Friday, November 28, 2025

இந்தியா - 79,039 😏😞 - கேரளா - 0...🤩🥳


படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்

2017-18ல், நாடு முழுவதும் 10,94,543 அரசுப்பள்ளிகள் இருந்தன. 2023ல், இந்த எண்ணிக்கை 10,15,504 ஆக சரிந்து விட்டது. 79,039 அரசுப்பள்ளிகளை மூடிவிட்டார்கள். உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில். அங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 27,764 பள்ளிகளை மூடியுள்ளனர். மத்தியப்பிரதேசம்(20,000), ஜார்க்கண்டு(4,600), சத்தீஸ்கர்(1,000), ஆந்திரா(5,400), ஒடிசா(4,589), ஜம்மு காஷ்மீர்(4,380), அசாம்(2,149) என்று இந்த எண்ணிக்கை உள்ளது.


கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஒரு அரசுப்பள்ளி கூட கேரளாவில் மூடப்படவில்லை. கல்வி சார்ந்த அனைத்து வளர்ச்சிப் புள்ளிகளிலும் தேசிய சராசரியை விட மேலாகத்தான் கேரளா இருக்கிறது.

Monday, January 31, 2022

அடுத்த மாதம் நிலவில் மோதும் ராக்கெட்

அடுத்த மாதம் நிலவில் மோதும் ராக்கெட் - ஏற்படும் விளைவுகள் என்ன?
பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை ‘பால்கன்9’ ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.
செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்திவிட்டு ராக்கெட் பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனதால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது. அப்போது முதல் இந்த ராக்கெட் பூமியையும், நிலவையும் குழப்பமான முறையில் சுற்றி வருகிறது.
இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 4 டன் எடையுள்ள பூஸ்
டர், நிலவை நோக்கி மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாகவும், அது மோதும் போது நிலவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பூஸ்டர் நிலவின் பின்புறத்தில் மோத இருப்பதால் அந்த நிகழ்வை பூமியில் இருந்து பார்க்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைவிடப்பட்ட ராக்கெட் உள்ளிட்ட விண்வௌி குப்பைகள் நிலவில் மோதுவது இது முதல் முறை அல்ல என்பதால் இந்த நிகழ்வால் பெரிய அளவில் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சில விண்வெளி ஆய்வாளர்கள் நிலவில் ராக்கெட் மோதும் இந்த நிகழ்வு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று கூறுகின்றனர். அதே சமயம் இந்த நிகழ்வை ‘‘ஒரு அற்புதமான ஆராய்ச்சிக்கான வாய்ப்பு’’ என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
நன்றி - தினத்தந்தி (01,02,2022)

Wednesday, July 28, 2021

சபாஷ்.. பி.இ. படிச்ச பொண்ணு குப்பை அள்ளுது...

பி.இ. படித்த ஒரு பெண் குப்பை அள்ளுகிறார் என்ற செய்தி முதன்முறையாகக் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. 


                                                    Image courtesy : Lovepik


என்ன கொடுமை சார் இதுனு கேக்கக் தோணுதா...? பொதுவாக, நன்றாகக் படித்தவர்கள் வேலையின்மைக் கொடுமையால், கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வரும் செய்திகள் வெளியாவது வழக்கம். "உச்" கொட்டாமல் அது போன்ற செய்திகளைக் கடக்க முடியாது. உண்மையில் கொடுமைதான்.

ஆனால்...

வழக்கம்போல நடக்கக் கிளம்பினேன். அந்த நேரத்தில் எப்போதுமே தூய்மைப் பணியாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். நல்ல உடையுடன் ஒரு இளம்பெண் குப்பைகளைத் தள்ளிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதிக்கு அவர் புதியவராக இருந்தார். டீக்கடையில் வழக்கம் போல ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கதையைத்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

"இந்தப் பொண்ணு பி.இ. படிச்சுருக்கு"

இதைக் கேட்டவுடன் எனக்கு "சுருக்"கென்றது. ஆனால் அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் இருந்தது. 

2019 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பினார்கள். பி.இ. படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கிறார்கள் என்று அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதில் பலருக்கும் வேலை கிடைத்தது. பி.இ. என்பதைத் தாண்டி, கூட்டி அள்ளுவதற்கு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் முன் வருகிறார்களே என்ற உணர்வுதான் முன்வந்தது. நல்ல விஷயம்தானே..?

துப்புரவுப் பணிக்கு ஏதோ அருந்ததிய  சமூகத்தினர் நேர்ந்து விடப்பட்டது போன்றுதான் சமூகம் நடந்து கொள்கிறது. பிற சாதியினர் இந்தப் பணிக்கு வர விரும்புவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், அந்தப் பணிக்கு அனைத்துச் சாதியினரும் விண்ணப்பிக்கிறார்கள் என்ற செய்தி நன்றாகவே பட்டது. 

பணி நியமனம் பெற்ற பிறகுதான், சாதிக் கொடூரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியில் அமர்ந்த  பிற சாதியினர்  325 பேர் அலுவலகங்களில் கோப்புகளைக் கொண்டு போய்க் கொடுப்பது, தபால் பிரிப்பது, அதைக் கொண்டு போய்க் கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்தனர். துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை. பீ அள்ளுவதெல்லாம் அப்புறம். துடப்பக் கட்டையைக் கையால் கூடத் தொடவில்லை. அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்தனர். 

தொடர்ந்து புகார்கள் தரப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையரும் மாறினார். சமூக நீதிக்கட்சியின் புகார் சரியான நேரத்தில் ஆணையரின் மேஜையில் தஞ்சம் புகுந்தது. அதிரடியான உத்தரவு வெளியானது. துப்புரவுப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பப்பட வேண்டும். அலுவலகங்களில் இருந்து விடுவிக்கப்படட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துப்புரவுப் பணியைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். 

