Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, June 3, 2009

தேர்தலோடு எதுவும் முடியப் போவதில்லை......

'இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இல்லை, இனி பொதுத்துறை பங்குகள் விற்பனை' என்று அலறுகிறது தினமலர். 15வது மக்களவைக்காக நடந்த தேர்தலின் முடிவுகள் வரத் துவங்கிய மே 16ம் தேதி, யார் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட யார் அதிக எண்ணிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் நாட்டின் தொழிலதிபர்களுக்குப் பெரிய வேகம் இருந்தது. 61 என்ற ஓர் எண் வெறும் 20 என்று சுருங்கியவுடன் தான் அவர்களிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. நிலையான ஆட்சி, அதுவும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, அதுவும் முட்டுக்கட்டைகள் போடும் இடதுசாரிகளின் தயவு தேவைப்படாத ஆட்சி என்று அவர்களது ஷாம்பெய்ன் கிண்ணங்கள் அன்று இரவு பொங்கி வழிந்திருக்கக் கூடும்.


இடதுசாரிகளுக்கு ஏன் இப்படி அடி விழுந்தது என்பது பற்றி அந்தக் கட்சிகள் ஒருபக்கம் பரிசீலனையைத் துவக்கியிருக்க, பத்திரிகையில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் எழுதும் பத்தியாளர்கள் அலசல்களை வைத்தவண்ணம் உள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜூலை 2008ல் திரும்பப் பெற்றது தவறா, அதற்குத் தேர்வு செய்த காரணம் தவறா என்றும் 2004ல் ஆதரவு அளிப்பது என்று எடுத்த முடிவே தவறா என்றும் கேள்விகள் எழுப்புவோர் எல்லோரும் இடதுசாரிகளின் ஆதரவாளர்களுமில்லை, எதிர்ப்பாளர்களுமில்லை. இடதுசாரிகள் மீது விமர்சனம் வைப்பவர்களில் சிலர் சீர்திருத்தக் கொண்டாடிகளாகவே இருந்தபோதிலும் இன்றைய உலக பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்திய நிதித்துறை அவ்வளவு தீவிரமான பாதிப்புகளை அடையாமல் காபந்து செய்திருப்பது யார் என்று அறிந்தவர்கள். அந்த உணர்வின் நிழல் படிந்திருக்கிறது அவர்களது விமர்சனங்களில்.


ஆனாலும், மன்மோகன் தலைமையில் சீர்திருத்தங்களின் படைவரிசையை வெகுவேகமாக முன்னேற்றிச் சென்றுவிட வேண்டும் என்று நிதியிதழ்கள் (FINANCIAL DAILIES) எழுதுகின்றன. "நிதித்துறைக்குப் பொருத்தமாகக் குறைந்தபட்சம் இரண்டு நிர்வாகப் புலிகளாவது மன்மோகன் வசம் இருக்கையில் போயும் போயும் பிரணாப் முகர்ஜியைத் தானா நிதியமைச்சராகக் கொண்டுவர வேண்டும் ? வரும் காலங்கள் சந்தைக்கும் அரசின் பாத்திரத்திற்கும் முரண்பாடுகளைக் கூர்மையாக்கும்போது சந்தையின் சுதந்திரத்தை அனுமதிப்பதா, அரசின் தலையீட்டை நிறுவுவதா என்ற கேள்வி முன்னுக்கு வரும், துரதிருஷ்டவசமாக பிரணாப் போன்ற ஒரு மனிதர் பின்னதற்குத் தான் வாதிடுவார்" என்று பிசினஸ் லைன் நாளேடு தலையங்கம் எழுதிப் புலம்பியது. ஆனால், முகர்ஜி இந்த விமர்சனங்களை எல்லாம் புரிந்து கொண்டு, பெருமுதலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசத் துவங்கிவிட்டார். பிரதமரும் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமாகத் தொடரும் என்று தமது முதல் பத்திரிகை செய்தியிலேயே அறிவித்தார்.


