Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Thursday, July 16, 2009

ஆறு வித்தியாசங்கள்... கண்டுபிடியுங்களேன்!


"என்ன பாலு சவுக்கியமா.."

பாலு : வாங்க... மணி..(ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள்)

சலூன்காரர் : சார் எப்ப பாத்தாலும் உங்க வீட்டுல எத்தன சேனல்லே பேசுட்டுருக்கீங்களே... வேற மேட்டரே கிடைக்காதா...?

மணி : ஏம்பா... நானே இன்னக்கி வேற ஏதாவதுதான் பேசணும்னுதான் வந்தேன்...

பாலு : அதெல்லாம் சரி... ஆறு வித்தியாசங்கள், கண்டுபிடிங்களேன்...

மணி : என்ன.. படம் காட்டப் போறீங்களா...

பாலு : இல்லப்பா... ஓட்டுப்போட்டு புது அரசாங்கத்த கொண்டு வந்துட்டோம்... முன்னாடி இருந்தவங்கதான் இப்பவும் வந்துருக்காங்க... ஆனாலும் வித்தியாசம் இருக்கே... அதான் ஆறு வித்தியாசம் சொல்லுண்ணேன்...

மணி : எப்பா... வித்தியாசம் அதிகமா இருக்கும்போலருக்கே...

பாலு : சரிப்பா... குறைஞ்சது ஆறு வித்தியாசத்த சொல்லுப்பா...

மணி : சி.எம்.பிதான் முதல் வித்தியாசம்... போன தடவ குறைந்தபட்ச பொது செயல்திட்டம்னு ஒண்ணு இருந்துச்சு...இப்ப இல்ல...

பாலு : சரியா சொன்னீங்க... முக்கியமான வித்தியாசம்தான்..

மணி : இஷ்டத்துக்கு பொதுத்துறை பங்குகள விக்க முடியாதுங்குற நிலை இருந்துச்சு... இப்ப பட்ஜெட்ல அறிவிக்காமயே தனி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க..

பாலு : பெட்ரோல் விலையுயர்வத்தான் ரெண்டாவதா சொல்வீங்கன்னு நெனச்சேன்...

மணி : ஆமா சொல்லிருக்கணும்...வரலாற்றுல முதமுறையா போன ஆட்சிலதான் விலையக் குறைச்சாங்க... இந்த முறை எடுத்தவுடனே கோணல்தான்...

பாலு : ஆமா... போன தடவ ரெண்டு முறை விலை குறைஞ்சுது... அதுவரைக்கும் நமக்கு இருந்த அனுபவமே விலை ஏற்றம்தான்...

மணி : சாமான்ய மனிதர்களுக்கு உதவுற திட்டங்கள் போன தடவ வந்துச்சு... இத நாலாவது வித்தியாசமா சொல்லலாம்...

பாலு : வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்த சொல்றீங்களா...

மணி : ஆமா... கிராமப்புறத்துக்கான இந்தத்திட்டம் நகர்ப்புறத்துக்கும் வந்துரும்னு அறிகுறிலாம் இருந்துச்சு... இப்ப அது மறைஞ்சுருச்சு...

சலூன்காரர் : சார்.... நீங்க உக்காருங்க... இங்க உக்காந்துக்கிட்டே வித்தியாசத்தக் கண்டுபிடிங்க... நானும் என் வேலையப் பாக்குறேன்....

மணி : ஆன்லைனுல அத்தியாவசியப் பொருட்கள விக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு...

பாலு : இப்ப ஒவ்வொண்ணா சத்தமில்லாம எடுத்து விட்டுட்டாங்க... அப்படித்தான...

மணி(சலுhன்காரரைப் பார்த்து) : ஏம்பா... நாங்க ரெண்டு பேரு பேசுறதயும் கேட்டுக்கிட்டே இருக்கியே... ஏதாவது சொல்லேன்...

சலூன்காரர் : சார்... நீங்க சொல்றத நான் எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்... அஞ்சு சொல்லிட்டீங்க... என்கிட்ட கேட்டுருந்தா முத வித்தியாசமே போன தடவ இடதுசாரிக்கட்சிக்காரங்க ஆதரவுல ஆட்சி இருந்துச்சு... இப்ப இல்லன்னு சொல்லிருப்பேன்...

