாச் சொல்றீங்களா...

கருணாநிதி : இதுல என்ன இருக்கு... இந்த விஷயத்துல மேற்கு வங்கத்துல என்ன நிலைமையோ அதுதான் இங்கயும்...
அப்போது அங்கிருந்த மத்திய அமைச்சர் தயாநிதிமாறனும் தலையிட்டார், "நாங்க சொல்றத நம்பலைன்னா வெளியில தினகரன் நிருபர் நிக்குறாரு... அவர்கிட்டயே கேட்டுக்குங்க... அப்படியும் நம்பலைன்னா ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா..."
திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போய்க் கலைஞரை நோக்கித் திரும்பினார்கள் பத்திரிகையாளர்கள்.
கருணாநிதி : ஒன்றும் கவலைப்படாதீர்கள். பெரியார் மற்றும் அண்ணாவின் தம்பியாகிய நானே உங்கள் மனநிலையை எடுத்துரைப்பேன். யாரிடம் எடுத்துரைப்பேன். முதல்வராகிய என்னிடமே எடுத்துரைப்பேன்...
எல்லாரும் ஒரே மாதிரியா கூட்டு சேந்துட்டாங்கன்னு சொல்லிவிட்டு ஓடுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
*******

Sunday, October 18, 2009

"தேசியவாதி நரகாசுரன்" - கற்பனை



தீபாவளி மலருக்கு சிறப்பு பேட்டி கேட்டு பலரைச் சந்திக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

வணக்கம். அத்வானிஜி, தீபாவளிக்கு சிறப்பு செய்தியா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

அத்வானி : நான் அப்புடி பாரபட்சமா பாக்குறதுல்லயே... எப்பவுமே சிறப்பு செய்திதான். ஜின்னா, காந்தஹார், ஜஸ்வந்த்சிங்னு தீபாவளி, தசரா பாத்தா கொடுத்தேன்...??

பத்திரிகையாளர் : இருந்தாலும் தீபாவளின்னா மக்கள்கிட்ட ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...

அத்வானி : ஓ... சரி...சரி.. தீபாவளின்னா நரகாசுரன்தான் நினைவுக்கு வர்றாரு...

பத்திரிகையாளர் : இயல்புதான... எல்லாருக்குமே நினைவுக்கு வருவாரு...

அத்வானி : அது வேற... என்னோட பார்வை வேற... நரகாசுரன் ஒரு தேசியவாதி.

பத்திரிகையாளர் : அப்படியா... சொல்லவே இல்லை...

அத்வானி : அதான் சொல்லிட்டனே... அவரு சமாதி எங்கருக்குனு தெரியாது. தெரிஞ்சா பெரிய மாலை ஒண்ணு வெச்சு தீபாவளி அன்னிக்கு அஞ்சலி செலுத்தலாம்...

பத்திரிகையாளர் : உங்க கட்சிக் கொள்கைக்கு எதிரா போற மாதிரில்ல இருக்கு...

அத்வானி : கட்சியா... அத ஆரம்பிக்குறதயே நான் ஒத்துக்கலை... கட்சி துவக்குறதுக்காக நடந்த கூட்டத்துல நான் கலந்துக்கல...
பத்திரிகையாளர் : இல்லையே... அந்தக்கூட்டப் புகைப்படத்துல நீங்க இருந்தது எங்களுக்கு ஞாபகம் இருக்கே...

அத்வானி : ஃபோட்டோவுல இருப்பேன்... ஆனா கூட்டத்துல இல்லை..

பத்திரிகையாளர் : தீபாவளி அதுவுமா சிறப்பா ஏதாவது பேட்டி கொடுப்பீங்கன்னு பாத்தா விவகாரமால்ல போகுது...

அத்வானி : தீபாவளி கொண்டாடுறதயே நான் ஒப்புக்கலை.. தெரியுமா...

அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்த பத்திரிகையாளர் மன்மோகன்சிங் முன்னால் மூச்சிரைக்க போய் நின்றார்.

(கவலையுடன் காட்சியளிக்கும் மன்மோகன்சிங்) : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் :தீபாவளிக்கு ஒரு சிறப்பு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன். நீங்க கவலையா இருக்குற மாதிரி இருக்கே...

மன்மோகன்சிங் : ஆமா... தீபாவளி அன்னக்கி எல்லாரும் அணுகுண்டு வெடிப்பாங்களே... ஒபாமா ஏதாவது நினைச்சுப்பாரோன்னு கவலையா இருக்கு...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

மன்மோகன்சிங் : ஒரே கோரிக்கைதான்... அணுகுண்டு வெடிய மட்டும் வெடிக்காதீங்கன்னு பெரியவங்க, சின்னவங்கங்களுக்கு கேட்டுக்குறேன்... அமெரிக்க இந்தியர்கள் வெடிச்சுக்கலாம்.. இந்திய இந்தியர்கள் தயவு செஞ்சு வெடிக்காதீங்க... ஒபாமா சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொல்லிட்டா அவ்வளவுதான்... என்னோட காதல் தோல்விக்கு நீங்க காரணமாயிராதீங்க...

