Friday, December 19, 2008

ஷு...ஷு...ஜார்ஜூ.. ஷு...ஷு...ஜார்ஜூ





பொம்மலாட்டம்


விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள் போன்ற பொம்மைகளை வைத்து நாயகர்கள் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் பந்தாடி விளையாடுகிறார்கள். இவர்களுக்கு எதிர் கோஷ்டியான அத்வானி, ராஜ்நாத்சிங், இவங்கள வெச்சு நாங்க ஆடாத ஆட்டமா... அது மாதிரிலாம் உங்களால முடியுமா என்கிறபோது, நாயகர்களுக்கு கோபம் வந்து, பொம்மைகளை உலுக்கி எடுத்து விடுகிறார்கள். இருவரின் ஆட்டமுமே முடிவுக்கு வந்துவிடுவது போன்ற நிலை ஏற்படுகிறது. அப்போது , எங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. நாங்களே தோற்கடித்துக் கொள்வோம் என்று அத்வானி கோபத்தில் பேசும்போது தியேட்டர் கலகலக்கிறது. கிளைமாக்சில்தான், இந்த இரண்டு கோஷ்டிகளும்கூட பொம்மைகள்தான் என்று தெரிகிறது. இவர்களை ஆட்டிவைப்பது யார் என்பதை படம் தெளிவாக சொல்லாவிட்டாலும், அமெரிக்க தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறப்பதை காட்டியவாறு படத்தை முடிக்கிறார்கள்.

----------------


தெனாவட்டு


"ராமசாமி தெருவில் அப்துல்லா கால் வைத்து விட்டார்" என்று கூறி ஊரையே கொளுத்துகிறார்கள் வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தளக் குண்டர்கள். ராமசாமி தெரு என்பதே அந்த ஊரில் இல்லை என்ற விபரமும் தெரிய வருகிறது. ராமசாமி தெருவில் அப்துல்லா நடந்தால் என்ன என்று கேட்கிறவர்களிடம், நீங்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று குண்டர்கள் கூட்டத்தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டுகிறார். கவரவ வேடத்தில் கிருஷ்ணர் நடித்துள்ளார். கொலை வெறித்தாக்குதல் நடக்கும்போது தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். "ரொம்பப் பேசினா போட்டுத் தள்ளிருவேன்" என்று ஒரு குண்டர் மிரட்டுகிறார். "மக்கள் உன்ன சும்மாவா விடுவாங்க" என்று கிருஷ்ணர் கேட்கிறபோது, "நானா கொன்னேன்னு சொல்வேன்... உன்னைய கொன்னுட்டு பக்கத்துல பச்சைக்கலர் தொப்பியப் போட்டுட்டு ஓடிருவேன்ல" என்ற பதிலைக்கேட்டு அதிர்ந்து போய்க் கிளம்புகிறார் கிருஷ்ணர். படத்திற்கான இசையை நரேந்திர மோடி அமைத்துள்ளார்.


------------


எல்லாம் அவன் செயல்


தாமரை மூவிசாரின் தயாரிப்பில் இல.கணேசன் நடித்துள்ள படம். வேறு யாராவது இயக்கினால் பாதிப்படத்திலேயே தனது நாயகன் ரோல் பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தால் அவரே இயக்கியுள்ளார். துணைக்கு ஆள் இல்லை என்றவுடன், எல்லாம் அவன் செயல் என்ற வசனத்தைப் பேசுகிறார். "அவன்" என்ற வார்த்தையைக் கூறும்போது நற, நறவென்று அவர் பல்லைக் கடிக்கும் காட்சி மிகவும் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில், எனக்கு ராமர் இருக்கிறார், அனுமார் இருக்கிறார் என்றெல்லாம் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கையில் யாராவது துணைக்கு வருகிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்ப்பதை கேமரா குளோஸ் அப்பில் படம் பிடித்துள்ளது அபாரம். "துன்பம் வரும் வேளையில சிரிங்க" என்ற பழைய மாடல் ரீ மிக்ஸ் ஆகியுள்ளது. காட்சிக்கு பொருத்தமான இடத்தில் இந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள்.


--------------------


பூ


வன்முறை நிறைந்த காதல் படம். புஷ்சின் இராக் மீதான காதல் ஒருதலைக்காதலாகவே நகருகிறது. தனது காதலை எதிர்ப்பவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுகிறார். புஷ்சுக்கு எதிராக கிளம்புகிறர்வர்கள் ஷூவைக் கையில் எடுக்கிறார்கள். ஒருமுறை ஷூவால் அடி வாங்கிய அவர், அதற்குப் பிறகு அதைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கும் காட்சிகளில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். ஷூ தட்டுப்படும்போது அது என்ன நம்பர் என்ன என்பதைக் குறித்து வைத்துக்கொள்கிறார் நாயகன் புஷ். ஒரு கட்டத்தில் நொந்து போய், "எனது காதல் தவறோ" என்று புஷ் புலம்பும் காட்சி பார்ப்பவர் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தாமல் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. "ஷு... ஷு...ஜார்ஜூ, ஷு... ஷு... ஜார்ஜூ" என்ற பாடல் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறது. நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று, முதலில் படத்திற்கு ஷு என்றே பெயர் வைத்திருந்தார்கள். வரிச்சலுகைக்காக தலைப்பை மாற்றி விட்டார்கள்.
-------------

No comments:

Post a Comment