நெருக்கடி... Monday, September 7, 2009
இதுதான்(ங்க!) அரசாங்கம்...!
நெருக்கடி... Saturday, September 5, 2009
அணு உலைகள் : இந்த சரணாகதி ஏன்?

Friday, September 4, 2009
அவர்கள் இல்லை, அதனால்தான்...
இன்னும் பங்குகள் விற்பது குறித்து முடிவே எடுக்கப்படவில்லை. ஆனால் பல் பிடித்துப் பார்க்கும் வேலையில் அமெரிக்க நிறுவனம் இறங்கிவிட்டது. அரசு இதுவரையிலும் எதையும் சொல்லாத நிலையில், அதன் அனுமதியுடன்தான் ஏடி அண்டு டி நிறுவனம் களத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. பி.எஸ்.என்,எல். நிர்வாகம் பளிச்சென்று பதில் சொல்லியிருக்கிறது. நாங்கள் எதையும் முடிவு செய்ய முடியாது. அரசின் கதவுகளைத் தட்டுங்கள் என்று கூறிவிட்டார்கள். ஆனால் அரசோடு உட்கார்ந்து மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டுதான் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைப் பார்க்கச் சென்றார்களோ என்னவோ...?
லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய நிறுவனத்தைக் குறைத்து மதிப்பிடும் வேலைகளும் துவங்கிவிட்டன. 81 ஆயிரம் கோடிதான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மதிப்பு என்ற கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள். 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 26 சதவிகித பங்குகளை ஏடி அண்டு டிக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகைய திட்டத்தை அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்தி விட முடியாது என்றாலும் ஒவ்வொரு நகர்த்தல்களையும் நன்றாக யோசித்துதான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சனை எழும்போதும் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரின் மனங்களிலும் "இடதுசாரிகள் இல்லை. அதனால்தான் கண்மூடித்தனமாக இயங்குகிறார்கள்" என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
"கிழக்கு லண்டன்" லட்சணம் இதுதானா...?
இந்தியாவின் வணிகத்தலைநகர் என்று பெயர் பெற்ற மும்பையில் தனிநபர் வருமானம் ரூ. 65,361 ரூபாய். இதுதான் நாட்டிலேயே மிக அதிக வருமானத்தைக் கொண்ட நகரமாகும். ஆனால் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மும்பை மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது நாட்டின் வணிகத்தலைநகரில் வசிக்கும் மக்களில் பத்து சதவிகிதம் பேர் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கான வருமானத்தை ஈட்ட முடியாமல் இருக்கிறார்கள். இந்த நகரத்தில்தான் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் பத்து கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. ஐ.நா.வளர்ச்சித்திட்ட அமைப்பின் நிதியுதவியுடன் மும்பை மாநகராட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில்தான் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. நகரின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற நிலையுள்ள இடங்களில்தான் வசிக்கிறார்கள். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதி மும்பை நகரில் ஆறு சதவிகிதப்பரப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பாதிப்பேர் 94 சதவிகிதப் பரப்பில் வசிக்கிறார்கள். குடிசைப்பகுதிகளில் அவ்வளவு அடர்த்தியான மக்கள் தொகை இருக்கிறது. இவ்வளவு மோசமாக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும் மும்பையை, கிழக்கின் லண்டன் என்று இனிமேலும் அழைப்பது சரியாக இருக்குமா? என்று அந்த அறிக்கையே கேள்வி எழுப்புகிறது.
அது சரி, இந்த மும்பை யாருக்குச் சொந்தம் என்று கேட்கும் அந்த அறிக்கை, நகர்ப்புற வறுமை பெருகிக்கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 12.17 லட்சம் பேரின் மாத வருமானம் 591 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது. இத்தனைக்கும் நாட்டின் தனிநபர் வருமானத்தின் சராசரி 29,382 ரூபாயாக 2006-07 ஆம் ஆண்டில் இருந்தபோது, மும்பையின் சராசரி 65,361 ரூபாயாக இருந்தது. இந்தியாவுக்குள்ளேயே ஒரு குபேரபுரி என்று பலரால் வர்ணிக்கப்படும் மும்பை நகரில்தான் இவ்வளவு கோரமான ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதோடு, இத்தகைய ஏழ்மை நிலைமை இருப்பதை அனைவராலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அளவிற்கு பரவலாக உள்ளது.
வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் தரப்படுகின்றன. இதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று வெறும் 8.5 சதவிகித மும்பைவாசிகள்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. ஆனால் மும்பை நகர்ப்புற போக்குவரத்துத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 40 சதவிகித மும்பைவாசிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. இத்தகைய பல்வேறு ஆய்வுகள் மும்பையில் வறுமை பரவலாக இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
தனிநபர் வருமான சராசரி பற்றிக் கூறியுள்ள இந்த அறிக்கை, இந்த சராசரி என்பது மக்கள் மத்தியில் இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. இங்கு பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், வறுமையில் உழல்பவர்கள் என்று அனைவருமே மும்பையில் வாழ்கின்றனர். அனைத்து நகரங்களைப் போலவே, இங்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படாமலேயே போய்விட்டது. இந்திய சமூகத்தின் நிலைமையும் கூட அதுதான். மும்பையின் மக்கள் தொகையில் 54 சதவிகிதம் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அதோடு, இந்தக் குடிசைப்பகுதி மும்பையின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதத்தைதான் எடுத்துக் கொண்டுள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது என்று குறிப்பிடுகிறது.
குடிசைப்பகுதியில் வாழும் மும்பைவாசிகளின் வாழ்க்கை மற்ற பகுதியில் இருப்பவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனதாகும். மற்ற பகுதியில் வாழ்பவர்களின் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதோடு, மலிவான பொருட்களை அவர்களுக்கு விற்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மும்பையின் ஒரு பாதியில்லாமல், மற்றொரு பாதியின் வாழ்க்கை முடங்கிப் போய்விடும். இவர்களின் குறைந்த செலவுக்கான சேவையால் பல குடும்பங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளன. மற்ற பகுதிகளில் வாழும் பெரும்பாலானோருக்கு இந்தக் குடிசைப்பகுதிகளுக்கு வர வேண்டிய அவசியமோ அல்லது அப்பகுதி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயமோ கூட ஏற்படுவதில்லை. இத்தனைக்கும் இந்த வறுமையில் வாடும் மனிதர்கள் இருப்பது அவர்களுக்கு மிக, மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது.
Thursday, September 3, 2009
புரோக்கர்களாக மாறிய மம்தாயிஸ்டுகள்

மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கெதிராக கிளம்பிய திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக மற்றும் எஸ்.யு.சி.ஐ ஆகியவை அடங்கிய கூட்டணி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதலாளித்துவ ஊடகங்களின் உதவியுடன் பொது மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையிலான மோதல் என்று தவறான மோசடிப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கு அப்பாவிப் பொது மக்களும் பலியானார்கள்.
நந்திகிராமத்தில் சிக்கல் நிலவியபோதே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று எச்சரிக்கை விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு பெரும்பாலான ஊடகங்களை மவுனமாக இருக்கச் செய்துவிட்டது. ஆனால் லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, மம்தாஜி சரணம் என்ற அபயக்குரல் மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி மூலமாக எழுந்தது. நந்திகிராமத்தில் நாங்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டாமா என்று ஏற்கெனவே செய்த கூட்டுச்சதியையும் போட்டு உடைத்தார்.
அதேபோல், தொழிற்சாலைகளை அமைக்க நிலங்களை மாநில அரசு எடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. அது உண்மைதான் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஹால்டியா பகுதியில் உள்ள பல நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வாங்கித்தர புரோக்கர்கள் கிளம்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுபேந்து அதிகாரியின் ஆதரவாளர்களாவர். எட்டு லட்சம் மதிப்பிலான நிலத்தை 25 லட்சத்திற்கு புரோக்கர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர்.