அதற்குள் தொலைபேசி அழைப்பு.

மன்மோகன்சிங் : யாரு... குட்ரோச்சியா.. ஹேப்பி தீபாவளி...(என்று உற்சாகமாகிறார்) ஆமா... கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சின்ன வேலைதான்... உங்கள வழக்குலருந்து விடுவிக்குற வேலை... எவ்வளவு நாளாகிப்போச்சு...(மீண்டும் சோகம் அவரைக் கவ்வுகிறது)

இவர் சோகம் நம்மளத்தாக்கி... ம்..ஹூம்.. தாங்காது.. என்றவாறு நகர்கிறார் பத்திரிகையாளர்.

அடுத்து அவர் சந்தித்தது மத்திய அமைச்சர் அழகிரி. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாமே அவர் கையால்தான் இப்போதெல்லாம் வழங்கப்படுகிறது. மனுவில் குத்த குண்டுசி வேணும்னு ஒரு பொதுஜனம் கேட்டால்கூட அவரை அழைத்து அவர் கையால் கொடுக்க வைப்பார்கள் என்ற அளவிற்கு போயுள்ளது.

தீபாவளி வருது... விலைவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருக்கே.. என்று கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு இலவச கைக்குட்டையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அழகிரியே கைக்குட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்குக்கீழ் இருந்த கட்சிக்காரர்கள் சிலர், அடுத்தது அமைச்சரே கண்ணீரைத்துடைத்துவிடும் திட்டம்தான் என்றனர்.

பத்திரிகையாளர் : வணக்கம் சார். தீபாவளிக்கு ஏதாவது...

அழகிரி : அது வட இந்தியப் பண்டிகையாச்சே... இப்பல்லாம் வட இந்தியான்னாலே வெறுப்பாதான் இருக்குது... ஏன்னே புரியலை...

பத்திரிகையாளர் : பருவநிலை ஒத்துக்கலையோ...

அழகிரி : பருவநிலை, சூழ்நிலை, கோப்புநிலைனு எல்லாம்தான் ஒத்துக்க மாட்டேங்குது... மதுரைல இருந்தாதான் தெம்பா இருக்குற மாதிரி இருக்கு...

பத்திரிகையாளர் : என்ன சார்... தீபாவளிக்கு யாருமே சிறப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே...

அழகிரி : அப்படின்னா பல பேர்கிட்ட கேட்டுகிட்டு கடைசியாத்தான் இங்க வந்தீங்களா...?? (சுற்றியிருந்தவர்கள் பத்திரிகையாளரை நோக்கி பாய்ந்தனர்.)

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிய பத்திரிகையாளர் கமலாலயத்திற்குள் நுiஎழகிறார் பத்திரிகையாளர். கூட்டமாகத் தெரிந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் இல.கணேசன்.

பத்திரிகையாளர் : வணக்கம்.. கணேசன்ஜி..

இல.கணேசன் : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பு செய்தி வாங்க வந்தேன்...என்று இழுத்தார்.

இல.கணேசன் : அடடே.. வாங்க.. சிறப்போ சிறப்புதான்... தீபாவளிய ஒட்டி நாடே திரும்பிப்பாக்குற மாதிரி ஒண்ணு செய்யப்போறோம்...

பத்திரிகையாளர் : என்னது அது...இல.கணேசன் : தீபாவளியக் கொண்டாடுற எல்லாரும் எங்க கட்சி உர்ருப்பினர்கலனு அறிவிக்கப்போறோம்...

பத்திரிகையாளர் : அவங்க ஒப்புக்கணுமே...

இல.கணேசன் : ஒப்புக்குறவங்க மட்டும்தான் தீபாவளி கொண்டாடனும்... மத்தவங்கள்லாம் பாகிஸ்தானுக்கு போயிரலாம்... இதக்கண்காணிக்க முத்தாலிக் தலைமைல குழு போட்டிருக்கோம்...

பத்திரிகையாளர் : இதுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்...?

இல.கணேசன் : அதப்பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்... எங்க கட்சில இருக்கணும்னா பாகிஸ்தானத் திட்டணும்... கட்சில இருந்து வெளியேறணும்னா பாகிஸ்தானப் பாராட்டணும்... இதான் கொள்கை...

பத்திரிகையாளர் : நரகாசுரனக் கொன்னதுக்குதான தீபாவளி கொண்டாடுறோம்...

இல.கணேசன் : நஸ்ருதீன்தான் நரகாசுரன்... எல்லை தாண்டி வந்த ஆள்தான். பேர மாத்திக்கிட்டான்...

