Thursday, September 17, 2009

அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?

பணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.

அவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.

கதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...?

No comments:

Post a Comment