Monday, October 12, 2009

தெற்கில் மீண்டும் வட்டமிடுகிறது அமெரிக்கக்கழுகு!




ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் பெரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மீண்டும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் அமெரிக்காவின் அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. வெனிசுலா முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெனிசுலா கண்டுள்ள வெற்றி மற்ற தென் அமெரிக்க நாடுகளை உத்வேகப்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் தென் அமெரிக்க அரசுகள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் முன்பு இருந்தது போன்ற நெருக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

கொலம்பியா மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்ட ஹோண்டுரஸ் ராணுவம் ஆகியவைதான் அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டுரசின் ஜனநாயகப் படுகொலை அமெரிக்காவின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது என்பதுதான் தென் அமெரிக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஏற்படுத்தியுள்ள தனியாக வங்கி, தொலைக்காட்சி நிறுவனம், பிராந்திய ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் 1990களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்த முயற்சிகளை எடுப்பதில் முன்நின்றன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் தனது கண்களைப் பதித்துள்ளது. கொலம்பியாவில் புதிதாக ஐந்து ராணுவத்தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. கேட்டால், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறிக்கொள்கிறது. போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகள் என்று கூறி வெனிசுலாவையும், பொலிவியாவையும் கருப்புப்பட்டியலில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்தப்பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் கொலம்பிய ஆகிய இருநாடுகள்தான் அதிகமாக போதைப்பொருட்களை விளைவிப்பதோடு நுகரவும் செய்கின்றன. இடதுசாரிக்கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இருநாடுகள் வெனிசுலா மற்றும் பொலிவியா என்பதே கருப்புப்பட்டியல் தயாரிப்புக்குக் காரணமாகும்.

அதோடு, பிரேசில் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொலம்பியாவும் ஆமாம் என்று அருகில் அமர்ந்து கொண்டு தலையாட்டுகிறது. அமெரிக்காவிடமிருந்து வாங்காமல் பிரேசில் பிரான்சிடமிருந்தும், வெனிசுலா ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குவதால்தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. படைப்பெருக்கம் மற்றும் ஆயுதக்குவிப்பு என்று அமெரிக்கா கூறுவதெல்லாம் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வெளியில் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொள்ளவே என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

உலகிலேயே அதிகமான நாடுகளில் தனது ராணுவத்தளங்களை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காதான். 46 நாடுகளில் 865 அமெரிக்கத்தளங்கள் உள்ளன. பல நாடுகளில் அதன் அரசுகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவிலேயே எல் சால்வடார், ஹோண்டுரஸ், பியூர்ட்டோ ரிகோ, கியூபா, அருபா, கியுராசோ மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்தத் தளங்கள் இன்னும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு முதன்முறையாக, தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கப்பற்படை உலாவத் தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பாக ஊசலாட்டம் காட்டுகின்றன.

சொந்த பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கும் எங்களைப் பார்த்து, கொலம்பியாவில் ஏழு படைத்தளங்களை உருவாக்கத்திட்டமிடும் அமெரிக்கா எப்படி கேள்வி எழுப்பலாம் என்று உரிமைக்குரல் எழுப்புகிறது வெனிசுலா. அமேசான் பகுதிகளின் இயற்கைவளங்களைக் கொள்ளையடிக்கவே இந்தப்புதிய படைத்தளங்கள் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் கொலம்பியாவும் கலந்து கொண்டது. அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த விபரங்களைத் தெரிவிக்குமாறு மற்ற தென் அமெரிக்க நாடுகள் கேட்டபோது அதைத்தர கொலம்பியா மறுத்துவிட்டது. சொந்த நாட்டிற்கு எதிரான அம்சங்கள் அதில் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.


Saturday, October 10, 2009

அடடே... மதியுமா...??


அடடே...(தினமணி, அக்.7) பகுதியில் ஏர் இந்தியா மகாராஜாவே சலித்துக் கொள்வது போன்ற கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அவரால் தனது பைலட்டுகளை நம்ப முடியவில்லையாம். எப்ப சம்பளத்தை உயர்த்திக் கேப்பாங்க.. எப்ப ஸ்டிரைக் பண்ணுவாங்க... அடிதடியில இறங்குவாங்க... ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்வது போல் அந்தக் கேலிச்சித்திரம் உள்ளது.