ஜூலை 2008ல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த விவாதங்களுக்கு எழுத்துபூர்வமாக அளித்த தமது பதிலுரையில் டாக்டர் மன்மோகன் சிங் இடதுசாரிகள் தம்மை அவர்களது கொத்தடிமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பொருள் என்ன? 'இந்திய அரசியல் சாசன சட்டத்தின்முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கிற விதத்தில் நாங்கள் செயல்படுகிறோம், இடதுசாரிகள் விடமாட்டேன்' என்கிறார்கள் என்று அவர் சொல்லமுடியாததன் மொழிபெயர்ப்பு வாக்கியம் அது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற அபாரமான நூலை எழுதிய ஜான் பெர்க்கின்ஸ், நாட்டின் அதிபர்களை உலக வங்கியின் கொடிய கரங்கள் எப்படி வளைத்துப்போட்டன, மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்பட்டன என்று அப்பட்டமான உண்மைகளைப் பதிவு செய்துவிட்டு, தமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான இந்த நூலாக்கத்தில் தான் ஏன் இறங்க நேர்ந்தது என்பதை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். தமது பாவங்களைக் கழுவிக் கொள்ளும் இந்த முயற்சிக்குத் தம்மைத் தூண்டியது தமது அன்புமகள் என்றும், இதனால் தான் மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும் மகிழ்ச்சியே என்றும் எழுதும் பெர்க்கின்ஸ் இப்படி முடித்திருந்தார்: "நியூ ஹாம்ப்ஷயரில் கள்ளம் கபடமற்ற பாலகனாக வளர்ந்த நானா அப்படியொரு அடியாளாக மாறினேன் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது".


சாதாரண மக்கள் லஞ்சத்தையும் ஊழலையும் புரிந்து கொள்கிற பாணியே வேறானது. அவர்களுக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதும், தாசில்தார் மீதும் ஏற்படுகிற கோபம் நாட்டையே விலைபேசுகிற ஆட்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் பாவம் தமது அன்றாடத் தேவைகளுக்கு எதிரான வில்லன்களை மீறி பெரிய தாதாக்களை அறிய முடிவதில்லை. இல்லையென்றால், தங்களது வாக்குரிமையை கேவலம் பணத்தை வைத்து யாரையும் விலைபேசி விட அனுமதிப்பார்களா? ஒரே ஒரு புதுச்சேரி சரவணன் கோபப்பட்டு காங்கிரஸ் எம்.பி., (இப்போது அமைச்சர்!) நாராயணசாமி பெயருக்கு லஞ்சப் பணத்தை டிமாண்ட் டிராப்டு எடுத்து முகத்தில் வீசியிருகிறார். அவர் என்ன ஆகப்போகிறாரோ, அவரது தார்மீகத் துணிச்சலைப் பாராட்டி அந்த உணர்வைப் பாதுகாக்கும் பொறுப்பு நாகரிக சமூகத்திற்கு இருக்க வேண்டும்.


வெள்ளைத்துரையை எதிர்த்து கட்டபொம்மன் பேசியதாக எழுதப்பட்ட சிவாஜி கணேசன் வசனத்தை திருமண வீடுகளில் ஒலிச்சித்திரம் போட்டுக் கேட்டுக் கொள்ளவும், பள்ளிக்கூடங்களில் மாறுவேடப் போட்டிக்கு ரசித்துக் கொள்ளவும் மட்டும் பழக்கிக் கொண்டிருக்கிற சமூகமாக மாறிவிட்டோம். ஏகாதிபத்தியம் என்று சொன்னால், ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுத்துக் கொள்கிற மத்திய தர வர்க்கம், உலக நிதி நெருக்கடியின் சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது என்று விவாதிக்கத் தயாராயில்லை. ஐ டி துறை வேலைகளின் திடீர் மகிழ்ச்சி போலவே அதன் திடீர் அதிர்ச்சியையும் தனித்தனி நபர்களின் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே விளங்கிக் கொள்ள விரும்புகின்றனர்.
அதனால்தான், தினமலர் போன்ற ஒரு நாளேடு மக்களுக்கு எதிரான விஷயங்களையே சாதுரியமாகத் தலைப்பிட்டு அவர்களிடமே விற்றுப் பிழைக்க முடிகிறது. இடதுசாரிகள் தாம் சந்தித்த தேர்தல் தோல்வியைக் குறித்த படிப்பினைகளோடு மீண்டும் இயக்கத்தைத் தொடரவே செய்வார்கள். அவர்களது போராட்டங்கள் நாடாளுமன்றத்தோடு மட்டும் எப்போதும் சுருங்கியிருக்கவில்லை. அங்கே அவர்களது பாத்திரம் இப்போது மட்டுப்பட்டுப் போயிருப்பதில் சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
ஏற்கெனவே காசுள்ளவர்களுக்கே கல்வி என்று தனியார் கல்வி வள்ளல்களின் கருணையின் கீழ் வாழத் தள்ளப்பட்டிருக்கிற தேசத்தில், அந்நிய பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவோம் என்றும், கல்வியில் அந்நிய நிதி முதலீட்டை வரவேற்போம் என்றும் புதிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆரம்பித்து வைக்கிறார். எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பங்கு விற்பனை செய்யப்போகிறோம் (அதாவது தனியார்மயப்படுத்தப் போகிறோம்) என்ற அறிவிப்பையும் புதிய, நிலையான மற்றும் இடதுசாரிகளின் தயவு தாட்சண்யம் தேவைப்படாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்திருக்கிறது.