இதோ, தெருக்களில் பி.இ. படித்த பெண் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். பி.இ. படித்தவர் இந்த வேலையைச் செய்கிறார் என்பது அவலம்தான். ஆனால், சாதிப் பாரபட்சம் நீக்கப்பட்டதன் விளைவாக அவர் குப்பை அள்ள வேண்டி வந்தது, எந்த வேலைக்கு விண்ணப்பித்து, அதில் சேர்ந்தாரோ அந்த வேலையைச் செய்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. தீண்டாமையின் கொடூர வடிவங்களில் ஒன்று நீக்கப்பட்டிருக்கிறது. 

மகிழ்ச்சி...


Wednesday, July 21, 2021

அரசு வேலைக்குச் செல்ல விரும்புவோரா, நீங்கள்..?

உங்கள் பதிவுகளை, உரையாடல்களை மறுபடியும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அவையெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் இல்லை, தமிழிலும் இல்லை. ஆனால், இந்த இரண்டு மொழிகளிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தேர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

Today variya?

Today varla

அதிலும் சிலர் 2day என்றோ அல்லது 2dy என்றோ சுருக்கி விடுகிறார்கள். 


Image courtesy : Translate day

இப்படியொரு உரையாடல் வாட்ஸ் அப்பில் நடக்கிறது. இந்த இருவரும் அரசுத் தேர்வுக்கு தயாராகிறார்கள். இவர்களில் ஒருவர் தன்னால் மொழிபெயர்ப்பை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்று ஆலோசனை கேட்கிறார். நான் அவரிடம் சொன்னதே, முதலில் உங்கள் உரையாடல்களை ஏதாவது ஒரு மொழியில் செய்யுங்கள் என்றேன். நாம் எழுதும்போதோ அல்லது மொழிபெயர்க்கும்போதோ தவறுகளே கண்களுக்குப் படாமல் போய்விடும் என்று எச்சரித்தேன். 

ஆங்கிலத்தில் அனுப்பினால் தவறாகி விடலாம் என்றார். இப்போது நீங்கள் என்ன சரியாகவா அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எனது பதில் கேள்விக்கு அரண்டு போனார். உங்களை ஆங்கிலத்தில் அனுப்புங்கள் என்று நான் சொல்லவில்லையே... தமிழில் அனுப்பலாமே..? இரண்டில் ஏதாவது ஒரு மொழியில் அனுப்புங்கள் என்றுதானே சொன்னேன் என்றேன்.

சார்.. அந்த மொழிபெயர்ப்பு.. என்றவரை, அடுத்த பதிவில் அது பற்றிப் போடுகிறேன். படித்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன். 

பெரு : ஜனாதிபதியானார் இடதுசாரித் தலைவர் கேஸ்டில்லோ

 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான பெட்ரோ கேஸ்டில்லோ வெற்றி பெற்றிருக்கிறார்.



வாக்குகெடுப்பு நடந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அதிகாரபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 51 வயதாகும் தொழிற்சங்கத் தலைவரான கேஸ்டில்லோ, வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபோது கருத்துக் கணிப்புகளில் இவரும் போட்டியிடுகிறார் என்று முதலில் சொன்னார்கள். முதல் சுற்றில் முதலிடத்தை இவர் பிடித்த பிறகுதான் வேறு வழியில்லாமல் இவரைப் பற்றி ஊடகங்கள் பேச ஆரம்பித்தன.

தேர்தல் நெருங்குகையில் பியூஜிமோரிக்கு ஆதரவாக நிலைமை மாறி விட்டது என்றெல்லாம் எழுதித் தள்ளினார்கள். குறைவான வாக்குகள் வித்தியாசம் என்றாலும், கேஸ்டில்லோ எதிர்கொண்ட நிலைமை அசாதாரணமானதாகும். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அமெரிக்க ஆதரவு, ஊடகங்களின் ஒருசார் செய்திகள், உள்ளூர் முதலாளிகளின் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு தடைகளை கேஸ்டில்லோ உடைத்தெறிந்துள்ளார்.

அதிகாரபூர்வமாக பெரு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 50.12 சதவிகித வாக்குகளை கேஸ்டில்லோ பெற்று வெற்றி  கண்டுள்ளார்.


இதுதான் சொந்தக் காசுல சூனியமோ..??

(சூனியம் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அந்த வார்த்தையை பயன்படுத்தும் சில இடங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.)

ஒரு திரைப்படத்தில் ஒரே நாள்ல பிரபலமாக என்ன வழி என்று வடிவேலு கேட்பார். அதற்கு சரத்குமார் ஒரு ஐடியா கொடுப்பார். கொலைப்பழியிலேயே வடிவேலு மாட்டிக் கொள்வார்.



இதுமாதிரி ஐடியா கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு பாஜக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆகிய நான்கு பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பாதுகாவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போதாது என்று நினைத்திருக்கின்றனர். கூடுதல் பாதுகாப்பு, கூடுதல் அந்தஸ்து என்ற திட்டத்துடன் தங்களைத் தாங்களே கடத்திக் கொள்ளத் திட்டம் போட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்பக் மீர் மற்றும் பஷிரத் அகமது ஆகிய இரு பாஜக ஊழியர்கள்தான் இவர்கள். ஒரு இரவில் தாக்குதல் நடந்தது போன்று நாடகம் நடத்தப்பட்டது. ஆனால், இவர்களின் பாதுகாவலர்கள் சுட்ட குண்டு, இஷ்பக் மீரின் கையைத் துளைத்து விட்டது.
விசாரணை நடந்ததில் தாக்குதல் ஒரு நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற நாடகங்களை பாஜகவினர் நடத்தி வந்து அம்பலமாவது தொடர் கதையாகியுள்ளது. இப்போது சிறையில் இருக்கிறார்கள். இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்குறதுன்னு சொல்வாங்களோ...
எப்படியோ, பிரபலமாயிட்டாங்க...