இளைப்பாறலாம் என்று வந்த இடத்தில் தலைவலி அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தில் பத்திரிகையாளர் வெளியேற முயன்றபோது, இருங்க... உறுப்பினர் கார்டு வாங்கிட்டுப்போய் தீபாவளி கொண்டாடுங்க... என்று தடுத்தார் இல.கணேசன்.

அய்யய்யோ... என்னை விட்டுருங்க... சிறப்புப் பேட்டியே வேண்டாம்.. என்றவாறு ஓடுகிறார் பத்திரிகையாளர்.

யார் மீதோ மோதி விடுகிறார். யார் என்று நிமிர்ந்து பார்த்தால் சாட்சாத் நரகாசுரனே நிற்கிறார்.

நரகாசுரன் : என்னைப் பார்த்தால் பயமாக இல்லையா...??

பத்திரிகையாளர் : யார் நீங்க...

நரகாசுரன் : நான்தான் நரகாசுரன்...

பத்திரிகையாளர் : துவரம்பருப்பு கிலோ 100 ரூபாயைத் தொட்டுக்கிட்டு இருக்குற பயங்கரத்த பாத்த மக்கள் உமக்கெல்லாம் இனி பயப்பட மாட்டார்கள்...

நரகாசுரன் : என்ன...

பத்திரிகையாளர் : இதுக்கு மேலயும் இங்க நின்னா ஏதாவது பெரிய ஜவுளிக்கடை வாசல்ல வர்றவங்கள வரவேற்குறதுக்கு நிறுத்திருவாங்க... போறவங்க, வர்றவங்க எல்லாம் காமெடி பண்ணிருவாங்க...
"அய்யய்யோ" என்று அலறியவாறு நரகாசுரன் ஓடுகிறார்.
பத்திரிகையாளர் நிதானமாக நடந்து செல்கிறார்.

Monday, June 22, 2009

ராகுல் சாமி வந்துருக்காக...



தலித்துகளின் பகுதிகளுக்கு செல்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அவருடன் தங்கபாலு, ஞானதேசிகன் மற்றும் பலர்.
(திடீரென்று தலித் ஒருவரின் குடிசைக்குள் நுழைகிறார்)

தலித் குடும்பத்தலைவர்(மனைவியிடம்) : ஏய்... யார் வந்துருக்கா பாரு... ராகுல் சாமி வந்துருக்காக...


மனைவி : வாங்க சாமி... வாங்க...


ராகுல் (தலித்துகளிடம்) : நோ...நோ... ராகுல் காந்தி... நாட் ராகுல்சாமி...


ஞானதேசிகன் (தலித்துகளிடம்) : அவர் பேரு ராகுல் சாமி இல்ல... ராகுல் காந்தி...

கு.தலைவர் : தெரியும் சாமி....

ஞானதேசிகனைப் பார்த்து ராகுல்(ஆங்கிலத்தில்) : ஹா.. ஹா... நீங்களும் சாமியா...

ராகுலின் மகிழ்ச்சியைக் கண்டு குடும்பத்தலைவரும், அவர் மனைவியும் பூரித்துப் போகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது மொழிபெயர்ப்பால் சிக்கிக் கொண்ட ஞானதேசிகன் முழிக்கிறார். ராகுல் சொல்வதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லக்கூடாது என்ற உறுதிமொழியை மீண்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களின் உரையாடலை மொழி பெயர்க்கத் துவங்குகிறார்.

ராகுல் : எப்படி இருக்கீங்க...

கு.தலைவர் : நல்லா இருக்கோம் சாமி...

ராகுல்(சாமி என்று சொல்வதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல்) : பணவீக்கம் குறைஞ்சுருச்சு...

கு.தலைவர் : அய்யோ... பாவம்...

கு.தலைவர்முகம் கோணலாகிப் போனதால் பதற்றமடைந்த ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : நீங்க ஒழுங்கா சொல்லலை போலருக்கு...

ஞானதேசிகன் : அய்யய்யோ.. வீக்கம்னு நீங்க சொன்னத அப்படியேதான் சொன்னேன்.. ஏதோ அடிபட்டு இப்ப வீக்கம் குறைஞ்சுட்டதா அவங்க நெனச்சுட்டாங்க... நீங்க சொல்றத அப்புடியே தமிழ்ல சொல்றதத்தவிர வேற வழி எனக்கு இல்லை..

கு.தலைவர் : என்னங்க நாங்க எதுவும் தப்பா சொல்லிட்டோமா...??

ஞானதேசிகன்(மனசுக்குள்) : ஆஹா... என்னை சிக்க வெக்காம விடமாட்டாங்க போலருக்கே..
ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : பணவீக்கம் எதிர்மறையாப் போயிருச்சுன்னு அவங்களுக்கு விளக்கமாச் சொல்லுங்க...