நிதித்துறை சீர்திருத்தமும், பென்ஷன் சீர்திருத்தமும் உடனடி நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்றும், இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் தொழிலாளர் சட்டங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும் உறுதியாகப் பேசத் தொடங்கிவிட்டனர். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட், துணைவங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைக்க வேண்டுமென்ற தனது வீர சபதத்தை முதற்கண் நிறைவேற்றிக் கொள்ளத் தயாராக நிற்கிறார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு முழுக்க கவிழ்ந்த வங்கிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு ஜூன் துவங்குமுன் கவிழ்ந்த வங்கிகள் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது. ஆனாலும், இந்தியாவிலோ நிதித்துறையை ஒழித்துக் கட்டத் துடியாய்த் துடித்தவர்களே ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


உலகின் அசுர மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. மணிக்கணக்கில் ஊதியம் பெறும் 61,000 பேருக்கும், நிரந்தர தொழிலாளர் சில ஆயிரம் பேருக்கும் கணக்குகளை 'செட்டில்' பண்ணிக் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கம்பெனியின் அதிகப்படி பங்குகளை அரசுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்ல வேண்டிய நிலையில் முதலாளித்துவக் கோட்டையின் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். அமெரிக்காவில் தங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த மக்களின் மருத்துவச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளுக்கும் முழு நாமம் போட்டுவிட்டு ஏய்த்த நிறுவனங்களை இங்கும் வரச் சொல்கிறது இந்திய அரசு. நிதித்துறை, எண்ணெய், தகவல் தொலை தொடர்பு, விமானத் துறை எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் படுவேகத்தில் பறக்கும் என்று பிசினஸ் லைன் நாளேடும் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது.


தொலைதூர இலத்தீன் அமெரிக்காவில் ஈக்குவடார் என்ற மிகச் சிறிய நாடு ஒன்று இருக்கிறது. இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ராஃபேல் கொரியா, கொள்ளை லாப அந்நிய கம்பெனிகள் தேச சொத்துக்களாக மாற்றப்படும் என்று அரசியல் சாசன சட்டத்திலேயே வழிவகை செய்யும் திருத்தம் செய்துதான் தேர்தலையே சந்தித்து அதிரடி வெற்றி பெற்றிருகிறார். வெற்றி பெற்றதும் நாட்டின் பட்ஜெட்டில் சரிபாதி செலவினங்கள் கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத்திட்டங்களுக்கே என்று முதல் அறிவிப்பும் விடுத்திருக்கிறார். கிழக்கே வலுமிக்க பொருளாதாரமாகப் பேசப்பட்ட ஜப்பானிலிருந்தும் ஒரு செய்தி வந்திருக்கிறது. பத்தாண்டுகளாகத் தங்கள் நாட்டில் வேலை பார்த்துவரும் சுமார் 3 லட்சம் அந்நிய தேசத்தவரை (பெரும்பாலும் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்) அவர்களது தாயகத்திற்கு நடையைக் கட்டுமாறு பயணச்செலவும் நஷ்ட ஈடும் கொடுத்துத் துரத்திக் கொண்டிருக்கிறது நெருக்கடியில் சிக்கித் திண்டாடும் ஜப்பான்.


இப்படி இரண்டு வழிகள் இருக்கின்றன - இந்தியா எதைத் தேர்வு செய்யப் போகிறது? நாம் கேட்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை அல்ல, அவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு உட்கார்ந்திருக்கும் அதன் சாதாரண - நாளொன்றுக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட இயலாதிருக்கிற 83.6 கோடி பேரையும் உள்ளடக்கிய - தங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற பாமர மக்களைத்தான்.
தேர்தலோடு எதுவும் முடிந்துவிடுவதில்லை, ஆட்சியாளர்களுக்கும் சரி, அவர்களைப் பதவியில் அமர்த்தியவர்களுக்கும் சரி.


(திரு.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் Bank workers unity பத்திரிகைகாக எழுதிய கட்டுரை இது.)