Saturday, July 3, 2021

உங்களுக்குத் தெரியுமா, ஸ்பீக்கர் யாருன்னு..??

நாங்க எல்லாரும்  தேர்வு எழுதிட்டு இருந்தோம்.. 

ஒரு டேபிள்ல ஆறு பேரு இருந்தோம். ஒரு வட இந்திய நண்பரும் அதுல.. பேரு மறந்துருச்சு...

ஒரு கேள்வி... கோடிட்ட இடத்தை நிரப்புக...

Lok Sabha Speaker ________. என்றிருந்தது. 

அப்போ பி.ஏ. சங்மா... ஆனா, அந்த வட இந்திய நண்பர் குறுக்கே புகுந்து "இல்லை, அஹுஜா.. " என்றார். குழம்பினோம்.. "டி.வி.ல கூட பார்த்திருக்கிறேன்" என்ற அடுத்த பதிலில் அதிர்ந்து போனோம்.. 

அது கடைல விக்குற ahuja speaker னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது..

🤪🤪🤪


வெனிசுலாவுக்கு அமெரிக்க ஆதரவுக்குரல்..

 வெனிசுலாவுக்கு எதிரான சட்ட விரோதத் தடைகளை அகற்றுங்கள் என்று அமெரிக்காவிலிருந்தே குரல் வலுவாக எழும்பியுள்ளது.

பொதுவாக, அமெரிக்கா பிற நாடுகள் மீது தடைகளை விதிக்கையில் அமெரிக்காவில் இருந்து எதிர்ப்புக் குரல் எழும்புவது வாடிக்கையானதுதான். தனிநபர்கள் அல்லது ஒற்றுமைக் குரலுக்கான அமைப்புகள் என்றுதான் அந்தக் குரல்கள் இருக்கும். 

அண்மைக்காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுக்கட்சி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறது. ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோதே தடைகளை அகற்றி விடுங்கள் என்று குரல் எழுப்பினார்கள். 

மதுரோவுடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமையன்று(02.07.2021) அக்கட்சின் உயர்மட்டக்குழு ஒன்று வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவைச் சந்தித்திருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுடன் தாங்கள் உறுதியாக நிற்போம் என்று அந்தக்குழு மதுரோவிடம் தெரித்திருக்கிறது.



கட்சியின் பின்னணி

1982 ஆம் ஆண்டில்தான் இந்தக்கட்சி துவங்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிக் குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில் இயங்குவதே இதன் நோக்கமாகும். ஜனநாயகம் மற்றும் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

2018 ஆம் ஆண்டில் பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் இரண்டு இடங்களை இக்கட்சி பிடித்தது. நாட்டின் பல்வேறு மாகாண அவைகளில் 11 பேர் இக்கட்சி சார்பாக இடம் பிடித்தனர். 2020 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு பேர் பிரதிநிதிகள் சபையிலும், மாகாண அவைகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களைப் கைப்பற்றியிருக்கிறார்கள்.

Wednesday, June 30, 2021

டி.வி.சீரியலும், கெட்ட வங்கியும்..😊😊

 "என்ன மேடை மேதாவி, சௌக்கியமா?"

"அடடே.. என்ன முத்து... நல்லா இருக்கேன்... நீங்க நலமா?"

"இந்தக் கொரோனா ரொம்ப முடக்கிப் போட்டுருச்சு...  பூங்கால நடக்கலாம்னு சொன்னாங்க... அதான் வந்தேன்..."

"ஆமா. நானும் இன்னிக்குதான் வந்தேன்.. என்னை இப்புடி மேடை மேதாவின்னு கிண்டலா யாராவது கூப்புட்டு எவ்வளவு நாளாச்சி.. உங்கள மாதிரி சில பேருதான் அப்புடிக் கூப்புடுவீங்க..."

"இந்த லாக்டவுன்ல உங்களுக்கு எப்புடி பொழுது போச்சு..."

"வழக்கம் போல பேப்பரு, புக்... அப்புறம் டி.வி. சீரியல்..."

"டி.வி.சீரியலா... நீங்களா... ஆச்சரியமா இருக்கே... அதையெல்லாம் ரொம்ப கிண்டல் பண்ணுவீங்களே.."

"இன்னிக்குப் பேப்பர் பாத்தீங்களா..."என்று திடீரென்று கேட்டார் மேடை மேதாவி.

"கொஞ்சம் பாத்தேன்... இனிமேதான் முழுசாப் படிக்கணும்"

"Bad Bankனு ஒண்ணு ஆரம்பிக்குறாங்கள்ல..." என்றபோது குறுக்கே பாய்ந்தார் முத்து. 

"இதுக்குதான் உங்கள மேடை மேதாவின்னு நாங்க கிண்டல் பண்றது... டி.வி. சீரியல் ஏன் பாக்குறீங்கன்னு கேட்டா, மேதாவி அங்க தாவிட்டீங்க, பாருங்க.." என்று நக்கலாகச் சொன்னார்.

"நான் பாக்குற சீரியல்ல, ஒரு பொண்ணு ஒரு பையனக் காதலிக்குறா... அந்தப் பையன் வேற ஒரு பொண்ணக் காதலிக்குறான்... அந்தப் பொண்ணுக்கு அத்தை பையனோட கல்யாணம் நிச்சயம் பண்ணுறாங்க... அந்தப் பையனோ ரெண்டாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணனும்னு நெனக்குறான்.. இதுல அந்த அத்தை பையன வேற ஒரு பொண்ணும் காதலிக்குறா... இதுல யாரு கதாநாயகின்னு  பாக்குறதுக்குள்ள வேற ஒரு பொண்ணு கதைக்குள்ள வருது..."