இவ்வாறு நடத்தப்படும் பேரத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடையிலுள்ள புரோக்கர்களே லாபத்தை அடித்துக் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. இந்த புரோக்கர்களுக்கு ஆதரவாகவே நிலம் கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி நிர்ப்பந்தித்து வருகிறார். தனியார் தொழில் துவங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலையை அரசு செய்யக்கூடாது என்கிறார் அவர். நேரடியாக விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் அடிமட்ட விலைக்கு விவசாயிகளின் நிலங்கள் பறிபோனது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நிலம் கையகப்படுத்தலுக்காக அரசாணை வெளியிடப்படாத தொழில் திட்டங்களுக்காக நிலங்களை எடுக்கப்போவதில்லை என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய மசோதாவுக்காக மாநில அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புரோக்கர்களின் பிடியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்குள்ள பகுதிகளில் நிலங்களை அடையாளம் காணும் வேலையில் அக்கட்சிக்காரர்கள் இறங்கியுள்ளனர். தனது நிலத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது.
நிலத்தை எடுக்கும் நடவடிக்கையில் அரசு இருந்தபோது அதற்கு ஒரு வெளிப்படையான தன்மை இருந்தது. ஏழைகளிலும் ஏழையாக இருப்பவருக்கு அதில் பாதுகாப்பு கிடைத்தது. இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விவசாயிகள் அல்ல, வெறும் புரோக்கர்கள்தான். தங்கள் வருமானம் போய்விடுமே என்பதுதான் அவர்களுடைய அச்சம். சந்தை மதிப்பை விட அதிகமாகக் கொடுத்து, விவசாயிகளுக்கு மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்யும் மாநில அரசுக்கு எதிராக மோசடிப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டு வன்முறையையும் ஏவிவிட்டனர். புரோக்கர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் ரத்தமும், சதையும் கொண்டவர்களல்ல. அவர்களும் விற்பனைப் பண்டம்தான்.
தாத்தாவுக்கு இறுதிசடங்கு செய்த சகோதரிகள்!
உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தங்கள் தாத்தாவுக்கு இறுதிச்சடங்கை செய்துள்ளார்கள்.
பாகல்பூரைச் சேர்ந்தவர்கள் ரிங்கு யாதவ்(வயது 27). அவருக்கு ரீமா மற்றும் அஞ்சு என்ற இரு தங்கைகள். 2005 ஆம் ஆண்டின் தங்கள் தந்தையை அவர்கள் இழந்தனர். அதற்குப்பிறகு தாயோடு தாத்தா வீட்டுக்கு சென்றார்கள். தாத்தா பகதூரின் பராமரிப்பில் அவர்கள் இருந்து வந்தார்கள். இவர்கள் தங்கள் தாத்தாவிடம் வந்து சேர்ந்தபிறகு தாத்தாவின் இரு சகோதரர்கள் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்று விட்டனர். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தனர்.
இந்நிலையில் 70 வயதான பகதூர் திடீரென்று மரணமடைந்தார். பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவருடைய சகோதரர்கள் இந்தச் செய்தி கிடைத்தபிறகும் வரவில்லை. அவருக்கு இறுதிச்சடங்குகளைச் செய்ய வேறு ஆண்கள் யாருமில்லை என்பதால் தாங்களே அதைச் செய்வது என்று மூன்று சகோதரிகளும் முடிவெடுத்தனர். கிராமத்தினர் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பகதூரின் சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து சகோதரிகள் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் இறுதிச்சடங்குகளைச் செய்ய தங்கள் பாட்டி மற்றும் தாய் ஆகிய இருவரின் அனுமதியைப் பெற்ற சகோதரிகள் சரயு நதிக்கரையில் உள்ள காளிச்சரண் சுடுகாட்டில் தாத்தாவின் உடலுக்கு நெருப்பு வைத்தனர். கிராமத்தினர் மத்தியில் சகோதரிகளின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களில் சிலர் ஆதரவாகவும் பேசியது சிறிய மாற்றம் ஏற்பட்டதை உணர்த்தியது.