Saturday, May 23, 2009

ஓட்டுக்கு பணம்.... திருப்பி அனுப்பிய இளைஞன்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து பலவிதமான கருத்துக்களை நமது ஊடகங்கள் தினம் தினம் வெளியிட்டு வருகின்றனர். ஏதோ இந்திய நாட்டு மக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்பது போல மாயை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் அடைந்த வெற்றிக்கு கொடுக்கப்பட்ட விலை பல ஆயிரம் கோடிகள். மதுரையில் நடந்த அத்துமீரல்களும், அடாவடிகளும் மக்கள் அறிந்ததுதான்.


நமது பக்கத்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது வெற்றியடைந்துள்ள நாராயனசாமி புதுவையில் ஒரு ஓட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து வெற்றியை வாங்கி உள்ளார். அவரது ஆட்கள் வீடு வீடாக பணம் கொடுத்து சென்றது பலரை அவமானப்படுத்தியது, பலரை கோபப்படுத்தியது. அப்படி கோபம் அடைந்த இளைஞன் சரவணன் அவரது பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். அந்த இளைஞனை பாராட்டுவோம். அவனது சுயமரியாதை நமது இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக மாறட்டும்.

கடிதத்தை கிளிக் செய்து படிக்கவும்

Wednesday, May 13, 2009

தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறையாக

வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் முடிவுகள் வெளியிடுவது மற்றும் அதுவரையிலான தேர்தல் ஒளிபரப்புகள் குறித்து “பன்” டி.வி. நிறுவனத்தில் ஆலோச னைக்கூட்டம் நடைபெறுகிறது.

தலைமை நிர்வாகி : இன்னைக்கி வாக்குப்பதிவு முடிஞ்சுது...

செய்தி ஆசிரியர் : ஆமா சார்... இனிமே நாம கணிப்புகள வெளியிடலாம்...

தலைமை நிர்வாகி : மூணு நாள்ல நம்ம ரேட்டிங் எங்கயோ போயிடணும்...

செய்தி ஆசிரியர் : முடிவு வர்றப்போ மறுபடி விழுந்துருமே...

தலைமை நிர்வாகி : அத அப்புறம் பாப்போம்...நம்ம ஆதரவு அணி ஜெயிச்ச மாதிரி கணிப்புகள வெளியிடுங்க... நம்ம போற வேகத்துல 16 ஆம் தேதி வர்ற முடிவுகளே ஒண்ணு மில்லாம போயிடணும்...

செய்தி ஆசிரியர் : உண்மைதான் சார்... முடிவுகள் என்ன... நம்ம அணிக்கே ஒண்ணு மில்லாம போயிடும்... அதனால இப்பவே நம்ம அணிக்கு நெறய சீட் கிடைக்குறமாதிரி கணிக்கணும்...

ஊழியர் 1 : அகில இந்திய அளவுல யார் ஆட்சி அமைப்பாங்கன்னு போடணுமா....??

தலைமை நிர்வாகி : ஆமா... அதுல திமுக வுக்கு 28 சீட் கிடைச்சா மத்தியில என்ன நிலைமைன்னு யாராவது ரெண்டு பேர பேச வெக்கணும்...

செய்தி ஆசிரியர் : திமுக அவ்வளவு சீட்ல நிக்கக்கூட இல்லையே சார்...

தலைமை நிர்வாகி : நீங்க டிஎன்என்-ஒய்பிஎன், கய்ம்ஸ் டவ், கல் தக் மாதிரி டி.வி.லாம் பாக்குறதில்லையா... அவங்கள்லாம் கூச்சப்படாம அதிமுகவுக்கு 24, திமுகவுக்கு 23னு சொல்றாங்க...

ஊழியர் 2 : விவாதிக்க வர்றவங்க கூட்டிப்பாத்தா...

தலைமை நிர்வாகி : அதுக்குத்தான் இந்த மாதிரி டி.வி.லாம் பாக்கலையான்னு கேட்டேன்... இது எப்படினுலாம் கேட்கக்கூடாது.. இத வெச்சு விவாதம் பண்ணத்தான் கூப்புட்டோம்னு ஒரே அடியா போட்டுறாங்க...

செய்தி ஆசிரியர் : திமுக யார் கூட சேர்றதா கணிக்கணும்...

தலைமை நிர்வாகி : யார் கூட வேணும்னாலும் சேரும்னு கணிப்பு இருக்கணும்...

செய்தி ஆசிரியர் : இது மட்டும் இயல்பா சொல்லணுமோ...?