ஞானதேசிகன் : அதாவது, இப்ப நீங்க ஒரு கார் வாங்குறீங்கன்னு வெச்சுக்கோங்க...

மகன் : அய்... காரு(என்று கூறிவிட்டு கிழிஞ்ச டயரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்)

கு.தலைவர் : காரா... எதுக்கு...

ஞானதேசிகன் : அத விடுங்க... போன வருஷம் தக்காளி கிலோ அஞ்சு ரூபாயா இருந்துச்சு... இப்ப ஒரு கிலோ கேட்டீங்கன்னா தக்காளியும் குடுத்து அஞ்சு ரூபாயும் கைல கொடுத்து அனுப்புவாங்க...

அதிர்ந்து போன தங்கபாலு, "அப்படிலாம் இல்ல..." என்றார் அவசர, அவசரமாக.

கு.தலைவர் : அதான் எனக்குத் தெரியுமே... உங்க தலைவர் என்ன சொல்றார்னு சொல்லுங்க சாமி....

தங்கபாலுவையும் சாமின்னு சொன்னதும் ராகுல் உற்சாகமடைகிறார்.

தங்கபாலு : விலையெல்லாம் குறைஞ்சுருச்சுன்னு சொல்றாரு...

மனைவி : அப்படின்னா சாமி சொன்னது உங்களுக்கும் புரியலையா...

ராகுல் : என்ன சொல்றாங்க...

தங்கபாலு : ஒண்ணுமில்ல சாமி...(அய்யய்யோ... இந்த சாமி விவகாரம் நமக்கு தொத்திக்கிச்சே என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறார்) நாம சொல்றது அவங்களுக்குப் புரியல...

ராகுல் : அமெரிக்கா உடன்பாட்டால மின்சாரம் வரும்குறத சொன்னா நம்புவாங்களா...

தங்கபாலு : இந்த வீட்டுக்கு இன்னும் மின் இணைப்பே குடுக்கலை...

ஞானதேசிகன் : நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா...

ராகுல் : சொல்லுங்க...

ஞானசேகரன் : அடுத்த வீட்டுக்கு போலாமே...

ராகுல் : சாப்பாடும் இங்கதாங்குறதுதான நம்ம திட்டம்...

தங்கபாலு : (மனசுக்குள்) இவர் போற வீட்டுல சமைச்சததான் இவ்வளவு நாளா சாப்புட்டோம்னு நெனச்சுட்டாரு போலருக்கே...

செல்போன் அடிக்கிறது.
கையில் எடுத்த ராகுல் : ஹலோ... யெஸ் ராகுல் சாமி... ஸாரி... நோ... நோ... ராகுல் காந்தி..

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

Wednesday, May 13, 2009

தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறையாக

வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் முடிவுகள் வெளியிடுவது மற்றும் அதுவரையிலான தேர்தல் ஒளிபரப்புகள் குறித்து “பன்” டி.வி. நிறுவனத்தில் ஆலோச னைக்கூட்டம் நடைபெறுகிறது.

தலைமை நிர்வாகி : இன்னைக்கி வாக்குப்பதிவு முடிஞ்சுது...

செய்தி ஆசிரியர் : ஆமா சார்... இனிமே நாம கணிப்புகள வெளியிடலாம்...

தலைமை நிர்வாகி : மூணு நாள்ல நம்ம ரேட்டிங் எங்கயோ போயிடணும்...

செய்தி ஆசிரியர் : முடிவு வர்றப்போ மறுபடி விழுந்துருமே...

தலைமை நிர்வாகி : அத அப்புறம் பாப்போம்...நம்ம ஆதரவு அணி ஜெயிச்ச மாதிரி கணிப்புகள வெளியிடுங்க... நம்ம போற வேகத்துல 16 ஆம் தேதி வர்ற முடிவுகளே ஒண்ணு மில்லாம போயிடணும்...

செய்தி ஆசிரியர் : உண்மைதான் சார்... முடிவுகள் என்ன... நம்ம அணிக்கே ஒண்ணு மில்லாம போயிடும்... அதனால இப்பவே நம்ம அணிக்கு நெறய சீட் கிடைக்குறமாதிரி கணிக்கணும்...

ஊழியர் 1 : அகில இந்திய அளவுல யார் ஆட்சி அமைப்பாங்கன்னு போடணுமா....??

தலைமை நிர்வாகி : ஆமா... அதுல திமுக வுக்கு 28 சீட் கிடைச்சா மத்தியில என்ன நிலைமைன்னு யாராவது ரெண்டு பேர பேச வெக்கணும்...

செய்தி ஆசிரியர் : திமுக அவ்வளவு சீட்ல நிக்கக்கூட இல்லையே சார்...

தலைமை நிர்வாகி : நீங்க டிஎன்என்-ஒய்பிஎன், கய்ம்ஸ் டவ், கல் தக் மாதிரி டி.வி.லாம் பாக்குறதில்லையா... அவங்கள்லாம் கூச்சப்படாம அதிமுகவுக்கு 24, திமுகவுக்கு 23னு சொல்றாங்க...

