"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா..." என்ற பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்த ஒன்று. அதேபோல், "உன் இதயத்துல கை வெச்சு சொல்லு" என்பது பெரும்பாலான திரைப்படங்களில் வரக்கூடிய வசனமாகும். உண்மையைக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தவே அத்தகைய வசனம் இடம்பெறும். தொட்டுப்பார்த்த உடன், இப்படித்தான் நீ சொல்ல வேண்டும் என்றெல்லாம் இதயம் கட்டுப்பாடுகளை விதிக்காது. இதயத்தின் பணி ரத்தத்தை பம்ப் பண்ணிக் கொண்டிருப்பதுதான். அது சிந்திக்காது. சிந்திக்கும் திறன் அதற்குக் கிடையாது. ஆனால் சிந்தனைகள் இதயத்தைப் பாதிக்கும். மகிழ்ச்சி, கோபம், துக்கம் என்று அனைத்து உணர்வுகளுமே இதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் முக்கியமான தருணங்களில் இதயத்தைத் தொட்டுச்சொல்வது சொந்த உடலின் நலனுக்கு நல்லதே.மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றால் அவர் வயதானவராகத்தான் இருக்கும் என்பதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. இப்போதெல்லாம் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் மாரடைப்பு வந்து அல்பாயுசில் போய்விடுபவர்கள் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 கோடியே 72 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள் என்று உலக இதயக்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதயத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், இதய நோய்களின் பாதிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை உலக இதய நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
நடப்பாண்டில் "இதயத்தோடு பணியாற்றுங்கள்" என்ற முழக்கத்தை சர்வதேச அளவில் முன்வைத்துள்ளார்கள். பணியிடங்களில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகள் இதயத்தைப் பாதிக்கிறது என்பதால்தான் இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. உலக இதயக்கூட்டமைப்பு, உலக சுகாதாரக் கழகம் மற்றும் உலகப் பொருளாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளன. பணியிடங்கள் ஆரோக்கியமானதாகவும், சுமூகமான சூழல் இருப்பதாகவும் அமைய வேண்டும் என்று அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
2008 ஆம் ஆண்டில் சஃபோலாலைப் என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியர்களுக்கு மோசமான செய்தியே கிடைத்தது. எட்டாயிரம் இந்தியர்களை அந்த ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்தியர்களின் உணவில் போதிய அளவு ஊடடச்சத்து இல்லாமல் போய்விடுவதால் மற்ற நாடுகளில் உள்ள அவர்களையொத்த வயதினரைவிட மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக 49.1 இந்தியர்கள் இத்தகைய மோசமான உடல்நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. குறிப்பாக, 30 முதல் 39 வயதுவரையுள்ளவர்களுக்கும் இந்தப்பிரச்சனை இருப்பதாக தெரிய வந்தது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவில் நாற்பது வயதைத் தாண்டியவுடன் இருபது சதவிகிதப் பெண்கள் மாரடைப்பு வரும் அபாயத்தில் இருக்கிறார்கள். இயற்கையாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், அதிக அளவிலான அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை அந்தப் பாதுகாப்பை உடைத்து எறிந்துவிடும். உடலில் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவு 200 மில்லிகிராமைத் தாண்டக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். முன்பெல்லாம் மருத்துவர்களிடம் வந்தவர்களின் நோய்க்கும், தற்போது அவர்களிடம் மாரடைப்புக்காக வருபவர்களின் நோய்க்கும் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறை பெரும் பங்காற்றுகிறது என்பதுதான் தற்போது நோய்வாய்ப்பட்டு வரும் பெரும்பாலானவர்களின் சிக்கலாகும்.
அதோடு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லப்..டப்.. சத்தத்தை அதிகரித்துவிட்டது. பணியிடச்சூழல் குறித்து பேசுகையில் பணிப்பாதுகாப்பு, போதிய ஊதியம் போன்றவையும் அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும். பணியிடச்சூழலை நிர்ணயிப்பதில் இவை பிரதான இடம் பெறுகின்றன. நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதலான பங்கேற்பு என்பது தங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் உலகக்சுகாதாரக்கழகமும், இதயக்கூட்டமைப்பும் இணைந்து இதயத்தோடு பணியாற்றுங்கள் என்ற முழக்கத்தை வைத்துள்ளன.