ஊழியர் 3 : அதிமுக...

செய்தி ஆசிரியர் : 23 சீட்ல ஜெயிச்சு படுதோல்வினு கணிப்பு இருக்கணும்... அப்படித்தான சார்...

தலைமை நிர்வாகி : இப்பதான் நீங்க நடுநிலையாப் பேச ஆரம்பிச்சுருக்கீங்க...

ஊழியர் 1 : மூன்றாவது அணிக்கு சீட் கம்மியாக் காட்டணும்...

செய்தி ஆசிரியர் : சார்... நம்ம ஆளுங்க ஜொலிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்...

ஊழியர் 2 : மத்தில ஆட்சி அமைக்க நாம யாருக்கு ஆதரவு கொடுக்குறோம்...

தலைமை நிர்வாகி : யார் ஆட்சி அமைக்குறாங்களோ அவங்களுக்குத்தான்..

ஊழியர் 3 : விவாதத்திற்கு யாரக் கூப்புடணும்...

ஊழியர் 2 : நம்ம அணில ஒருத்தர், அணிய ஆதரிக்குற ஒருத்தர், எதிர் அணிகளத் தாக்குற ஒருத்தர்.. இப்புடி மூணு பேர்.. அப்பதான் நடுநிலையா இருக்கும்...

தலைமை நிர்வாகி : ஆஹா... பிரமாதம்... நம்ம அணில ஒரே மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டோமே...

ஊழியர் 3 : அகில இந்திய அளவுல...

செய்தி ஆசிரியர் : காங்கிரஸ் அணிக்கும், பாஜக அணிக்கும் போட்டி இருக்குற மாதிரி கணிப்பு இருக்கணும்...

ஊழியர் 2 : ஆனா மூணாவது அணிக்கு நெறய சீட் வரும்போல இருக்கே... நம்ம கணிப்ப நம்புவாங்களா...

தலைமை நிர்வாகி : நம்புறதுக்கா கணிப்பு போடுறோம்.. நம்ம ஆசையக் கணிப்புன்னு போடுறோம்...

ஊழியர் 1 : மூணாவது அணிக்கு கம்மியா கிடைக்கும்னு பொய் சொல்ல ஏதாவது ஆதாரத்தக் காட்டணுமே...

செய்தி ஆசிரியர் : மம்தா பானர்ஜியே சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுவோம்...

ஊழியர் 3 : காங்கிரஸ், பாஜக அணிகளுக்கு கிடைக்குற சீட்னு நீங்க சொல்ற மாதிரி போட்டா 800 சீட் கிட்ட வந்துரும் போலருக்கே...

தலைமை நிர்வாகி : நம்ம கிட்ட யாரும் கேட்க முடியாதுல்ல...

செய்தி ஆசிரியர் : நம்ம அணிக்கு ஆதரவான நிலை இல்லைனா...

தலைமை நிர்வாகி : முதல்ல முடிவுகள மாத்திச்சொல்லணும்... அப்புறம் பாட்டுப் போடலாம்... பின்ன என்ன... இந்தியாவின் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகன்னு அறிவிச்சுட்டு ஏற்கெனவே நாலுதடவ ஒளிபரப்பு செஞ்ச படம் ஒண்ணப் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்...

Monday, May 11, 2009

நீங்க டி.வி.யே பாக்க வேண்டாம்... போங்க...

டிரிங்...டிரிங்..

ஹலோ... யாருங்க... ஆமா... இது தலைவர் வீடுதான்... அவர்கிட்ட பேசணுமா...இருங்க லைன் தர்றேன்...

உதவியாளர் : தலைவரே... அழகிரி பேசுறார்....


கருணாநிதி : ஹலோ...


மறுமுனையில் உள்ளவர் : தலைவரே... வணக்கம்.


கருணாநிதி : அழகிரி பேசுறதா சொன்னீங்களா....


தொண்டர் : ஆமா தலைவரே... பல முறை உங்ககிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிருக்கேன்... முடியலை... அதான் பொய் சொன்னேன்... இப்பலாம் மதுரையத் தவிர வேற எதையும் நீங்க நெனக்குறதில்லையே.... அதான் அண்ணன் பேரச் சொன்னேன்....


கருணாநிதி : சரி என்ன வேணும் சொல்லுங்க...