ஊழியர் 2 : விவாதிக்க வர்றவங்க கூட்டிப்பாத்தா...

தலைமை நிர்வாகி : அதுக்குத்தான் இந்த மாதிரி டி.வி.லாம் பாக்கலையான்னு கேட்டேன்... இது எப்படினுலாம் கேட்கக்கூடாது.. இத வெச்சு விவாதம் பண்ணத்தான் கூப்புட்டோம்னு ஒரே அடியா போட்டுறாங்க...

செய்தி ஆசிரியர் : திமுக யார் கூட சேர்றதா கணிக்கணும்...

தலைமை நிர்வாகி : யார் கூட வேணும்னாலும் சேரும்னு கணிப்பு இருக்கணும்...

செய்தி ஆசிரியர் : இது மட்டும் இயல்பா சொல்லணுமோ...?

ஊழியர் 3 : அதிமுக...

செய்தி ஆசிரியர் : 23 சீட்ல ஜெயிச்சு படுதோல்வினு கணிப்பு இருக்கணும்... அப்படித்தான சார்...

தலைமை நிர்வாகி : இப்பதான் நீங்க நடுநிலையாப் பேச ஆரம்பிச்சுருக்கீங்க...

ஊழியர் 1 : மூன்றாவது அணிக்கு சீட் கம்மியாக் காட்டணும்...

செய்தி ஆசிரியர் : சார்... நம்ம ஆளுங்க ஜொலிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்...

ஊழியர் 2 : மத்தில ஆட்சி அமைக்க நாம யாருக்கு ஆதரவு கொடுக்குறோம்...

தலைமை நிர்வாகி : யார் ஆட்சி அமைக்குறாங்களோ அவங்களுக்குத்தான்..

ஊழியர் 3 : விவாதத்திற்கு யாரக் கூப்புடணும்...

ஊழியர் 2 : நம்ம அணில ஒருத்தர், அணிய ஆதரிக்குற ஒருத்தர், எதிர் அணிகளத் தாக்குற ஒருத்தர்.. இப்புடி மூணு பேர்.. அப்பதான் நடுநிலையா இருக்கும்...

தலைமை நிர்வாகி : ஆஹா... பிரமாதம்... நம்ம அணில ஒரே மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டோமே...

ஊழியர் 3 : அகில இந்திய அளவுல...

செய்தி ஆசிரியர் : காங்கிரஸ் அணிக்கும், பாஜக அணிக்கும் போட்டி இருக்குற மாதிரி கணிப்பு இருக்கணும்...

ஊழியர் 2 : ஆனா மூணாவது அணிக்கு நெறய சீட் வரும்போல இருக்கே... நம்ம கணிப்ப நம்புவாங்களா...

தலைமை நிர்வாகி : நம்புறதுக்கா கணிப்பு போடுறோம்.. நம்ம ஆசையக் கணிப்புன்னு போடுறோம்...

ஊழியர் 1 : மூணாவது அணிக்கு கம்மியா கிடைக்கும்னு பொய் சொல்ல ஏதாவது ஆதாரத்தக் காட்டணுமே...

செய்தி ஆசிரியர் : மம்தா பானர்ஜியே சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுவோம்...

ஊழியர் 3 : காங்கிரஸ், பாஜக அணிகளுக்கு கிடைக்குற சீட்னு நீங்க சொல்ற மாதிரி போட்டா 800 சீட் கிட்ட வந்துரும் போலருக்கே...

தலைமை நிர்வாகி : நம்ம கிட்ட யாரும் கேட்க முடியாதுல்ல...

செய்தி ஆசிரியர் : நம்ம அணிக்கு ஆதரவான நிலை இல்லைனா...

தலைமை நிர்வாகி : முதல்ல முடிவுகள மாத்திச்சொல்லணும்... அப்புறம் பாட்டுப் போடலாம்... பின்ன என்ன... இந்தியாவின் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகன்னு அறிவிச்சுட்டு ஏற்கெனவே நாலுதடவ ஒளிபரப்பு செஞ்ச படம் ஒண்ணப் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்...

Saturday, April 18, 2009

நாம புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...

தொலைபேசி ஒலிக்கிறது
கையில் எடுக்கும் அத்வானி : ஹலோ..

மறுமுனையில் மன்மோகன்சிங் : என்ன அத்வானிஜி... பேப்பர் பாத்தீங்களா...

அத்வானி : ஆமா... நாம ரெண்டு பேரும் இறுக்கமா இருந்ததா செய்தி வந்திருக்கு,..

மன்மோகன்சிங் : நாம சந்தோஷமா சிரிச்சுப் பேசுற மாதிரியா நிலைமை இருக்கு...

