Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, October 7, 2009

இடைநிலைக்கல்வியை இடையிலேயே விட்ட அரசு!



பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையை கல்வி வல்லுநர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசோ அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான கபில் சிபல், புரட்சிகரமான(!) பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். அரசுப்பள்ளிகளை தரமாக்க அதிரடி ஆலோசனை ஒன்றையும் கூறினார். அப்பள்ளிக்கட்டிடங்களில் முதல் மாடியில் தனியார்கள் பள்ளி நடத்த அனுமதி அளிக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.



சமூக நல நடவடிக்கைகள் வெட்டுங்கள் என்று இவர்களுக்கு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்த உலக வங்கியே கொந்தளிக்கும் அளவிற்கு மத்திய அரசின் அலட்சியம் உள்ளது. இந்தியாவின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி குறித்து உலக வங்கி ஆய்வொன்றைச் செய்துள்ளது. சாம் கார்ல்சன் என்ற ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அதில் திறன்படைத்த உழைப்பாளிகளை உருவாக்கக்கூடிய இடைநிலைக்கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டுள்ளார். தற்போது கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஆரம்பக்கல்விக்கு 52 சதவிகிதமும், இடைநிலைக்கல்விக்கு 30 சதவிகிதமும், உயர்கல்விக்கு 18 சதவிகிதமும் செலவழிக்கப்படுகிறது.



கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோதே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்குவோம் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எழுதியே வைத்தனர். இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதற்கு இடதுசாரிக்கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே காரணம். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசு, தற்போது இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அது பற்றிப் பேசுவதேயில்லை.



நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் சுமார் 25 சதவிகித ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஆய்வுப்படிப்பு முடிக்காமல் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேராகும். இடைநிலைக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக ஏழு சதவிகித இடங்கள் மட்டுமே உள்ளன. ஆரம்பக் கல்வி நிறைவு செய்பவர்களிலேயே 52 சதவிகிதம் பேர்தான் இடைநிலைக்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவில் இது 91 சதவிகிதமாகவும், இலங்கையில் 83 சதவிகிதமாகவும், வியட்நாமில் 72 சதவிகிதமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ஆரம்பக்கல்வி பயில சுமார் ஆறு கோடி மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று உலகவங்கி ஆய்வு கணிக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான நிலைமை இருக்கிறது. ஆரம்பக்கல்வி முடித்து இடைநிலைக்கல்விக்கு அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பீகாரில் 22 சதவிகிதமாக உள்ளது. ஜார்க்கண்டு மிக மோசமான நிலையில் வெறும் நான்கு சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்திலும் வெறும் 44 சதவிகித மாணவர்கள்தான் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக்கல்விக்கு செல்கிறார்கள் என்று உலகவங்கி கூறுகிறது. பொதுவாகவே கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் 92 சதவித மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். படிப்பை நடுவிலேயே கைவிடும் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகளை தனது ஆய்வறிக்கையில் உலகவங்கி முன்வைத்துள்ளது.

தரமான கல்வி, போதிய வாய்ப்புகள், நலிந்த பிரிவினருக்கு சிறப்பு உதவிகள் என்றெல்லாம் உலகவங்கியால் தரப்படும் பரிந்துரைகள் இந்திய கல்வி வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டவையே ஆகும். உலக வங்கியின் ஆய்வில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் ஒன்றுதான். அதாவது, மிகவும் அபாரமான கல்வித்திறனை வெளிப்படுத்தக்கூடிய முதல் ஐந்து சதவிகித இந்திய மாணவர்கள் சர்வதேச அளவிலும் முன்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் பற்றிய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 51 நாடுகளில் இந்தியாவுக்கு 43வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை மத்திய அரசுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. தெரிந்தே மத்திய அரசு செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, October 6, 2009

பண்டங்களாக மாற்றப்படும் சிறுமிகள்!


பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தேசிய பெண்கள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு விபரங்களை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 612 மாவட்டங்களில் 378 மாநிலங்களில் இந்தக் கொடுரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் இது அதிகமாக நடப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கொடுமைகள் நடப்பதற்கு வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாலினப் பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : சராசரியாக 90 சதவிகித தென் மற்றும் கிழக்கு மாநில மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.தமிழகத்திலும் இந்தக் கொடுமை பரவலாக இருக்கிறது. இங்கிருந்து 93.33 சதவிகித மாவட்டங்களிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 15 முதல் 35 வயதுவரையுள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 2.4 சதவிகிதப் பெண்கள் இத்தகைய கொடுரங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 43 சதவிகிதம் பேர் சிறுமிகளாவர்.
இதில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டுதான் இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டி வருகிறது. இதில் கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கணிசமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 22 சதவிகிதம் பேர் குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தொழிலுக்கு செல்கிறார்கள். எட்டு சதவிகிதம் பேர் தாலி கட்டிய கணவனாலேயே இந்தப் புதைகுழியில் தள்ளப்படுகின்றனர். சுமார் 18 சதவிகிதம் பேர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் இதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் நிர்ப்பந்தத்தாலும், ஆசைவார்த்தைகளாலும் சிக்கிக்கொள்வதற்கு வறுமையே பிரதான காரணமாகும். அதோடு பாலினப்பாகுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டு சதி வலையில் சிக்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் இத்தகைய அம்சங்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறு இந்த கொடுமை குறித்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.இதிலிருந்து அப்பாவி பெண்களையும், சிறுமிகளையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் தேசிய பெண்கள் ஆணையமே தனது அறிக்கையில் முன்வைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் இல்லாதது முக்கியமான காரணமாகும். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும். காகிதங்களில் இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைக்கு வர வேண்டும். அதோடு, பெண்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவர்கள். அவர்களும் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கருதுகிறது. பெண்களைப் பண்டங்களாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எந்திரங்களாகவும் பார்க்கின்ற மனநிலை மாற பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இது குறித்த கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் இல்லாத நிலை உருவானாலேயே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் கருத்தாகும்.
ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாற வேண்டும். அதுவே ஆண், பெண் பாகுபாடற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான முதல்படியாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.