தொண்டர் : கொஞ்ச நாளாவே உங்க எழுத்து மெருகேறிப்போயிருக்கு தலைவரே... எப்புவும் நெனப்பு மதுரை மேலயே இருக்கு.. ஆனா அத மறைக்க ஒருதொகுதில மட்டும் மார்க்சிஸ்டுகள் கவனம் செலுத்துறாங்கன்னு ஒரு போடு போட்டிருக்கீங்க.... முந்திலாம் உங்க கவிதைல எதுகை, மோனை இருக்கும்... இப்பலாம் எடக்கு, மடக்குல தூள் கிளப்புறீங்க...


கருணாநிதி : நான் என்ன எனக்காகவா இதெல்லாம் எழுதுறேன்...


தொண்டர் : எங்களுக்காகவும் இல்லைனு எல்லாருக்குமே தெரியும்... அணுசக்தி ஒப்பந்தம் வர்றப்போ நீங்க எழுதாத எழுத்தா... அதக்கொன்னு குழி தோண்டிப் புதைச்சுறப்போறதா சூளுரச்சீங்க...அப்புறம் நாட்டுநலனுக்காக(!) நாட்டுக்கு விரோதமான ஒப்பந்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவிச்சது சாணக்கியத்தனத்திற்கு உதாரணம்...


கருணாநிதி : ஆட்சியைப் பத்தி கவலைப்படாததுனால அப்புடி ஒரு முடிவு எடுத்தோம்...


தொண்டர் : பெட்ரோல் விலைக்குறைப்புல எல்லாரோட வாய அடைக்குற மாதிரி நச்னு சொன்னீங்க...


கருணாநிதி : இந்தக்குறைப்பு எனக்குப்போதும்னு சொன்னேனே அதுவா....


தொண்டர் : ஆமா தலைவரே... கம்யூனிஸ்டுகளுக்கு கிடைச்ச தொகுதிகள் பத்தி சொல்றப்ப ரெண்டு தொகுதிங்குறது எம்மாம்பெருசுன்னும், மூணுங்குறது "துளியோண்டு"ன்னும் புரிய வெச்சு கணிதப்புரட்சியே பண்ணீட்டிங்களே...


கருணாநிதி : உடன்பிறப்பே... இந்த கணக்கு, வழக்கெல்லாம் நமக்குள்ளயே வெச்சுக்கலாம்...


மக்களுக்கு 50 லட்சம் ஏக்கர் நிலம்லாம் நினைவுக்கு வந்துடும்...


தொண்டர் : விலைவாசி உயர்வுலதான் தலைவரே... உங்க அனுபவம் பளிச்னு தெரிஞ்சுது...


கருணாநிதி : நீங்க மத்தவங்க நடத்துற டி.வி.யத்தான் அதிகமா பாக்குறீங்க போலருக்கு... இல்லைனா விலைவாசியப் பத்திலாம் பேச மாட்டீங்களே...


தொண்டர் : தலைவரே... இலங்கைப்பிரச்சன பத்தி நீங்க சொன்னதயும் டி.வி.ல பாத்தேன்... குழப்புதே...


கருணாநிதி : நமக்கு எதிரான டி.வி.யப் பாக்காதீங்கன்னு சொல்றனே...


தொண்டர் : இல்ல தலைவரே... கலைஞர் டி.வி.ல...


கருணாநிதி : நீங்க டி.வி.யே பாக்க வேண்டாம்... போங்க...

(என்னது.. தலைவர் வடிவேலு ஸ்டைலுக்கு வந்துட்டார்னு அரண்டு போய் போனை வைத்து விடுகிறார் தொண்டர்.)

Saturday, May 9, 2009

மதுரைத் தல புராணத்தில் புதிய அத்தியாயம்

சார்... வணக்கம். நான் .....ருந்து பேசுறேன்...
சொல்லுங்க சார்...
ராத்திரி நேரத்துல காக்கி கலர் கவருக்குள்ள மூணு 500 ரூபா நோட்ட வெச்சு வீட்டுக்குள்ள தூக்கிக் போட்டுட்டு போயிருக்காங்க... ஆத்திரத்துடன் வந்து விழுகின்றன சொற்கள்.
..... ம்....ம்...
ரொம்ப அவமானவா இருக்கு சார்... இப்புடி என் வாழ்க்கைல ஒரு நிலைமை எனக்கு வந்தது கிடையாது சார்... கட்டாய லஞ்சம் சார் இது...
பொரிந்து தள்ளினார் லைனில் வந்தவர். மதுரையில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றின் அலுவலகத்திற்கு காலையில் தொலைபேசி மூலம் தனது கோபத்தை வாசகர் ஒருவர் வெளிப்படுத்தியபோது நடந்த உரையாடல் இது.