அத்வானி : அதான... மூணாவது அணி கானல் நீர்னு சொல்லிப்பாத்தேன்... ஆனா எங்க ஆளுங்களே நம்ப மாட்டேங்குறாங்க....

மன்மோகன்சிங் : சொன்னது நீங்களாச்சே... அப்புறம் எப்புடி நம்புவாங்க....

அத்வானி : சில சமயம் என்னை விட தைரியமா நீங்க பேசுறீங்க...

மன்மோகன்சிங் : எதச் சொல்றீங்க... மாநிலக்கட்சிகளால பிரயோஜனம் இல்லைனு சொன்னதச் சொன்னீங்களா...

அத்வானி : ஆமா... நான் எப்புடி சொல்வேன்... நிதிஷ் குமார் கோவிச்சுக்குவார்... ஏன்... மோடியே கோவிச்சுக்கிட்டாலும் ஆச்சரியமில்லை...

மன்மோகன்சிங் : எங்க கூட இருந்த மாநிலக்கட்சிலாம் கழண்டுருச்சே... திமுக மட்டும்தான் இருக்கு... அவங்களுக்கு வேற வழியில்ல...

அத்வானி : எங்க கூட இருக்குற நிதிஷ்குமாரும் அப்படித்தான்....

மன்மோகன்சிங் : நீங்கமட்டும்னா தேர்தல்ல ஜெயிச்சுரலாம்னு நெனச்சுட்டுருந்தோம்...

அத்வானி : நாங்களும் அப்படித்தான் நெனச்சோம்... ஆனா போற போக்கப்பாத்தா நம்ம ரெண்டு பேருக்குமே கிடைக்காது போலருக்கே...

மன்மோகன்சிங் : ஆமாமாம்... ரொம்ப நாளைக்கப்புறம் நெறய இடங்கள்ல தனியா நிக்குறோம்...

அத்வானி : தனியா நிறுத்திட்டாங்கன்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே... அதே நிலைமைலதான நீங்களும் இருக்கீங்க... காந்தி சொன்னது நடந்துரும்போல இருக்கு...

அத்வானி : எதச் சொல்றீங்க...

மன்மோகன்சிங் : சுதந்திரம்தான் கிடைச்சுருச்சே... காங்கிரசக் கலைச்சுறலாமேன்னாரு...

அத்வானி : வருண்காந்தி அப்படி எதுவும் சொல்லலியே...

மன்மோகன்சிங் : ஓ... அவருதான் உங்களுக்கு காந்தியா...?? அசல் அகிம்சைவாதியத்தான் புடிச்சுருக்கீங்க..

அத்வானி : டைட்லர், சஜ்ஜன்குமார்லாம் காந்தியோட வாரிசுகள்தானே...?

மன்மோகன்சிங் : ரெண்டு கட்சி முறை வேணும்னு சொல்றது எவ்வளவு வசதியா இருக்கு பாத்தீங்களா... நீங்க என்ன யோக்யம்னு கேட்டுட்டு மாத்தி, மாத்தி பேசிட்டே இருக்கலாம்...

அத்வானி : இந்த முறை அது செல்லுபடியாகாது போலருக்கே...

மன்மோகன்சிங் : அந்த உதறல் இருந்துக்கிட்டே இருக்கு...

அத்வானி : இருந்தாலும் இப்படி நாம பேசுனதுனால இறுக்கம் குறைஞ்சுருச்சு பாத்தீங்களா... நாம புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு ஒரு ஆட்டமே போடலாம் போலருக்கு... ஆனா பிரதமர்தான் ஆகப்போறதில்லை... வேட்பாளர் பதவியும் பறிபோயிருமே...

மன்மோகன்சிங் : மக்கள் பிரச்சனயப் பத்தி பேசுனாதான் இறுக்கம் கூடிருது...

அத்வானி : கிழடு, பொம்மை, ராமர் கோவில்னு பேசிக் கழிப்போம்...
( இறுக்கம் குறைகிறது. தொலைபேசியை இருவரும் வைக்கிறார்கள்.)

Sunday, April 5, 2009

"சிரிப்பு காங்கிரஸ் "



தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.


சோனியா : நமஸ்கார்... நேரம் போய்ட்டே இருக்கு... எப்படி நம்ம பிரச்சாரத்தக் கொண்டு போலாம்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : நம்ம செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வி நல்ல காரியம் செஞ்சிருக்கார்... நம்ம ஆட்சினாலதான் எட்டு ஆஸ்கர் விருதுன்னு ஒரே போடா போட்டுருக்காரு...

ராகுல்காந்தி : இப்படிலாம் சொன்னா ஜனங்க நம்புவாங்களா...

மன்மோகன்சிங் : நம்புறதுக்கா சொல்றோம்... ஏதாவது சொல்லணும்ல...