பொதுத்துறை, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினால் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள் இந்த தனியார்துறை ஆதரவாளர்கள். மதியும் அவர்களின் வரிசையில் இணைந்து கொள்கிறார். ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நிறைவு பெற்று இன்னும் அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விண்ணில் பறக்கத் துவங்கவில்லை. அப்போதுமட்டும் ஜெட் நிறுவனத்தைக் கேலி செய்து சித்திரம் வரைய மதிக்கு ஏன் தோணவில்லை..? அது தனியார் நிறுவனம் என்பதாலா...??


சில நாட்களுக்கு முன்பு, முதலாளிகள் தங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் ஊதியத்திற்கு வரம்பு தேவை என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் கூறினார். உடனே முதலாளிகள் சங்கங்கள் அவர் மீது பாய்ந்து விட்டன. இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் தொடையைத் தட்டிக் கொண்டு இறங்கிவிட்டன. பாவம்... ஊதியத்தைக் குறைத்துவிட்டால் அடுத்த வேளைச் சோற்றிற்கு எங்கே போவார்கள்... என்பதுபோல ஓலமிடுகிறார்கள்.


இதுதான் இவர்களின் சம்பளப் பட்டியல்(ரூ.கோடியில்)


முகேஷ் அம்பானி - 44.02

மல்விந்தர் சிங் - 19.59

சுனில் மிட்டல் - 19.55

சஜ்ஜன் ஜிண்டால் - 16.73

பங்கஜ் ஆர் படேல் - 14.43

குமாரமங்கலம் பிர்லா - 11.25

கமல் சிங் - 10.64

ஒவ்வொரு ஆண்டும் வெறும் சம்பளமாக இவர்கள் வாங்கும் தொகை இது. நெருக்கடி நிலவுகிறது என்று கூறி சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வாங்கிக்கொண்ட முதலாளிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டேனென்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் சீட்டைக் கிழித்து அனுப்பவதுதான் முதலாளிகளின் தலையாய கடமையாக இருக்கிறது.

அடடே... மதியுமா..? என்ற வாசகர்கள் நினைத்துக் கொள்வதுபோல்தான் இந்தக் கேலிச்சித்திரமும் உள்ளது.

Thursday, October 8, 2009

கோவிலுக்குள் நுழைந்தே விட்டார்கள் தலித்துகள்!



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது காங்கியனூர் கிராமம். இங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபட தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தீ மிதி திருவிழாவில் பங்கேற்கவும் தடைசெய்யப்பட்டது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் புகார் அளித்தனர். தலித்து மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதைக் கிடப்பில் போட்டார்கள். இதனால் மக்களைத் திரட்டி கோவிலுக்குள் நுழைவது என்று முடிவு செய்யப்பட்டது.


செப்.30 அன்று ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன், அம்பேத்கர் நிக் கோலஸ் ஆகியோர் தலைமை தாங்கி னர். ஊர்வலமாக சென்ற போது காவல்துறையினர் 3கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தினர். மேலும், தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு 105 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.


காவல்துறையின் அடாவடி தனத்தை கண்டித்தும், தலித் மக்கள் வழிபட அனுமதிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் கிராமத்தில் அமைதி யை நிலைநாட்ட அக்டோபர் 6 மற் றும் 7 ஆகிய தேதிகளில் திருக்கோவி லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. 6ம் தேதி கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், திரௌபதி அம்மன் கோவில்அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும் சாமியை வழிபட உரிமை உள் ளது. இதனை தடைசெய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தடை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப் பட்டது.