பாலு : சபாஷ்... இவ்வளவு நேரம் மணி சொன்ன வித்தியாசங்கள்லாம் இருக்குறதுக்கு இந்த வித்தியாசம்தான காரணம்... அவங்க ஆதரவோட ஆட்சி இருந்ததுனாலதான் 100 நாள் வேலைத்திட்டம் வந்துச்சு.. மக்கள் சொத்தான பொதுத்துறைக்கு பாதுகாப்பு...

சலூன்காரர் : ஆமா சார்... குறிப்பா அந்த பெட்ரோல் விலைக்குறைப்பு இருக்கு பாருங்க... நெனச்சுப் பாக்க முடியுமா...

மணி : பாத்தீங்களா பாலு... எந்த விஷயம் சாமான்ய மக்கள பாதிச்சுருக்குன்னு...

பாலு : பெட்ரோல், டீசல் விலை கூடுச்சுனா அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் விலை ஏறிடுமே...

மணி : ஆமா... ஆனா கேட்டா பணவீக்கம் குறைஞ்சுருச்சுன்னு புள்ளிவிபரத்த அள்ளித் தெளிக்குறாங்க...

பாலு : சரி.. மணி.. நேரமாச்சு... கிளம்புட்டுமா...

மணி : வாங்க... அடுத்த தடவ வேற மேட்டர் பேசலாம்.. வாங்க..

Friday, July 3, 2009

எப்படித்தயாராகிறது பட்ஜெட்?



பட்ஜெட் உரைக்காக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது கேமராக்களின் கண்கள் அவர் கையில் உள்ள பெட்டி மீதுதான் பதிந்திருக்கும். அந்தப் பெட்டிக்குள் பட்ஜெட் உரை போவதற்குள் ஏழு மலை மற்றும் ஏழு கடல்களைத் தாண்டுகிறது. சத்தமே இல்லாமல் திட்டக்குழுதான்(ஆமாங்க... ஆமாம்... எல்லாத்தையும் தனியார் மயமாக்கனும்னு துடிக்குற அந்த அலுவாலியாதான் இதுக்கு பொறுப்பு!!) துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும். அரசின் பல்வேறு துறைகளிடம் திட்டக்குழுதான் பழைய மற்றும் புதிய திட்டங்களைப் பற்றிப் பேசி தகவல்களை நிதித்துறையிடம் கொண்டு சேர்க்கிறது.

அதேபோல் நிதித்துறையின் ஒரு பிரிவான பொருளாதார விவகாரத்துறையும் திட்டக்கமிஷனைப் போலவே திட்டங்களை அடையாளம் காணும் வேலையைச் செய்கிறது. முதலாளிகள், தொழிலாளிகளை அழைத்து பட்ஜெட்டில் என்ன வேண்டும் என்று இத்துறையினர் கேட்பார்கள். சில கூட்டங்களில் நிதியமைச்சரே கலந்து கொள்வார். தொழிலாளிகள் கேட்டது, கேட்டதோடு நின்றுவிடும். கண்துடைப்பு சமாச்சாரம்தான் என்றாலும் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடக்கின்றன.

நிதியமைச்சகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகிய இரண்டும் தனியாக விபரங்களைத் தயாரிக்கின்றன. கையைக் கடிக்கும் பட்ஜெட்டுகள்தானே நமது ஆட்சியாளர்களின் சாதனை. திட்டங்களை அறிவித்துவிட்டு கூடவே இவ்வளவு பற்றாக்குறை என்று கூறி திட்டத்திற்கு எதிரில் கேள்விக்குறியைப் போடும் வேலை பட்ஜெட்டில் நடைபெறும்.

திட்டக்குழு, பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகியவை அளிக்கும் விபரங்களைக் கொண்டுதான் பட்ஜெட் தயாராகிறது. பட்ஜெட் உரையைக் கணினியில் அடிப்பவர், பிரிண்ட் எடுப்பவர் எல்லாரும் பெட்டி, படுக்கைகளோடு வந்துவிட வேண்டும். பட்ஜெட் வெளியாகும் வரை அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது.