திக்விஜய்சிங் : இப்படி ஏதாவது சொன்னாதான் நம்மள எதிர்த்து கேள்வி கேப்பாங்க... மத்த விஷயங்கள்லாம் பின்னால போயிரும்..

ராகுல் காந்தி : நம்ம பிரச்சாரக்குழுவுக்கு சிங்விய தலைவராப் போட்டுருவோம்...

சிங்வி : அப்ப எனக்கு தேர்தல்ல சீட் கிடையாதா...??

குலாம்நபி ஆசாத் : யாரத் தலைவராப் போடணும்குறத சீட் எல்லாம் குடுத்த பிறகு முடிவு பண்ணலாம்... சீட் இல்லாதவருக்கு இதக் கொடுத்து ஏமாத்திடலாம்...

மன்மோகன்சிங் : இந்த பொருளாதார...

(குறுக்கே புகுந்து) ப.சிதம்பரம் : அதுக்கான உரைய ரெடி பண்ணிட்டேன்... சீர்திருத்தங்கள்னு சொல்லி பாஜக தனியார் மயம், தாராளமயம், உலகமயம்னு மக்கள ஏமாத்தப் பாத்தாங்க... காங்கிரஸ் ஆட்சிக்கு வரலைன்னா எல்லாத்தையும் வித்திருப்பாங்க...

எஸ்.எம்.கிருஷ்ணா : இது நீங்க எழுதுன மாதிரி தெரியலையே...

தங்கபாலு : அவரு நாற்காலில பாருங்க... கருப்பு கோட்டு தொங்குது...இங்கருந்து கிளம்புற அவரு வண்டி கோர்ட்டு காம்பவுண்டுக்குள்ளதான் போய் நிக்கும்..வாதத்திறமைய இங்க பரிசோதனை பண்ணிப் பாக்குறாரு...

குலாம் நபி ஆசாத் : எனக்குதான் அதிக வேலை(அலுத்துக் கொள்கிறார்)சோனியா காந்தி : என்ன சொல்றீங்க...??

திக்விஜய்சிங் : ஆமா, சோனியாஜீ... அவர தமிழ்நாட்டுக்கு பொறுப்பா போட்டுட்டீங்க... தங்கபாலுவுக்கு சீட் கொடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, இளங்கோவனையெல்லாம் சரிக்கட்டணும்..அப்புறமா இளங்கோவனுக்கு சீட் குடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, தங்கபாலுன்னு எல்லாத்தையும் சரி பண்ணணும்... பிரபுவுக்கு சீட் தர அவரைத் தவிர எல்லாருகிட்டயும் பேசணும்... சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க அவரையே சரிக்கட்டணும்.. இப்புடி எப்ப பாத்தாலும் பிக்கல், பிடுங்கலோட இருப்பார்... வேற என்னத்த செய்ய முடியும்..??

மன்மோகன்சிங் : அப்படின்னா நானே பிரச்சாரக்குழுவுக்கு தலைமை ஏத்துக்குறேன்... எனக்குதான் தேர்தல்ல நிக்க சீட் இல்லையே...

அகமது படேல்(மனதுக்குள் : தேர்தல்ல நிக்காம தப்பிக்க இப்புடி ஒரு வழி இருக்கா...) நானும் அந்தக்குழுவுல சேந்துக்குறேன்...

சோனியா காந்தி : சரி...சரி... இப்புடியே பேசிட்டிருந்தா எப்படி... பிரச்சாரத்துக்கான விஷயங்கள சொல்லுங்க..

பிரணாப் முகர்ஜி : வெளிநாடுகள்ல எப்புடி பிரச்சாரம் பண்ணுறாங்கன்னு நான் போய்ப் பாத்துட்டு ஜூன் முதல் வாரத்துக்குள்ள வந்துர்றேன்...

(தொலைபேசி அலறுகிறதுஅகமது படேல் அதை எடுக்கிறார். பேசிவிட்டு சிரித்துக் கொண்டே வருகிறார்.)

சோனியா காந்தி : யாரு லைன்ல...

அகமது படேல் : ஜார்ஜ் பெர்னான்டஸ்... எந்தக் கட்சில இருக்கேன்னு மறந்துட்டாராம்.. எல்லா கட்சி ஆபிசுக்கும் போன் போட்டு பேசிட்டிருக்கார்.

ப.சிதம்பரம் : ஒபாமா வெச்ச மாதிரி மாற்றம்ங்குற முழக்கத்த வைக்கலாம்...

தங்கபாலு : இவர நிதித்துறைய விட்டு மாத்துனதுலருந்து மாற்றம்ங்குற நெனப்புதான்....

திக்விஜய்சிங் : சும்மா இருக்க மாட்டீங்களா... நம்மள மாத்தனுணம்னுதான் இதுவரைக்கும் மக்கள் நெனச்சுருக்காங்க... அத நினைவுபடுத்துறதா ஆயிரும்...