மேலும் இந்தகூட்டத்தில் அமைதி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதில் தலித் பகுதியில் இருந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் மட்டும் கையொப்பமிட்டனர். எதிர் தரப்பில் கையெழுத்திட அவகாசம் கோரப் பட்டது. 24 மணி நேர அவகாசம் வழங்கிய அதிகாரிகள் உரிய பதில் கிடைக்க வில்லை என்றால் கோவி லுக்கு பூட்டு போடப்படும் என்றும் எச்சரித்தனர். மறுநாள் (அக்டோபர் 7) மாவட்ட வருவாய் அலுவலர் கதிர வன் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மறுதரப்பி னர் கையெழுத்து இடவில்லை. அதனை தொடர்ந்து டிஎஸ்பி நல்லியப்பன் தலைமையில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இதுபோன்று தலித்துகள் உள்ளே நுழைய முடியாத நூற்றுக்கணக்கான கோவில்கள் தமிழகத்தில் இன்னும் உள்ளன. பட்டியல் பெரியதுதான். ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் சுமார் 25 கோவில்களில் நுழைய அனுமதி பெற்றுத்தந்துள்ளது. இரட்டைத் தம்ளர், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க தடை, சலூனில் தலித்துகளுக்கு முடிவெட்ட தடை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளோடு தலித்துகளின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 105 பேரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 7, 2009

இடைநிலைக்கல்வியை இடையிலேயே விட்ட அரசு!



பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையை கல்வி வல்லுநர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசோ அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான கபில் சிபல், புரட்சிகரமான(!) பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். அரசுப்பள்ளிகளை தரமாக்க அதிரடி ஆலோசனை ஒன்றையும் கூறினார். அப்பள்ளிக்கட்டிடங்களில் முதல் மாடியில் தனியார்கள் பள்ளி நடத்த அனுமதி அளிக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.



சமூக நல நடவடிக்கைகள் வெட்டுங்கள் என்று இவர்களுக்கு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்த உலக வங்கியே கொந்தளிக்கும் அளவிற்கு மத்திய அரசின் அலட்சியம் உள்ளது. இந்தியாவின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி குறித்து உலக வங்கி ஆய்வொன்றைச் செய்துள்ளது. சாம் கார்ல்சன் என்ற ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அதில் திறன்படைத்த உழைப்பாளிகளை உருவாக்கக்கூடிய இடைநிலைக்கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டுள்ளார். தற்போது கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஆரம்பக்கல்விக்கு 52 சதவிகிதமும், இடைநிலைக்கல்விக்கு 30 சதவிகிதமும், உயர்கல்விக்கு 18 சதவிகிதமும் செலவழிக்கப்படுகிறது.



கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோதே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்குவோம் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எழுதியே வைத்தனர். இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதற்கு இடதுசாரிக்கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே காரணம். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசு, தற்போது இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அது பற்றிப் பேசுவதேயில்லை.



நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் சுமார் 25 சதவிகித ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஆய்வுப்படிப்பு முடிக்காமல் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேராகும். இடைநிலைக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக ஏழு சதவிகித இடங்கள் மட்டுமே உள்ளன. ஆரம்பக் கல்வி நிறைவு செய்பவர்களிலேயே 52 சதவிகிதம் பேர்தான் இடைநிலைக்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவில் இது 91 சதவிகிதமாகவும், இலங்கையில் 83 சதவிகிதமாகவும், வியட்நாமில் 72 சதவிகிதமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ஆரம்பக்கல்வி பயில சுமார் ஆறு கோடி மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று உலகவங்கி ஆய்வு கணிக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான நிலைமை இருக்கிறது. ஆரம்பக்கல்வி முடித்து இடைநிலைக்கல்விக்கு அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பீகாரில் 22 சதவிகிதமாக உள்ளது. ஜார்க்கண்டு மிக மோசமான நிலையில் வெறும் நான்கு சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்திலும் வெறும் 44 சதவிகித மாணவர்கள்தான் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக்கல்விக்கு செல்கிறார்கள் என்று உலகவங்கி கூறுகிறது. பொதுவாகவே கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் 92 சதவித மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். படிப்பை நடுவிலேயே கைவிடும் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகளை தனது ஆய்வறிக்கையில் உலகவங்கி முன்வைத்துள்ளது.