"அய்யோ... நான் கேக்காமலேயே இருந்திருக்கலாமோ... தலையும் புரியல,, காலும் புரியல... இதெல்லாம் என்ன இழவுன்னு பாத்துக்கிட்டு இருக்கீங்க... நீங்க அந்த பேங்க் பத்தியே சொல்லுங்க..."

"ஆமா... வராத கடனையெல்லாம் ஒரு பேங்குல போடப் போறாங்க... "

"வராத கடன வேற பேங்குல போட்டா வந்துருமா.."

"கேளுங்க சொல்றேன்... இதுக்கு முன்னாடி  ஒரு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்னு ஒண்ணு வெச்சுருக்காங்க... அதையும் இந்த வங்கியோட இணைக்குறாங்க... இந்த வங்கியோட கணக்குல எத சேக்குறதுன்னு ஒரு 22 பெரிய கணக்குகள அடையாளம் பாத்து வெச்சுருக்காங்க.. 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு அதுக்கு..."



Image courtesy : Indibuzzonline

"அடேங்கப்பா...."

"ஆமா... வீடியோகோன், ரிலையன்ஸ்லாம் அதுல இருக்கு... இந்த வங்கிய யாரு நடத்தப் போறாங்கன்னா... 51 சதவிகிதப் பங்குகள பொதுத்துறை வங்கிகள் கிட்ட குடுத்துருவாங்க.. அதாவது எந்த வங்கிகளோட வராத கடன்கள இந்தப் புது வங்கி தலைல கட்டுறாங்களோ, அந்தப்புது வங்கிக்கும் அவங்கதான் முதலாளிங்க... "

முத்துக்கு தலை சுற்றத் துவங்கியிருந்தது.

"அப்புறம் இந்தப் பொதுத்துறை வங்கிகளோட பங்குகள வித்து அதத் தனியார் கிட்ட குடுத்துருவாங்க... அந்தப் பங்குகள ரிலையன்ஸ் வாங்கிருவாங்க... கடன் தராத பட்டியல்ல இருக்குற ரிலையன்ஸ், புது வங்கிக்கும் சேத்து முதலாளியாகிடுவார்..."

"என்னங்க இது... புரியலையே... "

"கிட்டத்தட்ட அந்த சீரியல் மாதிரிதான்... தொடர்ந்து பார்த்தா புரிஞ்சுடும். இதப் பத்தியும் தொடர்ந்து படிங்க. புரியும்.. பேரே கெட்ட வங்கினா பாத்துக்குங்களேன்.. போறதும் நீங்க போட்ட பணம்தானே... வங்கில இருக்குற பணத்துல 85 சதவிகிதம் நம்மள மாதிரி ஆட்களோடதுதான்... என்ன சத்தத்தையே காணோம்..."

திரும்பிப் பார்த்தால், பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் முத்து. 😄

Monday, June 28, 2021

அசத்துகிறார்கள், செந்தொண்டர்கள்... 👍

முகநூலில் பார்த்த படம் என்னவோ நினைவில் இருந்து நீங்காமலேயே பல மணி நேரங்கள் இருக்கிறது..,


91 வயது முதியவர் இறந்து விடுகிறார். அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை. உறவினர்களோ வர விரும்பவில்லை. அவரது உடல் அப்படி இருந்து விடுமோ என்ற அச்சம் நிலவிய சூழலில், பக்கத்தில் குடியிருக்கும் ஒருவர் செந்தொண்டர்களுக்கு அழைப்பு விடுகிறார். 

உடனடியாக அவருடைய வீட்டிற்கு வந்த செந்தொண்டர்கள் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று அனைத்து மரியாதைகளுடன் எரியூட்டச் செய்திருக்கிறார்கள். குடும்பத்தினர் இருந்தால் எப்படிக் கவனமாகச் செய்வார்களோ, அப்படிச் செய்தனர்.

அசத்துகிறார்கள்...

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது தொற்று அலை உருவானதிலிருந்து செந்தொண்டர்களின் பணி அளப்பரியதாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை வீடு, வீடாகச் சென்று செய்கிறார்கள். இலவச ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயங்குகின்றன. அவசரத் தேவைக்கு உதவட்டும் என்று அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டினியால் யாரும் வாடி விடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதில் அவர்களின் கவனம் இருக்கிறது. ஏழைகளுக்கு உணவு தருவதோடு, மாநிலம் முழுவதும் மிகவும் குறைந்த விலையில் உணவு தயாரித்து வழங்கும் உணவு மையங்களையும் அமைத்துள்ளனர். 

ஒருநாள் அலைபேசி அழைப்பு வருகிறது. ஒருவருக்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. பலரிடமும கேட்டுப் பார்த்து விட்டு, கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிலைமை மோசமாகி விடுமோ என்ற கவலையுடன் அந்த அழைப்பு வருகிறது. உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு விரைகிறார்கள்,  செந்தொண்டர்கள். 


புகைப்படம் - தி டெலிகிராப்

உயிர் காக்கும் வேலையை உடனடியாகச் செய்ததற்கு குடும்பத்தினர் செந்தொண்டர்களுக்கு நன்றி சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் வேறு யாருமில்லை, அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ரனாகாட் வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சாட்டர்ஜிதான். 

வாழ்த்துக்கள், செந்தொண்டர்களே...👋👋

Saturday, June 26, 2021

"கும்பல்" அல்ல, "கூட்டணி" - மக்கள் தீர்ப்பு

திடீர் ஞானோதயம் வந்து காஷ்மீர் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தையை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது.