பட்ஜெட் ரகசிய ஆவணம் என்பது இந்தியக் குடிமகன்களுக்குத்தான். ஆட்சியாளர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் கைகளில் முன்கூட்டியே இதன் விபரங்கள் தவழ்கின்றன என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாகும்.

Monday, June 29, 2009

எருமை ஓட்டிய ஏரோப்ளேன்...




மார்ச் 2009 கணக்குப்படி ஜெர்மனியில் வங்கிப்பணிகளை மேற்கொள்வதற்கு 441 வங்கிகள் அனுமதி பெற்றுள்ளன. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியில் இந்த வங்கிகளுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. மோசமான முதலீடுகள் என்று ஒரு பட்டியலை இந்த வங்கிகள் தயாரித்து யார் தோள்களில் ஏறிக்கொள்ளலாம் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மொத்த மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

காந்தி கணக்கு என்று நம் ஊரில் சொல்வார்களே... அதுபோல ஒரு கணக்கைத் துவங்கினால் என்ன என்று அந்த ஊர் சீர்திருத்தவாதிகள் அந்நாட்டு அரசை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த மோசமான முதலீடுகளை தள்ளுபடி செய்து விடுவார்கள். என்ன, பணத்திற்கு எங்கே போவார்களா... இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் தலை இப்போது பயன்படாவிட்டால் பிறகு எப்போது பயன்படப்போகிறது...?

இந்த மோசமான முதலீடுகளை அரசுப்பத்திரங்களாக மாற்றி விடுவார்களாம். அதை அந்த வங்கிகள் இருபது ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்த வேண்டுமாம். எருமை ஏரோப்ளேன் ஓட்டிய கதைதான் போங்கள். இப்போதெல்லாம் அடிக்கடி இக்கதையை சொல்கிறார்கள்.

Sunday, June 28, 2009

ம்... கிளம்புங்கள்...


பிரிக்(BRIC) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைக் கொண்டதொரு அமைப்பாகும். உலகின் பெரிய பணக்கார நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஏழு நாடுகள் சேர்ந்து அமைத்த ஜி-7 என்ற அமைப்பை விட இது பொருளாதார ரீதியில் வலுவானது என்று தகவல்கள் வெளியாகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை நம்பியிருக்கும் பொருளாதாரங்களே வளரும் என்ற மூட நம்பிக்கையைத் தகர்க்க இத்தகைய மாற்று அணிகள் உருவாகின. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் உருவானவையும் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டதேயாகும்.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்தான் நாணயமாகப் பயன்படுகிறது. இவ்வாறு டாலரை நம்பியிருக்கும் நிலையை மாற்றுவது எப்படி என்பது பற்றி பிரிக் மாநாட்டில் தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். இதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குதான் கூடுதல் பிரச்சனை. இந்த இரு நாடுகளும் ஏராளமான பணத்தை அமெரிக்க அரசுப் பத்திரங்களில் கொண்டுபோய் முதலீடு செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் அமெரிக்கா கடனாகத்தான் வாங்கியுள்ளது.

வங்கியில் ஒரு நபர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதைச் செலுத்தாவிட்டால் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அதே நபர் பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதைச் செலுத்தாவிட்டால் வங்கிக்கு நெருக்கடி ஏற்படும் என்று சொல்வார்கள். வங்கியின் நிலையில் இந்தியாவும், சீனாவும் உள்ளன. சீனா விழித்துக் கொண்டதுபோல் தெரிகிறது. அண்மையில் பல நாடுகளுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. தனது நாணயமான யுவானை வைத்தே பண்ட மாற்றம் செய்து கொள்வது என்பதுதான் அது.

வடிவேலு பாணியில் "ம்... கிளம்புங்கள்..." என்று சொன்னால்தான் நமது ஆட்சியாளர்கள் கிளம்புவார்களா...??

