Friday, January 29, 2010

கோவையில் ஒரு தீண்டாமைச்சுவர்..!!!



கோவை மாநகராட்சி சிங்கை நகர் பத்தாவது வட்டம் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை ஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளது குறித்து கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவைச் சந்தித்து மனு அளித்துள்ளன.

கூட்டாக இரு அமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம் மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் ஆகிய இருவரும் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சி, சிங்கை நகர், பத்தாவது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள தந்தை பெரியார் நகர் உள்ளது. இக்குடியிருப்பு ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக காமராஜர் ரோடு பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நகரில் மாநகராட்சியின் மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சில ஆதிக்க சாதியினர் தீண்டாமை எண்ணத்தோடு தீண்டாமை சுவர் கட்டி சாலையை அடைத்து மறித்துள்ளனர். எனவே, மேற்படி சாலையில் தீண்டாமை சுவர் கட்டியுள்ளதை மாநகராட்சியின் மூலம் உடன் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் வரை தடுப்புச்சுவர் எழுப்பப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச்சுவர் வைத்து, அந்தச்சுவரின் மறுபக்கத்தில், அதாவது தங்கள் பகுதியில் விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப்பலகையும் மாட்டியுள்ளார்கள்.

அந்தக் கோவிலில் பூசைகள் எதுவும் நடப்பதேயில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோவிலை மாட்டுத்தொழுவமாகவே பயன்படுத்தி வருகின்றார். தலித் மக்களுக்கு அந்தப் பாதையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோவில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணி என்று பெரியார் நகர் மக்கள் கூறுகிறார்கள்.

பாதை மறிக்கப்பட்டு இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பாதை திறக்கப்பட்டால் தங்களுக்குத் தேவையான வசதிகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்தப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மனைப்பட்டாக்கள் தரப்பட்ட வேளையில் இருந்த இரு பாதைகளும் அடைக்கப்பட்டே இருந்தன என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தருகிறார்கள். மற்ற பாதையைத் திறக்கவும் கடுமையான போராட்டம் நடந்துள்ளது. காவல்துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலையாகியுள்ளனர்.

அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. இதனால் தங்களுக்குரிய பாதை மறிக்கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பொதுப்பாதையை மறித்துதான் சுவர் எழும்பியுள்ளது என்பது உறுதியானதால் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்ற உறுதியை அளித்தார்.

2 comments:

  1. ஆதிக்கச் சுவரைப் பற்றி எழுதிய அடுத்த நாளே ஆட்சியாளரை உலுக்கி அதை இடிக்க வைக்கவும் செய்யவல்ல இடதுசாரிகளின் ஆவேச எழுத்தின் வலிமை இன்னும் கூடட்டும். ஒடுக்குமுறைகள் நொறுங்கட்டும்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. Good the wall was demolished.Must see lord ganeshas vigraham is also placed in a worthy place.Otherwise Ramagopalan will make a controversy and declare that the piece fell whenLord Hanuman was flying over Coimbatore with Sanjeevini Malai......kashyapan.

    ReplyDelete