புகைப்படம் - தி இந்து ஆங்கில நாளிதழ்

இந்தக் கூட்டத்தில் குப்கார் கூட்டணியும் கலந்து கொண்டது. இந்தக் கூட்டணியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குப்கார் கும்பல்" என்று கிண்டலாக அழைத்துக் கொண்டிருந்தார், அதோடு நிற்காமல் காஷ்மீருக்கு இவர்கள் "தேவையற்றவர்கள்" என்றார். இதன் தலைவர்கள் சிறைகளிலும், வீட்டுக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலர் 14 மாதங்களாகியும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

யார் இந்தக் குப்கார் கூட்டணி

2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வில் அதுவரையில் பார்த்தாலே தீட்டு என்பதைப் போன்று பிற எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்க்காமல் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா, பரூக் அப்துல்லாவைச் சந்திக்கிறார். அவர்கள் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே, 370வது பிரிவு நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பு ஆகஸ்டு 5, 2019 அன்று வெளியாகிறது.

அதற்கு ஒருநாள் முன்பாக, முக்கியமான அரசியல் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டு, பங்கேற்ற கூட்டம் பரூக் அப்துல்லா வீட்டில் நடந்தது. அதில் ஒரு உறுதிமொழி ஆவணத்தை நிறைவேற்றினார்கள். அதை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம் என்றும் முடிவெடுத்தனர்.

பரூக் அப்துல்லாவின் வீடு குப்கார் சாலையில் உள்ளது. அங்கு அமர்ந்து இந்த உறுதிமொழி ஆவணத்தை வெளியிட்டு உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு "People's Alliance for Gupkar Declaration" என்று  பெயரிட்டார்கள். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த வீட்டை 1970களின் துவக்கத்தில் ஷேக் அப்துல்லா விலைக்கு வாஙகியிருக்கிறார். 

வெற்றி

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் குப்கார் கூட்டணி வேட்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டதைத் தாண்டி மொத்தமுள்ள 280 வார்டுகளில் 100 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இந்த முடிவுகளுக்குப் பிறகுதான் "குப்கார் கும்பல்" என்று சொல்வது "குப்கார் கூட்டணி" என்ற வார்த்தை மாற்றத்தை ஏற்படுத்தியது. கும்பல் என்று சொல்லாதீர்கள், கூட்டணி என்று சொல்லுங்கள் என்று மக்கள் கட்டளையிட்டது போன்று இருந்தது.

இந்தக் கூட்டணிதான் இப்போதைக்கு நம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றிருப்பது நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.  தேசிய மற்றும் பிரதேச உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. மாநில அந்தஸ்து மற்றும் அதைத் தொடர்ந்து தேர்தல்கள் என்று அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் அவசியம். 

சூடு பிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்...

  



படம் நன்றி - india.com 2017 


ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று பஞ்சாப் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அடுத்த தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும். இன்னும் ஆறேழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுளள்து. 117 தொகுதிகள் உள்ள சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகளைப் பெற வேண்டும்.  


கடந்த தேர்தலின்போது காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகளும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் கூறின. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி மூன்றாமிடத்துத் தள்ளப்படும்  என்றுதான் அவற்றில் இருந்தது. அப்படித்தான் தேர்தல் முடிவுகள் இருந்தன என்று சொல்ல முடியாது. 

வெற்றி பெற்ற இடங்களின்(20) எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் சிரோமணி அகாலிதளம்தான் இரண்டாவது இடத்தில் இருந்தது. போட்டி நெருக்கமாக இருக்கும் என்று கணிப்புகள் சொன்னாலும் காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்தன.  

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முதலிடத்திலும், சிரோமணி அகாலி தளம் இரண்டாவது இடத்திலும் இருந்தது. இந்நிலையில்தான் விவசாயிகள் மசோதா தொடர்பான பிரச்சனை எழுந்தது. இன்றும் கூட 200 நாட்களைத் தாண்டி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜகவோடு 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்திருந்த சிரோமணி அகாலி தளம், அதை முறித்துக் கொண்டது. முதலில் சிரோமணி அகாலி தளமும் விவசாயிகள் மசோதாவிற்கு ஆதரவு தந்தது. விவசாயிகளின் பெரும் எழுச்சியைப் பார்த்த பிறகு, விலகிக் கொண்டது. 

2021 பிப்ரவரியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. இதில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலிலும் சிரோமணி அகாலிதளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 

தற்போதுள்ள நிலை 




படம் நன்றி - medium.com  


வரும் தேர்தல் மும்முனைப் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான சரிவைச் சந்தித்தாலும் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களைப் பெறும் என்று சொல்லப்படுகிறது.  விவசாயிகள் போராட்டத்தால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள பாஜக விரக்தியின் விளிம்பில் உள்ளது.  

முதலில் சறுக்கினாலும், விழித்துக் கொண்ட சிரோமணி அகாலி தளம் தனது தனிமையிலிருந்து வெளியில் வரும் முயற்சியில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, முக்கியமான அரசியல் சக்தியாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை அறிவித்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் முன் நிற்கும் இடதுசாரிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் தங்களுக்குதான் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. ஆனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல்வர் அமரிந்தருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் பதவிப் போராட்டம் நடக்கிறது. 



படம் நன்றி - The Quint 


தில்லி மேலிடம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. கோஷ்டிப் பூசலைக் கட்டுப்படுத்தாவிட்டால், வாக்குகள் திசை மாறுவது திண்ணம். 


(தொடரும், பின்னொரு நாளில்)

Tuesday, January 28, 2014

ஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...!!!

சர்..சர்ரென்று கார்கள் வந்து ஆம் ஆத்மி அலுவலக வாசலில் வந்து நிற்கின்றன. பல கார்களில் மேலே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டிருந்தன. ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் புடை சூழ அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இறங்குகிறார்.

"அரவிந்த் கேஜ்ரிவால் இருக்காரா...?" என்று கேட்டவாறே மள, மளவென்று அலுவலகத்தில் நுழைகிறார்.