*********

மற்றொரு உரையாடல்.
சார்... நேத்து பணம் கொடுத்தாங்க...
நீங்க அதெல்லாம் வாங்க மாட்டீங்களே... வாங்க மாட்டேன்னு சொல்லலையா...
சொல்ல வாயெடுத்தேன் சார்... அவங்க பணம் கொடுத்து ஓட்டு கேக்க வரலை... பணத்த வாங்கிகிட்டு மரியாதையா ஓட்டைப்போடுங்கன்னு மிரட்டுறதுக்காக வந்துருந்தாங்க... வீட்டுல நானும், என் வொய்ஃபும்தான் இருக்கோம்... ராத்திரி ரெண்டரை மணி சார்...
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் சொல்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர்.

*********
டில்லியிலிருந்து வெளியாகும் மெயில் டுடே நாளிதழுக்கு சங்கர நாராயணன் என்ற வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அவர், எங்கள் வீட்டுக்கு வந்து இரு கவர்களைக் கொடுத்தார்கள். ஆனால் எனது மனைவி அதை வாங்க மறுத்துவிட்டார். ஏன் வாங்க மாட்டீர்கள்..? என்று கேட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள் என்கிறார். மேலும் தொடரும் அவர், எனது பக்கத்து வீட்டுக்காரரும் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எங்கள் பகுதியில் நடந்த இந்த விநியோகத்திற்கு கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் செந்தில் என்பவர்தான் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் திமுகவின் பகுதிச்செயலாளரும்கூட என்று தெரிவித்துள்ளார்.

**********
அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் ஆதரவில் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சி°ட் கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் பொ.மோகனின் தேர்தல் பிரச்சாரம் அனல்பறக்க மதுரையில் நடைபெற்று வருகிறது. எதிர்த்து நிற்கும் அஞ்சா நெஞ்சனின் படைக்கு அன்றாடம் "பெட்ரோல்" போட வேண்டிய கட்டாயம் இருக்கும் வேளையில், மார்க்சி°ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மதுரை விஜயங்கள் செயல்வீரர்களுக்கு பூ°ட் குடித்த உற்சாகத்தை அளித்தது.


மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி எதிர்முகாமில் உள்ளவர்களின் காதுகளில் தேனாக ஒலித்தது. மோகனுக்கு ஓட்டை உள்ளேயா, வெளியேயா என்று எதிர் வேட்பாளர் அழகிரி நக்கலாகப் பேசிக் கொண்டதாக ஜூனியர் விகடன் பத்திரிகை செய்தி போட்டிருந்தது. ஆனால் மோகன் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தியைப் படித்த மதுரை வாக்காளர்கள், அவருக்காக வாக்குகள் சேகரிக்க சென்றவர்களிடம் மோகன் நலமா...? என்று முந்திக்கொண்டு கேட்ட செய்திகள் தங்கள் வாக்குகளில் ஓட்டையைப் போட்டு விடுமோ என்ற அச்சத்தை அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் விதைத்தது.


உடனே துவங்கியது பணப்பட்டுவாடா அத்தியாயம். ரவுடிகளை அழைத்துக்கொண்டு ராத்திரிக்கொள்ளையர்கள் போல் வீடு, வீடாக அத்துமீறி நுழைந்துள்ளனர். வாங்க மறுத்தவர்கள் ஏராளம், ஏராளம். அவர்களில் பலரை மிரட்டி பணத்தைக் கொடுத்துள்ளனர். ரவுடிக்கும்பலைப் பார்த்துப் பயந்துபோய் பணத்தைப் பெற்றுக்கொண்ட வயதானவர்கள் மட்டும் உள்ள குடும்பங்களும் உண்டு. கண்களை அகல விரித்துக் கொண்டு 500 ரூபாய் நோட்டைப் பார்த்து வாங்கிக் கொண்டவர்களை உதாசீனப்படுத்த முடியாது என்றாலும் வாங்குவது அவமானகரமான ஒன்று என்று பார்த்தவர்கள்... மறுத்தவர்கள்... ஒதுங்கியவர்கள்... வெட்கித்தலை குனிந்தவர்கள் ஆயிரக்கணக்கில்... ஆயிரக்கணக்கில்.