வளரும் பொதுத்துறை; சரியும் தனியார்

இந்தியாவின் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டுத்துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் மீதுதான் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மே மாதத்திற்கான புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வரைமுறையே இல்லாமல் கடன்களைக் கொடுத்ததால் உருவாக சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நெருக்கடியால் காப்பீட்டுத்துறையின் வருமானமும் சரிந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுத்துறையின் வருமானம் ஐந்து சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. புதிய வர்த்தகம் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் திண்டாடியதைத்தான் இந்தப் புள்ளிவிபரம் காட்டுகிறது. இத்தகைய சரிவிலும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை எல்.ஐ.சி. மட்டுமே சரியாமல் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது புதிய பாலிசிக்காக மே மாதத்தில் பெற்ற பிரிமிய வருமானத்தின் அடிப்படையிலானதாகும்.


காப்பீட்டுத்துறையின் ஒழுங்குமுறை அமைப்பு சேகரித்துள்ள விபரங்களின்படி இந்தப் புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் மே மாதத்தில் புதிய பிரிமிய வருமானமாக 2 ஆயிரத்து 923 கோடி ரூபாயை எல்.ஐ.சி. வசூல் செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் நெருக்கடியையும் மீறி 3 ஆயிரத்து 242 கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனத்தால் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்துமே சரிவைத்தான் சந்தித்துள்ளன. குறிப்பாக ஐசிஐசிஐ புருடென்சியல் நிறுவனத்தின் சரிவு 43 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 697 கோடி ரூபாயை புதிய பிரிமிய வருமானமாகப் பெற்ற ஐசிஐசிஐ, நடப்பாண்டில் வெறும் 348 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது.


தங்கள் வளர்ச்சி பற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசும் எல்.ஐ.சியின் செயல் இயக்குநர் தாமஸ் மாத்யூ, நடப்பாண்டை நல்ல முறையில் துவக்கியுள்ளோம். ஆனால், இதோடு சந்தோஷப்பட்டு நின்றுவிடக்கூடாது. உண்மையான வர்த்தகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் துவங்கும். நடப்பாண்டில் புதிய பிரிமிய வருமானத்தைப் பெறுவதில் 30 முதல் 40 சதவீதம் வரை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். எல்.ஐ.சி. வழங்கியுள்ள பங்குச்சந்தையோடு இணைக்கப்பட்ட பாலிசிகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது என்பதையும் தாமஸ் மாத்யூ சுட்டிக்காட்டுகிறார்.


பொதுக்காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை, பொதுத்துறை நிறுவனங்கள் சந்தையில் தங்கள் பங்கை அதிகரித்துள்ளன. நேஷனல் நிறுவனத்தைத் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் ஆகிய அனைத்துமே நெருக்கடியின் தாக்கத்தை மீறி வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஐசிஐசிஐ லோம்பார்டு(-19.7), பஜாஜ் அல்லையன்ஸ்(-17.4), இஃப்கோ டோக்யோ(-13.26) மற்றும் டாடா ஏஐஜி(-19.6) ஆகிய தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்மறை வளர்ச்சியையே கண்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.


பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் கண்டுள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓரியண்டல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாலிசிகளைப் புதுப்பித்துள்ள நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தனியார் நிறுவனங்களிடமிருந்த வர்த்தகம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாறியுள்ளதைப் பார்க்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு சளைக்காத பிரிமியத்தொகை மற்றும் பொதுத்துறை மீது மக்களுக்குள்ள நம்பிக்கை ஆகியவையே இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்கிறார். ஆயுள் காப்பீட்டுத்துறை சரிவை சந்தித்தள்ள நிலையில், அந்த அளவிற்கு பொதுக்காப்பீட்டுத்துறை செல்லவில்லை என்பதே இரு துறைகளுக்குமுள்ள வேறுபாடாகும்.


பொதுத்துறை மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இதையெல்லாம் மீறித்தான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து காப்பீட்டுத்துறையை அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக அளவில் 85 சதவீத வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பொதுத்துறையில் உள்ள இந்திய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.