ஒபாமா வருகிறார் என்றவுடன் கூட்டத்திலிருந்த கேஜ்ரிவாலும், மற்ற தலைவர்களும் வெளியில் வந்து அவரை அழைத்துச் செல்கிறார்கள். 

கேஜ்ரிவால் - "என்ன திடீரென்று...?

ஒபாமா - "என்னையும் உங்க கட்சில உறுப்பினரா சேத்துக்கிட்டதா செய்தி பார்த்தேன்..."

கேஜ்ரிவால் மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கிறார்.

மணிஷ் சிசோதியா - "அவரோட ஆபிசுலருந்து மிஸ்டு கால் வந்துருந்துச்சு..." 

ஒபாமா - "பரவாயில்லையே... ஆபிஸ் போன்ல மிஸ்டு கால் குடுத்தாலே உறுப்பினராக்கிருவீங்களா..."

மணீஷ் சிசோதியா - "உங்கள மட்டுமில்ல... உங்க ஆபிஸ்ல உள்ள எல்லாரையும் உறுப்பினராக்கிட்டோம்... இப்ப இந்த அலுவலகத்துக்குள்ள கால் வெச்சதுனால இந்தப் பாதுகாப்புப்படைக்காரங்களையும் உறுப்பினரா சேத்துட்டோம்... போறதுக்குள்ள உறுப்பினர் அட்டை குடுத்துருவோம்..."

அரவிந்த் கேஜ்ரிவால் - "ஆனாலும் நீங்க உறுப்பினராகுறத பரிசீலனை பண்ண வேண்டியிருக்கும்...."

ஒபாமா - "ஏன்..?"

யோகேந்திர யாதவ் - "உங்க கார் மேல சிவப்பு விளக்கு மாட்டிட்டு வந்தீங்கள்ல... அதனாலதான்.."

ஒபாமா -  "விளக்கு மாட்டக்கூடாதா..?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "லைட்டே இருக்கக்கூடாது.."

திடீரென்று அறையே இருட்டாகியது. ஒபாமாவின் பாதுகாப்புப் பொறுப்பாளர்தான் பாய்ந்து போய் கட்டையைப் பிடுங்கி இருட்டாக்குகிறார். "லைட்டைப் போடுங்க.." என்று ஒபாமாவே அலறியதால் மீண்டும் போடுகிறார்.

ஒபாமா - "இருந்தாலும் உங்க உறுப்பினர் சேர்ப்பு வித்தியாசம்தான்..."

மணிஷ் சிசோதியா - "அது ஏன்... அடுத்த அதிரடியும் வருது... ஆம் ஆத்மின்னு கூட முழுசா சொல்ல வேண்டாம்... ஆ... என்று சொன்னாலே உறுப்பினராக்கிருவோம்." 

குமார் பிஸ்வாஸ் - "இதுக்காக கொசு உற்பத்தி பத்தியும் யோசிக்கிறோம்... கொசு கடிச்சா ஆ..ன்னு கத்துவாங்க... வாயில... சாரி... கைல உறுப்பினர் அட்டைய திணிச்சுருவோம்..."

ஒபாமா - "இந்த சிறுவணிகத்துல அந்நிய முதலீடு வேணாம்னு சொல்லிட்டீங்களே..."

பிரசாந்த் பூஷண் - "பொது வாக்கெடுப்பு நடத்திதான் முடிவு பண்ணினோம்.."

ஒபாமா - "பொது வாக்கெடுப்பா... அப்படி ஒரு செய்தியே வரலயே.."

அரவிந்த் கேஜ்ரிவால் - "அந்த முடிவெடுக்குறப்ப நாங்க அஞ்சு பேரு இருந்தோம்... வாக்கெடுப்பு வெச்சோம்.. ரெண்டு பேரு வேணாம்னாங்க... ஒருத்தர் வேணும்னாரு... குமார் பிஸ்வாஸ் பழங்குடியினரக் கிண்டலடிச்சு ஒரு கவிதை எழுதுறதுல மும்முரமா இருந்தாரு... முடிவே எடுக்க வேணாம்னு நான் நெனச்சேன்..."

ஒபாமா - "உங்க வெளியுறவுத்துறைக் கொள்கை...?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "தில்லிக்கு வெளியே அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரானு உறவு நல்லாதான் இருக்கு... உள்துறைதான் பிரச்சனை... பின்னி வேற போட்டிக்கு உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.."

ஒபாமா - "இந்தத் தண்ணிக் கட்டணத்தைக் குறைச்சுட்டீங்களே...?"

அரவிந்த் கேஜ்ரிவால் - "எங்களுக்குக்குள்ள பல கருத்து இருக்குல்ல... அதான் எல்லாக் கருத்தையும் நடைமுறைப்படுத்திட்டோம்... விலைக்குறைப்பு, விலையேற்றம், அனைத்து வீடுகளிலும் மீட்டர்னு கருத்து வந்துச்சு.. விலையக் குறைச்சுட்டோம்... இதுதான் சாக்குனு எல்லா வீட்டுக்கும் மீட்டர் மாட்டியாச்சு... நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சா மறுபடியும் விலைய ஏத்திடலாம்.. விலைக்குறைப்பக் காட்டி மீட்டர் மாட்டுனதுனால, இனிமே யாருமே தப்பிக்க முடியாது.. கட்சிக்குள்ளயும் மனக்கசப்பு இருக்காது..."

ஒபாமா - "மின் கட்டணம்....??"

மணிஷ் சிசோதியா - "நாங்க அதக் குறைக்கலேன்னா, இவ்வளவு விலை கூடுனதுக்கு தனியார் மயம்தான் காரணம்னு அம்பலமாகியிருக்கும்... கூட்டுறதுக்கு வேற காரணம் சொல்லிக்கலாம்.. இருக்கவே இருக்கு பட்ஜெட் பற்றாக்குறை..."