தரமான கல்வி, போதிய வாய்ப்புகள், நலிந்த பிரிவினருக்கு சிறப்பு உதவிகள் என்றெல்லாம் உலகவங்கியால் தரப்படும் பரிந்துரைகள் இந்திய கல்வி வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டவையே ஆகும். உலக வங்கியின் ஆய்வில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் ஒன்றுதான். அதாவது, மிகவும் அபாரமான கல்வித்திறனை வெளிப்படுத்தக்கூடிய முதல் ஐந்து சதவிகித இந்திய மாணவர்கள் சர்வதேச அளவிலும் முன்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் பற்றிய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 51 நாடுகளில் இந்தியாவுக்கு 43வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை மத்திய அரசுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. தெரிந்தே மத்திய அரசு செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, October 6, 2009

பண்டங்களாக மாற்றப்படும் சிறுமிகள்!


பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தேசிய பெண்கள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு விபரங்களை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 612 மாவட்டங்களில் 378 மாநிலங்களில் இந்தக் கொடுரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் இது அதிகமாக நடப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கொடுமைகள் நடப்பதற்கு வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாலினப் பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : சராசரியாக 90 சதவிகித தென் மற்றும் கிழக்கு மாநில மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.தமிழகத்திலும் இந்தக் கொடுமை பரவலாக இருக்கிறது. இங்கிருந்து 93.33 சதவிகித மாவட்டங்களிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 15 முதல் 35 வயதுவரையுள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 2.4 சதவிகிதப் பெண்கள் இத்தகைய கொடுரங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 43 சதவிகிதம் பேர் சிறுமிகளாவர்.
இதில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டுதான் இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டி வருகிறது. இதில் கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கணிசமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 22 சதவிகிதம் பேர் குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தொழிலுக்கு செல்கிறார்கள். எட்டு சதவிகிதம் பேர் தாலி கட்டிய கணவனாலேயே இந்தப் புதைகுழியில் தள்ளப்படுகின்றனர். சுமார் 18 சதவிகிதம் பேர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் இதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் நிர்ப்பந்தத்தாலும், ஆசைவார்த்தைகளாலும் சிக்கிக்கொள்வதற்கு வறுமையே பிரதான காரணமாகும். அதோடு பாலினப்பாகுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டு சதி வலையில் சிக்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் இத்தகைய அம்சங்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறு இந்த கொடுமை குறித்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.இதிலிருந்து அப்பாவி பெண்களையும், சிறுமிகளையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் தேசிய பெண்கள் ஆணையமே தனது அறிக்கையில் முன்வைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் இல்லாதது முக்கியமான காரணமாகும். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும். காகிதங்களில் இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைக்கு வர வேண்டும். அதோடு, பெண்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவர்கள். அவர்களும் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கருதுகிறது. பெண்களைப் பண்டங்களாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எந்திரங்களாகவும் பார்க்கின்ற மனநிலை மாற பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இது குறித்த கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் இல்லாத நிலை உருவானாலேயே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் கருத்தாகும்.
ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாற வேண்டும். அதுவே ஆண், பெண் பாகுபாடற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான முதல்படியாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வெடிக்கக் காத்திருக்கும் புற்றுநோய்க்குண்டு!



இந்தியர்களைப் பெருமளவில் பாதிக்கும் நோய் காசநோயாகும். எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பற்றிய விவாதங்கள், விளம்பரங்கள் மற்றும் சிகிச்சைக்கான நிதியுதவிகள் என்று நடந்தாலும் காசநோய் பற்றிய அக்கறை அரசுத்தரப்பில் பெருமளவில் காட்டப்படுவதில்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் காச நோயால் மடிந்து போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் இந்தியர்களாவர். இந்த கொடுமை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பெருமளவில் வெடிக்கும் வகையில் இதன் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆண்டு சராசரி சுமார் ஐந்தரை லட்சத்தைத் தொட்டுவிடும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து வகையான புற்றுநோய்களுமே அதிகரித்துள்ளன. கடந்த 24 ஆண்டுகள் குறித்த இந்த ஆய்வின்படி வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28 ஆயிரத்து 66 புதிய வாய்ப்புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 785 ஆக அதிகரிக்கப் போகிறது. சுமார் 66 சதவிகித அதிகரிப்பை புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்த பத்தாண்டுகள் ஏற்படுத்தப்போகிறது. இரண்டாவதாக மார்பகப்புற்று நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. புதிய நோயாளிகளின் ஆண்டு சராசரி தற்போது 42 ஆயிரத்து 863 ஆக உள்ளது. 2020க்குள் இந்த சராசரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துவிடும். மூளை, நரம்பு, வயிறு என்று அனைத்துப் புற்றுநோய்களுமே அதிகரிக்கவே செய்கின்றன.

இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ள குழுவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வினோத் ரெய்னா, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோயில் முப்பது சதவிகிதம் புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மென்று தின்றுவிடுவதாலும்தான் ஏற்படுகிறது. மார்பக மற்றும் வாய்ப்புற்று நோய்கள் அதிகரித்துள்ளதற்கும் இதுதான் காரணமாகும். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதோடு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறுகிறார்.

புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத்திட்டத்தில் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் பெரிதும் உதவும் என்கிறார் மருத்துவ ஆய்வுக்கான இந்தியக்கவுன்சிலின் அதிகாரி ஒருவர். செல்போன்கள் பயன்படுத்துவதால் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை தனியாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கவுன்சிலின் கருத்தாக உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகள் குறைந்ததாலும் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேற்கத்திய உணவுப்பழக்கங்கங்களுக்கு மாறியுள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை.

தேசிய புற்றுநோய் நிதியம் ஒன்றை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோதே சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதமாக உயர்த்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. மக்களுக்கு அளிக்கப்பட்ட அந்த உறுதிமொழி இன்றுவரை காப்பாற்றப்படவில்லை. நோய்கள் பெருகுகின்றன. பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்று அரசுத்துறைகள் தரும் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. தேவை ஒரு சரியான சுகாதாரக் கொள்கையே என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

Sunday, October 4, 2009

வரம் தர மறுக்கும் பூசாரி!

கிராமப்புற இந்தியாவில் வெறும் 28.3 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் வாக்குமூலம். வறுமையின் அளவைக் குறைக்க புதிய உத்தியையும் கண்டுபிடித்தார்கள். கிராமப்புற இந்தியர் மாதம் 365 ரூபாய் வருமானம் ஈட்டினால் வறுமைக்கோட்டைத் தாண்டி விடுகிறார் என்பதுதான் அந்த உத்தி. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கிலோரி உணவு அடிப்படையில் கணக்கிட்டால் உதைக்கிறதே என்பது ஆட்சியாளர்களின் கவலை. ஆட்சியாளர்களின் கணக்கு பல ஏழைக்குடும்பங்களை வறுமைக்கோட்டிலிருந்து உதைத்துத் தள்ளியுள்ளது.

இதற்கிடையில் மேலும் புதிய உத்திகளோடு வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை எதிர்கொள்ள(!) சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். இந்தக்குழு தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தங்களைப் பற்றி ஒரு குழு ஆய்வு செய்கிறது என்பது எத்தனை ஏழைகளுக்கு தெரியும் என்பது ஒருபுறம். மறுபுறத்தில், ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் இந்தக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இந்த அறிக்கையின் நிலைமை என்ன ஆகும் என்பதை திட்டக்குழு நடத்திக் காட்டியிருக்கிறது. வறுமைக்கோடு பற்றி கிராமப்புற மேம்பாட்டுத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதை திட்டக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க தற்போதுள்ள வருமான வரம்பின்படி சுமார் 1800 கலோரிகளைத்தான் கிராம மக்களால் பெறமுடியும் என்பது அத்துறையின் கண்டுபிடிப்பு. இதனால் தற்போதுள்ள வருமான வரம்புப்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற வருமான வரம்பை ரூ.700 ஆக உயர்த்தலாம் என்பது அக்குழுவின் பரிந்துரை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்று சொல்வார்கள். இங்கும் மாண்டேக்சிங் அலுவாலியா போன்ற பூசாரிகள் இடைமறிக்கிறார்கள்.

ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள் என்று சொல்வதா... என்று திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். சுரேஷ் டெண்டுல்கரின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அவரும் அபாயச் சங்கை கையிலெடுத்தால் பூசாரி அலுவாலியா பாய்ந்து பிடுங்கி விடுவார் போலிருக்கிறது.