Tuesday, September 1, 2009
என்ன கொடுமை சார் இது...?
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து சுமார் மூன்று மாதங்களாகிவிட்டன. கட்டண உயர்வுகள் நடுத்தர மக்களையே முழிபிதுங்கச் செய்துவிட்டன. தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் பயிலும் தங்கள் குழந்தைகளுக்காகக்கூட கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல இடங்களில் அநியாயக் கட்டண உயர்வை எதிர்த்து பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்தினர். சில இடங்களில் அந்த எதிர்ப்பினால் பள்ளி நிர்வாகங்கள் கட்டணத்தைக் குறைத்தன. கிட்டத்தட்ட காலாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு இங்குள்ள குழந்தைகள் வந்துவிட்டன.
வட இந்தியப் பள்ளிகள் பெரும்பாலும் ஜூலை மாதத்தில்தான் திறக்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் கட்டண உயர்வு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. போட்டி என்றால் அடுத்தவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பதால் சாதாரண மக்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முயற்சிக்கின்றனர். கடன்பட்டாவது தனது குழந்தைகளையும் போட்டியில் பங்கேற்க முனைகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் அநியாயத்திற்கு உயர்த்தப்படும் கட்டணங்கள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன. அவர்களின் குழந்தைகளோ வாழ்வில் மறக்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே வில்லன்களாகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது மகாராஜா பள்ளி. இதை ரமேஷ் சைன் என்பவர் நடத்திவருகிறார். இந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி நடப்பாண்டிற்கான கல்விக்கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. அது குறித்து விசாரிக்க தனது அறைக்கு வருமாறு அழைத்த ரமேஷ் சைன் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்தக்கொடுரம் அம்பலமானதால் ரமேஷ் சைன் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காவல்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைது செய்யாததால் பள்ளிக்கூடம் மீது கற்களை வீசியுள்ளனர். இவ்வளவு நடந்தும் ரமேஷ் சைன் இன்னும் கைது செய்யப்படவில்லை.
தனியார் பள்ளியின் கொடுரங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஃபரீதாபாத்தில் நடந்த சம்பவம் உள்ளது. அரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள பள்ளியொன்றில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாணவிக்கு கல்வி கட்டணம் கட்டுவதிலிருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால் கட்டணத்தைக் கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிநிர்வாகம் பிடிவாதம் பிடித்தது. அதோடு நிற்கவில்லை, வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் முன்பாக அந்தச் சிறுமியை நிறுத்திய இரு ஆசிரியைகள் மேலாடையை அவிழ்த்திருக்கிறார்கள். இதுதான் எல்லை என்று நினைப்பதற்குள் அடுத்த கொடுரத்தையும் அரங்கேற்றினார்கள்.
அந்த அரைகுறை ஆடையோடு ஒவ்வொரு வகுப்பறையாக அழைத்துச் சென்றார்கள். மற்ற வகுப்பறைகளில் இருந்த மாணவிகளை, வெட்கம், வெட்கம்(ஷேம், ஷேம்) என்று குரல் எழுப்பப் சொல்லியிருக்கிறார்கள். கண்ணீரோடு தனது இரு கைகளையும் மார்பின் குறுக்கே வைத்து மறைத்துக் கொண்டு சென்ற கொடுமை பல மாணவிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர்களது குடும்பம் மிகவும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தது. கொடுரத்தை நிகழ்த்திய லலிதா மற்றும் நீது என்ற இரு ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானத்தை சந்தித்துள்ள அந்தச்சிறுமியின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
தனியார் கல்வியின் குரூரவடிவங்கள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் இருக்கிற அரசுப்பள்ளிக்கூடக் கட்டிடங்களில் முதல் மாடி, இரண்டாம் மாடிகளை தனியாருக்கு விட்டு புரட்சி செய்ய மத்திய கல்வித்துறை அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத்தை கல்வித்துறைக்கு அரசு செலவு செய்யும் என்று 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தபிறகும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் தற்போது இல்லாததால் உறுதிமொழியையே எடுத்து விட்டார்கள்.