ஒபாமாவிற்கு தலை சுற்றியது. "சரி நான் கௌம்பறேன்..." என்றார்.

மணிஷ் சிசோதியா - "வீட்டுக்குப் போன உடனே மறக்காம அந்த லைன்ல இருந்து மிஸ்டு கால் குடுங்க..."

ஒபாமா - "ஏன்..?"

மணிஷ் சிசோதியா - "உங்க மனைவிய உறுப்பினராக்கத்தான்..."

இருந்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டே இடத்தைக் காலி செய்கிறார் ஒபாமா.

சினிமாக் காட்சி போன்று, அவரது வாகனங்கள் செல்ல, மறுபுறத்திலிருந்து சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அலறியவாறே வருகின்றன.

அதிலிருந்து இறங்குகிறார் விளாதிமீர் புடின்...

கற்பனை - கணேஷ்

Saturday, December 10, 2011

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்”

தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7ந்தேதி கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்துவிடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்டமாகும்.எல்லையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் தவறான போராட்ட முறைகளைக் கையாள்வதானது தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு எதிராக வன்முறைச் சக்திகள் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட்டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக் கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.

அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கை யையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்கு தலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச் சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்தி களும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநி லங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ் நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்து வதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகி விடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

Sunday, December 4, 2011

தகர்ந்தது சங்ககிரி தீண்டாமைச்சுவர்!



சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்திற்கு வெற்றி


சேலம் மாவட்டம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவர், அப் பகுதி அருந்ததிய மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களால் இடிக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் இந்த சன்னியா சிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 450 அருந்ததிய மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இம் முறை பொது ஊராட்சியாக மாற்றப்பட்டதால், மற்ற சமூகத்தினரின் ஆதரவுடன் மகேஸ்வரி என் பவர் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்குப் பிறகு அருந்ததிய மக்களுக்கு பல் வேறு தொல்லைகள் துவங்கின. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படுவதில்லை. இந்நிலையில் தான் இந்த மக்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கள் பகுதியை அடைவதற்காகப் பயன்படுத்தி வந்த தார்ச் சாலையின் குறுக்கே திடீ ரென்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. நவம்பர்29 ஆம் தேதி கட்டப்பட்ட இந்த சுவரின் கட்டுமானப்பணி யை ஊராட்சித்தலைவர் மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட பலர் மேற்பார்வை செய்ததாக அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்தத் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களைத் துவக்கின. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ. சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைச் சுவரைப் பார் வையிட்டதோடு, மக்கள் நடத்திய போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். அதிகாரிகளைச் சந்தித்த அ.சவுந்தரராசன், தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுவர் இடிப்பு

உறுதியான போராட்டத்தால் டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை சங்ககிரி தாசில்தார் தலைமையில் வந்த அரசு ஊழியர்கள் பொதுச் சாலையை ஆக்கிர மித்துக் கட்டப் பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கினர். மீண் டும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டது.

போராடிய மக்களை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.நர சிம்மன், செயலாளர் ஆர். குழந்தைவேல், உதவி செய லாளர் என்.பிரவீண்குமார் , மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, August 16, 2011

"பப பாப்பா... பாப்ப பாப்பா..."


தெய்வத் திருமகள்

வரும்போதே மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஹிலாரி கிளிண்டன்தான் படத்தின் நாயகி என்பதால் முதலில் அமெரிக்கத் திருமகள் என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். எப்போதெல்லாம் குண்டுகள் இந்தியாவில் வெடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் ஹிலாரிகள் வருகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து இவரைப் போன்றவர்கள் வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு தரப்படும் என்பதை மனதில் வைத்துதான் தெய்வத்திருமகள் என்று படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருபுறம், ஆயுத விற்பனையை கன ஜோராக தெய்வத்திருமகள் ஹிலாரி செய்து கொண்டிருக்கிறார். மறுபுறத்தில், அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு "பப பாப்பா... பாப்ப பாப்பா..." என்று மன்மோகன்சிங் பாடி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு "எனக்குத் தெரியாது.." என்று அவர் சொல்வது கலகலப்பூட்டுகிறது. படத்திற்கு சோனியா காந்தி இசையமைத்துள்ளார். ஒபாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திக்விஜய்சிங் குழுவினரின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அக்குழுவில் முகத்தை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்பவராக வரும் ராகுல் காந்தி அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை.

*********

அவன் - இவன்

இப்படத்தில் வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இரு நாயகர்களுமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். நிதானத்தோடு வரும் ஸ்டாலின் உள்ளுக்குள் பதற்றமாக இருப்பதாகவும், எந்நேரமும் முறுக்கிக் கொண்டே இருந்தாலும் உதறலோடு வலம் வருபவராக அழகிரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். காட்சிகள் தானாகவே நகரட்டும் என்று இயக்குநர் கருணாநிதி விட்டிருக்கிறார். முதல் பாதியில் கம்பீரமாக வளைய வந்த துணை நடிகர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொங்கலூர் பழனிச்சாமி போன்றவர்கள் இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் முகத்தை மூடியவாறே வருகிறார்கள். ஆர்க்காட்டார் வரும் கும்மிருட்டுக் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு.

************

காஞ்சனா முனி

இப்படத்தின் நாயகன் பாபா ராம்தேவ் வரும் துவக்கக்காட்சியே திகிலாகத்தான் உள்ளது. இரவு நேர யோகா நிகழ்ச்சி என்று அனுமதி வாங்கிக் கொண்டு "இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை" உண்ணாவிரதம் என்று அறிவித்து விடுகிறார். ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு உண்ணாவிரதப் பந்தலுக்கு ராம்தேவ் வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. பத்தேகால் மணிக்கு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வந்து எப்படியாவது அவரை "பீடா" சாப்பிட வைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு பீடா இருப்பதை கேமரா அற்புதமாகப் படமாக்கியிருக்கிறது.