ராகுல்காந்தி : ஆனா இளைஞர்கள்லாம் மாற்றம்தான் முழக்கம்னு சொல்றாங்க...

அகமது படேல் : எங்களலாம் மாத்தணும்னு சொல்லிருப்பாங்க...

ஆல்வா : பிரச்சாரம் பத்தி சீக்கிரம் பேசி முடிங்க... அடுத்து தேர்தல் சீட் விற்பனைப்பிரிவுப் பொறுப்பாளரத் தேர்ந்தெடுக்கணுமே...

அந்தோணி : என் தலைமைலான கமிட்டி சொன்னபடி பாத்தா உங்களுக்கு இன்னும் அஞ்சு வருஷத்துக்கு பொறுப்பு கொடுக்கக்கூடாது...

குலாம் நபி ஆசாத் : அந்தோனிஜீ, அறிக்கை வெச்சதோட உங்க வேலை முடிஞ்சுது... மண்டல் கமிஷன் போட்டோம். அறிக்கைய வாங்குனோம்... நிறைவேத்தவா செஞ்சோம்...கமிட்டி போடுறதே யாருக்காவது பதவி கொடுக்கத்தான... தேர்தல் சீட் கொடுக்காம மனசுல இடம் கொடுத்தா ஏத்துக்குற காலம்லாம் மலை ஏறிடுச்சே...

சோனியா : பிரச்சாரம் பண்ண ஏதாவது சொல்லுங்கன்னா... ஆளாளுக்கு பேசி நேரத்த வீணாக்குறீங்களே...

மன்மோகன்சிங் : கண்டிப்பா எல்லாரும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பத்திப் பேசணும்...

ப.சிதம்பரம் : இந்த ஒப்பந்தம்குற ஒரே கல்லுல மாங்காய் மரமே ஆடிப்போச்சுன்னு சரவெடி கொளுத்திப் போட்டுடணும்..

ராகுல்காந்தி : எப்படி...??

ப.சிதம்பரம் : அதான் சரணடைஞ்சுட்டோம்ல... அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிஞ்சுரும்குற குற்றச்சாட்டை இனி யாராவது எழுப்ப முடியுமான்னு கேட்டு மடக்கிடலாம்...

அகமது படேல் : பாஜகவப் பாத்துக்கூட நக்கல் பண்ணலாம்...உங்களால முடியாதத நாங்க பண்ணிட்டோமேன்னு கேக்கும்போது இதுக்காக 13 முறை ரகசியமா பேசுன ஜஸ்வந்த் சிங் கண்ணுல தண்ணியே வந்துரும்...

திக்விஜய்சிங் : ஏற்கெனவே மக்கள் கண்ணுல தண்ணி வந்துக்கிட்டுதான் இருக்கு...

எஸ்.எம்.கிருஷ்ணா : 300 டிஎம்சிக்கு மேல வந்தா நிறுத்திரணும்... அப்பதான் தண்ணிய வெச்சு பிரச்சாரம் பண்ண முடியும்...

தங்கபாலு : 300 டிஎம்சி தரலேண்ணாலும் தந்துட்டதா சொல்லி நிறுத்திரணும்...அப்பதான் தமிழ்நாட்டுல பிரச்சாரம் களை கட்டும். இதவெச்சு விலைவாசி, நெருக்கடியெல்லாத்தையும் மறக்கடிக்கலாம்...

சோனியா : உருப்படியா ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குதே...

அர்ஜூன் சிங் : அப்ப வழக்கம்போல நம்ம வேலைய ஆரம்பிச்சுடலாம்... வேற வழியில்ல..

சோனியா : ஆமா... ராகுல்தான் பிரதமர்னு நீங்க, ஆசாத், அகமது படேல்லாம் பேசுங்க...

மன்மோhகன்சிங் : எப்படினாலும் அவர் ஆகத்தானே போறார்... அப்படினு எப்ப சொல்லணும்னு சொன்னீங்கன்னா அலாரம் வெச்சுக்குவேன்...

தங்கபாலு : தமிழ்நாட்டுல இந்த சிரமமே கிடையாது... காங்கிரசுன்னா கோஷ்டி சண்டை, வேட்டி கிழிவது அப்படிங்குற ஞாபகந்தான் மக்களுக்கு வரும்..எங்ககிட்டலாம் யாரும் சீரியசா விலைவாசி, பொருளாதார நெருக்கடின்னுலாம் பேசமாட்டாங்க... தமிழ்நாட்டுல சிரிப்பு காங்கிரஸ்... இந்த உத்திய நாடு முழுக்க கொண்டு போனா...

(இவ்வளவு நேரம் கண்ணை மூடி பேசிக் கொண்டிருந்த தங்கபாலு விழித்துக் கொள்கிறார்) போய்ட்டாங்களா...

கற்பனை : கணேஷ்