சாலையில், பேருந்தில், பொது இடங்களில் ஐந்து ரூபாய் நோட்டு கீழே கிடந்தால் கூட யாருடையது என்று விசாரித்துக் கொடுப்பதுதான் மனித இயல்பு. யாரும் முன்வராவிட்டால் சாலையில், பொது இடங்களில் கிடந்ததை ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கோ அல்லது கோவில் உண்டியலிலோ போடுவார்கள். பேருந்தில் கிடைத்தால், யாராவது கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று நடத்துனரிடம் ஒப்படைக்கும் மக்களை சிறுமைப்படுத்தும் வேலையில் திமுகவினர் இறங்கியதைப் பார்த்து மதுரை மக்கள் கொதித்துப் போய்தான் இருக்கிறார்கள்.


28 கோடி ரூபாயை விநியோகித்து விட்டார்கள் என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பணத்தை விநியோகிக்காமல் தங்கள் பாக்கெட்டுகளில் திமுகவினர் அமுக்கிக் கொண்ட தொகையும் அடங்கும். சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேரை வளைத்துவிட்டோம் என்று புளகாங்கிதத்துடன் திமுகவினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோல்வியை நோக்கிதான் மீண்டும் செல்கிறோம் என்றால் அடுத்த கட்ட விநியோகத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சப்பணத்தை திணிக்கும் அட்டுழியத்தைத் தட்டிக் கேட்டவர்களுக்கு வெட்டு விழுந்துள்ளது. வெட்டியவர்கள் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


திருமங்கலத்து நினைவுகளைக் திரும்பக்கொண்டு வந்து பூரிப்படைந்து கொள்ளும் திமுகவினர் ஓட்டுக்காகக் கையூட்டு பெறுவதை அவமானமாகக் கருதும் நபர்களை எதிர்கொண்டதும் பேந்த, பேந்த விழித்தார்கள். கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ரூபாய் நோட்டுகளைத் திணிக்கத் துவங்கியுள்ளார்கள். அரசியல் விழிப்புணர்வுள்ள மதுரை வாக்காளர்கள் ரவுடிகளைக் கண்டதும் அந்த கணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளார்கள். ஆனால் இந்த நிலைமை நீடிக்காது. திகைப்பு நீங்கிய பிறகு களம் தெள்ளத் தெளிவாக விளங்கும். அப்போது திமுகவினருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் கிடைக்கும்.


காவல்துறையினரின் கையாலாகத்தனம் வெளிப்படையாகவே தெரிகிறது. வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் ஒரு எட்டு எடுத்து வைக்கவே எட்டுத்திசைகளையும் நோட்டம் விடுகிறது. அது நினைத்தால் இத்தகைய அராஜகங்களை மட்டுமில்லாமல், அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் திமுகவிற்கு தொடர் குட்டுகளை வைக்கலாம். அவ்வாறு வைத்தால் தேர்தல் ஆணையத்தின் மீது... தேர்தல் நடைமுறைகள் மீது... ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல் மோகன் என்ற தனிநபர் மீதோ அல்லது அவர் சார்ந்துள்ள மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மீதோ அல்லது திமுக-காங்கிர° என்ற மக்கள் விரோதக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அதிமுக மற்றும் தோழமைக்கட்சிகள் மீதோ அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் நோக்கமே இதற்குப் பின்புலமாக உள்ளது.


இதுவரை நடந்த நிகழ்வுகள் கூட ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி ஒரு புனிதமான அரசியல் யுத்தத்திற்கு மட்டுமே தயாராக இருக்கக்கூடிய கட்சி என்பதுதான் அது. இவ்வளவு அராஜகங்கள் நடந்தபிறகும் ஒரு அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது. காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனாலும் லஞ்சப்பணம் விநியோகம் செய்தவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம்தான் ஒப்படைத்தனர். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவில்லை. லஞ்சப்பணமும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படுகிறது. இவையனைத்துமே சட்டபூர்வமான நடவடிக்கைகள்தான். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக ரீதியாக பிரச்சனைகளை அணுகிக் கொண்டிருக்கிறது.


மதுரை திமுக வேட்பாளர் அழகிரியின் இந்த முனைப்பு வாக்குகளைப் பெறுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை முதலிடத்திற்கு வருகிறதோ இல்லையோ, பணம் விநியோகிப்பதில் உத்தரவாதப்படுத்திவிடும் போலிருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக செய்த வேலையை மிஞ்சி விடுவார்கள். இதில்தான் இந்த இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாற்று அணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே போகின்றன. மதுரைக்கென்று தனியாக தல புராணம் உண்டு. அதில் புதிய அத்தியாயத்தைப் படைக்க மதுரை மக்கள் தயாராகி வருகிறார்கள்.