அவர் மறுக்கவே ஒரு கடிதத்தைக் கையில் திணிக்கிறார்கள். 12 மணிக்கு தானே வந்து பீடாவைத் தரத்தயார் என்று மன்மோகன்சிங் அதில் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு, ம்...ஹூம்... என்று மறுக்கும் வகையில் தலையாட்டிய ராம்தேவ், "தூக்கம் வந்துவிடும். 11 மணிக்கெல்லாம் வந்தால்தான் ஆச்சு.." என்று ஆக்ரோஷமாக பதில் எழுதி ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். பக்கத்தில் இருக்கும் தனது பி,.ஏ. பாலகிருஷ்ணாவிடம், அன்னாவுக்கு வந்ததவிட நமக்குக்கூட்டம் அதிகமா...? என்று அடிக்கடி கேட்டுக் கொள்கிறார். இப்படிப் பரபரப்பான காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும், முடியும்போது ராம்தேவைக் காணவில்லை. நன்றி. வணக்கம் என்று போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

**************

ஆடுகளம்

திஹார் சிறையும், உச்சநீதிமன்றமும்தான் ஆடுகளங்களாக இருக்கின்றன. ராசா மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகிய இருவரும் நடிப்பில் பிச்சு உதறியுள்ளனர். சிறைக்குள் போய் மாதக்கணக்கில் ஆனாலும் கம்பீரமாக காட்சிகளில் தோன்றுகிறார்கள். சிறைக்குள்ளே இருவரும் டென்னிஸ் ஆடும் காட்சிகள் அபாரம். ஒரு முறை சர்வீஸ் போட்டுவிட்டு, "15-0" என்று நடுவர் தொழிலதிபர் பல்வா கூறும்போது, இல்லையில்லை... "70000-0" என்று போடுங்கள் என்கிறார் கல்மாடி. ஆமாம்... அடுத்த சர்வீசும் ஜெயிச்சா "176000-0னு" போடணும் என்கிறபோது அரங்கமே சிரிப்பொலியால் குலுங்குகிறது. உச்சநீதிமன்றத்தில் 2ஜி விவகாரத்துல பிரதமரையுமா உள்ளே போடணும் என்று கேள்விகேட்டுவிட்டு சிறைக்குத் திரும்பிய ராசா, யாத்தே... யாத்தே என்ற பாடலைப் பாடியவாறு ஆடும்போது பலத்த கைதட்டல்.

************
கற்பனை : கணேஷ்

Sunday, July 24, 2011

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு!

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.

அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!



ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது.

Tuesday, June 21, 2011

கோடிகளில் புழங்கும் பணக்கார "சந்நியாசி"கள்!


புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமப் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு இன்னும் முழு விடை கிடைக்கவில்லை. ஆனால் சாமிகளின் ஆசிரமத்தில் கோடி, கோடியாகப் பணம்(12 கோடி ரூபாய்), கட்டி, கட்டியாகத் தங்கம்22 கோடி ரூபாய்), வெள்ளி(1.64 கோடி ரூபாய்) என்று தாராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இங்கு மட்டுமல்ல, பெரிய, பெரிய சாமியார்களின் சொத்து விபரங்களைப்(அதிகாரபூர்வ) பார்த்தால் மலைப்பூட்டும்.

மாதா அமிர்தானந்தமயி

இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார். மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது அமிர்தானந்தமயி டிர°டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது ஐந்து அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம். கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம். சந்தையில் உள்ள கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.

சொத்துகள் : அம்ரிதா விஸ்வ வித்யாபீடக் கல்லூரிகள், அம்ரிதா மருத்துவக்கல்லூரி(கொச்சி), அம்ரிதா பள்ளிகள், தொலைக்காட்சி நிறுவனம்.

------------

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துகிறார். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே தெரியாது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களுருவில் வாழ்க்கைக்கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களுரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.

சொத்துகள் : பெங்களுருவில் உள்ள வாழ்க்கைக் கலை மையம், ஸ்ரீஸ்ரீ சங்கர் வித்யா மந்திர் டிரஸ்டு, பி.யு.கல்லூரி(பெங்களுரு), ஸ்ரீஸ்ரீ ஊடகக்கல்வி மையம்(பெங்களுர்), ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம், வாழ்க்கைக்கலை சுகாதார மற்றும் கல்வி டிரஸ்டு(அமெரிக்கா) மற்றும் இதர சொத்துக்கள்.

--------------

ஆஷாராம் பாபு

இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர் இந்த ஆஷாராம் பாபு. ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன. 2009 ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆசிரமங்கள் உள்ளன.

----------------

ஓஷோ

மத்தியப் பிரதேசத்தின் குச்வாடா என்ற இடத்தில் டிசம்பர் 11, 1931 அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். சோசலிசத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தவர். அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்ற இடத்தை அவர் அமைத்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 1990 ஆம் ஆண்டில் அவர் மறைந்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து அவரது அமைப்பிற்கு இருந்தது.

-----------------

மகரிஷி மகேஷ் யோகி

1970களில் மிகவும் பிரபலமான இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது அவரது இயற்பெயராகும். உலகின் முக்கியமான நபர்கள் பலருக்கு அவர் ஆன்மீக ஆலோசகராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையிருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஏராளமான நிலங்கள் அவரது அமைப்பின் வசம் இருந்தன.

---------------

பாபா ராம்தேவ்

ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

சொத்துக்கள் : 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன. இவையெல்லாம் வெறும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சொத்துக் கணக்குகளாகும்.

--------------

Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

Friday, April 29, 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய சதி அம்பலம் !

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.

இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.

புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.